30 September, 2024

விமர்சனக் குறிப்பு : கதிர்பாரதி ~ மிஷன் தெரு ~ தஞ்சை ப்ரகாஷ் (30செப்2023 அன்று எழுதியது)

வாழ்நாள் முழுக்க சமூகத்தால், சக உறவுகளால், சமூக மதிப்பீடுகளால் தோற்கடிக்கப்படும் எஸ்தர்.... அவளை எழுதிய தஞ்சை ப்ரகாஷின் குறுநாவல் `மிஷன் தெரு`.

எஸ்தர், கள்ளர்குடிப் பெண்; அதுவும் கிறிஸ்தவத்துக்கு மாறிய தஞ்சாவூர் கள்ளர். ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம்... எல்லாவற்றுக்கும் மேலாக பைபிளை லத்தின் மொழியில் அறிந்தவள்; ஆங்கில பனுவல்களை, கிரந்தங்களை வாசிப்பவள். அதற்கு அவளது தந்தை ராஜரெத்தினம் வன்னியரால் ஊக்குவிக்கப்பட்டவள். இருந்தும் இவை எதுவும் அவள் வாழ்வை நேர்செய்யவில்லை. ஒரு காதலும் ஒரு கல்யாணமும் அவளைச் சிதைக்கின்றன.
தஞ்சை ப்ரகாஷ்
18_ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. தஞ்சாவூரில் நிலையான ஆட்சி இல்லை. மராட்டியர்கள், ஆங்கில அரசாங்கத்தின் இசைவோடு இரட்டையாட்சி செலுத்துகிறார்கள். அடிக்கடி நடக்கும் முகமதியர் படையெடுப்பு வேறு. அதில் ஆநிரை கவர்தல்போல சர்வநாசமாக பெண்களைப் பறித்துக்கொண்டுபோகிறார்கள். இவற்றில் எல்லாம் தப்பிப்பிழைத்து கணவனிடம் சிதைகிறாள் எஸ்தர்.
அதீத சுதந்திரம் விரும்பும் எஸ்தர், பிறப்பிலேயே பேரழகி. அவள் உடலுக்கு எதிராக, அவளுக்கு அறிமுகமாகும் அத்தனை ஆண்களும் அத்துமீறுகிறார்கள். பைபிள் கிளாஸ் சொல்லித்தரும் தேவரகசியம் வாத்தியார், காதலன் வில்லியம்ஸ், மச்சான் பர்னபாஸ், வெள்ளைக்கார துரை ஸ்டோன், தோழன் ஜோப், அரிவாளாலால் வெட்டி வெட்டி மீன்பிடிக்கும் கள்ளர்குடிப் பயல்கள்... எல்லாரும்; எல்லாரும். அவளது வாலிபமே ஒரு முள்ளாக அவள்மீது கவிகிறது.
நீர்நிலைகளும் குளிர்ச்சியும் அதிகமுள்ள மன்னார்குடியில் இருந்து, தஞ்சாவூர் மிஷன் தெரு என்ற செம்மண் பொட்டலுக்கு, மராட்டிய அதிகாரத்தால் குடியேற்றம் செய்யப்படுகிறாள் எஸ்தர்... கட்டாயக் கணவன் லாசரஸோடுதான். அவன்தான் வாழ்நாள் முழுக்க அவளால் மறக்கமுடியாத துர்க்கனவாக, உடல்வடுவாக மாறுகிறான். மன்னார்குடி குளிர்ச்சியும் தஞ்சாவூர் செம்மண் வெப்பமும், எஸ்தர் தன் வாழ்வில் அடையும் தலைக்கீழ் மாற்றத்தை உணர்த்தும் கடத்தியாக தஞ்சை ப்ரகாஷால் உருவகிக்கப்படுகிறது.

கணவன் லாசரஸ் அடித்துத் துவைத்து தன்னை அனுபவிக்கும்போதெல்லாம், முன்பு தன்னிடம் அத்துமீறியதற்காக மன்னிப்பு இரஞ்சிகொண்டே பின்வந்த துரை ஸ்டோன் எவ்வளவோ மேன்மையானவன் என ஏங்குகிறாள் எஸ்தர். அரசாங்க வேலைக்காக தன்னை கைநெகிழ்ந்த காதலன் வில்லியம்ஸ், ஸ்டோன் துரையைவிட எந்த விதத்தில் உயர்கிறான் என நினைக்கிறாள். ``யு ஆர் சோ பியூட்டிஃபுல்`` என சொல்லிச் சொல்லியே வளையவந்த ஸ்டோன் துரையால், ஏன் லாசரஸைப் போல தன்னை அபரிக்கத் தெரியவில்லை என லாசரஸோடு மாலையும் கழுத்துமாக நிற்கிறவேளையில்கூட நினைக்கிறாள் எஸ்தர். எதற்காக இந்த ஏக்கம்? ஸ்டோன் துரை ஒருவன்தான் எஸ்தரை அடைய நினைக்காமல் நெகிழ்த்த நினைக்கிறான். எனினும் அதுவும்கூட அவள் விருப்பம் இல்லாத அத்துமீறல்தான். அதாவது இருக்கிற கொள்ளியில் நல்லக்கொள்ளி.
சமத்துவம் சகோதரத்துவம் சமாதானம் பேசும் எத்தனை மிலேச்ச மதங்கள் இந்தியாவுக்கு வந்தாலும் அவற்றில் பெண்கள் உள்ளிட்ட அனைவரின் நிலை சாதிக் கட்டோடுதான் இருக்கும். கிறிஸ்துவ மதம் மாறிய கள்ளர்களை ``சோற்றுக் கள்ளர்கள்`` என ஏளம்செய்கிறது மதம்மாறாத கள்ளர்குடி. இன்னும் ஒருபடி கீழிறங்கி ``இரண்டாம் தர கள்ளர்கள்`` என்கிறது. தெருவில் இறங்கி பேசும் பெண்களை ``வீச்சரிவாளால் தலை சீவுவேன்`` என்கிறது. இன்றைக்கும் இதுதான் நிலை. முறைகள் மாறியிருக்கின்றன. ஆனால், அடக்கும்முறை இருக்கிறது. உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை தேவாலயத்துக்குள் விடமறுத்து ரத்தக்காவு வாங்குகிறது. மதம் மாறி பெண்களுக்கு கிறிஸ்தவம் கொடுத்த சலுகைகளாக ``ஜாக்கெட் போட்டுக்கொள்ளலாம்``, "ஆங்கிலப் படிப்பு படிக்கலாம்" என்பனவற்றைத் தொட்டுக்காட்டுகிறார் தஞ்சை ப்ரகாஷ்.
வன்புணர்வின் மூலம் ஒரு பெண்ணின் வாழ்வை சிதைத்துவிட முடியும்; கால்களின் இடையில் பிரயோகிக்கப்படும் அந்தப் பலவந்தம் மூலம் அவளை வீழ்த்திவிட முடியும் என வெறிகொள்கிறது ஆண் உலகம். ஆனால், அந்தப் பெண்ணுக்குள் இருக்கும் இருட்டை எந்த ஆணாலும் ஊடுருவிச் செல்ல முடியாது; ஒளிபெறச் செய்ய முடியாது என்கிறார் ப்ரகாஷ்.
பெண் அடையும் துயரத்துக்கு எதிராக உள்நாட்டு கடவுள்கள் மட்டும் அல்ல வெளிநாட்டு கடவுள்களும் பாராமுகமாகத்தான் இருக்கிறார்கள்.
பொறுமையான வாசிப்பைக் கோரும் இந்தக் குறுநாவல், வாசித்தப் பிறகு துயரச் சித்திரமாக பேரனுபம் கொள்ளவைக்கிறது. தஞ்சை ப்ரகாஷின் "அங்கிள்", "மேபல்", "நாகரத்தினம்" போன்ற கதைகளின் தொடர்ச்சி என நிறுவதற்கான சாத்தியங்களும் "மிஷன் தெரு" குறுநாவலில் இருக்கின்றன.
தன் மீது திணிக்கப்பட்ட ஆதிக்கத்தை மீற நினைத்த எஸ்தர், அதே ஆதிக்கத்தை தன் வாலிப மகள் ரூபி மீது திணிப்பதுதான் வாழ்வின் முரண். அந்த முரணை எழுதுவதில் வல்லவர் தஞ்சை ப்ரகாஷ்.
"மிஷன் தெரு" குறுநாவலின் முதலிரு பதிப்புகளை அன்னம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சமீபத்திய பதிப்பாக வாசகசாலை வெளியிட்டிருக்கிறது.

No comments: