நண்பர், கவிஞர் Sachin சச்சின், இயக்குநர் முத்துக்குமாரோடு இணைந்து வசனம் எழுதியிருக்கும் 'அயலி' வெப் சீரிஸ் பார்த்தேன்.
"அயலி" என்கிற சிறுதெய்வம் யார்? அதன் பெயரால் வீரபண்ணை ஊரில் இருக்கும் அடக்குமுறை என்ன? பெண்களின் உடல்மீது மட்டும் அது ஏவப்பட்டிருப்பது ஏன்? இதன் பின்னணியில் ஆண்மனம் எப்படிச் செயல்படுகிறது... என "அயலி" சாமி இடப்பெயர்வுக் கதையோடு சீரிஸ் ஆரம்பிக்கும்போதே, இது வழக்கமான வெப் சீரிஸ் அல்ல என்பது புரிந்துவிடுகிறது.
வீரபண்ணை ஊரில் வயசுக்கு வந்ததும் பெண்ணின் படிப்பை நிறுத்தி, கல்யாணம் செய்துவைத்துவிடுகிறார்கள் ஊர் ஆம்பிளைகள். இதனால் ஊரில் பெண்கள் யாரும் 10ம் வகுப்பைத் தாண்டுவதில்லை. அப்படி மீறினால், 'அயலி'குத்தமாகி ஊருக்கு பொல்லாங்கு நேரும் என்கின்றனர். கெட்டித்தட்டிய இந்தக் கட்டுப்பாடுகளை தன் புத்திசாலித்தனத்தால் நாயகி தமிழ்ச்செல்வி மீறுகிறாள். 10ம் வகுப்பில் மாவட்ட முதலிடம் பெறுகிறாள். எப்படி? அதைத்தான் சிரிக்க சிரிக்க எள்ளல் துள்ளலோடு சமூகத்தின் அல்லையில் குத்தி, ஒரு சமூகவியல் பாடமாகச் சொல்கிறார் இயக்குநர் முத்துக்குமார்.
நாயகி தமிழ்ச்செல்வி வயசுக்கு வருகிறாள். அவள் அணிந்திருக்கும் பள்ளிச் சீருடையில் ரத்தக்கறை படிகிறது. "என்னத்தா ஆச்சி?" என ஊர்சனம் கேட்கையில், "ஒண்ணுமில்ல... இங்க் கொட்டிருச்சி" என அவள் சொல்வதில் ஆரம்பிக்கிற வசன அதகளம் படம் முழுக்கவும் ஆதிக்கம் செய்கிறது. "ரொம்ப நாள் இதை மறைக்கமுடியாது" என அவள் அம்மா சொல்லும்போது, "அம்மா இந்த ஆம்பளங்களுக்கு சில விஷயமெல்லாம் பொம்பளச் சொன்னாத்தான் தெரியும்..." என நெத்தியில் அடிக்கிறாள் தமிழ் . இது சிறு உதாரணம். இன்னோர் இடத்தில், "யாருக்குத் தெரியும்... ஊரை எதுத்துக் கேள்வி கேட்ட ஒரு பொண்ண அடிச்சிக் கொன்னுட்டு 'அயலி' சாமி ஆக்கிட்டாய்ங்க போல" என்று பொளேர் என விழுகிறது ஒரு வசனம். இப்படி வசனங்களால் அடுத்தடுத்த கட்ட நகர்வை நோக்கி ஒரு வெப் சீரீஸ் நகர்வதை அதியசயமாகவும் ஆனந்தமாகவும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
"சமூகத்தின் கலாசாரம், பண்பாடு, ஈனம் மானம், சாமி, பூமி... எல்லாவற்றையும் ஏன் பெண் உடல்மீதே தேடுகிறீர்கள்...'' என பிரச்சாரம் செய்யாமல் ஆனால், அதைத்தான் கேள்வியாய் முன்வைக்கிறார் இயக்குநர் முத்துக்குமார்.
குடும்ப வன்முறையில் ஆரம்பித்து சமூக வன்முறை வரைக்கும் அதிக பாதிப்புக்கு உள்ளாவது பெண் பாலினம்தான். வலி அதிகம் சுமப்பதும் அவர்களே. விஞ்ஞான ஊடகங்களின் ஆளுமையின் கீழ் உலகம் வந்துவிட்டாலும் பெண் பாலினத்தின் மீது நிகழும் வன்முறைகள் நவீனமாகி இருக்கிறதே அன்றி, நீர்த்துப்போகவே இல்லை. இவற்றை எல்லாம் ஒரு வணிக வெப்சீரிஸ் யோசிக்க இடம்கொடுப்பதே நல்ல மாற்றம்தான்.
நாயக சாகசம் காட்டாத, கொலையைத் துரத்திக்கொண்டோடி குற்றவாளியைக் கண்டுபிடிக்காத, போதை மாஃபியாவின் புகழ்பாடாத, விளிம்புநிலை மக்களை அசிங்கம் செய்யாத, பெண்ணுடலைப் போகமாகக் காட்சியில் வைக்காத, சூதுவாது பின்னணிகளை வியந்து பேசாத... ஒரு வெப் சீரீஸுக்காக தயாரிப்பாளர் குஷ்மாவதிக்குப் பாராட்டுகள்.
வசனம் எழுதிய சச்சின், இசை செய்த ரேவா, இயக்கிய முத்துகுமார், தயாரித்த குஷ்மாவதி எல்லோருக்கும் இது முதல் வெப் சீரீஸ் என நினைக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.
அயலி - ஊடக அற்புதம்
No comments:
Post a Comment