03 August, 2015

எம்.எஸ்.வி பற்றி பாடகி வாணிஜெயராம்... நன்றி : ஆனந்த விகடன்



‘தலை முதல் கால் வரைக்கும் சரஸ்வதிதேவியின் பூரணமான அனுக்கிரம் பெற்ற குழந்தை’ & மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களைப் பற்றி இப்போது இப்படித்தான் எனக்குச் சொல்லத் தோணுது. அருவியாகக் கொட்டும் மெட்டுக்களும், சரஞ்சரமாக வந்துவிழும் சங்கதிகளும் என்னைப் போல எத்தனையோ பாடகர்களைத் திக்குமுக்காட வெச்சுருக்கு. இந்த மனிதருக்கு எங்கிருந்து இவ்வளவு இசை வெள்ளமென ஊற்றெடுக்குதுன்னு ஆச்சர்யப்பட்டிருகோம்.

1973&ம் வருஷம் ஜனவரி 31, பிப்ரவரி 1... இந்த ரெண்டு நாட்களும், என்னோட இந்திப் பாடல்கள் லைவ் ஆர்கெஸ்ட்ரா சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நானும் சென்னை வந்திருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு ஒருநாள் சீஃப் கெஸ்ட் எம்.எஸ்.வி சார். நிகழ்ச்சி முடிஞ்சதும் என்னை ரொம்பப் பாராட்டினார். ‘உங்களுக்கு அபாரமான ஸ்வர ஞானம்’னு சொன்னார். அதே வருஷம் ஏப்ரல் மாதம் எம்.எஸ்.வி. சார் இசையில் ‘தீர்க்க சுமங்கலி’ படத்துல ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ’ பாடல் பாடினேன். அதுக்குப் பிறகு ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’, ‘அபூர்வ ராகங்கள்’... படங்களுக்கு அவரோட இசையில் பாடின பாடல்கள், ரசிகர்கள் மத்தியில ரொம்ப பிரபலமாச்சு. நானும் தமிழில் ரொம்ப பிஸியானேன்.
இசையில் எம்.எஸ்.வி&யின் கற்பனை எங்களை ரொம்பவே பிரம்மிக்கவைக்கும். ‘நீங்க போட்ட சங்கதிகள்ல எதை எடுத்துக்கிறது, எதை விடறுதுன்னு தெரியலை சார்’னு பயந்துக்கிட்டே சொல்வேன். அதுக்கு அவர் சிரிச்சுக்கிட்டே, ‘உங்களுக்கு எது ஈஸியா இருக்கோ அதை எடுத்துக்கங்கம்மானு சொல்வார். நல்லா பாடிட்டா ‘நான் மெட்டு போட்டதைவிட நல்லா பாடிருக்கீங்க’ம்மானு சொல்லிப் பாராட்டுவார். ஆனால் அவர் போட்ட சங்கதிகள்ல 60, 70 சதவிகிதம்தான் பாடிருப்போம்.
1977&ம் ஆண்டில் எம்.எஸ்.வி& தலைமையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு இசைச் சுற்றுப்பயணம் போனோம். 17 நாட்களில் 18 நிகழ்ச்சிகள் பன்ணினோம். அப்போ அவரோட இசையில் நான் பாடின ‘நாதம் என்னும் கோயிலிலே...’ ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்’... இந்தப் பாடல்கள் ரொம்பப் பிரபலம். அந்தப் பாடல்கள் இல்லாத இசைமேடை நிகழ்ச்சியே இருக்காது. அந்தக் காலத்துல வாரத்துக்கு ஒரு இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்கும். எம்.எஸ்.வி சார் எனக்கு போன் பண்ணி இந்த வாரம், இந்த இடத்துல இசை நிகழ்ச்சி இருக்கு வந்துடுங்கம்மானு சொல்வார். நான் தவறாம கலந்துக்கிட்டிருந்திருக்கேன். அவரோட இசையில தமிழில் மட்டும் அல்ல, கன்னடம் தெலுங்கு மொழிகள்லகூட பாடிருக்கேன்.
‘ஏக் துஜே கேலியே’ இந்திப் படத்தோட ஒரிஜினல் வெர்ஷன் தெலுங்கு ‘மரோசந்திரா’. அந்தப் படத்துல எம்.எஸ்.வி இசையில் நான் பாடின அத்தனை பாடல்களுக்கும் சூப்பர் டூப்பர் ஹிட்.

