25 July, 2016

விமர்சனம்~ கவிநுகர் பொழுது~ கதிர்பாரதி (“ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்” நூலினை முன்வைத்து) ~ தமிழ் மணவாளன்

ஜோதிடத்தில் பொருட்படுத்தக்கூடிய நம்பிக்கையேதும் எனக்கில்லை. ஜோதிடத்தில் காலத்தைப் பகுத்து, ராகு திசை, கேது திசை, சுக்கிர திசை நடப்பதாகச் சொல்வதுண்டு. உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் கதிர் பாரதிக்கு கவிதைத் திசை நடக்கிறது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். தமிழ்க்கவிதையின் நெடிய மரபில் தமக்கான வடிவத்தை கவிதைகள் தாமே தகவமைத்துக் கொண்டு வந்திருப்பதை வரலாற்று ரீதியான வாசிப்பில் அறியவியலும்.

"தீவிரமான மாற்றங்களைக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மொழியில்தான் கவிதைகள் உயிர்ப்புப் பெறுகின்றன. தன்னைப் பின்னகர்த்தும் காலத்துக்கு விட்டுக் கொடுக்காமல் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டு, அந்தக் காலம் அளிக்கும் அனைத்துச் சவால்களையும் ஏற்றுக்கொண்டு, கவிதையை நோக்கி வருகிறவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய மனவெழுச்சியைத் தருகின்றன. சொற்களில் விவரிக்க இயலாத பேரனுபவங்களைத் தருகின்றன.", என்பார் சுந்தரராமசாமி.

சமீப
காலமாக நவீன கவிதை எழுதும் பலரும் ஒரு மொழியையும் வடிவத்தையும் கண்டடைந்திருக்கிறார்கள்
. தொழில் நுட்பத்தில் தேர்ந்த பல நவீன கவிதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. வாசிப்பின் போது, அவை கையகப் படுத்தியிருக்கும் தொழில் நுட்பம், புனைவின் சாத்தியம் மீறிய சாத்தியம், பேசு பொருளின் தனித்துவம் ,அதன் தேவை, அதைப் பேசுவதில் உள்ள தீவிரம் அவற்றிற்கான முக்கியத்துவத்தை உறுதி செய்வனவாய் உள்ளன.
ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்என்னும் கதிர்பாரதியின் தொகுப்பிலுள்ள கவிதைகள் நவீன தமிழ்க்கவிதைகளின் தேர்ந்த அடையாளமாக இருக்கின்றன என்பதை விட, தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியில் நவீன கவிதைக்கான, கால மாற்றத்தின் வடிவம், தொழில் நுட்பம் இவற்றையெல்லாம் கடந்து , எல்லாக் காலத்துக்குமான கவிதைக்குரிய இயல்பெழுச்சியை லாவகமாய்த் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன‌ என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இதனை, தக்க மேற்கோள்களுடன் பேசும் வாய்ப்பு கட்டுரையின் பிற்பகுதியில் வாய்க்குமெனக் கருதுகிறேன்.
"கவிதை என்பது உணர்ச்சிகளின் தங்குதடையற்ற பிரவாகம்", என்றார் வேர்ட்ஸ்வொர்த்.
பொதுவாக , வீன கவிதைகளில் கட்டமைக்கப் பட்ட வடிவங்களையே பெரிதும் வாசிக்கமுடியும். பிரவாகம் என்பது உணர்வு சார்ந்தது மட்டுமன்று; மொழி சார்ந்ததும் கூட. அப்படி ஒரு பிரவாகம் இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. கவிஞனைக் கடந்து கவிதை சொற்களின் கரம் பற்றி முன்னே செல்கிறது.வாசிப்பினூடாக ,வார்த்தைகளின் இடம் பற்றும் தீவிரத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.
நம் தமிழ்மரபு நிலத்தை முதன்மைப் படுத்துவது. நிலத்தை முன்வைத்து பண்பாட்டைக் கட்டமைத்தது. நிலத்தினை ஐந்திணைகளாக பகுத்ததோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கென தனித்த கருப்பொருட்களையும் உரிப் பொருட்களையும் வகுத்துக்கொடுத்தது.திணைகளுக்கு குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல்,பாலையென தாவரங்களின் ,மலர்களின் பெயரினைச் சூட்டிய மரபுடையது. நம் சமகால நவீன கவிதைகள் சங்ககாலப் பாடல்களின் நீட்சி என்பதற்கான இன்னுமோர் அடையாளமாக கதிர் பாரதியின் கவிதைகளை என்னால் குறிப்பிட முடியும். நிலம் குறித்தான அதன் மீதான இவரின் கவனம் பல சூழல்களிலும் வெளிப்படும் கவிதைகள் இடம்பெற்றிருப்பது இத் தொகுப்பின் முக்கியமெனக் கருதிகிறேன்.

"
ஓர் உயர் ரக மதுப் புட்டியென அத்துணை வாளிப்பாக
என் முன்னே இருக்கிறது என் நிலம்.
நான் அதை முத்தமிட்டு முன் -பின் தட்டித் திறப்பேன்.
மிடறு மிடறாகப் பருகுவேன்.
அப்போது வாய் திறக்கும் ஆன்மாவுக்கும்
பருகக் கொடுப்பேன்".

'
எனக்கான முதிரிளம் பருவத்து முலை
' ,என்னும் கவிதை

மேற்கண்டவாறு
தொடங்குகிறது
. மதுப்புட்டியைப் போலிருக்கும் நிலம் என்கிறார்;அதுவும் வாளிப்பாக. அருந்த ஆயத்தமானவனின் மன நிலையிலிருந்து நிலம் பெரும் சொர்க்கமென விரிகிறது.தட்டித் திறப்பதற்கு முன் முத்தமிடும் உதடுகள் அறியும் அது சொர்க்கத்தின் திறப்பென்று.
என், நான்’, என்னும் சொற்கள் கவிஞனுக்கும் நிலத்துக்குமான நெருக்கத்தை உறுதிப்படுத்துகின்றன‌.அதை ஊர்ஜிதப்படுத்தும் உவமையான மதுப்புட்டி எங்கே போதைக்குள் தள்ளி மிதக்க வைத்துவிடும் சிக்கல் தவிர்க்க , ஆன்மாவுக்குப் பருகக் கொடுத்து நிலம் நிலைத்து,
" நிலம் தந்த வெள்ளாமையெனக் கொண்டாடிக் களிப்பேன்"
என களிப்படைந்த கவிமனம், அதனாலேதான் இறுதியாக
" நிலமே
மனமே
உனை ஒருவருக்கும் கொடேன்
ஓரேர் உழவனாய்க் கைக் கொள்வேன்"
என்று தனதாக தனதே தனதாக்கி கொள்கிறது.
தனக்கு மிகவும் உகந்த ஒன்றை மதுவுடன் ஒப்பிடும் கவிமனம் அதை உச்சமான ஒப்பீடாக உவமையாகக் ருதுவது இயல்பானது.

"பதினைந்து பதினாறு கார்த்திகைக்குப்பின்
ஒரு நிலவறையிலிருந்து
பதப்படுத்தப்பட்டு வெளிவந்த
வீறுமிக்க மதுவைப் போல்"-
என்பார் கனவுகளில் மீரா.

"
உழுது பயிர் செய்துருக்கிறேன் உன் யவ்வனத்தை
நீர்கால் ஓரத்து மரங்களென
அது தளிர்க்கத் தொடங்கியிருக்கிறது."
என்கிறார் மற்றொரு கவிதையில்.
நிலம் குறித்த கவிதைகள் என்று பேசும் போது ஆனந்தியின் தாழப்பறக்கும் தட்டான்கள் கவிதை குறித்துப் பேச வேண்டும்.இவரின் ,'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்', தொகுப்பிலேயே இக்கவிதை இடம் பெற்றிருந்தது. அக்கவிதை குறித்து என் முனைவர் பட்ட ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறேன்.
நதிகளுக்கு பெண்ணின் பெயர் சூட்டிடும் மரபு நம்முடையது.கங்கை,யமுனா, காவேரியென. தாய் மண் தாய் நாடு என்று சொல்கிறோம். பாரதமாதாவெனப் பாரதி தெய்வமாக சித்தரித்தார். திருவள்ளுவர் மிக இயல்பாக ,
" நிலம் என்னும் நல்லாள் நகும்"
என்கிறார். செல்லப்பிராணிகளுக்கு பெயர் சூட்டும் மரபுண்டு. ஆனால், குறிப்பிட்ட நிலப்பகுதிக்கு செல்லபெயர் சூட்டியது அனேகமாக கதிர்பாரதியாகத் தான் இருக்ககூடும்.ஆனந்தி என்று பெயர் சூட்டுகிறார்.

"மணிப்புறாவின் லாவகத்தோடு எழும்பி மிதக்கிற என் நிலத்துக்கு
ஆனந்தி என்று பெயர் சூட்டியிருக்கிறேன்."

அவ்விதம்
பெயர் சூட்டியதாலேயே மேலெழும்பும் பாக்கியம் பெற்றதோவென்கிறார்
.தட்டான்கல் தாழப்பறந்தால் மழை வருமெனச் சிமிட்டும் ஆனந்தியின் இமைகளிலிருந்து தட்டான்கள் தாழப்பறக்கத் தொடங்கும் போது கவிமனத்தில் மழை பெய்யத் தொடங்குகிறது.இப்படியான புனைவுச் சித்திரமாக விரியும் வரிகள்

" நிலத்தின் பொருட்டில்லை
ஆனந்தியின் பொருட்டு நிலத்தின் மீது
தாழப்பறக்கின்றன தட்டான்கள் "
என்னுமிடம் ஆனந்தியைத் தனித்து முதன்மைப் படுத்துவதாய் ஆகி விடாதென்பது, ஆனந்தி தான் நிலம் என்று உள் வாங்கிக் கொண்ட வாசிப்பு மனம் மெல்ல நகைக்கும்.

"வெட்டுக்கிளிகள் பறந்துலவும் என் நிலம்"

"
இப்படியாக
என் நிலத்தின் கடைசித் துளிக் கருணையும்
உறிஞ்சப்பட்ட பிறகு"

