14 May, 2012

வீடு



எருக்கம்புதர்கள் மண்டிக்கிடக்கும்
ஒரு பாழடைந்த வீட்டைக் கடக்கும்போது
இதயத்தால் உற்றுப் பார்க்கிறீர்கள்.
வசீகரமிக்கதாகத் தோன்றுகிறதா
சுடர்கிற ஒளி கண்களைக் கூசப் பண்ணுகிறதா
இப்போது அந்த வீட்டிலிருந்து
ஒரு புறா பறந்து போவதையும் காண்பீர்களே.
அந்தப் புறாவைத் தொடர்ந்து
ஓர் இறகு போல வீடும் மேலெழும்பி
மிதப்பதையும் காண்கிறீர்கள் எனில்
அந்த வீட்டிலிருந்து கொலுசொலி லயத்தோடு
கசிந்து வருவதும் உங்களுக்குக் கேட்டிருக்க வேண்டுமே.
ஆர்வத்தின் நிமித்தம் சுற்றுச்சுவர் ஏறிப் பார்க்கையில்
கொல்லைப்புறத் துளசி காய்ந்து காற்றிலாடுவது
உங்களைப் பெருமூச்சிட வைக்கிறது.
அதனால்தான் புறாக்கள் இரையுண்ட
அவ்வீட்டின் கிணற்றடியை எட்டிப் பார்க்காமல் வந்துவிட்டீர்கள்
ஏனெனில் கிணற்றுக்குள் கறுப்பாகத் தளும்புவது தண்ணீரல்ல
ஒரு பெண்ணின் கேவல்கள் என்று
உங்களுக்குத் தெரிய வந்துவிட்டது.
இனி ஒருபோதும் அந்த வீட்டைக் கடந்து
உங்களால் உங்கள் வீட்டுக்குப் போக முடியாது.


3 comments:

manichudar blogspot.com said...

உண்மைதான். கவிதையை கடந்து வந்துவிட்ட எனக்கு ,வீட்டை இன்னும் கடக்க முடியவில்லை தான்.

Unknown said...

அநேகமாக எல்லா கிணறுகளுக்குள்ளும் விம்மலும கேவலுமே ஒலிப்பதாய் தோன்றுகிறது.
--

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.