10 June, 2014

விடுதலைக்கான கவிதைச் சமர் = ’மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ தொகுப்பு குறித்த கவிஞர் கரிகாலனின் விமர்சனப் பதிவு: http://kalamputhithu.blogspot.in/2014/06/blog-post.html — with Kathir Bharathi.

கற்பனை வளமும் படைப்பு மனமும் இல்லாமல் இருந்தால் இவ்வுலகில் நாம் எவ்வாறு வாழ்ந்திருப்போம். நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. அன்பு வற்றிப் போன காலத்தில் வெறுமையை துரத்தி வாழும் அவலத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவதில் முதன்மையானது கவிதை எழுதுவதும்,கவிதை வாசிப்பதும். கோடையைக் கடக்க வேம்பொன்றின் நிழலே போதும் என திருப்தி அடையும் கதிர் பாரதியையும் இந்தப் படைப்பு மனம் தான் காப்பாற்றுகிறது. 

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பு வழியாக கதிர் பாரதி எதை விழைகிறார். பாரதி அன்று தன் கவிதைகளின் மூலமாக எதைக் கனவு கண்டான். கவிஞர்கள் தங்களின் அனுபவங்களின் வழியாகதங்களது மொழி ஆளுமையின் வழியாக வெளிப்படுத்த விரும்புவதுதான் என்னவன்முறையற்றகருணை நிறைந்த உலகுதான் படைப்பாளியின் நித்திய கனவாக இருந்து வந்திருக்கிறது. கவிஞன் தன் படைப்பில் உருவாக்கும் உலகு நாம் வாழும் எதார்த்த உலகிலிருந்து கொஞ்சம் தொலைவில் தான் இருக்கிறது. இதனால்தான் கவிஞனை லௌகீகவாதிகள் பிழைப்புக்கு உதவாதவனாகபகல் கனவு காண்பவனாக கருதுகின்றனர். லௌகீகவாதிகளுக்கு மொழி ஒரு தொடர்பு சாதனம். கவிஞனுக்கோ அது உலகம். சொற்களால் அவன் கட்டியெழுப்பும் உலகுதொடுவதற்கு சற்றுத் தொலைவில் இருந்தாலும் சாமான்யனும் விரும்பக்கூடிய  உலகாக அது இருக்கிறது. 

இந்தக் கவிதைகள் கதிர்பாரதியை ஒரு விவசாயக் குடும்பத்தின் விளைச்சலாகக் காட்டுகிறது. 

"நல்லேர் பூட்டி தானியங்களைத் தூவிவிட்டு
அடுத்த வெள்ளாமைக்கு விதைநெல் பிரிக்கும்
நல்சகுனங்கள் நிரம்பிய இக்கோடையில்
நிகழாதிருக்கலாம் உன்  பிரிவு

இத்தகு வரிகள் ஒரு விவசாய மனதின் விளைவாகத்தான் இருக்க முடியும். காதலின் மகிழ்ச்சியைவலியை நிலம் சார்ந்தும் பருவங்கள் சார்ந்தும் கூறுவது நமது சங்கத்தமிழின் தொடர்ச்சியாக இருக்கிறது. காதலனுக்காக காத்திருப்பதுகாதலனைப் பிரிவது யாவும் சங்க இலக்கியங்களில் திணை ஒழுக்கம் சார்ந்தது. அந்த திணை வழித் தொடர்ச்சியாக நவீன தொனியில் கவி சொல்லத் தெரிந்திருக்கிறது பாரதிக்கு. 

கதிர்பாரதியின் கவிதைகள் முக்கியமாக மூன்று விஷயங்களில் கவனத்தை குவிக்கின்றன. இயற்கைபெண்கள்குழந்தைகள் இவற்றை குறித்த வலிமையான கவிதைகள் இத்தொகுப்பில் விரவிக்கிடக்கின்றன. இவை மூன்றும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இயற்கைபெண் இரண்டும் நெருங்கிய தொடர்புடையவை. படைக்கும் ஆற்றல் படைத்தவை. சக்தியின் பிறப்பிடங்கள். இவற்றைப் பாட பிரபஞ்சப் பார்வை சித்தித்திருக்கவேண்டும். இங்கு சித்தித்தலை மதச்சொல்லாடலாக அர்த்தம் கொள்ளாமல் சித்தர்களின் ஒளியில் பொருள் கொள்ள வேண்டும்.வெட்டவெளிதனை மெய்யெனக்கொண்ட பார்வையைத்தான் பிரபஞ்சப் பார்வையாகக் கருதப்படவேண்டும். "ஆழித்துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே" என விடுபட்ட மனநிலையிலிருந்து இக்கவிதைகளை கதிர்பாரதியால் இவ்விளைய வயதில் படைக்கமுடிந்திருப்பது பிரம்மிக்க வைக்கிறது. 