"
எம் நிலத்தின் பாடல்களால் தானியக்கிடங்குகள்
நிறைந்தன"
என்றெல்லாம் நிலம் சார்ந்த படிமங்களை, உவமைகளை உருவக்கியிருக்க,, நீ வரவே இல்லை என்னும் கவிதை பிரிவின் பாடலாய் மாறியிருக்கிறதெனலாம்.
நம் சங்க இலக்கிய மரபில் பிரிவும் பிரிவின் நிமித்தம் படைக்கப் பட்ட இலக்கியமும் மிக முக்கியமானது.தலைவன் பிரிந்து செல்வதை ,'போர் வயிற் பிரிவு', பொருள் வயிற் பிரிவு' எனக் காண்கிறோம்.
அறத்தொடு நிற்றலின் பின் (காதல் வெளிப்படுத்தப்பட்ட பின்பு) தலைமகன் உடனே மணந்து கொள்ளாமல், பொருள் தேடப் பிரிந்து போயிருக்கிறான். அவன் வருவதாகச் சொன்ன கார்காலம் வந்து விட்டது. தலைவி வருந்துகிறாள். மழைக்காலம் வந்துவிட்டதை அறியும் தலைவன் வந்துவிடுவான் எனத் தோழி தேற்றுகிறாள்.
தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள் :
யானை மூங்கில் நெல்லைத் தின்றுவிட்டு மகிழ்ச்சியுடன் உறங்கும் மலைப்புறம்; சந்தன மரங்கள் நிறைந்த “வாடு பெருங்காடு” அது. அங்கே பெருமழை பொழிந்தால் அச்சந்தரும் ஆழமான சுனைகளில் நீர் நிறையும்; மலைப்பக்கங்களில் அருவிகள் ஆர்ப்பரிக்கும்; கற்களைப் புரட்டிக் கொண்டு வேகமாக ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மூங்கில்களை மூழ்கடித்துக் காட்டில் மோதி ஆர்ப்பரிக்கும். இதோ, இப்போதே மழை பொழிய வானம் மின்னி முழங்கிக் கொண்டிருக்கிறது.’, நற்றிணைப் பாடல் பேசும்.
அப்படியொரு சித்திரத்தை கதிர்பாரதி உருவாக்குகிறார்.
"என் கரம்பை நிலத்தில்
உதிர்ந்து விழுந்துவிட்ட தென்னங்குரும்பைகளைக்
கடித்துச் ச‌திராடுகின்றன ஜோடி அணில்கள்”
என்று தொடங்கும் கவிதை,
"இந்தக் கோடையும் கைவிட்டுப் போய்விட்டது"
என்று முடியும்.தலைவிக்கு பதில் தலைவன் கூற்றாக.
நிலம் சார்ந்த கவிதைகளின் ஆளுமை, தொகுப்பை வயப்படுத்தியிருப்பினும் பிற பண்பின் பாற்பட்ட தற்கால சூழல் சார் படைப்புகளும் தொகுப்பில் கவனம் கொள்ளத்தக்கவையே.
முத்தத்தில் உயிர் வளர்க்குமொருவனை அறிய முடிகிறது. அதேசமயம் புன்செய் வெயிலாகும் முத்ததின் முற்றத்தில் தேம்பிக் குலுங்குகிற உடம்பென்பது நினைவின் ஸ்தூலவடிவமெனக் கூறிடவும் இயல்கிறது.
வருத்தங்களை முத்தமிடும் மனத்தின் தன்மை பரிசீலனைக்குரியது.
நகர்ப் புறத்தினை மெட்ரோபாலிடன் நிலம் என்கிறார்.இருசக்கன வாகனத்தில் குழந்தையை ஏற்றிக்கொண்டு செல்லும் தந்தை ,அலைபேசியில் பேசுவதும் ஆபத்தான சூழல்கள் உருவாவதும் ஒரு கவிதை.
கைவிரல்களைக் கூப்பி இல்லம் உருவாக்கும் திலீபன், அதுவே நனைந்து விடாதிருக்க உள்ளங்கை குவித்து மூடும் பாவனை குழந்தமையின் உச்சங்களில் ஒன்று.
" எனக்கும்
உன் நினைவுகளுக்குமிடையில்
சிகரெட்டின் அளவேஇருக்கும்
இடைவெளியின் முன்முனையில்
ஆசையைப் பற்ற வைக்கிறதுஇரவு
உறிஞ்சி இழுத்த இழுப்பில்
விடிகாலையின்கிழக்குக்கு
சிவந்து விட்டது."
என்னும்வரிகளில், ஒரு இடைவெளியின் அளவு ஒரு சிகரெட்டின் அளவென்பது அரூபத்தின் தன்மையை ஸ்தூல வடிவத்தில்ம மாற்றும் கவிதை உத்திதான். ஆனால் ஆசையைப் பற்ற் வைத்து இழுத்து,புகைத்து ,உறிஞ்சி விடிகாலைக் கிழக்கைச் சிவக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்புடையது.
நிறைய கவிதைகளை சொல்லிக் கொண்டே போகலாம் எனுமளவு பல கவிதைகள்.

" நமது நிலம் குறித்து, நிலத்தின் மீதான நமது வாழ்வு குறித்து , அதன் விழுமியங்கள் குறித்து யாரேனும் பேசினால் அவரை அன்பு செய்யத்தான் வேண்டும். " ,என்கிறார் லிபி ஆரண்யா.
நான் அதனை வழி மொழிகிறேன். 'வேண்டும் ,ஏனெனில் தோன்றும்'.
மேலும்,நான் ஒன்றை முன்மொழிகிறேன்.யாதெனில், சங்க காலக் கவிதைகளின் நீட்சியாகவே சமகால நவீன கவிதைகளைக் காணமுடிகிறதென்னும் கூற்றின், சிறந்த அடையாளமாக இக்கவிதைகளைக் கொள்ளமுடியும்.

தமிழ்மணவாளன்


No comments: