26 September, 2024

வாழ்த்துச் செய்தி ~ அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது (23செப்2023) ~ எழுத்தாளர் அசதா

சதா சார் எனக்கு எப்போதும் இனியர். அவரை நினைகும்தோறும் நிதானம் + அமைதிகூடிய ஓர் அண்ணன் சித்திரம் மனத்தில் தோன்றும். நேரில் பார்க்கும்போது அவர் அருகில் போய் மௌனமாக நின்றுகொள்ளத் தோன்றும்; நின்றிருக்கிறேன்.

மொழிபெயர்ப்பாளர்கள்... நிலத்தில் இருந்து நிலத்துக்கு, வாழ்வில் இருந்து வாழ்வுக்கு, மொழியில் இருந்து மொழிக்கு, அர்த்தத்தில் இருந்து அர்த்தத்துக்கு வரலாற்றை - கலாச்சாரத்தை - பண்பாட்டை - இலக்கியத்தைக் கடத்துகிறார்கள். ஏறக்குறைய ஒரு மின்கடத்திபோல. அதனாலேயே இவர்கள் எல்லை தகர்க்கிறார்கள்.
எழுத்தாளர் அசதா
அப்படியான க.நா.சு., சு.கிருஷ்ணமூர்த்தி, ரா.கிருஷ்ணையர், தொ.மு.சி., பூ.சோமசுந்தரம், தி.சு.சதாசிவம், தி.ப.சித்தலிங்கையா, எம்.எஸ்., நாகரத்தினம் கிருஷ்ணா, குறிஞ்சிவேலன், பாவண்ணன், சா.தேவதாஸ், யூமா வாசுகி, வே.ஸ்ரீராம், அரும்பு சுப்பிரமணியம், நீல பத்மநாபன், எம்.சுசீலா, குளச்சல் மு.யூசுப், கே.வி.ஷைலஜா... இன்னும் பிற மொழிபெயர்ப்பாளர்களையும் நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது. அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுபெறும் திறன்மிக்க எழுத்தாளர் அசதா அவர்களால், இவ்விருது இலக்கிய கவனம் பெறுகிறது. இவர்கள் திரைக்கடலோடித் தேடிச் சேர்த்ததை வீட்டின் இருக்கை நுனி அமர்ந்து தின்று களிக்கிறோம். நன்றி.
அசதா மொழிபெயர்த்தவற்றுள் `முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்`, `மந்திரவாதியின் சீடன்...` ஆகிய நூல்களை வாசித்திருக்கிறேன். விருதுபெறும் `நிலத்தின் விளிம்புக்கு` நூலை இனிதான் வாசிக்க வேண்டும்.
`மூர்த்தி சிறிய கீர்த்தி பெரிய` அசதா சாருக்கு வாழ்த்தும் வணக்கங்களும்.

No comments: