27 December, 2014

சற்றுமுன் வந்த அலை



சற்றுமுன் வந்த அலை
கதையின் கதை
கதிர்பாரதி
''2012     -ம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் சுதந்திரத் தினத்துக்கு மறுநாள் வந்த அந்த வியாழக்கிழமை, ஏன் நம்ம வாழ்க்கையில வந்துதொலைச்சதுனு இன்னைக்கும் அழுகையா வருது. அந்த வியாழக்கிழமையிலேயே எங்க வாழ்க்கை தேங்கிப்போச்சு. இயேசு நாதர் சிலுவையில் இறந்த வியாழக்கிழமையை 'பெரிய வியாழன்’னு சொல்வாங்க. அதுபோல அந்த ஆகஸ்ட் வியாழன், எங்களுக்கு துயர வியாழன். அன்னைக்குத்தான் என் மகனை அந்தப் பள்ளியோட நீச்சல்குளத்தில் பறிகொடுத்தேன்'' - வார்த்தைகளின் ஒவ்வோர் எழுத்திலும் துயரம் வழிகிறது ஆர்.என்.ஆர்.மனோகரிடம். இவர் 'மாசிலாமணி’, 'வேலூர் மாவட்டம்’ படங்களின் இயக்குநர். 'சலீம்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியவர். சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்த இவரது 10 வயது மகன் ரஞ்சித், அந்தப் பள்ளியின் நீச்சல்பயிற்சி வகுப்பின்போது கவனக்குறைவால் தண்ணீரில் மூழ்கி இறந்துபோக, பெற்றோர்கள் மத்தியிலும், பள்ளிகளின் மத்தியிலும் சோகமும் பயமும் பரபரப்பும் பற்றிக்கொண்டன. 
''என்னோட பதிமூணு வயசுல என் அப்பாவை இழந்து, வறுமையோடு உருண்டுபுரண்டு வளர்ந்தவன் நான். என் பையன் ரஞ்சித் பிறந்தப்போ அவ்ளோ சந்தோஷப்பட்டேன். வாழ்க்கையை சந்தோஷமா வாழ்றதை அவன்கிட்டதான் கத்துக்கிட்டேன். அவன் சந்தோஷத்தோடும் கேள்விகளோடும் ஆச்சர்யத்தோடும் இந்த வாழ்க்கையை எதிர்கொண்டவன். அவன் படிச்ச பள்ளியில் நீச்சல் பயிற்சிங்கிறது கட்டாயம். ஆனா, அதை அவன் அவ்வளவு சந்தோஷமாக் கத்துக்கிட்டான். அந்த நீச்சல்குளத்துலேயே அவன் வாழ்க்கை முடிஞ்சு போனதுதான் இன்னைக்கும் மர்மமா இருக்கு. ரஞ்சித் அசராம கேள்விகள் கேட்டுட்டே இருப்பான்.
ஒருமுறை குடும்பத்தோடு எல்லாரும் திருப்பதி போனோம். அப்போ அவன், 'திருப்பதியில் ஸ்விம்மிங் பூல் இருக்குமாப்பா?’னு கேட்டான். 'அங்க சாமிதான் இருக்கு. ஸ்விம்மிங் பூல் இல்லை’னு சொன்னேன். 'ஏன்... சாமிக்கு நீச்சல் தெரியாதா?’னு சிரிச்சான். சாமிக்கு தெரியாதுதான்போல. இல்லேன்னா, என் ரஞ்சித்தைக் காப்பாத்தியிருக்குமே!
கேள்விகள்போல கனவுகளும் ரஞ்சித்துக்குத் தீர்ந்ததே இல்லை. ஒருமுறை கம்ப்யூட்டர்ல மகாராஜா பேலஸ்போல ஒரு படத்தை வரைஞ்சு என்கிட்ட காண்பிச்சு, 'எப்படி இருக்கு?னு கேட்டான். நான் சிரிச்சுக்கிட்டே 'என்ன இது?’னு கேட்டேன். 'என் ட்ரீம் ஹவுஸ்பா... இன்னும் ஸ்விம்மில் பூல் மட்டும்தான் பாக்கி. அதையும் கட்டிட்டா நான் ஜாலியா நீச்சலடிப்பேன்’னு சொன்னான். அவனைப் பார்த்துப் பொறாமைப்பட்ட நிமிஷம் அது. என் பையன் இறந்ததுக்கு அடுத்து வந்த வியாழக்கிழமை சென்னையில மழை கொட்டோகொட்டுனு கொட்டுச்சு. 'இந்த மழை போன வியாழக்கிழமை வந்திருக்கக் கூடாதா... ஸ்விம்மிங் கிளாஸ் கேன்சல் ஆகிருக்குமே’னு என் மனைவி வடிச்ச கண்ணீரின் அளவு அந்த மழையைவிட அதிகம்.
ஒருநாள் ரஞ்சித் என்கிட்ட, 'நீங்க மட்டும் அடிக்கடி ஃப்ளைட்ல பறக்கிறீங்க. எங்களைக் கூட்டிட்டுப் போக மாட்டீங்களா?’ கேட்டான். அவங்களை அதிகமா காந்தி பீச்க்குத்தான் கூட்டிட்டுப் போயிருக்கேன். கடைசியா நான் காந்தி பீச்சுக்குப் போனது ரஞ்சித்தோட அஸ்தியைக் கரைக்கத்தான். அதுக்குப் பிறகு இன்னைக்கு வரைக்கும் எங்களால அங்க போக முடியலை. அஸ்தியோடு கடல்ல விட்ட என் பிள்ளையின் சிறு எலும்புத்துண்டை, ஏதாவது ஒரு அலை தூக்கி வந்து எங்க காலடியில போட்டுட்டா, நாங்க வலியில தவிச்சுப்போவோம்கிற பயம்தான் காரணம்.
'வீசிங் பிராப்ளம் இருந்திருக்கு. அதனால மூச்சுத்திணறி இறந்துபோனான்’னு பள்ளி நிர்வாகம் சொன்னது. 'நுரையீரல் முழுக்க தண்ணி புகுந்து செத்துப்போனான்’னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது. உண்மை என்னன்னு நீதிமன்றத்தில் தெரிஞ்சிடும்னு, நாங்க அமைதிக்குள்ள எங்க கண்ணீரைப் புதைச்சுட்டுக் காத்திருக்கோம்.        
ரஞ்சித் இறந்துபோன சில வாரங்களுக்குப் பிறகு அவன் படிச்ச பள்ளியில் இருந்து போன் பண்ணி, 'உங்க பையன் ஸ்கூல் பேக் இங்கே இருக்கு. வந்து வாங்கிட்டுப் போங்க’னு சொன்னாங்க. அந்த பேக்ல இருந்த ஒரு நோட்புக்ல, 'என் ஃபேமிலியோடு நான் லண்டனுக்கு  டூர் போனேன். அங்க ஒரு தீம் பார்க்ல ஆசை தீர விளையாண்டேன். ஸ்விம்மிங் பூல்ல நீச்சலடிச்சேன்’னு கற்பனையா ஒரு பயணக் கட்டுரை எழுதியிருந்தான். பக்கத்துலயே ஒரு ஸ்விம்மிங் பூல் வரைஞ்சு அதுல ஒரு மொம்மையை மிதக்கவிட்டு, 'இது நான்’னு குறிப்பிட்டிருந்தான். அதைப் பார்த்ததும் நான் நொறுங்கிப்போயிட்டேன்.
அந்தப் பொம்மைபோலத்தானே சார்... என் பிள்ளையும் அந்த நீச்சல்குளத்துல மிதந்திருப்பான்!''
நன்றி : 30.12.2014 ஆனந்த விகடன் 

08 October, 2014

இரண்டு பாயின்ட் தீவிரத்தோடு எழுதப்பட்ட கவிதைகள்!


(கவிஞர் நரனின் ’ஏழாம் நூற்றாண்டு குதிரை’ கவிதைப் புத்தகத்துக்கு யாவரும்.காம் ஏற்பாடு செய்த விமர்சனக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது.. இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்.)

குழந்தையின் கண்கள் வாய்க்கப் பெற்றோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கண்களில் தென்பட்டுவிட வேண்டும் என்று கவிதை துடியாய்த் துடிக்கிறது. தென்பட்டுவிட்டால் குதூகலிக்கிறது. குழந்தையின் மனது வாய்க்கப் பெற்றோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்களைக் கவிதை தத்தெடுத்துக்கொள்கிறது. குழந்தையின் உலகத்துள் கலக்கத் தெரிந்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் மெசியாவைக் கண்டடைகிறார்கள். கூடவே இஸ்ரேலைப் போல குழந்தைகளின் மூளைகளின் மீது தங்கள் ஏவுகணைகளை வினைபுரிய அனுப்பி வைத்துவிட்டு, அந்தப் பாவம் தங்களை சேராது இருக்க வேண்டுமே என்ற பதற்றத்தில் பரிமளத் தைலத்தால் தங்கள் கைகளைக் கழுவிக்கொள்வோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்களுக்கு எதிராகத்தான் கவிதை, துப்பாக்கி ரவையாகவும் மாறுகிறது. அப்படியான கவிதையோடு ஆரம்பிக்கிற நரனின்ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளை நான் வாரி அணைத்துக்கொள்கிறேன்; உவந்து உச்சி முகர்கிறேன்.

குழந்தைகள் உருவாக்கி ஊதி ஊதி உடைக்கிற காற்றுக் குமிழ்களுக்கு ஒப்பானவை நரனின் கவிதைகள். அவை ஓவ்வோர் வரியிலும் ஏதோ ஒரு ரசவாதம் நிகழ்த்திவிடுகிறது. மொழியிலும் செய்நேர்த்தியிலும் தன் முதல் தொகுப்பில் இருந்து பாரதூரமான தூரத்துக்கு நகர்ந்து வந்திருக்கிறார். அதனால்தான் நரனால்...

மிகப்பெரிய மலைப் பாம்பொன்றை வரைந்தேனா
அயர்ச்சியில் அதன், மேலேயே படுத்துறங்கி விட்டேன்...

என்று சொல்லிவிட்டு கால்நீட்டிப் படுத்துக்கொள்ள முடிகிறது. படிக்கிற நமக்குத்தான் பதற்றம்; பயம்; பரவசம் எல்லாம்...
சூன்யத்தைப் பற்றி சூன்யத்துக்குள் உருவாகி கடைசியில் சூன்யத்துக்குள் கலந்து ஒன்றுமில்லாமல் ஆகிற சூன்யத்தைப் போலவே நரனின் பல கவிதைகள் சூன்யத்துக்குள் சுழன்று விளையாடுகின்றன.

திறமையான சவரக் கலைஞன் ஒருவன்
கண்ணாடியில் இருக்கும்
என் முகத்துக்கு சவரம் செய்துவிடுகிறான்

என்ற வரிகள் அதற்கு உதாரணம்.
தவிரவும் விடை குறித்து கவலைகொள்ளாத ஒருவன் தாறுமாறாக சுடோகு போடுவதுபோல கவிதையைத் தாறுமாறாக களைத்துப் போடுவதும், அதனை ஒன்று சேர்த்து மௌனமாகப் படித்துப் பார்க்கும் வாசகனைப் பார்த்து புன்னகைப்பதும் கவிதைகள் முழுக்க காணக்கிடைக்கின்றன!

