19 March, 2012

தேனியின் கூடங்குளம்

’’நெல்லை மாவட்டத்துக்குக் கூடங்குளம் அணு உலைகள் எப்படித் தொல்லையாகவும் ஆபத்தாகவும் இருக்கிறதோ அப்படித்தான் தேனி மாவட்டத்துக்கு தேவாரம் நியூட்ரினோ ஆய்வு மையம் இருக்கப் போகிறது. அணு உலைகள்கூட கரெண்ட் கொடுக்கும்னு பிரசாரம் பண்ணலாம். ஆனா, நியூட்ரின் அணுத்துகள் ஆய்வால் என்ன பயன் இருக்கும்னு அதை ஆராய்ச்சி செய்யற விஞ்ஞானிகளுக்கே தெரியலை. பூமியின் நடுப்பகுதியில் இருக்கும் வெப்பத்தில்கூடப் பாதிக்கப்படாமல் ஊடுறுவி நழுவி மறுபக்கம் வரும் அபார சக்திக்கொண்ட அணுத்துகள்தான் நியூட்ரின். அதை ஆராய்ச்சிப் பண்ணுற இந்திய அணு ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் சொல்வது, ’’இல்லாதா ஊருக்குப் போகாத வழியில் போகிற கதை என்கிறார்கள். இதிலிருந்து நியூட்ரினோ ஆய்வில், இருக்கிற தேவாரம் என்கிற ஊர் களப்பலியாகப் போகிறது என்பது மட்டும் உண்மை’’ - விரக்தியாக வந்து விழுகின்றன வார்த்தைகள் தேவாரத்தில் வசிக்கும் முல்லைப் பெரியாறு மீட்புக்குழுவின் செயலாளர் மு.தனராசுவிடமிருந்து. நியூட்ரினோ ஆய்வு மையம் தேவராத்தில் அமைந்தால் என்னென்ன இடர்பாடுகளை மக்கள் சந்திப்பார்கள் என்று சிறு கையேட்டை வெளியீட்டு, அணு விஞ்ஞானிகளை நோக்கி அறிவியல் பூர்வமான சில அடிப்படை கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார் இவர். இவரின் கொதிப்பான பேச்சிலிருந்து...

‘‘இந்தியாவின் மிகப்பெரிய குப்பைக்கூடை எது தெரியுமா ஸார். தமிழ்நாடுதான். இந்தியாவின் நீர்நிலைகளில் அதிகமாக மாசுப்படுவதும் இங்கேதான். தோல் தொழிற்சாலை கழிவுகளால் மட்டும் 72 சதவிகிதம். இதில் தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை டெல்டா பகுதி இறால் பண்ணைக் கழிவுகளும் அடக்கம். திண்டுக்கல் மாவட்டம் முழுக்க நீர்நிலைகளும் சுற்றுப்புறங்களும் தோல் தொழிலால் மாசுப்பட்டுக் கிடக்கின்றன. காஞ்சிப்புர மாவட்டத்தில் பாலாற்றுப் படுகையில் எண்ணூறுக்கும் மேற்பாட தோல்த் தொழிற்சாலைகள். கொங்கு மண்டலத்தில் நொய்யலாற்றுப் பாசனப் பகுதிகள். சென்னையின் மணலியில் எண்ணெய்க் கழிவுகள்...இப்படி ஏராளம். 22 சதவிகிதம்தான் உத்திரப்பிரதேசத்தில். கல்பாக்கம், கூடங்குளம், தேவாரம்... என அணுக்கழிவுகளால் அதிகம் பாதிப்புக்குள்ளாவதும் தமிழ்நாடுதான். உலகத்திலேயே நான்கு இடங்களில் நியூட்ரின் ஆய்வு மையங்கள் திட்டம் இருக்காம். அமெரிக்காவின் சிக்காக்கோவில் ஃபெர்மி லேப், இத்தாலியில் செரின் லேப், ஜப்பானில் ஹேட்ராண்டெண்டிஸ்ட் லேப்... இந்தியாவில் தேவாரம்... இவற்றில் தேவாரத்தைத் தவிர மற்ற மூன்று இடங்களிலெல்லாம் ஏற்கெனவே சுரங்கம் இருந்த பகுதியில்தான் நியூட்ரின் துகளை ஆராய்ச்சி செய்றாங்க. ஆனா தேவாரத்தில் மட்டும்தான் சுரங்கம் குடைந்து ஆராய்ச்சி செய்யப்போறதா அணு விஞ்ஞானிகள் சொல்றாங்கஎன்கிறார் தனராசு.

தேவாரத்தை எதுக்குத் தேர்ந்தெடுத்தாங்க?

உலக உருண்டையை ஒரு தடவைச் சுத்திவிட்டுப் பாத்தீங்கன்னா அமெரிக்காவின் சிக்காக்கோவுக்கு எதிர்புறத்துல இருக்கிறது தமிழ் நாடு அதிலும் குறிப்பா தென்தமிழகம். அதனால தேவாரத்தைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. இந்தத் திட்டம் ஆரம்பத்துல கர்நாடகாவின் கோலார் பகுதியில் அஸ்ஸாமின் ரோத்தாங்க் சுரங்கப் பகுதியிலும் அமைக்கத் திட்டமாம். எதனாலன்னு தெரியலை தமிழ்நாட்டின் நீலகிரிக்கு மாத்தினாங்க. ஆனா, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிச்சதும் தேனியின் சுருளி மலைக்கு மாத்தினாங்க. சுருளிமலை தேனியின் தெய்வமலை; மூலிகை பூமி. தென்தமிழகத்தின் நிறைய மின் திட்டங்கள் அந்த மலையின் தண்ணீரை நம்பித்தான் இருக்கு. அணு ஆராய்ச்சி மையத்தால் அந்தப் பகுதி விவாசயம் பாத்திப்பாகும் என்று விவாசயிகள் எதிர்த்த்தால் தேவாரத்தைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. தேவராம் மக்களுக்கு நியூட்ரின் துகள்னா என்ன்ன்னு இன்னவரைக்கும் தெரியாது. பொதுவாக மேற்கு தொடர்ச்சி மலைகள் நெருப்புக் குழம்புகள் கொண்ட பாறைகளால் ஆனவை. நியூட்ரின் துகளை முழுமையாக வடிகட்ட ஆயிரம் மீட்டர் விட்டமுடைய நெருப்புக் குழம்புகளால் ஆன பாறைகள் தேவையாம். மேற்கு தொடர்ச்சி மலையான தேவாரம் மலை அப்படிப்பட்டதுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. சிக்காக்கோ அணு ஆராய்ச்சி மையத்தில் செலுத்தப்படும் நியூட்ரின் துகள் பூமியைக் குடைந்துகொண்டு அதன் மையப்பகுதி வெப்பத்தையும் தாங்கிக்கொண்டு சுத்தமான நியூட்ரின் துகளாக தேவாரம் பகுதியை நோக்கி வருமாம். அப்படி வருகிற துகளை உள்வாங்கிக்கொள்ளும் ரீசீவர் பகுதியாக தேவாரம் அணு ஆராய்ச்சி மையம் இருக்குமாம். அதற்காகத்தான் இந்த மலையில் சுரங்கம் அமைக்கிறாங்க. சுரங்கம்னா சின்னதா ஒரு ஆள் உள்ளே போயிட்டு வர்றது போல இல்லை. 200 அடி விட்டமும் கொண்ட 2 கி.மீட்டம் ஆழமும் கொண்ட சுரங்கமாம். நினைச்சுப் பாருங்க. ஒரு மலையை ரெண்டு கிலோ மீட்டர் ஆழத்துக்குத் தோண்டினா மலையைச் சுத்தி இருக்கறவங்க என்ன ஆகறது?”- கேள்வியில் இன்னும் சூடாகிறார்.

இதனால என்ன பாதிப்பு?

ஸார், தேவாரம் ஊரே இருக்காது. 200 மீட்டர் விட்டம் 2 கி.மீ. ஆழத்துக்குத் தோண்டப்படும் பாறைகள் கிட்டத்தட்ட 5 முதல் ஆறு லட்சம் டன்கள் எடை கொண்டவையாக இருக்கும். இவற்றை ஒழுங்காக அடுக்கினாலே 2 கிலோமீட்டர் நீளத்துக்கும் பத்தாயிரம் அடி அகலமும் பன்னிரண்டாயிரம் அடி உயரத்துக்கும் அடுக்கலாமாம். பத்து இன்ச் துளை போடற கருவிகள் கொண்ட வாகனம் வந்தாலே ஒரு தெருவையே அடைச்சுக்கிட்டுப் போகுது. அப்போ இந்தச் சுரங்கத்துக்குன்னு யோசிச்சுப் பாத்தா மயக்கம் வரலை? மலையில் மலையைச் சுத்திலும் உள்ள விவசாயப் பகுதிகள் தரிசாகும். நானூறு ஐந்நூறு அடிகளில் ஆழ்த்துளை கிணறுகள் அமைத்தாலே நிலத்தடி நீரோட்டம் பாதிக்கப்படும்போது மலைகளைப் பெயர்த்து எடுத்தால் அந்த நீரோட்டங்கள் என்னாவது? தேவாரத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு ஏலக்காய் விவாசயம் நடக்குது. 20லட்சம் ஏக்கருக்கு காஃபி பயிர் செய்யறாங்க. இவங்க வாழ்க்கையில் வெடி வெச்சுத்தான் தேவாரம் மலையைப் பிளக்கப் போறாங்களா? அங்க வாழற மலைவாழ் உரினங்களை என்ன பண்ணப் போறாங்க? 5300 டன் இரும்பும் 4000 டன் ஸ்டீலும் 12000 டன் சிமெண்ட் 3500 டன் மணல்... ஆகிய பொருட்களைக் கொண்டுதான் சுரங்கத்தை நிர்மாணிப்பார்களாம். எனில், அந்தப் பொருட்களை எந்த மார்க்கத்தில் கொண்டு வருவார்கள்? ஆகாய மார்க்கமெனில் ஹெலிபேட் அமைக்க விவசாய நிலத்தைத் தவிர இங்கு கையகப்படுத்த வேறு நிலங்கள் இல்லை. சாதாரண தங்கநாற்கரச் சாலைகள் அமைக்கவே ஏராளமான மரங்கள் துண்டிக்கப்பட்டன. இந்த ஆபத்தான சுரங்கத்துக்கு நாம் எவ்வளவு வளங்களைப் பலிகொடுக்கப் போகிறமோ தெரியவில்லை...”

வேலைவாய்ப்பு கிடைக்குமே ஸார்?

இப்படித்தான் ஆரம்பத்துல சொல்வாங்க. அப்புறம் அந்தப் பகுதி மக்களை எடுபிடியாகவும் தரகர்களாகவும்தான் பயன்படுத்துவாங்க. இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? இந்தச் சுரங்கம் செயல்பட ஆரம்பிச்சுட்டா சில நூறு பேர்கள் போதுமாம் வேலைக்கு... ஆனால், இந்த ஆராய்ச்சிப் பணி ஆரம்பக் கட்ட முயற்சிதான். இந்த முயற்சி வெற்றிப் பெறும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. வெற்றிப் பெரவில்லைன்னா அப்படியே விட்டுட்டுப் போயிடுவாங்க. நாங்க எங்கே போறது? சூரியனிலிருந்து கிடைக்கும் நியூட்ரின் அணுத் துகளையும் பூமிக்கு அடியில் சுரங்கத்தில் இருக்கும் நியூட்ரின் அணுத் துகளையும் மோதவிட்டு உடைத்து வெளிப்படும் கதிர்வீச்சைக் கணக்கிடுவதுதான் இந்த் அணுத் திட்டம். இதனால், என்ன விளைவுகள் வரும் என்பதே யாருக்கும் தெரியாது. இதை நான் சொல்லவில்லை அணு விஞ்ஞானிகள் சொல்றாங்க. விஷவாயு கசிஞ்சதுக்கே போபால் பிணக்காடாக மாறுணுச்சு. இதெல்லாம் அனுபவத்தால் தெரிஞ்சது. உலகத்திலே மோசமான திட்டங்கள் அணுசமந்தப்பட்டவைதான் என்பது விஞ்ஞானிகள் கருத்து. அதனால் தேவாரம் நியூட்ரினோ ஆய்வுத் திட்ட்த்தை மத்திய அரசு கைவிடணும். அப்படி செஞ்சா தமிழ் நாட்டையே பாதுகாப்பதற்கு சமம்என்கிறார் மு.தனராசு. அரசாங்கம் உணர்ந்துகொண்டால் சரி!

கல்கி (11.03.2012) தேனி மாவட்டச் சிறப்பிதழ் - 2

No comments: