03 August, 2015

எம்.எஸ்.வி பற்றி புலவர் புலமைப்பித்தன் - நன்றி : ஆனந்த விகடன்

வீட்டில் இருந்து காலையில் ஏழு மணிக்கு எல்லாம் ரிக்கார்டிங் தியேட்டர் வந்துவிடுவார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நாங்கள் அவர் வருவதற்கு முன்பே கூடிவிடுவோம். அவர் வரும்போது பத்து பன்னிரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு, பஞ்சு பஞ்சாக அடுக்கி அடுக்கி இட்லி கொண்டுவருவார். கூடவே குடத்தில் தண்ணீரும் வரும். ‘வாத்தியார் அய்யா... சீக்கிரம் சாப்பிட வாங்க... இல்லைன்னா இட்லி எல்லாம் வித்துடும்’ என என்னிடம் சொல்லிவிட்டு ரிக்கார்டிங் தியேட்டரே அதிரும்படிச் சிரிப்பார். எல்லாமே அவருக்கு விளையாட்டுத்தான். அப்படி ஒரு பிள்ளை மனசு.
உலக விஷயங்கள் எதுவும் தெரியாத, இசை உலகம் மட்டுமே தெரிந்த மனிதர் அவர். காமராஜர் திரும்ப வந்துட்டார்’ என யாராவது அவரிடம் சொன்னால், ‘அப்படியா... எப்ப வந்தார்?’ எனக் கேட்கும் அளவுக்கு வேட்டி சட்டை அணிந்த வெள்ளந்திப் பிள்ளை அவர்.

ஒருநாள் ரிக்கார்டிங் தியேட்டரில் பாடல் பதிவுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, ‘வாத்தியார் அய்யா... நேத்து ஒரு கனவு கண்டேன். நீங்க எழுதிக்குடுத்த பாட்டுக்கு நான் போட்ட மெட்டு நல்லா வரலைன்னு, நீங்க என் கையை நீட்டச் சொல்லி அடி பின்னிடுறீங்க. அப்புறம் நான் முழிச்சுக்கிட்டேன்... பார்த்துக்கங்க’ எனக் கைகளை முன்னே காட்டி, முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டார். பக்கத்தில் இருந்த எல்லோரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டோம். நான் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் கண்டிப்பான தமிழ் வாத்தியார். கீழ்படியாத மாணவர்களைப் பிரம்பெடுத்து விளாசிவிடுவேன். மெல்லிசை மன்னரின் இரண்டு பிள்ளைகள் என் மாணவர்கள் என்பதால், அந்த விஷயம் அவருக்கும் தெரியும். அதனால் அவருக்கு அப்படி ஒரு கனவு வந்தது என்றார்

‘குடியிருந்த கோயில்’ படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் நான் எழுதின பாடல்தான் என் திரையுகல வாழ்வின் முதல் பாடல். கோவையில் இருந்து சென்னைக்கு என்னை அழைத்துவந்த கே.சங்கர்தான் இயக்குநர். ஏற்கெனவே இரண்டு மூன்று பேர் அந்தப் பாடல் சூழலுக்கு எழுதியும் திருப்தியாக வராத நிலையில்தான், என்னை எழுதச் சொன்னார்கள். சூழலைச் சொல்லிவிட்டு மேற்கு மாம்பலம் பவர் ஹவுஸ் பக்கத்தில், காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார் கே.சங்கர். காரில் வரும்போதே மனசுக்குள் பாடல் முழுவதும் வந்துவிட்டது. பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் பேப்பர் வாங்கலாம் எனப் போனால், சட்டைப்பையில் பேப்பர் வாங்கக்கூட காசு இல்லை. கையில் வைத்திருந்த பேப்பர் ஃபைலைத் திருப்பி, அதில்தான் எழுதினேன் ‘நான் யார்... நீ யார்... நாலும் தெரிந்தவர் யார்... யார்?’ அன்று மாலையே அந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவு. பாடல் எழுதின பேப்பரைக் கையில் எடுத்த எம்.எஸ்.வி., ஒரே மூச்சில் முழுப் பாட்டையும் பாடி மெட்டமைத்த அதிசயத்தை, அன்றுதான் நேரில் பார்த்தேன். அந்தப் பாடல் எழுதுவதற்கு முன்பே எனக்கு எம்.எஸ்.வி. பழக்கம் என்றாலும் அந்தப் பாடலுக்குப் பிறகு எங்களுக்கு நட்பின் பிணைப்பு இன்னும் இறுக்கமானது.
தமிழ்த் திரையுலகில் எம்.எஸ்.வி&யைப் போல குருபக்தி கொண்டவர்களைக் காண்பது அரிது. தன் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடுவை, தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றியவர் எம்.எஸ்.வி. சுப்பையா நாயுடுவின் கடைசிக்காலம் வரை அவரிடம் எம்.எஸ்.வி காட்டிய நன்றி விசுவாசம் எல்லையற்றது. எம்.எஸ்.வி&யின் ஒவ்வொரு பிறந்த நாளும் ஏற்காட்டில் உள்ள அவரது பங்களாவில் நடக்கும். அவரோடு வேலைபார்க்கும் முக்கியமனவர்களை மட்டும் அழைப்பார். பிறந்த நாள் அன்று காலை குளித்து முடித்ததும் அவரது அம்மா நாராயணி அம்மாள், குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இருவரின் கால்களிலும் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவார். சுப்பையா நாயுடுவின் காலில் விழுந்து வணங்கி எழுந்திருக்கும்போது எம்.எஸ்.வி&யின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடும். அத்தனையும் நன்றிக்கடனுக்காக சிந்தும் கண்ணீர் என்பது என்னைப் போல எம்.எஸ்.வி&க்கு நெருக்கமாக இருந்த நண்பர்களுக்குத் தெரியும். சுப்பையா நாயுடு இறந்தபோது அவரது இறுதிச் சடங்குகளைப் பிள்ளையின் ஸ்தானத்தில் இருந்து செய்து முடித்தார் எம்.எஸ்.வி.
எம்.எஸ்.வி., ஒரு பாடலுக்கு மெட்டு போட்டால் கண்ணிமைக்கும் நேரத்தில் மெட்டுக்கள் சரஞ்சரமாகக் கொட்டும். ‘நேற்று இன்று நாளை’  படத்தில் ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’ பாடலை நான்தான் எழுதினேன். எம்.ஜி.ஆருக்கு எழுதிய காதல் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. அந்தக் காலத்தில் பட்டிதொட்டி எங்கும் இந்தப் பாடல் ஒலித்தது. இந்தப் பாடலுக்கு அடுத்தடுத்து பத்து மெட்டுக்கள் போட்டு எல்லோரையும் திணறடித்தார் எம்.எஸ்.வி. இந்தப் பாடல் வெளியாகி பிரபலமாகி இருந்த சில நாட்களுக்குப் பிறகு, சிவாஜி பிலிம்ஸ் தாயரிக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க சிவாஜி வீட்டுக்கு சென்றிந்தார் எம்.எஸ்.வி. எல்லோரிடமும் எப்போதும் கிண்டலாகப் பேசும் சிவாஜி, அன்று எம்.எஸ்.வி&டமும் அப்படியே பேசியிருக்கிறார். ‘என்னடா... அண்ணனும் (எம்.ஜி.ஆர்) மலையாளி... நீயும் மலையாளி... அதனால அண்ணனுக்குத்தான் நீ நல்ல பாட்டா போடுவியோ? ஏன் எனக்குப் போட மாட்டியலோ?’ என, ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’ பாடலைச் சொல்லிக் கேட்டார். பதறிப்போன எம்.எஸ்.வி. உடனே, ‘எனக்கு ஒரு சுக்கும் தெரியாது. மெட்டு போட்டது மட்டுதான் நானு... பாட்டு எழுதினதெல்லாம் வாத்தியார் அய்யாதான்... நீங்க அவர்கிட்ட கேட்டுக்கிடுங்க...’ எனச் சொல்ல, சிவாஜி வாய்விட்டுச் சிரித்துவிட்டு எம்.எஸ்.வி&யைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.

வாஹிணி ஸ்டுடியோவில் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்துக்கான பாடல் பதிவு. ‘தீர்த்தக்கரையிலே தெற்கு மூலையிலே செண்பகத் தோட்டத்தினிலே...’ என்ற பாரதியார் பாடலை எடுத்துக்கொண்டு வந்துகொடுத்து இசையமைக்கச் சொன்னார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். அது சிந்து வகைப் பாடல். மெட்டுக்குள் கட்டுப்படாமல், ஒரு குழந்தையைப் போல நழுவி நழுவி ஓடும் தன்மை கொண்டது. பாடலைக் கையில் வாங்கிய எம்.எஸ்.வி., ஏற்கெனவே பத்து முறை பாடி பயிற்சி எடுத்ததுபோல படபடவென்று பாடி முடித்துவிட்டார். எங்களுக்கெல்லாம் பெருத்த ஆச்சர்யம். பாடி முடித்ததும் என்னைப் பார்த்து ‘வாத்தியார் அய்யா பாட்டு எப்படி?’ என்று கேட்டார். நான் ‘பாரதியார் நேரில் வந்து மெட்டமைத்திருந்தால்கூட இப்படி அமைத்திருக்க மாட்டார்’ எனச் சொல்ல, எம்.எஸ்.வி&யின் கண்களில் தாரைத்தாரையாகக் கண்ணீர்... அவர் மிகவும் உணர்ச்சிவசப் பட்ட தருணம் அது.

எம்.எஸ்.வி., மிகச் சிறந்த இசையமைப்பாளர், பாடகர், நடிகர்... என்பதையெல்லாம் தாண்டி மிகச் சிறந்த பண்பாளர். தமிழ்த் திரையுலகில் இப்படிப்பட்ட பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார்களா என வியக்கவைக்கும் அளவுக்கு நயமான பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார் எம்.எஸ்.வி. உதாரணமாக மூன்று சம்பவங்களைச் சொல்கிறேன்...
 அப்போது தேவர் பிலிம்ஸ் கம்பெனியின் பிரதான இசையமைப்பாளர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்தான். ஒரு புதுப் படத்துக்கு இசையமைப்பதற்காக, தேவர் தன் மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு எம்.எஸ்.வி வீட்டுக்கு வந்து, ‘தம்பி... நம்ம கம்பெனியோட புதுப்படத்துக்கு நீங்கதான் இசையமைக்கிறீங்க...’ எனச் சொல்லிப் பணத்தைக் கொடுத்திருக்கிறார். பதறிப்போன எம்.எஸ்.வி., ‘மாமா (கே.வி.மகாதேவன்)  இசையமைக்கும் கம்பெனிக்கு நான் இசையமைக்கிறது  இல்லைனு முடிவு பண்ணிருக்கேன். என்னால் இசையமைக்க முடியாது’ என மறுத்துவிட்டார். தேவர் எம்.எஸ்.வி&யின் அம்மா நாராயணி அம்மாளிடம் சிபாரிசுக்குப் போக, அவரும் ‘என் மகன் சொல்றதுதாங்கய்யா சரி... அவனை வற்புறுத்தாதீங்க’ எனச் சொல்லிவிட்டார். அடுத்து...
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த ‘வியட்நாம் வீடு’ படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை. அப்போது அவர்கள் தயாரிக்கவிருந்த ‘கௌரவம்’ படத்துக்கான கதை விவாதம் முடிந்து இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை இசையமைக்கும்படி சொல்லி, கதை சொன்னார்கள். கதையைக் கேட்டு முடித்த கே.வி.எம்., எழுத்துபோயிருக்கிறார். ‘ஏன் கதை பிடிக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு, ‘இல்லை... இந்தக் கதை கொஞ்சம் முற்போக்கானது. இதற்கு என்னைவிட எம்.எஸ்.வி பொருத்தமாக இருப்பார். அவரை இசையமைக்கச் சொல்லுங்கள்’ எனச் சொல்லிவிட்டார் கே.வி.எம்.
எம்.எஸ்.வி&யிடம் சொன்னால், ‘மாமா இசையமைப்பதாக இருந்த படத்த்துக்கு நான் இசையமைக்க மாட்டேன்’ எனச் சொல்லிவிட, கே.வி.எம்&மே போன் போட்டு, ‘நீயே இசையமைத்துக் கொடு எனக்கு அந்தப் படம் சரிவராது’ எனச் சொன்னபிறகுதான், கௌரவம் படத்துக்கு எம்.எஸ்.வி. இசையமைத்தார். இதேபோலத்தான்... உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க இரண்டு பாடல்களும் பதிவாகிவிட்டன. எம்.ஜி.ஆரை அந்தப் பாடல்கள் ஈர்க்கவில்லை. குன்னக்குடி வைத்தியநாதனை அழைத்து, ‘நான் எடுக்கவிருக்கும் ஒரு சரித்திரப் படத்தில் உங்களுக்கு நான் வாய்ப்புத் தர்றேன். இந்தப் படத்துக்கு எம்.எஸ்.வி., இசையமைச்சா பொருத்தமா இருக்கும்’ எனச் சொல்லி ஒப்புதல் வாங்கிவிட்டார். குன்னக்குடி வைத்தியநாதனும் சம்மதித்துவிட்டார். ஆனால், வழக்கம்போல எம்.எஸ்.வி., ‘குன்னக்குடி அவர்கள் இசையமைத்த படத்துக்கு நான் எப்படி இசையமைப்பது முறை இல்லை...’ எனச் சொல்லி மறுக்க, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே நேரில் வந்து சொன்னப் பிறகுதான் எம்.எஸ்.வி. ஒப்புக்கொண்டு இசையமைத்துத் தந்தார். இதுதான் தமிழ்த் திரையிசை வரலாறு. வாய்ப்பு கிடைக்கிறதே என வந்ததையெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் அதிலும் பண்பாடு காத்து பாடல் போட்டவர் எம்.எஸ்.வி. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையில் மயங்கிப்போய் எம்.ஜி.ஆர்., 50000 ரூபாய் சம்பளம் தந்தார். அதுவரை எம்.எஸ்.வி. இசையமைக்க வாங்கியத் தொகை 25ஆயிரம்தான்.

ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘இதயக்கனி’ படத்துக்காக எம்.எஸ்.வி. இசையில் ஒரு மெட்டுக்கு பாடலும் எழுதிவிட்டேன். இடைவேளையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தட்டைக் கீழே வைத்துவிட்டு, ஒரு மெட்டை பாடிக்காட்டி, ‘வாத்தியார் அய்யா இந்த மெட்டுக்கு ஒரு பாட்டு கொடுங்க... அந்தப் பாட்டு வேண்டாம்...’ என்றார். நானும் அப்போதே எழுதிக்கொடுத்தேன். அந்தப் பாடல்தான் இன்பமே உந்தன் பேர் பெண்மை... அப்போது பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமான காதல் பாடல் இது. ஆனால் பிறந்தது என்னவோ ஒரு சாப்பாட்டு இடைவேளையில். அதே படத்துக்காக ‘நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...’ பாடலுக்கு முன்புவரும் தொகையறாவில், ‘காவிரியையும் எம்.ஜி.ஆரையும் இணைத்துப் பாடல் எழுத முடியுமா?’ என ஆர்.எம்.வி கேட்டார். ‘ஏன் முடியாது?’ எனச் சவாலாக எடுத்துக்கொண்டு எழுதிய
தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி
&தொகையறாவை உடனே மெட்டமைத்துப் பாடிக்காட்டி அசத்தியவர் எம்.எஸ்.வி.

பாடல்களில் நல்ல வரிகள் எழுதிவிட்டால் காலைப் பிடித்துப் பாராட்டுவார் எம்.எஸ்.வி. ‘வரம்’ படத்தில் ஒரு பாடலில் ‘அட்சயப்பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா’ என ஒரு வரி எழுதிவிட்டேன். அதை இசையமைக்கும்போது படித்துவிட்டு நெகிழ்ந்துபோய் என் காலைத் தொட்டுப் பாராட்டினார். ‘இப்படி நீங்கள் செஞ்சா நான் இனி பாட்டு எழுத மாட்டேன்’ எனக் கடிந்துகொண்டேன். அதற்கு அவர், ‘வாத்தியார் அய்யா.. இவ்வளவு நல்ல வரிக்கு இந்த மரியாதைகூட பண்ணலைன்னா அப்புறம் நான் இசையமைச்சு என்ன பிரயோஜம்’ என்றார். ஒரு பாடலுக்கு நன்கு இசையமைத்துவிட்டால், அதுக்கான கிரெடிட்டை ‘வாத்தியார் அய்யா உங்களுக்கு 75 சதவிகிதம்; எனக்கு 25 சதவிகிதம்’ எனப் பிரிப்பார். அவ்வளவு குழந்தை மனதுக்காரர். ஆனால், அவர் பாட்டு போட்ட அளவுக்கு துட்டு வாங்கியது கிடையாது. பத்தாயிரம் கொடுத்தாலும் அதே உழைப்பு, 25 ஆயிரம் கொடுத்தாலும் அதே உழைப்பு, அதே இசைதான்.
டி.எம்.எஸ்& போல பிரமாதமான பாடகர் கிடையாது. ஆனால், அவருக்கு அவ்வளவு சுலபத்தில் பாடல் ட்யூன் பிக்கப் ஆகாது. அப்போதெல்லாம் அவர் ட்யூனைக் கற்றுக்கொள்ளும் வரை விடமாட்டார் எம்.எஸ்.வி. திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுப்பார். எம்.எஸ்.வி போட்ட மெட்டில் 70 சதவிகிதம் மட்டுமே பாடகர்கள் பாடுவார்கள். அவர் மெட்டில் வைத்திருக்கும் முழு சங்கதிகளோடு எவரும் பாடியது கிடையாது. ஆனாலும் அவர்கள் பாடி முடித்ததும் உச்சி முகர்ந்து பாராட்டுவார்.

கௌரவம் படத்தில் ‘பாலூற்றி வளர்த்த கிளி’ பாடலை முதலில் பாடியது எம்.எஸ்.வி&தான். படத்தில் பின்னணியில் ஒலிக்கும் பாடலாக வரும் என்றுதான் முதலில் எடுத்தார்கள். அப்படியே எம்.எஸ்.வி&யும் பாடிமுடித்துவிட்டார். பாடலை கேட்ட சிவாஜி ‘இதற்கு நான் வாயசத்து நடித்துவிடுகிறேன்’ எனச் சொல்லி நடித்தும்விட்டார். ரீ ரிக்கார்டிங்கில்தான் எம்.எஸ்.வி&க்கு இந்த விஷ்யம் தெரியவந்தது. ‘சிவாஜிக்கு என் குரலா? இல்லை இல்லை டி.எம்.எஸ்ஸைக் கூப்பிடுங்கள்’ என்றார். நான் ‘உங்கள் குரல் சிவாஜிக்கும் சூழலுக்கும் பொருத்தமாதானே இருக்கு...’ என வற்புறுத்தினேன். உடனே எம்.எஸ்.வி. அவர்கள் ‘இல்ல வாத்தியார் அய்யா... சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாடினால்தான் பொருத்தமா இருக்கும்’  என தனக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றவருக்கு விட்டுத்தந்த மாமேதை எம்.எஸ்.வி.

பாட்டுக்கு மெட்டு போட்டு விட்டு நேரம் கிடைத்தால் ‘வாத்தியார் அய்யா வாங்க சீட்டு போடுவோம்’ என்பார். எம்.எஸ்.வி., இயக்குநர் ஆர்.சி.சக்தி, நான்... மூவரும் இணைந்தால் அங்கே சீட்டாட்டம் நிச்சயம் இருக்கும். எம்.எஸ்.வி&க்கு சீட்டாடுவதிலே அவ்வளவு பிரியம். ஆனால், அவரைப் போல தோற்பவர்களைப் பார்க்க முடியாது. ஏனென்றால் அவருக்கு சீட்டு விளையாடவே தெரியாது. சமயத்தில் ஜோக்கரையே கீழே இறக்கிவிடுவார். ‘அய்யோ... இது ஜோக்கர் எடுத்து உள்ள வைங்க’ என்று சொன்னால் அப்பாவிப் போல முகத்தை வைத்துக்கொண்டு, நாக்கைத் துருத்திச் சிரிப்பார். அவ்வளவு அப்பாவி.

‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ‘கொள்ளையடித்தவன் நீதான் & என் உள்ளத்தை, கொட்டி வைத்தவன் நீதான் & இன்பத்தை’ என்ற ஒரு பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி., 80 மெட்டுக்கள் போட்டார்; நான் 120 பல்லவிகள் எழுதினேன். அந்தப் படத்தின் உதவி இயக்குநராக இருந்த இடிச்சபுலி செல்வராஜ், இந்த விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் சொல்ல... ‘எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்ட எம்.ஜி.ஆர் உங்களை நான் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்’ என்றார். இல்லை தலைவரே இது ஒருவகையான பயிற்சி. இனி எந்தச் சூழலுக்கும் நான் பாட்டு எழுதிவிடுவேன்’ என்று சொல்லிச் சமாளித்தேன்.

அது அண்ணா அவர்கள் இறந்த சமயம். ‘மணிப்பயல்’ படத்தில் அண்ணாவுக்காக நான் எழுதிய ‘காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்.... கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்’ பாடலை அழுதுகொண்டே மெட்டமைத்துப் பாடியது எம்.எஸ்.வி&யின் ஈர மனதுக்கு எடுத்துக்காட்டு.

திரைப்படங்களுக்கு மட்டும் அல்ல. நாங்கள் இருவரும் இணைந்து... எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உருவாக்கிய அதிமுக பிரசாரப் பாடல்களும் தொண்டர்கள் மத்தியில் மிகவும் பிரமபலம். அதிமுக முதன்முறையாக தேர்தலில் நின்ற 1977&ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எம்.எஸ்.வி. இசையமைக்க நான் எழுதிய ‘வாசலெங்கும் ரெட்டையிலை கோலமிடுங்கள்... காஞ்சி மன்னவனின் காலடியில் மாலையிடுங்கள்...’ பாடல் ஒலிக்காத ஊரே கிடையாது. 1984&ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டு மணி நேரத்தில் 9 பாடல்களை இரண்டே நாட்களில் மெட்டமைத்து பதிவு செய்து அனுப்பிவைத்தவர் எம்.எஸ்.வி.
 தான் கண்ட கனவு ஒன்றை 30 வருடங்களுக்கு முன்பு சொன்னார் எம்.எஸ்.வி.... ‘வாத்தியார் அய்யா நேத்து ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவுல நான் செத்துப் போயிட்டேன். இறுதி ஊர்லவத்துல என்கூட பழகினவங்கள்ல யாரெல்லாம் வர்றாங்கனு மேல போத்திருந்த துணியை விளக்கிப் பார்த்தேன்... அப்புறம் முழிச்சுக்கிட்டேன். என்னங்க வாத்தியார் அய்யா இப்படி ஒரு கனவு’ என்றார். நான் ‘உங்களுக்கு ஆயுசு நூறு இப்போ உங்களுக்கு சாவு கிடையாது’ என்றேன். எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்திருக்கலாம். ஆனால், அவரது நாதம் காற்றை இன்றும் என்றும் உயிர்பித்துக்கொண்டிருக்கிறது. தமிழர் என்ற ஒரு இனம் இருக்கும்வரை அவர்களது சுக&துக்கங்கள் இருக்கிறவரைக்கு எம்.எஸ்.வி&யின் பாடல் ஒலிக்கும். அவை ஒலிக்கிற வரைக்கும் எம்.எஸ்.வி இருப்பார்! ஏனெனில் அவர் விஸ்வரூம் எடுத்த நாதம்!

No comments: