12 October, 2010

காலம்காலமாய் காலம்

இரண்டாய் வகுந்து கிடந்த ஒற்றையடிப் பாதையில்
வளைந்தும் நெளிந்தும் புணர்ச்சிக்குப் பிறகான
மயக்கத்திலிருக்கும் வனப்பாம்பாய்
நீண்டு கிடந்த காலம்
வெம்மையைக் குடித்து வெறி பிடித்திருந்தது

ஊடறுத்த என் கால்களின் வயிற்றில்
உப்புப் படலங்களைப் பிரசவிக்கச் செய்த
அதன் முகத்தில் சாதித்த செருக்கு

குளத்தின் அலைகளைக் கட்டிக்கொண்டு
யாத்திரை துவக்கிய காலம்
எதிர்ப்பட்ட கிழவியிடம்
குளுமையைத் திணித்ததில்
தாய்மையின் வாசம்

ஆட்டிடையனின் வளைந்த கொம்பில்
கண்கிறங்கி மணிச் சத்தத்தில்
தரித்த கனவை
நரிகள் கிழித்துப் புசிக்க அலறியது

கணவனோடு சிணுங்கிக்கொண்டு
தனித்திருந்தவளிடம்
நாணம் பூசி அது பருவத்துக்கு வந்த
அந்தக் கணம் முதல்தான்
தென்றலின் சிருங்காரத் தொந்தரவு

புள்ளினங்கள் அலைந்துருகும் அத்துவானத்தில்
பையப் பைய ஓர் ஆக்கிரமிப்பாளனைப் போல்
ஊடுருவும் காலம் குறித்து
எவ்விதப் பிரக்ஞையுமற்று ஊரும்
நத்தையின் முதுகில்
மனசை ஏற்றி அனுப்பிவிட்டு
நரைக்கத் துவங்கிக்கொண்டிருந்தான்
அவன்.

08 October, 2010

விளையாட்டு

விதைப்பு நாள் ஒவ்வொன்றிலும்
வார்த்தைகளில் சந்நதம் உருவேறிக்கொள்ளும்
தாத்தையாவுக்கு

விதைக்கையில் சிரித்தல்
ஆகாதென்று சினப்பார்
விதைக்கும் நிலத்தை விழுந்து
சேவிக்கச் சொல்வார்; செய்வார்
பிரசாதமேந்தும் பக்தனின் பாவனையில்
கையிலேந்திய விதைநெல்லை
குவித்துவைத்துக் கும்பிட்டுக் களிப்பார்
நெல்லோடு சேர்த்து
தம் மனசின் முணுமுணுப்பையும் விதைப்பார்
முடித்த பிற்பாடும்
மறக்காமல் விதைப்பார் எம் மனங்களில்...

மக்கா எனக்குக் களத்துலேயே
கல்லறைக் கட்டுங்கடா
அச்சுப்பிசகாது அப்பாவுக்கும்
அப்படியேதான் வாய்த்தது
மண்ணோடு மல்லுக்கட்டி
மக்கிப்போகும் வாழ்வு

ஏதேதோ தேவைகள் அழுத்த
கைமாறிய மண்ணை மீட்க இயலாமல்
வார்த்தைகள் தொண்டையைக் கிழிக்கும்
சோகம் எனக்கு

முப்போகமும் முங்கித் திளைத்த மண்
வெறுமையாய் விரிந்து கிடக்கிறது
கபடியையும் கிட்டிப்புல்லையும்
ஏங்கவைத்துவிட்டு எங்களூர் இளசுகள்
அதில் ஸ்டெம்ப் நட்டு கிரிக்கெட் ஆடுகிறார்கள்

30 September, 2010

முத்தம்

ஒளி சுவிகரித்துக்கொண்ட
உன் முத்தங்கள்தாம்
விண்மீன்களாயின
சிறகு முளைத்த முத்தங்களில்
தேவதைகள் தரிசனம் தந்தனர்
முத்தங்களைத் திருடி கூடுகட்டி
தேனீக்களாய் பரிணமித்தன குளவிகள்
முத்தங்கள் எட்டாது தலைசுளுக்கவே
நரிகள் சொல்லின்
அந்த முத்தம் புளிக்கும்
உன் முத்தங்களின் ஆழத்தில்
முத்தம் குடித்து முத்தம் குடித்து
முத்தமானான் அவன்

09 September, 2010

ஆயினும் ஆறுதல்

நெருக்கித் தள்ளி வாழ்வு விதிர்விதிர்த்துத்
தளும்புகிற கணங்களைத்
துடைத்துவிடும்படிக்கு உகுக்கிறான்
மூன்றரை வயதான கபிலன்
ஆறுதல்தான் என்று தெரியாமல்
வார்த்தைகளை
''இந்தா அப்பா தண்ணி குடி''
எனினும் அதனால் ஒன்றும்
ஆகவில்லைதான்
ஆயினும் ஆகியிருந்திருப்பின்கூட
இந்தளவு ஆறுதலடைந்திருக்க
மாட்டார் அப்பா

நன்றி: உயிரோசை (27.09.10)


05 September, 2010

நாட்டாமை

மௌனங்கள் நொதித்துக்கிடக்கும் அவ்வூரின்
திசைகள் கூடிக்கொள்ளும் நாற்சந்தியில்
விற்பனைக்கு வந்ததுபோல வந்தன வார்த்தைகள்

அர்த்தங்களின் ஆழ உயரங்களுக்கு ஏற்ப
வீழ்ந்தும் எழுந்தும் கொண்டிருந்தன
வார்த்தைகளின் மதிப்பு

அவரவர் தேவைக்கேற்ப விநியோகமானதில்
மெலிந்த வலிந்த வார்த்தைகள் கலந்தே இருந்தன
வசீகரத்துக்காகவும் மயக்கத்துக்காகவும்

'கடவுள்' வார்த்தையைக் கொள்முதல் செய்தவன்
போதிக்கத் துவங்கினான்
கடவுள் வார்த்தையாய் இருக்கிறார்
வார்த்தைகளனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றன
கடவுளன்றி வார்த்தையில்லை
வார்த்தையின்றி கடவுளில்லை

பின்னிப்பின்னி சாம்ராஜ்யத்தையும்
செங்கோலையும் நிர்மாணித்துக்கொண்ட
'கடவுள்' வார்த்தையின் சிம்மாசனம்
'சாத்தான்' வார்த்தையை வாங்கிப் போனவன்
கேட்டக் கேள்வியில் கலகலக்க ஆரம்பித்தது

'சாத்தான்' வார்த்தையின் அந்தரங்கத்தில்
'கடவுள்' வார்த்தை தன் பங்குக்கு ஒளிபீய்ச்சியதும்
அழுக்குகளால் வெட்கமுற்றது அதன் இருட்டு

அந்தரங்கங்கள் வெளிச்சப்பட்டுப் போனதில்
சஞ்சலம் கொண்ட கடவுளும் சாத்தானும்
சந்தித்துக்கொண்டன
இப்போது மௌனங்களால்
ஊர் நொதிக்கத் துவங்கியது


நன்றி: கல்கி தீபாவளி மலர் 2010

17 August, 2010

அவனிடம் ஜாக்கிரதை

அவன் யாதொன்றும் செய்யவில்லை
அப்படிச் செய்கிறவனுமில்லை

உங்கள் வடிவங்களில்
தேங்க இயலாமல் கசிந்தான்
அப்போதே சஞ்சலத்தை
மறைக்கச் சிரமப்பட்டீர்கள்

உங்கள் வார்த்தைகளுக்கு
வளைதல் செய்யும் லாகவமற்று
ஒடிந்ததில் குமைந்து
அசூசைக் கொண்டீர்கள்

நீங்கள் வாரி இறைத்த
நிறங்களைப் பதட்டத்தோடு அதீதமாய்ப்
பூசிக்கொண்டதில்
கடைவிழியில் அன்னியப்பட்டான்

உங்களின் தீவிரத்தில்
ஆழவும் முடியாமல்
கலக்கவும் இயலாமல்
அவன் திணறுதலில் கலக்கமுற்ற நீங்கள்
அயலானிடம் சொல்லிப்போகிறீர்கள்
''அவனிடம் ஜாக்கிரதை"

நன்றி: கல்கி(05.09.10)

15 June, 2010

பக்கத்துப் பக்கத்து வீடு

ஆதியில் எனக்கும் சாத்தானுக்கும்
பக்கத்துப் பக்கத்து வீடு
கொஞ்சமாய் நிரோத்துப் பொட்டலங்களையும்
மிதக்கும்படிக்காய் மதுப்புட்டிகளையும்
கைமாத்தாய் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு
அவன் எனக்குப் பரிச்சயம்
எப்போது கேட்டினும் இன்முகத்தோடு
அவன் பிரயோகிக்கும் புன்னகை
அந்தி சூரியனாய் மயக்கம் நல்கும்
முலைகனத்த மகளிரோடு
முப்போதும் மோகித்துக்கிடக்கும் அவனுக்கு
பிருஷ்டம் பெருத்த பெண்களோடும்
தொடுப்பு இருந்தது
காமப்பேராறு கரையறுக்கையில்
கரமதுனமும் உண்டு
லாகிரி வஸ்துகள் நீதிபரிபாலனம்
செய்யும் அவனது கொலுமண்டபத்து
அந்தப்புரத்துக்கு தேவகன்னியின் புனைவோடு
சிலபேர் வந்து திருப்தியோடு போவதுண்டு
அவன் அருகாமையின் ஷணங்கள்
பரவசங்களில் தோய்த்து எடுக்கப்பட்டதாயும்
புலன்களை நீவிவிடுவதாயும் தோற்றம் கொள்ளும்
யுவதிகளின் வாசனைகளால் நெய்யப்பட்டிருக்கும்
அவனது இல்லத்திலிருந்து ஊர்ந்துவரும்
இசையின் விச்ராந்தியில் கம்மென்று மணம்
பொறாமையுற்ற காலம்
பொய்யாய் வீசிப்போன வரத்தின்
சாயல் புனைந்த சாபமொன்றில்
வீழ்ச்சியுற்ற சாத்தான்
தீவாந்திரத் தனிமைக்குத் தள்ளப்பட்டு
கடவுளானான்
நான் மனிதனானேன்
நன்றி : சுகன் (ஜூன் 2010)

08 June, 2010

சபிக்கிறது தாபம்

விசிறி எறியப்பட்ட
விலக்கப்பட்ட கனியின் விதையிலிருந்து
வேர்கொழித்துச் செழித்தெழுந்த
ஏதேனூடே வேட்கைகொண்டு போகிற
ஏவாளை பின்தொடர்கிறது
ஸர்ப்பம் வடிவம் வாங்கிய பாவம்

துஷ்டி வீட்டுக்காரனின் தொண்டையில்
திரண்டுருளும் துக்கத்தையொத்த
அவளின் பருவக்கனவுகளை ஊடறுத்துக்
கொட்டுகிறது நிச்சலனமுற்ற அருவி

காய்ந்துதிரும் சருகுகளைப் பற்றி
கீழ்விழும் ஏவாளின் சொற்கள்
பெருந்தனிமையின் கால்களில் மிதிபட
தரையை மெழுகித் திரும்புகிறது
சொற்களின் ரத்தம்

அந்தரத்தில் அலையும் பறவைகளின்
சிறகில் அறைவாங்கி பள்ளத்தாக்கில்
வீழ்ந்துபடுகிறது ஏக்கத்தின் கேவல்

முன்பொருகாலத்தில் ஆதாமை
புசித்த கனிக்கென
பொலிபோட்டுவிட்டார் பிதாவின் பிதா
ஆப்பிள்மரத்துக்கு அடியுரமாய்

தன்னைத்தானே புணரும் ஏவாளின் தாபம்
சபிக்கிறது கடவுளை
'ஏவாளாகக் கடவாய் சாத்தானே'

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

05 June, 2010

சத்யாகாலம்

புதுத்தாலி உடுத்தியிருக்கும் சத்யா
சவூதியிலிருக்கும் கணவனின் நினைப்பில்
தலைக்கு ஊற்றும் நடுநிசிகளால்
நடுக்கமுறுகின்றன இரவுகள்

நன்றி: புன்னகை காலாண்டுதழ்