31 January, 2013

இன்றைய இளம் கவிஞர்களில் கதிர்பாரதி தனக்கான இடத்தை உருவாக்கிவிட்டார்=== ரியாஸ் குராணா


கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்”

நம்மைச் சுற்றி நடக்கின்ற விசயங்களை கவிதைகளில் கொண்டுவரும்போது, அனேகமானவை போதனைகளாகவும், எதிர்வினைகளாகவும், கொண்டாட்டங்களாகவுமே இருந்துவிடுகிறது. இப்படியாக நிகழ்ந்துவிடுகிற கவிதைச் செயலை சந்தித்த நமக்கு, இவை எதுவுமற்ற புலத்தில் நின்று கவிதையின் அதீத மாயத்தனத்தோடு ஒரு விளையாட்டாக நமது சுற்றத்தைக் கவனிக்கலாமா எனக் கேட்பவர்களுக்கு கதிர்பாரதியின் கவிதைகளையே வாசிக்கச் சொல்லிச் செல்வேன்.

மிகவும் புதிய திசைகளிலிருந்து நுணுக்கமாக கவனிப்பதைப்போன்ற ஒரு கவிதை சொல்லல் இவருடையது. ஒரு நுாறடி துாரத்திலிருக்கும் மரத்தில் ஒரு எறும்பு செய்யும் வேலைகளை ஒருவர் விபரித்தால், கிட்டச் சென்று உறுதிப்படுத்தும்வரை பொய்போன்றும், ஒரு சந்தேகத்துடனுமே இருப்போம்.
அப்படியான ஒன்றை உருவாக்குவதுடன், கவிதைகளை வரிகளினுாடாக நெருங்கும்போது, சா.. என நம்மையறிமலே அது உண்மையாக மாறுவதும் ஒரு கவிதை வித்தைதான்.

அந்த வித்தையை மிக சாதாரணமாக செய்துகாட்டுபவைதான் கதிர்பாரதியின் கவிதைகள்.
இன்று எந்தக் கவிஞனுக்குத் தனித்த முக்கியத்துவம் கொடுக்கும்படியான, மகிழ்ச்சியான சந்தோசங்களை வெளியிடும் விமர்சனங்களை நிராகரிக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம். ஒவ்வொரு கவிஞனின் கவிதைச் செயலை தனித்தனியாக அடையாளங்கண்டு அதை வெளிப்படையாக பேசுகின்ற நிலை வேண்டும்.

அதைப் பேசுமளவிற்கும், பாராட்டும் அளவிற்கும் மனநிலைப் பக்குவம் மிக மிக அவசியம்.

இன்றைய இளம் கவிஞர்களில் கதிர்பாரதி தனக்கான இடத்தை உருவாக்கிவிட்டார் என்று சொல்லுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் கதிர்.

No comments: