11 May, 2016

விதைநெற்கள் அதிகமுள்ள தானியக்குவியல். - கோ.கலியமூர்த்தி


அரசியலை அகற்றிவிட்டு, பொறுப்புணர்வைப் புறந்தள்ளிவிட்டு, உத்திகளின் சோதனைச்
சாலையாக, அசட்டு ஆன்மீக மத்தியதர வர்க்க மழுங்கலாக, உள்ளொளி தர்ஸன உளறலாக
 தமிழ்க்கவிதையை மாற்றிவிட்டு, அதையே நவீனகவிதை என முழங்கிய காலம் முடிவுக்கு
 வந்துவிட்டதை, 2010 க்குப்பிறகான நவஅரசியல் கவிதைகள் தங்கள் பறிக்கப்பட்ட வாழ்வை, 
வீழ்த்தப்பட்ட விழுமியங்களைப், புதியதொரு அழகியல் கூடிய உக்கிரமான மொழியில் 
பாடத்துவங்கிவிட்டபோதே புரிந்துகொள்ள முடிந்தது.இந்த மாற்றத்துக்குப்பின் விளைந்த 
முக்கியக் கவிஞர்களில் ஒருவர் கதிர்பாரதி. விருதுகளும் அங்கீகாரங்களும் பெற்றுப், 
பரவலாக வாசிக்கப்படும் பாக்கியம் பெற்ற அவரது முதல்தொகுப்புக்குப் பிறகு, இன்னும் 
அடர்த்தியும் நுட்பமும் கூடியதாக வந்திருக்கிறது, "ஆனந்தியின் பொருட்டு 
தாழப்பறக்கும் தட்டான்கள் "என்கிற இரண்டாவது தொகுப்பு. நிலம், காதல் இரண்டையும், 
உழுகுடி மரபின் உளவியலோடு பாடும் கவிதைகளே அதிகம் இத்தொகுப்பில்.
என் நிறைசூலியான பசும்நாற்றுகளில் புகையான் திகைந்துவிட்டது.
என் வரப்புகளில் நட்டுவாக்காலி ஊர ஆரம்பித்துவிட்டது
என் நிலத்தை விரியன்குட்டி கைப்பற்றிவிட்டது
என் குலசாமி கல்லாகிவிட்டது
     
எனக்கதறும் இக்குரலுக்குப்பின்னே, வாழ்வுதொலைத்த உழுகுடி இனத்தின்
வலியிருக்கிறது. அதை வலிமையோடு சொல்லத்தெரிந்த மொழியிருக்கிறது.
"எங்களிடம் நீர்முள்ளிப்பூக்கள் இருந்தன "என்கிற தொகுப்பின் உச்சக்கவிதை, 
வேளாண் வாழ்வின் வளங்களை, ரணங்களை, காட்சிகளை மட்டுமல்ல, 
விழுமியங்களையும் விளக்கி நீண்டு
என் தாத்தாவிடம் கண்ணீரும் தாகமும்கூட இருந்தன
மயக்கமுற்று நிலத்தின் மடியில் வீழ்ந்தவருக்கு
டமக்ரான்போத்தலில் தண்ணீர் வந்தது
அதை முகத்தில் தெளித்து அவரைப் புதைத்தபோது
அழுது அரற்ற அவர் பாடல் இல்லை எம்மிடம்
       என முடியும்போது, வழிகிறது கண்ணீர். வலிக்கிறது மனம்.
       கண்ணீரின் ஈரம் மட்டுமல்ல, கனலும் வீரமும் 
கொண்டது வேளாண்குடி என்பதை 
உணர்த்தும் "குள்ளநரி அழைக்கிறது வாரீர் "உக்கிரமான அரசியல் கவிதைக்கான 
உதாரணக்கவிதை. அதில், நிலம் என்பதை, 
நினைவுகளின் ஆழ்மடுவிலிருந்து பொங்கும் 
வெறிபிடித்த படிமங்களாக அடுக்குகிறார் இப்படி.  
நித்தமும் நாங்களிட்டு உண்ணும் எம் அன்னத்து உப்பு
இளம்விதவை ஈன்றெடுத்த முதல்மகவு
பொட்டல்வெளி காளி வெளித்தள்ளும் நாவு
எந்தையும் தாயும் உருவிஉருவி முத்தமிட்ட 
எம் ஆணுறுப்பு
எம் காதற்பெண்டிரின் பெண்ணந்தரங்க உறுப்பின் சுவை
தாவுகாலிட்டு உச்சங்கிளையில் தீவனம் கடிக்கையில்
காற்றிலாடும் மறியின் பால்செறிந்த மார்பு 
சேறுகுடித்து ஊறிக்கிடக்கும் கருவேலமுள்ளின் முனை
       -என்றெல்லாம் அடுக்கி, கடைசியில்,
தன் மூத்திரம் குழைத்த மண்ணெடுத்து
இரையின் முகத்தில் விசிறி
குரல்வளை கடித்திழுக்கும் குள்ளநரி
     -என முடிக்கும்போது வேறொரு பரிமாணம் கொள்கிறது கவிதை.
      கவிஞர் அதிகம் பாடும் இன்னொரு தளம் காதல்.முன்னுரையில் லிபி ஆரண்யா 
சரியாகவே குறிப்பிடுவதுபோல, காமமில்லாத காதல் என்பதுபோன்ற பம்மாத்துகளற்ற, 
காமத்தின் தகிப்பும் நீர்மையும், இழந்துவிட்ட காதலின் ஏக்கமும் அதன் ரணங்களும் 
வடுக்களும் என, விதவிதமான மொழிபுகளில் கசிகிறது காதல்.
எனைநோக்கி நீ வருகிறாய் என்ற நினைப்பே
பல பருவங்களைத் திறந்துவிடுகிறது
     -எனச் சொல்லத் தெரிந்திருக்கிறது கவிஞருக்கு. ஏராளமாக எழுதியிருந்தாலும், 
யாரும் சொல்லியிராத ஒரு கவிதை இப்படிப் பேசுகிறது.
முக்கோடைக்கும் முந்தின கோடையொன்றில்
நேசக்கடிதங்களைப் பரிமாறிக்கொண்ட
இனிச்சமரத்தினடியில்
இக்கோடையில் நிற்கும்போது
சொத்தென்று தலையில் விழுகிற புளியம்பழத்துக்கு
உன் கீழுதட்டின் சுவை
ஆகவே
பழம்தின்று கைமீந்த புளியங்கோதுக்கு
உன் பெண்ணந்தரங்கத்துப் பொன்னிற முடிகளின் சுவை
      -இப்படிச் சொல்கையில் காதல் காமம் கவிதைமொழி யாவும் உச்சம் தொடுகின்றன.
      காதலுக்கேயுரிய, மிகையுணர்ச்சிகள், ரொமாண்டிக் சொற்கோர்வைகள் எதுவுமின்றி
நீ என்பது
எத்துணை பெரிய வெறுமை
நான் என்பது
எத்துணை பெரிய தனிமை
        நகுலன் பாணி எளிய சொற்களின் மூலமேகூட அற்புதமாக நெய்துவிடமுடிகிறது 
கதிர்பாரதிக்கு.
கசிந்து பரவுகிற உன் நீர்மையில்
மெல்லமெல்ல மூழ்குகிறது என் வேர்
என்றும்,
உழுது பயிர்செய்திருக்கிறேன் உன் யவ்வனத்தை
நீர்க்கால் ஓரத்து மரங்களென
அது தளிர்க்கத்தொடங்கியிருக்கிறது
என்றும், காதலைப் பாடும்போதும், மருதநில அழகியலே ததும்புகிறது.
       அடுத்த முக்கியமான தளம், காதலை, எளியோரின் வாழ்வை, தமிழ்ச்சமூக
 விழுமியங்களை வீழ்த்தும், சமீபகாலச் சாதிவெறிக்குரூரங்களுக்கெதிரான கவிதைகள்.
சிட்டுக்குருவி தண்டவாளத்தில் விழுந்துவிட்டது, 
வெட்டுக்கிளிகளைச் சூப்பர்மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல், ரயில் என்பது ரயில் இல்லை
ஆகியவை, காலத்தைப்பாடும் கவிஞனின் சன்னதம்.
ஆஸ்பெஸ்டாஸ் அம்மன், கண்டிஷன்ஸ் அப்ளை, நினைந்தும் நனைந்தும் 
வாழப் போதுமானதாயிருக்கிற திலீபனின் வீடு ஆகியவை மறக்கமுடியாதவை.
       கதிரின் வயலில் மகசூல் அதிகம்.
காற்றில் பறக்கும் பதர்களைவிட, களஞ்சியம் போகும் மணிகளே அதிகம்.
அதனினும் சிறப்பு  காலகாலத்துக்குமான விதைநெற்கள் அதிலுண்டு என்பதுதான்.
       

  கோ.கலியமூர்த்தி
Hc686, பகுதி1
அண்ணாநகர்
திருச்சிராப்பள்ளி-26

No comments: