21 October, 2024

கவிதை : கதிர்பாரதி ~ குடலைமட்டை நத்தை ~

ப்பத்தா ஒரு நத்தை வேட்டையாடி.
மழையீரக் குடலைமட்டை அணிந்து
அவள் வேட்டையாடக் கிளம்பினால்
நத்தைகள் ஓடி ஒண்டும்.
நத்தைகள் மீது சிலுவைகள் வரைந்து மயக்குவாள்.
`மண்ணக வாழ்விலும் மேலான மறுமை வாழ்வு
உங்களுக்கு எம் வயிற்றிலுண்டு` என்று
பிரசங்கிப்பதுபோலிருக்கும்
அவள் வேட்டை.
நடவுபொழுதிலும் களையெடுக்கக் குனிந்தாலும்
நத்தைகளோடே நிமிர்வாள்.
சவ்வுமிட்டாய்க்காரன் பின்திரியும் சிறார்களென
அவளோடு நத்தைகள் வீட்டுக்கு வரும்.
மண்சட்டிக் குளத்தில் நீந்தும் நத்தைக் கனவுகளுக்கு
திருமுழுக்காட்டும் நடக்கும்.
அப்போது விசேஷமாக
தம் உணர்க்கொம்புகளை உயர்த்தி
நத்தைகள் அப்பத்தாவை ஆராதிக்கும்.
என்ன பிரயோஜனம்
கோணூசி குத்தி நெகிழப்படும் நத்தை இறைச்சி
வாழ்வின் அப்பமாக அன்றிரவு மாறும்.
கார் சாகுபடிக் காலையொன்றில்
அப்பத்தா தலையெட்டிப் பார்த்தபோது
அவளொரு வீட்டு நத்தையாய்த் தெரிந்தாள்.
தாத்தாவின் தார்க்குச்சி விளாசலில்
ஊமை நத்தையாய் ஒடுங்கிப் போனாள்.
நத்தை ஓடுகளைத் துளையிட்டு
சலங்கைக் கட்டி ஆடினோம்
அவள் பிணம் முன்பு.
நத்தைகள் கூடி தம் மூதாயை எடுத்துப்போய்
சவப்பெட்டியில் சிலுவை வரைந்து
களத்துமேட்டில் புதைத்தன.
யூரியா சல்ஃபேட் பொட்டாஷியம் பாக்டம்பாஸ்
எல்லாம் செரித்து
தாளடி நடவுக்கால வரப்பில் இழைகிறது
ஒரு புத்தம்புது நத்தை.
அது
அப்பத்தாவேதான்.
_கதிர்பாரதி




No comments: