இன்சொல் பதிப்பகம் வெளியிட்ட எனது மூன்றாவது கவிதைத்தொகுப்பு உயர்திணைப் பறவை நூலுக்கு 'எழுச்சித் தமிழர் இலக்கியக் கவிதை விருது_2020' இன்று தொல்.திருமாவளவன் அவர்கள் வழங்க நான் பெற்றுக்கொண்ட நிகழ்வு, சென்னை விசிக தலைமை அலுவலகத்தில் நிறைவாக நடந்தது; முடிந்தது. விடுதலை கலை இலக்கியப் பேரவையின் இளவந்திகை நிகழ்வில் விருது விழாவை ஒருங்கிணைத்திருந்தனர் கவிஞர் யாழன் ஆதி, கவிஞர் வெண்ணிலவன் உள்ளிட்டத் தோழர்கள். பொதுவாக தொல்.திருமாவளவன் அவர்களின் அரசியல் மேடை எப்போதும் நெருப்பாக இருக்கும். நிறைய முறை அதை நான் கவனத்திருக்கிறேன். கல்கியில் தலைமை உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தபோது சீனியர் நிருபராக இருந்த, இப்போது தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் கலக்கும் கல்கி ப்ரியன் அவர்களோடு இணைந்து பேட்டி எடுக்கும்போதும் இன்னும் நெருக்கமாகவும் அவரைப் பார்த்திருக்கிறேன்; பேசியிருக்கிறேன். ஒருமுறை இரவு 2 மணிக்கு பேட்டி எடுத்து, காலையில் சுடச்சுட அச்சுக்கு ஏற்றியிருக்கிறோம். அவரது பேட்டிகளின் ஆஃப் தி ரெக்கார்டு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். இன்று விருது மேடையை அவர் கையாண்ட விதத்தை அருகில் உட்கார்ந்து பார்த்திருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வளவு லைவ்வாக வைத்திருந்தார். ஓர் உதாரணம்... விருது பெறுபவர்கள் ஒவ்வொருவரிடமும் விருதுகொடுக்கும்போது சிரித்துப் பேசினார். எனக்குக் கொடுக்கும்போது... என்ன வேலை செய்யறீங்க? சொந்த ஊர் எது? இது உங்களது எத்தனையாவது புத்தகம்? என்னுடைய காப்பி எங்கே? என்றெல்லாம் கேட்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அடடா... புத்தகம் கொண்டுவரவில்லையே என்று கொஞ்சம் வெட்கமாக உணர்ந்தேன். என் மகன்கள் கபிலன், திலீபன் இருவரையும் அவரிடம் மேடையில் அறிமுகப்படுத்தும்போது அவர்களிடம் பேசவும் சில வார்த்தைகளை வைத்திருந்தார். அடுத்த முறை விருது விழாவை இன்னும் சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் 1000, 2000 பேர் அமரக்கூடிய அரங்கத்தில் நடத்த வேண்டும். அது படைப்பாளிகளுக்கு நாம் செய்யும் மரியாதை என்ற உறுதிமொழியை கவிஞர் யாழன் ஆதி உள்ளிட்ட விடுதலை கலை இலக்கிய பேரவை தோழர்களுக்கு உத்தரவு மொழியாகக் கொடுத்தார். தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், "தேர்தல் என்பது எங்களுக்கு இளைப்பாறும் அல்லது கொஞ்சம் ஒதுங்கி ஓய்வெடுக்கும் ஒரு இடம்தான். எங்கள் அல்ட்டிமேட் நோக்கம் தேர்தல் அல்ல சமூக மாற்றமும் அதற்கான களமும்தான்" என்று ஒரு பொதுமேடையில் சொல்கிற தைரியம் அதுவும் தேர்தல் நேரத்தில் இவரன்றி வேறு தமிழக அரசியல் தலைவருக்கு இருக்குமா என்பது ஆச்சர்யம். இந்தத் தைரியத்தை தொல்.திருமாவளவன் அவர்கள் அவரது அறிவாசன் அம்பேத்கரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும். தொல்.திருமாவளவன் அவர்கள் எழுதிய 'அமைப்பாய் திரள்வோம்' புத்தகம், கடந்த 5 ஆண்டுகளில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அரசியல் கருத்தியல் பிரதி எனத் தெரிவுசெய்யப்பட்டு, அதற்கு "இளவந்திகை விருது" வழக்கப்பட்டது. விழாவில் சிறந்த நாவலுக்காக சீனிவாச நடராஜன், சிறந்த சிறுகதை நூலுக்காக அருண்.மோ, சிறந்த பெண்ணெழுத்துக்காக கவிஞர் தேன்மொழி தாஸ், சிறந்த பௌத்தக் கருத்தியல் புத்தகத்துக்காக பேரா. ஜெயபால், சிறந்த திரைப்படத்துக்காக இயக்குநர் போஸ் வெங்கட், சிறந்த ஓவியத் திரட்சிக்கு அமுதன் பச்சைமுத்து ஆகியோர் விருது பெற்றனர். அனைவருக்கும் வாழ்த்துகள். எப்போதும் என்னோடு இருக்கும் கவிஞர் வேல் கண்ணன் விழாவுக்கு வந்திருந்தார். விழா முடியும் வரை இருந்தார். கவிஞர் தமிழ்மணவாளன், தம்பி ராமலிங்கம், கவிஞர் சுகந்தி நாச்சியாள் ஆகியோரைப் பார்க்க முடிந்தது. சுகந்தி, கவியரங்க மேடையில் கவிதை முழங்கினார். கவிஞர் ராமதாஸ் சென்றாயன் விழாவில் பங்களிப்பு செய்தார். எனக்காக தர்மபுரியில் இருந்து வந்திருந்தார் கவிஞர் பூவிதழ் உமேஷ். அவருக்கு அன்பும் நன்றியும். சிறப்பான ஏற்பாடு. மகிழ்வான நிகழ்வு. விழா ஏற்பாட்டாளருக்கு ஒரே ஒரு வேண்டுகோள்... அடுத்த முறை விருதுக்குத் தேர்வாகும் படைப்புகள் குறித்து பேசும் நிகழ்வையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் அது!!! ![]() |
உயர்திணைப் பறவை சிறந்த கவிதை நூலாக 2024 ஆம் ஆண்டுக்கான எழுச்சித் தமிழர் கலை இலக்கிய விருது பெற்றபோது... விருது வழங்குகிறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி |
23 September, 2024
எழுச்சித் தமிழர் கலை இலக்கிய விருது 2024 ~ உயர்திணைப் பறவை ~ கதிர்பாரதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment