10 August, 2012

மகாகவி கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்.1.
உலகை
உன்மத்தம தாண்டவமாட வைக்கிற
கவிதையொன்றின் கடைசிவரியை
இயற்றிக்கொண்டிருக்கிற மகாகவியை,
அவன் மகனின் மலத்தைக் கழுவிவிட
நிர்பந்திக்கிற கீழ்புத்தியுடைய இச்சமூகம்
அநதக் கவிதையின் கடைசிவரியைப்
படிக்கையில்
மூக்கைப் பொத்திக்கொள்கிறது.
2.
கவிதை இயற்றலில் லயித்திருக்கும்
ஒரு வெய்யில்பொழுதில்
நான்காம் அடுக்கின் தலையிலிருக்கும்
மொட்டைமாடியில்
வெளுத்தத் துணிகளை உலர்த்த
பணிக்கப்படுகிற மகாகவி,
இடது புறம் ஒரு க்ளிப்
வலது புறம் ஒரு க்ளிப்... போட்டு
தன் கவிதையை
சூரியனில் காயவைத்துவிட்டு
கிடுகிடுவெனக் கிழிறங்கி வருகிறான்.
3.
இருசக்கர வாகனத்துக்கு
எரிபொருள் இடுகிற மகாகவி
சில்லறை பைசாவுக்காக
சட்டைப் பையிலிருந்து
எரியும் கவிதையொன்றை
எடுத்துக்கொடுக்கையில்
மிரண்டு பின்வாங்குகிறது
பெட்ரோல்.
4.
மாமிசம் வெட்டப்படுவதை
நெற்றிக்கண்ணால் வெறித்தபடி
சிக்கன்கடை வாடிக்கையாளர் வரிசையில்
நிற்கிற மகாகவி,
அல்லவற்றைக் கழித்து
நல்லவற்றைச் சேர்த்து
லெக்பீஸ் போல புஸ்டியானதாய்
மனசுக்குள் சொற்களை
வெட்டிவெட்டிச் சேர்க்கிறான் கவிதைக்காக.
குடல்போல கொழகொழ சொல்லொன்று
கவிதையில் என்னையும் சேரேன் என்கிறது.
நிர்தாட்சண்யமாக மறுத்துவிடுகிறவன்,
கூடுதலாக
கால்கள் போன்ற ஓடியாடும் சொற்களை
வாங்கிக்கொண்டு
வீடுவந்து
சூப் வைத்து
கவிதையைக் குடிக்கிறான்.
5.
கொடும்பசியோடு நடந்துபோகிற
மகாகவி முன்பு
பெருத்த பிருஷ்டங்களை இடவலமென
லயத்தோடு அசைத்து அசைத்துப்
போய்க்கொண்டிருக்கிறாள் பேரிளம்பெண்.
பசியாறிய பிறகு
உலகமே காமுறுவகையில்
கவிதையொன்றை
இயற்றிக்கொண்டிருக்கிறான்.
6.
மரம் குறித்த கவிதையொன்றை
யோசித்தபடி
தெருவில் போய்கொண்டிருக்கிற
மகாகவி தலைமீது
திடீரென்று கொட்டுகிற மழை,
மரத்தின் உச்சங்கிளையில்
விழுந்து
வழிந்து
இறங்கி
அவன் காலை நனைக்கும்போது
அப்படியே
மரத்தின் வேர்களும்
நனைகின்றன.
7.
லௌகீகப் பிடுங்கல்கள் தாங்கவொன்னாது
திரைக்குப் பாட்டெழுத வந்த மகாகவிக்கு
இரண்டுக்கட்டை வித்தியாசத்தில்
முதல் குத்துப்பாட்டு வாய்ப்பொன்று
கைமீறிப் போய்விட்ட அன்றைய இரவில்
வன்மையாகத் திரும்பிப் படுத்திருக்கிறாள் மனைவி.
அவளை அண்டாது அணுகாது
விசனத்தோடு
மாநகர நடுநிசி வீதியில் நடந்துபோகிறவன்,
ஆளரவமற்ற ஒரு கணத்தில்
டூபீஸ் உடையில் அபிநயிக்கும்
நடிகையின் சுவரொட்டி முன்பு
சிறுநீர்க் கழித்துவிட்டு வந்து
குப்புறப் படுத்துக்கொள்கிறான்


11 comments:

அப்பாதுரை said...

மூன்றாவதன் வெப்பம் ஐந்தாவதில் கூடுகிறது.

நிலாமகள் said...

பெட்ரோல் போட்ட‌ காசுக்கு ப‌தில் எரிகிற‌ க‌விதை...! ந‌ல்லாத்தான் இருக்கு ம‌காக‌வியாக‌ இருப்ப‌து!!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... சொற்கள் அங்கங்கே நன்றாக விளையாடுகிறது... அருமை...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி....

rvelkannan said...

சத்தியமாக நான் மகாகவி இல்லை என்ற போதும் இது குறித்து நிறையவே அனுபவபட்டு இருக்கிறேன் கதிர் , வழமையாக படும்பாடுகளை கவிதையாக்கி இருக்கிறாய் மறுபடியும் ஒரு கைகுலுக்கல்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மஹாகவியின் ஏழு ஸ்வரங்களில் எழுதப்பட்ட கவிதையின் ஒருநாள் கழிந்தது.

ஃபார்ம் தொடர்வது கவிதைக்கு நல்லது.

vasan said...

"என்ன‌வாவேன்" என்ப‌தில் ம‌ய‌ங்கிக் கிற‌ங்குகிறான் ம‌காக‌வி,
'என்ன‌வாய் இருக்கிறான்' என்ப‌தில் இய‌க்கிக் கொண்டிருக்கிற‌து
சமூக‌ம் அவ‌னை....
குழ‌ந்தையை க‌ழுவி, துணியுல‌ர்த்தி, வாக‌ன‌ எரிபொருளுக்கு சில்ல‌ரை'எண்ணி'
க‌றிவாங்க‌ க‌டைவ‌ரிசைஅ காத்து, ப‌சித்து, க‌ற்ப‌னையில் சுகித்து,ந‌ன‌ந்தும், பாட்டுச்சிக்காம‌ல் ப‌டுக்கையும் பாடாகி, கோப‌ம் பிஸ்ஸாகிற‌து டூபீஸ்காரி ப‌ட‌ போஸ்ட‌ரில்.

manichudar blogspot.com said...

ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு விஷியத்தையும், ஒவ்வொரு செயலையும் மற்றவர் பார்வையிலிருந்து வித்தியாசமாய் பார்ப்பதும பகிர்வதும் மகாகவியானவற்கே முடியும். சாத்தியமாகிறது உங்களுக்கும். வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்க்கையை அணுவணுவாய் கவிதையால் கடக்கிறான். அதனால்தானோ இவன் மகாகவி!

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.

thamilarasi said...

மகாகவி மாண்புமிகுவாகி விடுவார் போல.கவிதையாய் தன்னை வெளிப்படுத்தி இருக்கும் விதம் சுகம் கதிர்.

ULAGAMYAAVAIYUM (உலகம்யாவையும்) said...

piramaatham kathir.