நீதி விரும்புகிறவர்களின் கவிதை!
சென்னை புத்தகக் காட்சி 2026
இந்த நூலுக்கான தன் முதல் பார்வையை பதிவு செய்திருக்கிறார் கவிஞர் கரிகாலன். அந்தப் பதிவு உங்களுக்காக...
கவிதையை ஒரு வார்த்தையில் விவரிக்க முடியுமா ? என்னிடம் கேட்டால் 'இணக்கமின்மை' என்பேன். மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதைச் செய்யும் வேலை அல்ல கவிதை. இணக்கமின்மை ஒருவித கிளர்ச்சிப்போக்கு. இணங்கிப் போகிறவர்களால் உலகத்தைப் பற்றியும் அவர்களைப் பற்றியும் அதிகம் கற்றுக் கொள்ள முடியாது.
ஷேக்ஸ்பியர் இலக்கியத்தில் புனிதர் பட்டம் பெற்றவர். ஆனால், ஒரு கலைஞராக அவரால் மையச் சமூகத்தின் விதிகளை மீறமுடிந்தது. அதிகாரத்தோடு, சமகால வாழ்வியல் மதிப்புகளோடு, பண்பாட்டு போலித்தனங்களோடு கொண்ட இணக்கமின்மையே
கதிர்பாரதியின் கவிதைகள்.
நமது உலகின் அழகை மறைத்திருக்கும் திரையை விலக்கிக் காட்டுபவை இவர் கவிதைகள். நாம் வாழும் உலகம் அநீதி மிக்கதாக மாறும்போது நீதியை விரும்புகிறவர்களால் முடிவது கவிதை எழுதுவதுதான். கவிதையை எப்படி இணக்கமின்மை என்றேனோ? அப்படி இன்னொரு சொல்லால் கவிதையை விளக்க முடியும் என்றால் அதை 'அன்பு' எனக்கூறலாம். அன்புதான் நம் அனைவரின் சொந்தப் பாதுகாப்பு.
புரட்சி செய்யத் தூண்டுவதில்லை கவிதை. மாறாக, அது ஒரு நிபந்தனை. மனிதர்களுக்கிடையே செயல்படுகிற ஒருவித குறிப்பிட்ட உறவு. மாற்று நடத்தை முறை. இதுவரை வாழ்ந்ததில் இருந்து விலகி, வேறு மாதிரி வாழத் தூண்டுவதன் வழி, அதிகாரத்தின் வேட்கையை அழிக்கிறது கவிதை.
கதிர்பாரதியின் 'பதினான்காம் சகாயராணி'யும் அப்படிதான். வழக்கமான அவரது அங்கதம், பண்பாட்டு நுண் அரசியல், உருவகம், என முழுமையான கவிதை அனுபவத்தைத் தரக்கூடிய தொகுப்பு. சென்னை புத்தகக் காட்சியில், களம் புதிது வெளியீடாக வருகிறது.
இந்தப் புத்தகக் காட்சியின் பேசுபொருளாக, விற்பனையில் சாதனை படைக்கக் கூடிய கவிதை நூலாக இது அமையும். அன்புக் கவி இளவல் கதிர்பாரதியின் 'பதினான்காம் சகாயராணி' கவிதை நூலின் முகப்புத் தோற்றத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறோம். பெருமிதம் கொள்கிறோம்.
பதினான்காம் சகாயராணி (கவிதைகள்)
நூலாசிரியர்: கதிர்பாரதி
முகப்போவியம்: மணிவண்ணன்
வெளியீடு: களம் புதிது

No comments:
Post a Comment