22 November, 2010

வாழ்ந்து கெட்ட சாவி

எடுத்ததும் முதலில் சட்டைப்பையிலும்
பிறகு சுவற்றின் ஆணியிலும்
கனத்துத் தொங்குகிறது
வாழ்ந்து கெட்ட குடும்பத்தின்
மனசில் ஆழ்ந்து கிடக்கும்
சோகத்தைப் போல

யாரோ நழுவவிட்டு
தெருவில் என் கைசேர்ந்த
வீட்டுச் சாவி

நன்றி: புன்னகை -காலாண்டிதழ்

19 November, 2010

யவ்வனத்தைச் சுமக்கும் கோவேறு

உன்னழகின் இருப்பின்
சாநித்தியத்தோடே ஒளிர்கிறது
நீ கைவிட்டுச் சென்ற அறை

உதிர்ந்தவிழ்ந்த உன் வார்த்தைகளை
கொறித்துச் சதிராடும் ஜோடி அணில்கள்
துணுக்குறாவண்ணம் எட்டிப் பார்க்கின்றன
நிகழ்வின் சுகந்தங்கள்

உன் வெக்கையை ஆறவிடாமல்
வெட்கத்தோடு ஒதுங்கும் கதவை
இறுக்கித் தாழிட்டபோது
நிலா முற்றிய கீற்றுகளால் இம்சித்தது

வழமையாய்... விரிப்பின் கசங்களில்
தலையணையின் பிதுங்களில்
பெருநதியென பிரவகிக்கும்
உன் யவ்வனத்தைச் சுமந்துகொண்டு
திரும்பினேன் கோவேறு என

சூன்யத்தில் தொலைந்திடாதிருக்க வேண்டும்
திசைகள் குழம்பிய பாதைகள்

நன்றி: கல்கி (02.01.2011)

12 November, 2010

இளஞ்சூடாய் மழைமுத்தம்

ஒன்றரை அகவை நிரம்பிய
திலீபனின் அடத்தை நினைவுறுத்தியபடி
நசநசக்கும் மழைக்கு
தீஞ்சுவை பாலும்
கொரிக்க குர்க்குரேவும்
தரலாமென்கிறாள் மனைவி
நான் இளஞ்சூடாய் ஒரு முத்தமும்
ஈந்தேன்

10 November, 2010

ஓவியங்களுக்குள் ஊடுருவும் பாதச்சுவடுகள்

ஆதிவாசிகளின் குகை ஓவியங்களுக்கு நிகராய்
மிகு புராதனமான எனது தனிமைக்குள்
உங்கள் சந்தையைப் பரப்பிவிட்டீர்கள

எனது தனிமையை அலங்கரிக்கும் ஆலாபனையை
உங்களால் விளங்கிக்கொள்ள இயலாது
ஆதவனை உள்வாங்கி கிளர்ச்சி தரும்
இரவல் வெளிச்சம் அதிலில்லை

ஆதுரமிக்க வார்த்தைகளின் கதகதப்பில்
கிறக்கமுற்ற கவிஞனின் மோனத்தாலான
எனது தனிமையின் நுழைவாயில்
உங்களுக்கு ஒவ்வாமை தரவல்லது

மின்மினியின் ஒளிப்பிரிகையால்
ஊமத்தம்பூவின் சுகந்தத்தால்
ஓரேர் உழவனின் வியர்வையால்
கிட்டும் கௌரவம் போதுமானது
எனது தனிமைக்கு

ஆசீர்வாதங்களையும் வாக்குத்தங்களையும்
முற்றாக நிராகரித்துவிட்ட எனது தனிமைமீது
படர்ந்திருக்கும் சாபத்தால் ஒரு பலனுமில்லை

உங்களின் ஆக்டோபஸ் வாழ்வதற்குரிய
சீதோஷணமில்லா நிலம்தான்
எனது தனிமையின் ஆளுகை கீழிருப்பது

ஏதேதோ அடைய தவமிருக்கிற
உங்கள் கொக்கின் ஒற்றைக் காலடியில்
அடங்கிவிடும் அதற்குள்தான்
உங்கள் சந்தையைப் பரப்பியிருக்கிறீர்கள்

லாபங்களைக் கணக்கிட்டுச் சோர்வுறுவதற்குள்
நீங்கள் திரும்பிவிடுதலே உத்தமம்
கூடவே பாதச்சுவடுகளையும் அள்ளிக்கொண்டு

நன்றி: காலச்சுவடு (ஜனவரி 2011)