05 November, 2026

வருணன் ஜோ எழுதிய சிறு குறிப்பு ~ அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது ~ தொகுப்பின் ஒரு கவிதை குறித்து எழுதியது. https://www.facebook.com/joe.antony.908


மகளுக்காகக்
காத்திருக்கும் வேளை பள்ளி மைதானத்தில் ஊஞ்சலாடுகிறாள் அம்மா.

முன்னேறும்போது
சிறுமி.
பின்னேறும்போது
அம்மா.
முன்னேறி ஒருமுறை
வானம் உதைத்தவள்
மகள்/ளைக் கண்டதும்
பின்னேறி வந்து
பூமியில் நின்றுகொண்டாள்.
- கதிர் பாரதி (Kathirbharathi SengathirSelvan A)
(அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது தொகுப்பிலிருந்து)
மனதளவில் நாம் எல்லோருமே பால்யத்தையே விரும்புகிறோம். அதிகப் பொறுப்புகளைச் சுமக்கும் நிர்பந்தங்கள் இல்லாதது பால்யத்தின் மீதான வசீகரத்தை கூட்டுவதில் முக்கிய அம்சங்களுள் ஒன்று.
குறிப்பாக பெண்கள் தமக்குள் ஓர் சிறுமியை எப்போதும் ஒளித்து வைத்திருப்பவர்கள். அச்சிறுமி வெளியே வர சமயம் பார்த்தபடியே இருப்பாள். வளர்ந்த சிறுமியாய் மாறிக் குதூகலிக்கிற தருணங்களில் பெண்கள் அதற்கென ஒரு பிரத்தியேகச் சிரிப்பை அவிழ்த்து மலர்த்துவார்கள். அதில் வெகுளித்தனமும், வெட்கமும் சம விகிதத்தில் கலந்திருக்கும்.
இங்கும் தன் மகளை பள்ளியில் இருந்து கூட்டிச் செல்லக் காத்திருக்குமொரு தாய் தன் பால்யத்துக்குத் திரும்புகிறாள். அவள் ஆடும் ஊஞ்சல் அவளது நிகழ்கணத்தின் பொறுப்பிற்கும் பால்யத்தின் மகிழ்ச்சிக்கும் இடையே ஆடிக் கொண்டிருக்கிறது.
மகளது வருகையே அவளை நிலந்தொட்டு அம்மாவாக ஆக்குகிறது. ஒரு வகையில் யோசித்துப் பார்த்தால் வயது ஒரு பொருட்டே அல்ல. பொறுப்புகளே நம்மை பெரியவர்கள் ஆக்குகிறது.