06 March, 2017

விமர்சனம் ~ ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் ~ எழுத்தாளர் இமையம்


ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் - படிக்கப்பட வேண்டிய கவிதைத் தொகுப்பு. தனக்கிருக்கும் அனுபவத்தை கவிதை வடிவில் சொல்வதற்கான திறனும், அதற்குரிய சொற்களும் கதிர்பாரதியிடம் இருக்கிறது. அதனால் இது படிக்கப்பட வேண்டிய கவிதைத் தொகுப்பாக இருக்கிறது.
ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையும் தனக்குள் ஒரு சம்பவத்தை, ஒரு கதையை கொண்டிருக்கிறது. எந்த கவிதையும் சொற்கள் தந்த மகிழ்ச்சியால், ஈர்ப்பால் எழுதப்படவில்லை. வாழப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சிறுசிறு வலியை, இழப்பை, தத்தளிப்பை, கவிதையாக்கியிருக்கிறார். கவிதை எழுதுவதைவிட, சொல்லப்படாத வாழ்வின் சில சம்பவங்களை பதிய செய்வதில்தான் கதிர்பாரதிக்கு அக்கறை இருக்கிறது. இந்த அக்கறைதான் கவிதைக்கான மதிப்பைக் கூட்டுகிறது. வலுவிழந்த சொற்களின் கூட்டாகவோ, சேர்க்கையாகவோ, குவியலாகவோ இல்லாமல் இருப்பது கவிதைகளின் பலம். சொற்களைவிட சொற்கள் விவரிக்கும் உலகமும், சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் உலகமும், அர்த்தமும்தான் முக்கியம். ஒவ்வொரு கவிதையும் தனக்குள் ஒருகதையை கொண்டிருக்கிறது. அந்த கதை நமக்குத் தெரிந்த கதையாக, நாமே அனுபவித்த, சந்தித்த, கேட்ட, வாழ்ந்த, மறந்துபோன பலவிசயங்களை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த நினைவூட்டலால் நமக்கும் கவிதைக்கும் நெருக்கமான ஒரு உறவு ஏற்படுகிறது. இந்த உறவை ஏற்படுத்திய விதத்தில்தான் கவிதைகள் உயிர் பெறுகின்றன.காற்று அடிக்கிறது, வெயில் அடிக்கிறது, உடல் வலிக்கிறது என்று சொல்ல முடியும். காற்று எப்படியிருக்கிறது, வெயில் எப்படி இருக்கிறது, வலி எப்படி இருக்கிறது என்று விளக்கி காட்ட முடியாது. கவிதையும் அப்படித்தான். உணர மட்டுமே, மனதால், சிந்தனையால் அனுபவிக்க மட்டுமே முடியும். கவிதைக்கு உரை எழுதுவது, விளக்கம் சொல்வது ஏற்புடையது அல்ல. அது கவிதையின் அழகை குலைக்கிற செயலாகும். அதனால் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கவிதை தொகுப்பில் மனதிற்கு இசைவான, மனதை தொந்தரவு செய்த கவிதைகள் நிறைய இருக்கின்றன. அவற்றின் தலைப்புகளில் சில.
இளைத்து கிடக்கிறது நிம்மதி’
ஆஸ்பெஸ்டாஸ் அம்பாள்’
பின் தங்கியவர்களின் உயரம்’
ஒரு குலத்துக் குரவையாக’
புன்செய் வெயிலாகும் முத்தம்’
ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்’
ச்ச்சியர்ஸ்’
கருவாட்டு ரத்தமூறிய இட்லி’
ஆல்த பெஸ்டின் புறவாசல்’
நீ வரவே இல்லை’
கவிதையை புரியாதவாறு எழுதுவது, புதியபோக்குகளின்படி, போக்குகளுக்காக எழுதுவதும் பெரிதல்ல. எளிமையாக எழுதுவதுதான், பிறருடைய சாயலின்றி எழுதுவதுதான், எளிதில் செத்துப் போகாத கவிதைகளை எழுதுவதுதான் கடினம். கதிர்பாரதியின் கவிதைகள், கவிதைகளின் தலைப்புகளும்கூட எளிமையாக எளிமையின் உள்ளார்ந்த பொருளில் இருக்கின்றன. இதுதான் எது கவிதை என்பதை நமக்கு சொல்வது.
கதிர்பாரதியின் கவிதைகள் நகர வாழ்வின் அகபுற நெருக்கடிகளைக் காட்டிலும் கிராமவாழ்வின் அசலான முகத்தை பதிவு செய்வதில்தான் அக்கறை கொண்டிருக்கின்றன. தனக்கு எது தெரியுமோ அதை எழுதியிருக்கிறார். எது தன்னை தொந்தரவு செய்கிறதோ அதை எழுதியிருக்கிறார். கட்டாயம் சொல்ல வேண்டும் என்பதை மட்டுமே எழுதியிருக்கிறார். அதையும் ஆர்ப்பாட்டமில்லாமல், பாசாங்கில்லாமல் ரசித்துரசித்து எழுதியிருக்கிறார். இந்தப் புள்ளியில்தான் எது கவிதை, எது கவிதையில்லை என்பது தீர்மானமாகிறது. கவிதையில் சொல்லவரும் அனுபவத்திற்கேற்ப சொற்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். சொற்களை குவித்துவைத்துவிட்டு அதை அனுபவமாக மாற்றவில்லை கதிர்பாரதி. சொற்கள் முக்கியமல்ல. சொற்கள் சுட்டும் பொருள்தான் முக்கியம். சொற்கள் ஒரு நிலையில் கைக் காட்டி மரங்கள் மட்டுமே.
ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கவிதை தொகுப்பில் திரும்பத்திரும்ப அசைபோட வைத்த, நினைவுகொள்ள வைத்த சொற்கள் சில.
நிலமும் சொற்களும் வேறுவேறல்ல’
ஆசையை பற்றவைக்கிறது இரவு’
விழுகிறது கேள்விக் கல் ஒன்று’
பாவத்தின் பங்காளிகள் துரத்தி வருகிறார்கள்’
உங்கள் கைகளில் சுடர்கிறது - காதலின் தீபம் ஒன்று’
உழுது பயிர் செய்திருக்கிறேன் - உன் யவ்வனத்தை’
மௌனத்தை பற்றவைத்திருக்க’
ஒரு குளத்துக் குரவையாகத் துள்ளுகிறது - என் சொற்களின் கனவு’
கதிர்பாரதியின் கவிதைகளில் அது இருக்கிறது. இது இருக்கிறது என்று சொல்லமாட்டேன். அது இல்லை. இது இல்லை என்றும் சொல்லமாட்டேன். அவர் எழுதியது கவிதையாக, படிக்க வேண்டிய கவிதையாக இருக்கிறது என்று மட்டும் சத்தமாக சொல்ல முடியும். இன்று கவிஞராக இருப்பது பெரிய சாகசம். அந்த சாகசத்தில் கதிர்பாரதி, ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான் - தொகுப்பின் வழியாக வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் (கவிதைத்தொகுப்பு)
கதிர்பாரதி,
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம்,
விலை ரூ.85,
ஆண்டு - 2016

No comments: