11 December, 2010

சேர்வது குறித்த சிந்தனை

வராதுவந்த ஓரிரண்டு வரன்களும்
இரண்டொரு பவுனில் இடறிப்போக
கக்கடைசியில் கன்னிக் கழியாமலே
காலம் கழியலாயிற்று கோமதி அக்காவுக்கு

அவள் பார்வையின் குவிமையத்தில்
விரட்டி விரட்டி சேவலும்
விரண்டு மிரண்டு பெட்டையும்
சேர்வது குறித்துதான்
ஓரே சிந்தனையாய் இருக்கிறது

கோழியை மறுதலித்தல்

மக்கிக்கெட்ட குப்பைகளைக் கிளறி
இங்கிதம் குலைந்து எல்லா இடத்தும்
புணர்ந்து தொலைத்து
குட்டிச் சுவமீதேறி கொக்கரிக்கும் கோழிகள்
உறுத்தல் உதறி சுவைத்து அலைகின்றன
எச்சச் சொச்சங்களை

ஒன்றுக்கும் உதவாதிருத்தல்
ஊர்ச்சுற்றித் திளைத்தல்
புழுதிக் குடைந்தாடி
போதையில் மிதத்தல்...
என்றாயிற்று கோழியின் குணங்கள்

சண்டைக்கோழி, அடைகோழி
வெடக்கோழி, பிராய்லர் கோழி
வகைப்படுத்தலாம் கோழிகளை

எனினும்
மனிதனைக் காவுகொண்டபடிக்கு
பம்மிபம்மி வந்துபோகும்
சாமிக்கென நேர்ந்துவிட்ட கோழிகளை
கோழிகளென ஒத்துக்கொள்ள
மறுதலிக்கிறான் ஜீவானந்தம்

சித்திரையில் கசிந்த மனசு

வேப்பம்பூவிலும் மாம்பூவிலும்
போதமுற்றுச் சரியும் சித்திரையின்
ஏறுவெய்யில் ஊர்ந்துகொண்டிருக்க
மவ்னத்தை ஆரோகணித்தபடி
என் கைபற்றியிருந்தபோதுதான்
தண்ணென்று கசிந்த உன் மனசை
உணர்ந்தன விரல்கள்

நன்றி: கல்கி(23.01.11)

22 November, 2010

வாழ்ந்து கெட்ட சாவி

எடுத்ததும் முதலில் சட்டைப்பையிலும்
பிறகு சுவற்றின் ஆணியிலும்
கனத்துத் தொங்குகிறது
வாழ்ந்து கெட்ட குடும்பத்தின்
மனசில் ஆழ்ந்து கிடக்கும்
சோகத்தைப் போல

யாரோ நழுவவிட்டு
தெருவில் என் கைசேர்ந்த
வீட்டுச் சாவி

நன்றி: புன்னகை -காலாண்டிதழ்

19 November, 2010

யவ்வனத்தைச் சுமக்கும் கோவேறு

உன்னழகின் இருப்பின்
சாநித்தியத்தோடே ஒளிர்கிறது
நீ கைவிட்டுச் சென்ற அறை

உதிர்ந்தவிழ்ந்த உன் வார்த்தைகளை
கொறித்துச் சதிராடும் ஜோடி அணில்கள்
துணுக்குறாவண்ணம் எட்டிப் பார்க்கின்றன
நிகழ்வின் சுகந்தங்கள்

உன் வெக்கையை ஆறவிடாமல்
வெட்கத்தோடு ஒதுங்கும் கதவை
இறுக்கித் தாழிட்டபோது
நிலா முற்றிய கீற்றுகளால் இம்சித்தது

வழமையாய்... விரிப்பின் கசங்களில்
தலையணையின் பிதுங்களில்
பெருநதியென பிரவகிக்கும்
உன் யவ்வனத்தைச் சுமந்துகொண்டு
திரும்பினேன் கோவேறு என

சூன்யத்தில் தொலைந்திடாதிருக்க வேண்டும்
திசைகள் குழம்பிய பாதைகள்

நன்றி: கல்கி (02.01.2011)

12 November, 2010

இளஞ்சூடாய் மழைமுத்தம்

ஒன்றரை அகவை நிரம்பிய
திலீபனின் அடத்தை நினைவுறுத்தியபடி
நசநசக்கும் மழைக்கு
தீஞ்சுவை பாலும்
கொரிக்க குர்க்குரேவும்
தரலாமென்கிறாள் மனைவி
நான் இளஞ்சூடாய் ஒரு முத்தமும்
ஈந்தேன்

10 November, 2010

ஓவியங்களுக்குள் ஊடுருவும் பாதச்சுவடுகள்

ஆதிவாசிகளின் குகை ஓவியங்களுக்கு நிகராய்
மிகு புராதனமான எனது தனிமைக்குள்
உங்கள் சந்தையைப் பரப்பிவிட்டீர்கள

எனது தனிமையை அலங்கரிக்கும் ஆலாபனையை
உங்களால் விளங்கிக்கொள்ள இயலாது
ஆதவனை உள்வாங்கி கிளர்ச்சி தரும்
இரவல் வெளிச்சம் அதிலில்லை

ஆதுரமிக்க வார்த்தைகளின் கதகதப்பில்
கிறக்கமுற்ற கவிஞனின் மோனத்தாலான
எனது தனிமையின் நுழைவாயில்
உங்களுக்கு ஒவ்வாமை தரவல்லது

மின்மினியின் ஒளிப்பிரிகையால்
ஊமத்தம்பூவின் சுகந்தத்தால்
ஓரேர் உழவனின் வியர்வையால்
கிட்டும் கௌரவம் போதுமானது
எனது தனிமைக்கு

ஆசீர்வாதங்களையும் வாக்குத்தங்களையும்
முற்றாக நிராகரித்துவிட்ட எனது தனிமைமீது
படர்ந்திருக்கும் சாபத்தால் ஒரு பலனுமில்லை

உங்களின் ஆக்டோபஸ் வாழ்வதற்குரிய
சீதோஷணமில்லா நிலம்தான்
எனது தனிமையின் ஆளுகை கீழிருப்பது

ஏதேதோ அடைய தவமிருக்கிற
உங்கள் கொக்கின் ஒற்றைக் காலடியில்
அடங்கிவிடும் அதற்குள்தான்
உங்கள் சந்தையைப் பரப்பியிருக்கிறீர்கள்

லாபங்களைக் கணக்கிட்டுச் சோர்வுறுவதற்குள்
நீங்கள் திரும்பிவிடுதலே உத்தமம்
கூடவே பாதச்சுவடுகளையும் அள்ளிக்கொண்டு

நன்றி: காலச்சுவடு (ஜனவரி 2011)


14 October, 2010

கண் பேறு

குழந்தை கொஞ்சும் பலூன்
குழந்தையாகிவிடுவதையும்
திருவிழா நெரிசலினூடே
குழந்தையை ஈர்த்துவிடும் பலூன்
தேவைதையாகி விடுவதையும்
காணும் கண்கள்
பேறு பெற்றவை

மீட்பு

எமக்கு வாய்த்தது நன்னிலம்தான்

நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து
அதனியல்பால் எல்லாம் கிட்டும் எமக்கு

எழுதுகோல் முளைக்கும்
கணினியும் கண்டடைவோம்
மரித்திருக்கும் எம் குலசாமிக்கு
உயிர்ப்பு துளிர்விடும்
சாங்கியமும் கொண்டாட்டமும்
மீண்டும் நிறம்கொள்ளும்
நிலத்தின் தாதுக்களால் வண்டல்களால்
செப்பமுறும் எம் மூளை
இருதயம் திடச் சித்தமடையும்
கனவுகள் கள்வெறியூட்டும்
இறுகிக்கிடந்த இச்சைகளுக்கு
றெக்கை அரும்பும்
மூதாதையர் தேடிக் களைப்படைந்த
புதையல்கள் அகழாமல் மேல்வரும்
நீளும் ஆயுள்ரேகைகளில் எம் சந்ததி
வளப்பமுறும்
எல்லாம் கிட்டும் எமக்கு

யாவற்றுக்கும் முன்
உன் பசப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலத்தை
மீட்டாக வேண்டும்

நன்றி : உயிர்மை - நவம்பர் 2010