15 November, 2011

விதைநெல் பிரிக்கும் இக்கோடையில் நிகழாதிருந்திருக்கலாம்

துளிர்ப்பு திகைந்தாயிற்று
வேம்பின் பொன்தளிர்களை
ஆராதிக்கத் துவங்கிவிட்டது கோடை
புளிப்பு சுவைகூட்டிய மாங்காயைக்
கடித்துவிட்டு மிழற்றுகிற கிளிக்காக
இதமிதமாய் பெய்யும் இனி புன்செய் வெயில்
ஊருக்குள் புகுந்து மாயமோகினியென
எழுந்து சுழலும் சூறைக்காற்றைத்
துரத்தியோடி களிப்பார்கள் சிறார்கள்
வாதநாராயணன் தன் சக்கரவடிவ பூக்களை
காற்றின் போக்கில் உதிர்த்து விளையாடும்
மகசூலை களஞ்சியத்தில் சேர்த்துவிட்டு
சோம்பித் திரிகிற குடியானவன் மீது
கொட்டிக் குளிர்விக்கும் பெருமழை
சோபிதம் கொண்டொளிரும் அந்தியிலிருந்து
அசைபோட்டபடி மந்தைக்குத் திரும்பும்
பசுவின் முதுகில் கொண்டலாத்தி குகுகுகுக்கும்
நல்லேர் பூட்டி தானியங்களைத் தூவிவிட்டு வந்து
அடுத்த வெள்ளாமைக்கு விதைநெல் பிரிக்கும்
நல்சகுனங்கள் நிரம்பிய இக்கோடையில்
நிகழாதிருந்திருக்கலாம் உன் பிரிவு

நன்றி: புன்னகை கவிதை இதழ்

01 November, 2011

எங்களூர் பிள்ளையார்

எங்களூரில் கழுதைகள் இரையுண்ணும் பொட்டல் பிராந்தியத்தில்
குவித்து வைத்த ஏதோ ஒன்றென அவரைப் பார்க்கையில்
தெரிவார் பிள்ளையாரென
விரிந்த பிருஷ்டம் வழிந்தொழுகும் தொப்பை
மினுங்கிடும் அகலின் கீற்று உறுதிப்படுத்தும்
அவரை அவர்தானென
வருடத்துக்கொருதரம் கொழுக்கட்டை படையலோடு கூடும் குலப்பெண்களிலிருந்து கண்களின் ஒளியையும்
கொங்கைகளின் கூச்சத்தையும் பூசிக்கொண்டதுபோலிருக்கும் அவர்
அப்போது ஏற்றிருக்கும் அரிதாரம்
பிற்பாடு, திருவிழாவில் தொலைந்த குழைந்தையின் பீதியோடு
கறுத்துப்போன முகத்தைத் தூக்கி நிறுவுவார்
தனிமையின் இருக்கையில் சீந்துவாரற்றும்
மீண்டும் பல்லக்கில் ஏறும் கனவோடும்
பழிச்சாலும் நிந்திச்சாலும் கண்ணை அவிச்சுடும்டா சாமி-
சன்னதமாடும் அப்பத்தாவும் அறியும்
இச் ஷனம்வரைக்கும் ஒன்னுமேயாகாத
ஒத்த காலைத் தூக்கி புள்ளையார் மீது
ஒண்ணுக்குப் பெய்யும் கெடா நாயை

நன்றி : அகநாழிகை (மார்ச் 2010)

29 October, 2011

திலீபன் வைத்த கொலு

தன் முதுகில் வெளிமானைச் சுமந்துகொண்டு

புல் மேயவும் தயாரென்பது போல இருக்கிறது புலி

பசுமாட்டின் நிழலில் சிங்கம் இளைப்பாறிக் கொண்டிருந்தது

கரடியும் குரங்கும் முகத்தோடு முகமுரசிக்

விளையாடும் பாவனையில் இருந்தன

காந்தியின் கையில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு

புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்

வேட்டைக்காரன் ஒருவன்

காட்டெருமை ஒன்று தாயின் கரிசனத்தோடு

ஓநாய்க்குட்டியை நாவால் தடவிக்கொடுக்கிறது

ஆசியர் பொம்மைக்குப் பாராமுகமாய் நிற்பது

யூகேஜி போகும் கபிலனாகத்தான் இருக்க வேண்டும்

தவயோகி ஒருவர் நடனமாதரில் லயித்திருக்க

தலையை ஆட்டி ஆட்டிச் சிரிக்கிறது

தலையாட்டிப் பொம்மை


22 October, 2011

ஆனந்தியின் பொருட்டு தாழப் பறந்துகொண்டிருக்கின்றன தட்டான்கள்

மணிப்புறாவின் லாகவத்தோடு எழும்பிப் பறக்கிற
என் நிலத்துக்கு ஆனந்தி என்று பெயர்ச் சூட்டியிருந்தேன்
அதனால்தான் அது மேலெழும்பி மிதக்கும்
பாக்கியம் பெற்றதோ என்னவோ
அதனால்தான் அத்தனை வனப்போ செழிப்போ
தட்டான்கள் தாழப் பறந்தால் மழை வரும் தெரியுமா என்ற
ஆனந்தியின் இமைகளிலிருந்து
முதன்முதலில் தட்டான்கள் பறந்தபோது
எனக்குள் மழைவரும் போலிருந்தது
தட்டான்கள் குறுக்கும்நெடுக்குமாகப் பறப்பது
காற்றின் பக்கங்களில் கோட்டோவியம்
வரைவதாகும்போல என்றால்
ஆமாம் அப்படித்தான் என்று
பார்வையாலே தட்டான்மாலை வரைவாள்
பறக்கும் தட்டான்பூச்சிகளுக்குச் சங்கடம் தராமல்
மிதந்துகொண்டிருக்கிறது நிலம்
ஆனந்தி பெயரைச் சொல்லி விதைப்பதும்
ஆனந்தி என்று சொல்லி அறுப்பதும்
மகசூலை அதிகரிக்கச் செய்யும்
விவசாய முறையாயிருந்தது
நிலத்துக்கு நடுவே நட்டுவைக்கப்பட்டிருக்கும்
பொம்மையின் வாயிலிருந்து வைக்கோல் பிதுங்க
தலை தொங்கிக்கொண்டிருக்கிறது
காரணம் ஆனந்தியில் வாத்ஸல்யம்
அந்த நிலத்தின் மீதில்லை இப்போது
நிலத்தின் பொருட்டில்லை
ஆனந்தியின் பொருட்டு அந்த நிலத்தின் மீது
தாழப் பறந்துகொண்டிருக்கின்றன
தட்டான்கள்

30 September, 2011

கிணற்றுக்குள் தழும்பும் கேவல்

எருக்கம்புதர்கள் மண்டிக்கிடக்கும்
இந்த வீடு மட்டும்தான் ஒருகாலத்தில்
வசீகரமிக்கதாக இருந்தது
ஒளிபொருந்தியதாகவும் இருந்தது

அந்தத் தெருவிலேயே
புறா வளர்ந்த அந்த வீடுதான்
ஓர் இறகுபோல மேலெழும்பிப்
மிதப்பதாகவும்
லயத்தோடு கசியும் இசைதான்
வீடாகிவிட்டதாகவும் தோன்றும்

இந்த வீட்டின் துளசி வாசத்தில்
மயங்கிய
பதின்பருவத்துத் தடயங்கள்
இவ் வீட்டைப்போலவே
சிதிலமாகிவிடவில்லை இன்றும்

புறாக்கள் இரையுண்ட
அவ் வீட்டின் கிணற்றடி
எப்படிப் பார்க்கும் தைரியம்
நரைக்குக்கூட இல்லை

அதற்குள்
தேங்கி இருண்டிருப்பது
தண்ணீரல்ல
உன் கேவல்

தரைதட்டுதல்

கார் பொம்மையை உருட்டிக்கொண்டு
நடுசாமத்தோடு விளையாடும்
மகனை அதட்டி
உறக்கத்தில் ஆழ்த்திவிட்ட
அப்பாவுக்குத் தெரியாது

அவன் கனவுக்குள் நிகழ்ந்துவிட்ட
போக்குவரத்து நெரிசலில்
அதே காரில்
தாம் புழுங்கித் தவித்து
தரைத்தட்டி நிற்கிறோம்
என்பது

27 September, 2011

குதிரைக்குக் கொம்பு முளைக்க ஆரம்பித்துவிட்டது

இரண்டு வயது நிரம்பி
வழிந்துவிடத் துடிக்கும்
அந்தச் சின்னஞ்சிறு சிறுவனின்
கண்களிலிருந்து கண்ணீர்
வழிந்துவிடத் துடித்து
கடைசியில் புகாராக
மாறிவிடுகிறது அப்பாவிடம்

அண்ணன்
தன் குதிரை பொம்மை கொண்டு
உதைத்துவிட்டதைச்
சொல்லத் தெரியாது
திணறலோடு இறுதியில் சொல்லிவிடுறான்
மாடு முட்டிவிட்டதாக

குற்ற உணர்ச்சியில்
குதிரைக்குக் கொம்பு முளைக்க
ஆரம்பித்துவிட்டது

13 September, 2011

இருக்கலாம்

உச்சி ஆகாயத்துக்குப் பக்கத்தில்
காற்றுவெளியில் நிச்சலனமுற்று
நீந்திக்கொண்டிருக்கும்
அந்தப் பருந்து,
நடுநெற்றியில் தீயெரிய
போதிமரத்தடியில்
ஆழ்நிஷ்டையிலிருக்கும்
சாக்கிய புத்தனின்
மனமாகவும் இருக்கலாம்

10 September, 2011

அதுவாக இருக்கிறது அது

மூதாதையரடி மூதாதையராக அது
அவனிடம் \ அவளிடம் வந்து சேர்ந்திருக்கிறது

புற்றுக்குள் நுழைந்துவிட்ட எலி
பாம்பு கண்டதும் பதறித் திரும்புமே
அந்தப் பதட்டத்தோடே வைத்திருக்கிறது
எப்போதும்

காய்ந்தெரிக்கும் கோடையின் மாநகரச் சாலையில்
கானலெனப் பிசுப்பிசுக்கிறது
நீருக்கேங்கி வெடிப்புறும் கரம்பையில்
சிலுசிலுவெனக் கசியும் ஈரமாகிறது

மேனியை யாழ்க்கம்பியாக்கி
மீட்டெடுக்கும் இசையில் களிப்புறுகிறது
அந்த இசையில் உலாத்துகையில்
அவன்\அவள் பறவையாவது நிச்சயம்
அல்லது சிறகளாவது முளைக்கும்

கிளையிலிருந்து கழன்றுவிட்டப் பழமாக
உதடுகளுக்கு எட்டாத முத்தமாக
நடுநிசியில் இளம்விதவை தலைக்கு ஊற்றும் நீராக
சீறும் நாகம் கக்கும் முதல் துளி விஷமாக
யாவுமாகவும் இருக்கிறது

இல்லை யாவுமற்று
அதுவாகவே இருக்கிறது அது