நரனிடம் வார்த்தையைச் சுரக்கிற கிணறு ஒன்று இருக்கிறது. அந்தக் கிணற்றிலிருந்து அம்மா குழந்தையாகவும் அப்பா 13 வயதான சிறுவனாகவும் ஏறிவருகிறார்கள்.
தன் புண்ணியத்தில் சூரியன் பீட்சா துண்டாகவும், இந்தியாவின் ஆயிரம் ரூபார் தாளாகவும் தெரிகிறது. கர்ப்ப நிறத்து மண்ணின் அடியாழத்தில் இருந்து வார்த்தைகளையும் தாதுக்களையும் கொலைவாளையும் சுரந்துகொண்டே இருக்கிறது அந்தக் கிணறு.

இந்தத் தொகுப்பில் இருக்கும் மிக முக்கியமான கவிதைவாருங்கள் புளுக்களே...” பலம்கொண்டு ஓடிய குதிரையைப் புழுவைக்கொண்டு சாய்த்துவிடுகிற சாவும் சூழலும் வாய்க்கபெற்ற நாம் பேறுபெற்றவர்களா? இல்லை சாபமுற்றவர்களா? என்ற கேள்விக்குள் நம்மைத் தள்ளிவிட்டு குதிரைக் குளம்படியை விதைப்பையில் பதித்துவிட்டு ஓடுகிறது

நரன் கவிதைகளில் வருகிற நிலத்தில் பாலையின் வெக்கையும், கோதுமை மணிகளும், முந்திரிக்கொட்டைகளும், பொரிந்த கொத்தவரங்காயும் நம் கவனத்தையும் கரிசனத்தையும் கோருகின்றன. அந்த நிலத்தில் இருந்து வெட்டுக்கிளிகள் பறக்கின்றன. லாடங்கள் முளைக்கின்றன. இரண்டு தொலைவில் நாளைக்கான உணவை ஒரு அப்பா வேட்டை ஆடிக்கொண்டிருக்கிறார். அவ்வளவு மகிழ்வும் வேதனையும் இச்சையும் வேட்டையும் நிரம்பிய அந்த நிலம் ஈழத்தைப் போல அரேபியாவைப் போல அல்லது ஒரு கனவு போல கைநழுவி அல்லது கண்நழுவிப் போகிறது. அது குறித்து அங்கலாய்க்கும் நரன்கனவுதானே நண்பாகவிதை சமக்காலத்தில் உலகமயத்தின் கோர முகம் குறித்து மிக அமைதியாக அற்புதமான அரசியல் கவிதை எழுதியிருக்கிறார்.

கனகம்பீரத்துக்கும் சற்றேறக் குறைய யோக்கியன் வேடமிட்ட உலகமயம்... தாயின் கர்ப்பத்துக்குள்ளும் தன் சந்தையைப் பரப்பிவிட்டது. முதலில் மருந்தைக் கண்டறிந்துவிட்டு பிறகு நோயை உருவாக்கும் வித்தையை அது கற்று வைத்திருப்பதன் சமீபத்திய உதாரணம் எபோலா. நமது குப்பைமேனிச் செடியின் ஆணிவேர் மீதும் கீழாநெல்லிகளின் பச்சை நரம்புகளின் மீதும் உலகமயம் தன் ஆதிக்கத்தை செலுத்திவிட்டதால் அது நமது ரத்தநாளங்களுக்குள்ளும் பார்வை நரம்புக்குள்ளும் மிக லகுவாகப் புகுந்துவிட்டது. முதலில் சேவகன் வேடமிட்டு நுழைந்த உலகமயம் நம் நிலங்களின் பலன்களை ருசித்துக் கொழுத்துவிட்டு இப்போது நம்மையே அடியாக்கிவைத்துகிறது. அதே உலகமயம்தான்... கவலைப்படாதீர்கள் ஏனெனில் நீங்கள் எல்லாம் சாகப்பிறந்தவர்கள். நீங்களே உங்களைத் தூக்கிலிட்டுக்கொள்ள நான் வால்மார்ட் நிறுவனத்துக்கு தூக்குக்கயிறு கேட்டு ஈமெயில் விண்ணப்பித்து இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு.... என் சேவைக்கு நீங்கள் தரும் ஸ்கோர் என்ன? என்று கடமையுணர்ச்சி காட்டுகிறது... தூக்கில் நீங்கள் தொங்கும்போது உங்கள் கால்கள் தரையில் பாவாமல் இருக்க நான் கேரண்டி என்று கடைசியில் ஓர் உத்திரவாதமும் கொடுக்கிறது.

20 நூற்றாண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவம் கட்டப்பட்டிருப்பது இயேசுவை அறைந்த மூன்று ஆணிகள் மீதுதான்... ஆணிகள் துருவேற்றிவிட்டன பலம் இழந்துவிட்டன அவற்றை மாற்றுங்கள் அல்லது கழர்ருங்கள் என்று குரல்கொடுக்கிற தச்சனை, இதோ இவன்தான் குற்றவாளி என்று அதிகாரத்துக்குக் காட்டிக்கொடுக்கிற வேலை மதவாத பீடங்களே செய்கின்றன என்று கிறிஸ்தவத்தைத் தோலுரிக்கிறது மூன்று ஆணி என்று தலைப்பிட்ட கவிதை.

மரமேறத் தெரியாதெனச் சொன்னவன்தான்
மரநாற்காலி மீதேறி அமர்ந்திருகிறான்...
என்ற வரிகளுக்குள் இருக்கும் அதிகாரமும் நயவஞ்சகமும் வன்மமும் சமீபத்தில் காலனிகளை எரித்த மரவெட்டிகளுக்கானதும்கூட என்று சொன்னா நம்மால் மறுக்க முடியுமா?

உண்பது, உடுப்பது, ரசிப்பது, புணர்வது, வாழ்வது, பேசுவது... அனைத்துச் செயல்பாடுகளிலும் சுயமாக இருக்கத் தெரியாத ிரதி எடுத்து வாழ்கிற தலைமுறை குறித்த, பகடியின் ஆழத்துள் இயங்கும் இரண்டு பாயிண்ட் தீவிரம் கவிதையை முதல்முறை வாசிக்கும்போது மெல்லிய புன்முருவலும் இரண்டாம் முறை மூன்றாம் முறை வாசிக்கும்போது மெல்லிய வ்பலியும் படர்வதை உணர முடிகிறது.

இப்படி எதைச் சொல்வதற்கும் எண்களின் துணைத் தேடிப் போவதும், எதைச் சொன்னாலும் சாதாரணமாகச் சொல்லுவதைவிட இரண்டு பாய்ண்ட் தீவீரத்தோடு சொல்லிவிடுகிறார் நரன். அதுதான் இந்த தொகுப்பின் பலம், பலவீனம்... எல்லாமும். ஒரு வார்த்தையின் மூலம் அல்லது வரி அல்லது காட்சியின் மூலம் ஒரு மலைமுகட்டில் கொண்டுபோய் வாசகனை நிறுத்திவிட்டு, அடுத்த வரியின் மூலம் அடுத்த முகட்டுத் தாவிவிடுகிறார். ஆனால் இடையில் இருக்கும் பள்ளத்தாக்கைக் கடந்துவந்து அந்த முகட்டை அடைய வாசகன் திணறித்தான் போவான். ஏறிவிட்டால் நெஞ்சம் நிறைய ஆக்ஸிஜனைச் சுவாசிக்கலாம்.

புதுமுக வாசகனுக்கு வாசிப்பு சவாலைக் கோருகின்ற இந்தக் கவிதைகள் தமிழ் நவீனக் கவிதை பரப்பில் பரவமான அனுபவத்தைத் தருபவை என்று என்னால் உறிதியாகக் கூற முடியும்!






24.08.2014 தேதியிட்ட தீக்கதிர் நாளிதழில் நா.வெ. அருள் என் கவிதைப் புத்தகம் ’மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ குறித்து எழுதிய விமர்சனம் இது


========================================================
கதிர்பாரதியின் கவிதையுலகம் நேற்றுப்போல் தோன்றுகிறது... கல்கி அலுவலகத்தில் அப் பொழுது ஆசிரியர் பொறுப்பி லிருந்த திருமதி சீதா ரவி அவர் களின் அழைப்பின் பேரில் மிக நெருக்கமான ஒரு சிறு கூட்டத் தில் கலந்து கொள்ளும் வாய்ப் பைப் பெற்றேன். அன்றைய விருந் தினராகக் கலந்து கொண்ட இன் னொருவர் கவிதாயினி வைகைச் செல்வி அவர்கள். திரு.மு.மாற னும் திரு.யுவராஜ் அவர்களும் கல்கி அலுவலகத்தில் இருந்த பிற நண்பர்கள். திருமதி சீதா ரவி ஓர் இலக்கியப் பகிர்வுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்நிகழ்வில் பலரும் கவிதை வாசித்தார்கள்.
ஓர் இளைஞர் வாசித்த கவிதை எனக்குள் ஒரு மின் அதிர்வை ஏற் படுத்தி இருந்தது. அன்றைக்கு அவர் அணிந்திருந்தது கறுப்புச் சட்டை என்பதாக என் நினைவு. அவர் வாசித்த கவிதையின் கதை நாயகர், முக்குக்கு முக்கு குந்தவைக் கப்பட்டிருக்கும்பிள்ளையார். அவர் கவிதை வாசிப்பின் போது எங்கள் ஊர் சந்திகாப்பான் (கிரா மங்களில் ஒவ்வொரு தெருக் கோடியிலும் ஒரு கல் நடப் பட்டிருக்கும். அந்த “சந்திகாப் பான்“ தான் பிள்ளையார் என் பதாக ஐதீகம்) மீது ஒரு நாய் ஒண்ணுக்கடித்துக் கொண்டிருந் தது. என்ன தைரியம் அந்த இளை ஞருக்கு. ஒத்தக்காலைத் தூக்கி பிள்ளையார்மீது ஒண்ணுக்குப் பெய்யும் கெடாநாயைப் பற்றித் தான் எழுதியிருந்தார்.
அதிர்ந்து போனேன். என் அதிர்வைப் பதிவு செய்துவிட்டும் வந்தேன். கவித்துவம் கைகூடியிருந்த கவிதையைச் சிலாகித்துவிட்டு வந்தேன்.அன்றைக்குக் கவிதை வாசித்த அந்த இளைஞர்தான் இன்று “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” கவிதைத் தொகுப்புடன் நம் கண்களை மீறி வளர்ந்திருக்கிறார். யூமா வாசுகியின் கவிச்சுவடுகளைச் சிலாகிக்கும் ஒருவர் வளராதிருந் தால்தான் ஆச்சரியம். அந்த மனி தரைப்போல இயல்பாகவே மானுட எளிமை வாய்த்துவிடு மல்லவா? மனிதனுக்காகக் கசிந்துரு கும் மானுட எளிமைதானே கவி தையின் கோபுரம்.
இவர் கவிதையின் ருசிக்கு நாம் எப்படி ஆட்பட்டு விடுகிறோம் என்று யோசித்தபடியே புத்தகத் தைப் புரட்டுகிறபோதுதான் புரிந் தது... “உலக ருசிகளைஎல்லாம் ஒன்று திரட்டி அவர்மனைவி சாந்தி பெல்சன் வைக்கும் மீன்குழம்பின் ருசி” . மீன்குழம்பின் ருசிக்கும் கவி தையின் ருசிக்கும், ஏன் காதல் ருசிக் கும் இடையில் கூட எனக்கொன் றும் வேறுபாடு தெரியவில்லை... ஒவ்வொன்றுக்குள்ளும் “கையளவு கடல்”.தொகுப்பில் “குடும்பப் புகைப் படத்”தோடு கதிர்பாரதியின் கவிதைப் புகைப்படம் விரிவடையத் தொடங்குகிறது. தொகுப்பு நெடுக “அறுவடைக்கு நிற்கும் நெல்வய லொன்றில் பரவும் தீ பனியாலான குறுவாளாகவும் குறிபார்க்கிறது”. “காலாதிகாலத்தின் தூசி”யில் அவர் எழுப்பும் பிரம்மாண்ட காட்சிப் படிமம் அங்கங்கும் கவிதைகளில் தென்படுவது ஒரு தேர்ந்த கவிஞனுக் குரிய நல்ல அடையாளம். அதனால் தான் கடலை நீலப்பள்ளம் என்று சர்வசாதாரணமாகப் போகிற போக்கில் உதிர்த்துவிட முடிகிறது.
அதே சமயத்தில் கண்ணீரைத் துளித் துளிக் கடல்கள் என உருவகிக்கவும் முடிகிறது. நில வரையறைகளை இவரது கவிதை உள்வாங்கிச் சேமித்திருப்பதை “சோழக் கடற் கரைப் பிச்சி” யில் உணர்ந்து கொள் ளலாம். காலத்தையும் இடத்தையும் தன் இஷ்டத்துக்கு அங்கும் இங்கும் இழுத்துப்போட்டு ஆலவட்டம் ஆடுவதை “நாளின் பொம்மை”யில் பார்க்கலாம். காலத்தையும் இடத் தையும் மாத்திரமல்ல... மனிதர்கள், இயற்கை, சினைமீன், கடல், பௌர் ணமியைக் கொத்தும் கொக்கு, பறக்கும் நிலவு என சகலத்தையும் தன் மாய கவிச்சுழலில் சிக்க வைத்து விடுகிறார். ஜீவராசிகளையும் காலத் தையும் ஒரு கண்ணியில் சந்திக்கிற சாகசமும் தான் (எ.கா: காலத்தினாற் செய்த கொலை). விதவிதமான உணர்வலைகளை உருவாக்கிவிடு வதில் “இரண்டாம் உலகம்“ திரைப் படத்தின் ஒளிப்பதிவாளரும், கலை இயக்குனரும் இணைந்த பிறவியா கத்தான் எனக்குக் கதிர்பாரதி காட்சி தருகிறார்.
‘சாங்கியம்‘ என்கிற வார்த்தை யைக் கூடத் தன் மொழிக்கிடங்கில் சேமித்துவைத்திருக்கிறார். ‘நன்னி லம்‘ என்பது இவரது தஞ்சை நிலம் என்பது வெறும் பாசாங்குதான். “உன் பாசாங்குக்கும் பசப்புகளுக் கும் மயங்கியிருக்கும் நிலத்தை மீட் டாக வேண்டும் என்று இவர் முன் வைக்கும் விஷயம் அரசியலை முன் வைக்கும் நுட்பம் வாய்ந்தது. நெடுஞ் சாலை மிருகத்தை வெறி தணியாமல் வேட்டையாடுவதிலிருந்து இத னைப் புரிந்துகொள்ளலாம். இந்த இடத்திலிருந்துதான் இவரது கவிதைகளை இனம் காண வேண் டும். அதனால்தான் கொலை வெறிக்கு ஆளான கோயில் யானை களுக்காக இரக்கப்பட்டு ஒரு நெடிய மருந்துச்சீட்டை நெட்டுருவில் எழுதி அவற்றை சுதந்திரத்தோடு பிளிற விடுகிறார்.
“யானையோடு நேசம்கொள்ளும் முறை” கவிதையின் கடைசி வரிக்கும் முன்வரை, இவரது கவிதையின் அழகியல்.ஆசீர்வாதம் வழங்குகிற யானைகளை அடையாளம் காட்டு வதுதான் இவரது கவிதையின் அரசியல்.எந்த ஒரு வார்த்தையிலிருந்தும் இவர் கவிதையைப் பின்னிவிடு கிறார். ஒண்ணேமுக்கால் வயதான தன் குழந்தை திலீபனுடன் இருபத் தொன்பது வயதான அப்பாவாக ஒலி விளையாட்டை விளையாட முடிந்த ஒரு அப்பாவால் இப்படி யான கவிதையை எழுதமுடியும் தான். அதனால்தான், கட்டை விரலுக்கும் சுண்டுவிரலுக்குமிடை யில் அதிவேக ரயில்களும், மிதவேக ரயில்களும் வந்து போய்க் கொண் டிருக்கின்றன! ஒரு கவிஞனுக் கேயுரிய அத்துவான வெளியில் ஒரு கால்பந்தைப்போல கவிதையை இப்படி எத்தி விளையாடும் கவி ஞனை சமீபத்தில் தமிழ்க்குரலில் சந்திப்பது சந்தோஷமாக இருக்கி றது.
ஒரு தேர்ந்த கவிஞனின் லாவகம் இவரது மொழியெங்கும் வியாபித் திருக்கிறது. வாழ்க்கையின் அலைக் கழித்தல்களில் உதிர்ந்த சிறகுகள் நவீன சமூகப் பிரச்சனைகளின் சாயல்களை வானம் முழுதும் வரைந்து செல்கின்றன.நிறைய மாயங்களை நிகழ்த் திவிடுகிறார். கற்பனையின் உச்சங் களில் ஊஞ்சலாடிக் கதை சொன்ன வனின் வண்ண பலூனுக்குள் ஊசி நுழைத்துவிடுகிற உயிர்குடிக்கும் உலகானுபவத்தை அனுபவிக்கலாம். வனத்தின் சல்லி வேர்களோடு சில விதைகளைக் கவ்வி வருகிற பறவையின் பாடலொன்றுக்கா கவேனும் கதிர்பாரதியின் கவிதை களைக் கட்டாயம் வாசிக்க வேண் டும். ‘அத்தனை’ வனப்போ என்று ஓரிடத்தில் கவிதையில் இடம் பெறும். ‘அத்துணை’ என்று அளவுக் குப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் ‘அத்தனை’ என்று எண்ணிக்கைக்கான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது தெரியாமல் நடந்திருக்கலாம். காலத்தினாற் செய்த கொலை என்கிற கவிதையில் புழுக்களை ‘அடித்துக் கொள்ளா மல்’ என்பது ‘அடித்துக் கொல்லா மல் ‘ என்று வந்திருக்க வேண்டும்.
இது பதிப்பகத்தின் ஒற்றைத் திருஷ் டிப்பொட்டு. மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் தரமான கவிதைத்தொகுப்பு. இந்தத் தொகுப்பில் ஒரு கவிதையிலிருந்து மற்றொரு கவி தைக்கு அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது. அற்புதமானத் தொகுப்புக்கு இதுதானே அடை யாளம். அற்புதமான கவிதைகள், பிரமாதமான கவிதைகள், மிக நல்ல கவிதைகள், நல்ல கவிதைகள் என நிறைந்த இந்தத் தொகுப்பில் என் அறிவு விளக்கத்துக்கு ஒட்டாத கவிதையாகப் படுவது “சமாதானத் தூதுவர் = `ஹிட்லர்’சரி, “கூச்சத்தைப் பூசிக்கொள் ளும் பிள்ளையார்” எப்படி இருப்பார்?...கதிர்பாரதியின் வார்த்தை களில்...”.....உங்களுக்குத் தெரியாதிருப்பதே நல்லது. ஏனெ னில், ஒத்தக்காலைத் தூக்கி அவர் மீது ஒன்னுக்குப் பெய்யும் கெடா நாயைப் பற்றியும் தெரியவந்தால் இன்னும் திடுக்கிட்டுத்தான் போவீர் கள்”படித்துப்பாருங்கள்...இன்னும் பல கவிதைகளில் பல உணர்வு நிலைகளை அடையத்தான் போகிறீர்கள். ஆனாலொன்று, மெசியாவுக்கு நான்காம் மச்சம் அரும்புவதற்கு முன் முடித்து விடுங்கள்
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்
ஆசிரியர்: கதிர்பாரதி
வெளியீடு:
புது எழுத்து
காவிரிப்பட்டினம்
கிருஷ்ணகிரி
விலை: ரூ. 70