27 September, 2012

நன்றி: http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_27.html




கவிதைகளுக்குள் கதைகளைச் சொல்வதன் மூலமாகவும், விசித்திரமான கவிதைச் சித்திரங்களினாலும் கவனம் பெறக்கூடிய கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் கதிர்பாரதியின் தளம். இவரது கவிதைகளின் புதிய பாதை ஆச்சரியமூட்டுவதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கின்றன. "கி.மு. இரண்டாயிரத்தில் கேரட்கள் ஊதா நிறத்தில் இருந்தனவாம்" பிறகு ஏன் நிறம் மாறின என்பதை கதிர்பாரதியின் கவிதையின் மூலமாக அறிந்துகொள்ளலாம். 


நன்றி: http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_27.html

25 September, 2012

கேட்பினும் பெரிது கேள்! - புன்னகை சிற்றிதழும் கதிர்பாரதி சிறப்பிதழும்.. ராமலஷ்மி விமர்சனம் http://puthu.thinnai.com/?p=14849



கவிதை தொன்மையானது. எத்தனையோ நூற்றாண்டுகளாக உலகின் எல்லாப் பாகங்களிலும் பயனில் இருந்து, பல துறையைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு உணர்வுகளின் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும் கூடவே கவிதை வாழ்க்கைக்குத் தேவையா எனும் கேள்வியும் இருந்து வரவே செய்திருக்கிறது. அதற்கு விடையாக வாழ்க்கையின் அத்தனை கூறுகளையும் தன் எல்லைக்குள் கொண்டு வந்து காட்டியிருக்கிறது, காட்டிக் கொண்டிருக்கிறது கவிதை. தனது முதன்மையான குறிக்கோள் அழகை ஆராதிப்பதிலோ, தத்துவங்களைப் பொழிவதிலோ, கருத்துக்களை நம்ப வைப்பதிலோ அன்றி கற்பனையோ நிஜமோ, பொதுவானதோ புதிரானதோ, அழகோ அல்லாததோ, நேர்மையோ அநீதியோ.., வாழ்க்கை அனுபவங்களை வார்த்தைகளில் கோர்த்து வாசிப்பவரை மீண்டும் வரிகளிலே வாழச் செய்வதே என நிரூபித்து வந்திருக்கிறது, வருகிறது.

கவிதையின் இன்றியமையாமையைக் கருத்தினில் கொண்டு க. அம்சப்ரியா, செ. ரமேஷ்குமார் ஆகியோர் கவிதைகளுக்காகவே வெளியிட்டு வரும் இருமாதச் சிற்றிதழ் “புன்னகை - கேட்பினும் பெரிது கேள்!”. கவிதைகளோடு அதில் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றன. தனது அறுபதாவது இதழில் அறுபது கவிஞர்களின் கவிதைகளை வெளியிட்டுச் சிறப்பித்திருந்தது . பலரது படைப்புகளோடு ஒரு குறிப்பிட்டக் கவிஞரின் சிறப்பிதழாகவும் கவிஞர்களைக் கெளரவித்து வருகிற புன்னகையின் எழுபதாவது இதழில் அந்தப் பெருமையைப் பெறுகின்றவர் கவிஞர் கதிர்பாரதி. ஜூலை-ஆகஸ்ட் 2012 புன்னகையில் இவரது 13 கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.


ஒவ்வொரு இதழிலும் கவிதை குறித்த பார்வையாக அமைகிற முதல் பக்கம் புன்னகையின் சிறப்பம்சம். எழுபதாவது இதழின் முதல் பக்க வரிகளில் சில, கவிதையிடம் தன்னை ஒப்படைத்திருக்கிற கதிர்பாரதிக்கும் அவரது கவிதைகளுக்குமே பொருந்துவதாக:
“கவிதையை உணர்ந்து படைப்பவர்களுக்கும் கவிதையை உள்ளக் கிளர்ச்சியோடு தேடுகிறவர்களுக்காகவும் கவிதை தன்னை ஒப்படைத்துவிடவே ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறது.
கவிதை கடைசிச் சொட்டு கண்ணீரையும் ஒற்றியெடுக்கும் கைக்குட்டையாகவும் இருக்கும்.
கவிதை போராட்டத்தின் வலிமையை கூடுதலாக்கும் ஒரு வைராக்கியச் சொல்லாகவும் மாறும்.
தனித்த பயணத்தில் பாதைகாட்டியாகவும் தன்னை அடையாளப்படுத்தும்.”
பத்திரிகைகள், சிற்றிதழ்கள் மற்றும் இணையம் மூலமாக இவரது கவிதைகள் ஏற்கனவே எனக்குப் பரிச்சயம் என்கிற வகையிலேயே இதை எளிதாக உணரவும் சொல்லவும் முடிகிறது. சீரணிக்கச் சிரமமான, வாழ்வின் கடினமான நிதர்சனங்களைப் படம் பிடிப்பவையாக இருக்கின்றன இவரது கவிதைகள். கூர்மையுடன் கவனிக்கிற வாசகருக்கு நல்லன அல்லாதன எவையும் இவர் கண்களினின்று தப்பாததும் சமூகத்தின் மீதானக் கோபங்களைக் கூட அழகியலுடன் அங்கதம் கலந்து சொல்லிச் செல்வதும் புலனாகும். அன்பு நகரில்,
“அல்லவை அனைத்தும் நல்லவையானதற்கு
அன்பு ஆட்சிக்கு வந்ததுதான் காரணம்” என்ற சுற்றலா வழிகாட்டியின் வார்த்தைகளில் பதற்றமுற்று அதிகாரம் ஆட்சி செலுத்தும் நகரத்துக்குத் தப்பித்து வந்ததைச் சொல்லுகிற ‘அன்பின் வாதை’ அப்படியான ஒன்றே.

‘வேம்பு கசப்பதில்லை’ கவிதையின் வார்த்தை வனப்பில் தமிழ் தித்திக்கிறது:
“...ஏறுவெய்யில் நிலம் சலிக்கும் ஒரு முன்மாலையில்
பொன்மூக்குத்தி பூக்களால் சிரிக்கும்
வேம்பின் புண்ணியத்தில்
அத்தனை கசப்பாய் இல்லை
இந்தக் கோடை.”

பழைய குடும்பப் படங்கள் எதேச்சையாகக் கையில் கிடைக்கையில் அதில் நம்மையே தொலைத்து விடுகிறோம். நம் அனைவரின் உணர்வாகவும் இந்தக் ‘குடும்பப் புகைப்படம்’:

“நெடுநாட்கள் கழித்து குடும்பப் புகைப்படம் ஒன்றைப் பார்க்கையில்
சுடர்விடும் அன்பைத் தரிசிக்கிறீர்கள் ஒரு முகத்தில்
வேறொன்றில் வெறுப்பு மின்னலென ஓடி மறைகிறது
மற்றொன்றில் சாந்தம் கொண்டலென வீசுகிறது
பிறிதொன்றில் அசூயையும் ஆற்றாமையும் வழிகிறது
தளிர்முகமொன்றில் தன் சல்லிவேருக்கு
பாசநீரைக் கேட்கும் யாசகம் தெரிகிறது
வயோதிகச் சுருக்கங்களில் காலம் சலசலத்துப் பிரவகிக்கிறது
எல்லாவற்றுக்கும் மேலாக சதியொன்றின் வடுவில்
தடுக்கி விழ நேர்கிறது
திடுக்கிட்டு மூடிவிட்ட புகைப்படத்தை
மீண்டுமொருமுறை எடுத்துப் பார்க்கிறீர்கள்” என நீளுகின்ற கவிதையில் இந்தக் கடைசி நான்குவரிகளில் ஒரு திடுக்கிடலை உணரவே செய்கிறோம்.

‘வீட்டை எட்டிப் பார்த்தல்’. மனித இயல்புகளில் ஒன்றான இதை விவரித்துச் செல்லுகிறவர் முடிவில்,
“...புறாக்கள் இரையுண்ட
அவ்வீட்டின் கிணற்றடியை எட்டிப் பார்க்காமல் வந்துவிட்டீர்கள்.
ஏனெனில் கிணற்றுக்குள் தளும்புவது தண்ணீரல்ல
ஒரு பெண்ணின் கேவல்கள் என்று
உங்களுக்குத் தெரிய வந்துவிட்டது.
இனி ஒருபோதும் அந்த வீட்டைக் கடந்து
உங்கள் வீட்டுக்குப் போக முடியாது.” என பெண்ணின் சோகத்துக்கான காரணங்களை வாசகர் கற்பனைக்கு விட்டு தீராத தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்.

‘நமது வாழ்வை முழுமையாக வாழுகிறோமோ?’ கேட்டுக் கொள்ளாமல் கடக்கவே இயலாது நம்மால் மற்றுமொரு கவிதையான ‘கடக்க இயலாத தெரு’வை:
“தெரு ஒன்றைக் கடப்பதென்பது
உண்மையில் வாழ்வு ஒன்றைக் கடப்பதாகும் போலும்.
விம்மல் கலந்து உதிரும் கண்ணீர்த் துளியொன்றை
விளக்கேற்றி வைக்கும் புன்னகையொன்றை
மெதுமெதுவாய் மடல்விரியும் மலரொன்றை
புறவாசலில் பூத்து மறையும் மின்னலொன்றை
தெருவைக் கடக்கும்போது உணராவிட்டால்
இன்னும் நீங்கள் முழுமையாக தெருவைக் கடக்கவில்லை.
வாழ்வையும்தான்.”

சுற்றி நிகழும் ஒவ்வொரு அசைவையும் அவதானித்து, இவரிடம் தன்னை ஒப்படைத்த கவிதைக்கு நேர்மையாக ஒவ்வொரு கணத்தையும் வரிகளாக வடித்து, நம் உணர்வுகளையும் அவற்றில் உயிர்த்தெழச் செய்கிற கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு இந்த வருடம் வெளியாக இருக்கிறது. வாழ்த்துவோம் கவிஞரை.
***

புன்னகை இதழின் ஆண்டுச் சந்தா: ரூ.60
அனுப்ப வேண்டிய முகவரி:
புன்னகை
68, பொள்ளாச்சி சாலை,
ஆனைமலை - 642 104
படைப்புகள் அனுப்ப:
punnagaikavi@gmail.com

16 September, 2012

சிதைந்து செங்குருதி ஆகுதல்

அடர்மழை தினமொன்றில்
நீ ஏற்காத
என் அலைபேசி அழைப்புகள்
கொட்டுகிற ஒவ்வொரு துளியையும்
திறந்து திறந்து பார்த்து 
உனைக் காணாமல் 
கலங்கி 
வீழ்ந்து 
சிதைந்து
செங்குருதியாக்குகின்றன 
தரையை.

14 September, 2012

தெய்வமாக உறங்குகிறாய்

உன்னை உறங்கச் சொல்லி
காலம் அருள்பாலித்திருக்கிறது.
ஒரு தெய்வமாக உறங்குகிறாய்.
உறக்கத்தின் பின்புறத்தில் சுழலும்
உலகத்துக்கு
நீதான் பட்டத்து ராணி
அதனால்
உன் குறும்புன்னகை வெளிச்சமாகிறது.
நீதான் காவல் தெய்வம்
அதனால்
உன் நீதிபரிபாலனம் கவசமாகிறது.
நீதான் மாநதி
அதனால்
உன் ஈரம் தாய்மையாகிறது.
நீ புரண்டுபடுக்கிறபோது
ஒருயுகம் முடிந்து
மறுயுகம் தொடங்குகிறது எனக்கு.
கண்கள் விழி
உன் உபாசகனின் திக்விஜயம்
முடிவுக்கு வந்துவிட்டது.