வீட்டை எட்டிப் பார்த்தல் எனும் கவிதை  ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெண்களின் கண்ணீர் கிணற்றை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தாய்வழிச் சமூகத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்த பெண் அடையாளம் காட்டியவன்தான் தந்தை. அத்தகு இடத்தை ஆணின் ஆதிக்க மனம் தட்டிப்பறித்தது. அவளது கனவு வெளி சுருங்கிப்போனது. நமது பண்பாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய நல்ல பெண்ணுக்கான மதிப்பீடுகள் இந்தக் கண்ணீர் கிணற்றை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் இந்தக் கண்ணீர் மிகவும் ஆபத்தானது. சீதைபாஞ்சாலி தொடங்கி யசோதா பென் வரை இந்த வலி தொடர்கிறது. கதிர் பாரதியின் இந்த கவிதை பெண்ணிய வெளிச்சத்தில் வைத்து விரிவாக உரையாடுவதற்கான திறப்புகளை கொண்டிருக்கிறது. ஒரு கவிதையை எழுதி முடித்த பிறகு அது வாசகனின் கவிதையாக வேண்டும். அப்போதுதான் அதை ஒரு வெற்றிகரமான படைப்பாகக் கருத முடியும். தன்னுடைய அறிவுச் சேகரத்தை கலை தாகத்தை வாசகன் தனது கவிதையில் செலுத்த எந்த கவிஞன் அனுமதிக்கிறானோ அவனால்தான் காலத்தை ஊடுருவி உயிர் வாழ முடியும்.

விட்டு விலகத் தெரிந்தவன் கவிஞன். மைய நீரோட்ட வாழ்விலிருந்து விலகி தன்னை உதிரியாக கருதுகிற மனதில்தான் கவிதை கருக்கொள்கிறது. "ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான்" எனும் கவிதை உதிரி ஒருவனின் கதை. கதை கவிதையாக முடியுமாஎனக் கேட்கலாம். இது தொடக்கமும் முடிவுமில்லாக் கதை. கதைக்கும் கவிதைக்குமான எல்லைக்கோடு அழியும் நிலையிலிருந்து உருவாகும் ஒரு புதுவிதக் கவிதை எனவும் கொள்ளலாம். குடும்பத்திலிருந்தும்மைய நீரோட்ட மதிப்பீடுகளிலிருந்தும் விரட்டப்படுபவர்கள் செல்லக்கூடிய இடங்கள் சிறைச்சாலைகள்பேருந்து நிலையங்கள்கோயில் வாசற்படிகள் என நிறைய இருக்கிறது. இப்போது பரோட்டா மாஸ்டர்கள் பெரும்பாலும் இப்படி விரட்டப்பட்டவர்கள் தான். 

பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தோல்வி 
  கூடுதல் தகுதி என்கிறது சாதா பரோட்டா
  பக்கத்து வீட்டு சுமார் அழகிக்கு லவ் லெட்டர் எழுதி
  அவள் அண்ணனிடம் குத்துப்பட்டிருப்பவனுக்கு முன்னுரிமை
  அவன் கனவில் பரோட்டா வட்ட வட்டப் பௌர்ணமியாக
  வலம் வந்திருக்க வேண்டும்" 
என ஒருவன் பரோட்டா மாஸ்டர் ஆவதற்கான சாத்தியங்களை கற்பனையில் விரித்திருக்கும் இந்தக் கவிதை நம் சமகால தமிழ் வாழ்வின் புதிய முகத்தை அவதானிக்கிறது. தமிழின் சிறந்த கவிதைகளுள் ஒன்றாக இதைக் கூறமுடியும்

அன்பு செலுத்துவதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லாத நிலையை வெளிப்படுத்தும் கவிதையாக "யானையோடு நேசம் கொள்ளும் முறை" திகழ்கிறது. யானையை அன்பு செய்யும் பிரம்மாண்டம் ஒரு அற்புத உண்மை. யானையின் ஆசிர்வாதத்தை மலிவாக்கியிருக்கும் பாகன்களிடமிருந்து விலகி யானையை ஒரு குழந்தைக் கண்கொண்டு பார்க்கிறது இந்த கவிதை. குழந்தையின் கண்கள் இறைவனுக்குரியவை.

நமது திரைப்படங்கள்நமது கல்வி நிறுவனங்கள் குழந்தைகளின் குழந்தைமையை நீக்கம் செய்ததில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மர அட்டையை ரயில் வண்டியாக கற்பனை செய்யும் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வரும் போது புகைவண்டியை ஊர்ந்து செல்லும் பூச்சியாகப் பார்க்கிறார்கள். கற்பனை வளம் நிறைந்த கதைகள் வளர்க்கும் குழந்தைகளை வெறும் ஹோம் ஒர்க் செய்யும் ரோபோக்களாக நமது பள்ளிகள் மாற்றி வைத்திருப்பது பரிதாபத்திற்குரியது. இவை குறித்து தனது கவிதைகளில் நிறைய இடங்களில் கதிர்பாரதி அக்கறை செலுத்துகிறார். 

கதிர்பாரதியின் கவிதை மொழிதலில் புதுமை காட்டும் ஆர்வம் அதிகம் தென்படுகிறது. கவிதை மிகுந்த நுட்பமான கலை வடிவம். மறைபொருள் மிக்கது. விரித்துப் பார்க்கத் தகுந்தது. கவிச்சூத்திரம் தெரிந்தவராக இத்தொகுப்பு இவரைக் காட்டுகிறது. உப்புச் செடிகள் என்பது போல பல புதிய படிமங்களை தமிழுக்கு இத்தொகுப்பு அளித்துள்ளது. இளம் வயதில் நம்பிக்கை அளிப்பவராக கவிமொழியின் வீரியமுடையவராக கதிர்பாரதி திகழ்கிறார். விடுதலைக்கான அவருடைய கவிதைச் சமர் என இத்தொகுப்பை சுருக்கமாக அடையாளப்படுத்தலாம். விடுதலையின் கதவை திறக்க விரும்புபவர்கள் இப்புத்தகத்தின் பக்கங்களின் மூலமாகத் திறக்கலாம். 

- கரிகாலன்