என்னைப் பத்தி ஒரு முறை ஒய்.ஜி.மகேந்திராகிட்ட ‘வாணியம்மா ஃப்ளோட்டிங் பேப்பர் மாதிரி சொல்லிக்குடுக்கிறதை அப்படியே பிடிச்சுக்குவாங்க’னு சொன்னாராம். இந்த வார்த்தைகள் எல்லாம் எனக்குக் கிடைச்ச பொக்கிஷமான ஆசிர்வாதங்கள். நிறையப் பேட்டிகள்ல வாணியம்மாவுக்கு ‘அபாரமான ஸ்வர ஞானம் உண்டு’னு சொல்லியிருக்கார். அந்த வார்த்தைகளைக் காப்பாத்தணுமேனு பயந்து பயந்து அவ்வளவு டெடிக்கேஷ்னோடு பாடுவேன்.
அபூர்வ ராகங்கள் படத்துக்காக அவர் இசையில் நான் பாடின ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ பாட்டு ரிக்கார்டிங் முடிஞ்சதும் என்கிட்ட, ‘வாணியம்மா... இந்தப் பாட்டுக்காக உங்களுக்குத் தேசிய விருது கிடைக்கும்’னு சொன்னார். அவரது வார்த்தைகள் எவ்வளவு சத்தியமானது... எனக்கு முதல் தேசிய விருது அந்தப் பாடலுக்குக் கொடுத்தாங்க. அன்னைக்கு காலையில டெல்லியில விருது வாங்கிட்டு, மாலை சென்னையில் அவர் கச்சேரியில் பாட்டு பாடினேன். அப்போ பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்றை நான் அவர் கையில் கொடுத்து, நானும் என் கணவரும் எம்.எஸ்.வி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம். என்னால மறக்க முடியாத கச்சேரி அது.

‘பத்தினிப்பெண்’ படத்துல எம்.எஸ்.வி சார் இசையில் ‘உலகெங்கும் நம் வீடு’னு ஒரு பாட்டு. பாடி முடிச்சுட்டு சிங்கர் பூத்தை விட்டு வெளியில வந்ததும், ‘வாணியம்மா இங்க வாங்க’னு கூப்பிட்டார். ‘என்ன சார்... நான் சரியா பாடலையா.. இன்னொரு டேக் வேணும்னா போலாமா?’னு கேட்டேன்.
‘அது இல்லைம்மா... நான் 15 நாள் கஷ்டப்பட்டு போட்ட ஒரு பாட்டை 5 நிமிஷத்துல ஒரு டம்ளர் தண்ணி குடிக்கிறது போல பாடிட்டீங்களே...’ சொல்லி வியந்துபோனார். அந்த வார்த்தைகளை என்னால் எப்பவும் மறக்க முடியாது.

அவர் இசையில் பாடினதெல்லாம் பொன்னான நாட்கள். காலையில் 9 மணிக்கு ரிக்கார்டிங்னா நான் சரியா போய்டுவேன்... பார்த்தா எனக்கு முன்னாடி அவர் கார் போயிட்டிருக்கும். தயாரிப்பாளர் எல்லோரையும் வயசு வித்தியாசம்லாம் பார்க்கமா முதலாளி முதலாளின்னுதான் கூப்பிடுவார். அவருக்கு இசையைத் தவிர வேறு ஒண்ணும் தெரியாது. செல்போனை எப்படி ஆபரேட் பண்ரதுன்னுகூட தெரியாது. அவங்க பொண்ணுங்க என்கிட்ட சொல்வாங்க... ‘எங்க அப்பா ஒரு குழந்தை மாதிரி. நாங்கதான் அவருக்கு வேண்டியதெல்லாம் பாத்துக்குவோம்.’ பாடகர்கள் சரியான ஸ்வரத்துல பாடுலனா விடவே மாட்டார் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொடுப்பார்.

ஆஸ்பத்திரில அவர் ஐசியுல இருந்தப்போ பார்க்க போனேன். ஒரு குழந்தை போல படுத்திருந்தார். ‘நாதம் என்னும் கோயிலில்...’ பாட்டை முழுசா பாடினேன். அதைக் கேட்டபோது அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘வாணியம்மா பாடின பாட்டுல உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது எது?’னு அங்க இருந்தவங்க கேட்டாங்க. ‘அவர் பாடின எல்லாம் பாட்டும் எனக்கும் பிடிக்கும்’னு சொன்னார். இது எனக்கு பெரிய கொடுப்பினைதான். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இழப்பு தென்னிந்த திரைக்கு மட்டுமல்ல, இந்திய இசைக்கு மட்டுமல்ல... உலக அளவில் ஒரு பெஸ்ட் கம்போசரை இழந்தவிட்ட இசையின் இழப்பு என்றுதான் சொல்லணும். எம்.எஸ்.வி அவர்கள் என்னளவில் ‘நாதம் என்னும் கோயில்’தான். அதில் அவர் ஏற்றிவைத்த ராகதீபங்கள் என்றும் அவரின் புகழை வெளிச்சமாக இசைக்கும்!


எம்.எஸ்.வி பற்றி புலவர் புலமைப்பித்தன் - நன்றி : ஆனந்த விகடன்

வீட்டில் இருந்து காலையில் ஏழு மணிக்கு எல்லாம் ரிக்கார்டிங் தியேட்டர் வந்துவிடுவார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நாங்கள் அவர் வருவதற்கு முன்பே கூடிவிடுவோம். அவர் வரும்போது பத்து பன்னிரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு, பஞ்சு பஞ்சாக அடுக்கி அடுக்கி இட்லி கொண்டுவருவார். கூடவே குடத்தில் தண்ணீரும் வரும். ‘வாத்தியார் அய்யா... சீக்கிரம் சாப்பிட வாங்க... இல்லைன்னா இட்லி எல்லாம் வித்துடும்’ என என்னிடம் சொல்லிவிட்டு ரிக்கார்டிங் தியேட்டரே அதிரும்படிச் சிரிப்பார். எல்லாமே அவருக்கு விளையாட்டுத்தான். அப்படி ஒரு பிள்ளை மனசு.
உலக விஷயங்கள் எதுவும் தெரியாத, இசை உலகம் மட்டுமே தெரிந்த மனிதர் அவர். காமராஜர் திரும்ப வந்துட்டார்’ என யாராவது அவரிடம் சொன்னால், ‘அப்படியா... எப்ப வந்தார்?’ எனக் கேட்கும் அளவுக்கு வேட்டி சட்டை அணிந்த வெள்ளந்திப் பிள்ளை அவர்.

ஒருநாள் ரிக்கார்டிங் தியேட்டரில் பாடல் பதிவுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, ‘வாத்தியார் அய்யா... நேத்து ஒரு கனவு கண்டேன். நீங்க எழுதிக்குடுத்த பாட்டுக்கு நான் போட்ட மெட்டு நல்லா வரலைன்னு, நீங்க என் கையை நீட்டச் சொல்லி அடி பின்னிடுறீங்க. அப்புறம் நான் முழிச்சுக்கிட்டேன்... பார்த்துக்கங்க’ எனக் கைகளை முன்னே காட்டி, முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டார். பக்கத்தில் இருந்த எல்லோரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டோம். நான் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் கண்டிப்பான தமிழ் வாத்தியார். கீழ்படியாத மாணவர்களைப் பிரம்பெடுத்து விளாசிவிடுவேன். மெல்லிசை மன்னரின் இரண்டு பிள்ளைகள் என் மாணவர்கள் என்பதால், அந்த விஷயம் அவருக்கும் தெரியும். அதனால் அவருக்கு அப்படி ஒரு கனவு வந்தது என்றார்

‘குடியிருந்த கோயில்’ படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் நான் எழுதின பாடல்தான் என் திரையுகல வாழ்வின் முதல் பாடல். கோவையில் இருந்து சென்னைக்கு என்னை அழைத்துவந்த கே.சங்கர்தான் இயக்குநர். ஏற்கெனவே இரண்டு மூன்று பேர் அந்தப் பாடல் சூழலுக்கு எழுதியும் திருப்தியாக வராத நிலையில்தான், என்னை எழுதச் சொன்னார்கள். சூழலைச் சொல்லிவிட்டு மேற்கு மாம்பலம் பவர் ஹவுஸ் பக்கத்தில், காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார் கே.சங்கர். காரில் வரும்போதே மனசுக்குள் பாடல் முழுவதும் வந்துவிட்டது. பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் பேப்பர் வாங்கலாம் எனப் போனால், சட்டைப்பையில் பேப்பர் வாங்கக்கூட காசு இல்லை. கையில் வைத்திருந்த பேப்பர் ஃபைலைத் திருப்பி, அதில்தான் எழுதினேன் ‘நான் யார்... நீ யார்... நாலும் தெரிந்தவர் யார்... யார்?’ அன்று மாலையே அந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவு. பாடல் எழுதின பேப்பரைக் கையில் எடுத்த எம்.எஸ்.வி., ஒரே மூச்சில் முழுப் பாட்டையும் பாடி மெட்டமைத்த அதிசயத்தை, அன்றுதான் நேரில் பார்த்தேன். அந்தப் பாடல் எழுதுவதற்கு முன்பே எனக்கு எம்.எஸ்.வி. பழக்கம் என்றாலும் அந்தப் பாடலுக்குப் பிறகு எங்களுக்கு நட்பின் பிணைப்பு இன்னும் இறுக்கமானது.
தமிழ்த் திரையுலகில் எம்.எஸ்.வி&யைப் போல குருபக்தி கொண்டவர்களைக் காண்பது அரிது. தன் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடுவை, தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றியவர் எம்.எஸ்.வி. சுப்பையா நாயுடுவின் கடைசிக்காலம் வரை அவரிடம் எம்.எஸ்.வி காட்டிய நன்றி விசுவாசம் எல்லையற்றது. எம்.எஸ்.வி&யின் ஒவ்வொரு பிறந்த நாளும் ஏற்காட்டில் உள்ள அவரது பங்களாவில் நடக்கும். அவரோடு வேலைபார்க்கும் முக்கியமனவர்களை மட்டும் அழைப்பார். பிறந்த நாள் அன்று காலை குளித்து முடித்ததும் அவரது அம்மா நாராயணி அம்மாள், குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இருவரின் கால்களிலும் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவார். சுப்பையா நாயுடுவின் காலில் விழுந்து வணங்கி எழுந்திருக்கும்போது எம்.எஸ்.வி&யின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடும். அத்தனையும் நன்றிக்கடனுக்காக சிந்தும் கண்ணீர் என்பது என்னைப் போல எம்.எஸ்.வி&க்கு நெருக்கமாக இருந்த நண்பர்களுக்குத் தெரியும். சுப்பையா நாயுடு இறந்தபோது அவரது இறுதிச் சடங்குகளைப் பிள்ளையின் ஸ்தானத்தில் இருந்து செய்து முடித்தார் எம்.எஸ்.வி.
எம்.எஸ்.வி., ஒரு பாடலுக்கு மெட்டு போட்டால் கண்ணிமைக்கும் நேரத்தில் மெட்டுக்கள் சரஞ்சரமாகக் கொட்டும். ‘நேற்று இன்று நாளை’  படத்தில் ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’ பாடலை நான்தான் எழுதினேன். எம்.ஜி.ஆருக்கு எழுதிய காதல் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. அந்தக் காலத்தில் பட்டிதொட்டி எங்கும் இந்தப் பாடல் ஒலித்தது. இந்தப் பாடலுக்கு அடுத்தடுத்து பத்து மெட்டுக்கள் போட்டு எல்லோரையும் திணறடித்தார் எம்.எஸ்.வி. இந்தப் பாடல் வெளியாகி பிரபலமாகி இருந்த சில நாட்களுக்குப் பிறகு, சிவாஜி பிலிம்ஸ் தாயரிக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க சிவாஜி வீட்டுக்கு சென்றிந்தார் எம்.எஸ்.வி. எல்லோரிடமும் எப்போதும் கிண்டலாகப் பேசும் சிவாஜி, அன்று எம்.எஸ்.வி&டமும் அப்படியே பேசியிருக்கிறார். ‘என்னடா... அண்ணனும் (எம்.ஜி.ஆர்) மலையாளி... நீயும் மலையாளி... அதனால அண்ணனுக்குத்தான் நீ நல்ல பாட்டா போடுவியோ? ஏன் எனக்குப் போட மாட்டியலோ?’ என, ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’ பாடலைச் சொல்லிக் கேட்டார். பதறிப்போன எம்.எஸ்.வி. உடனே, ‘எனக்கு ஒரு சுக்கும் தெரியாது. மெட்டு போட்டது மட்டுதான் நானு... பாட்டு எழுதினதெல்லாம் வாத்தியார் அய்யாதான்... நீங்க அவர்கிட்ட கேட்டுக்கிடுங்க...’ எனச் சொல்ல, சிவாஜி வாய்விட்டுச் சிரித்துவிட்டு எம்.எஸ்.வி&யைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.

வாஹிணி ஸ்டுடியோவில் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்துக்கான பாடல் பதிவு. ‘தீர்த்தக்கரையிலே தெற்கு மூலையிலே செண்பகத் தோட்டத்தினிலே...’ என்ற பாரதியார் பாடலை எடுத்துக்கொண்டு வந்துகொடுத்து இசையமைக்கச் சொன்னார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். அது சிந்து வகைப் பாடல். மெட்டுக்குள் கட்டுப்படாமல், ஒரு குழந்தையைப் போல நழுவி நழுவி ஓடும் தன்மை கொண்டது. பாடலைக் கையில் வாங்கிய எம்.எஸ்.வி., ஏற்கெனவே பத்து முறை பாடி பயிற்சி எடுத்ததுபோல படபடவென்று பாடி முடித்துவிட்டார். எங்களுக்கெல்லாம் பெருத்த ஆச்சர்யம். பாடி முடித்ததும் என்னைப் பார்த்து ‘வாத்தியார் அய்யா பாட்டு எப்படி?’ என்று கேட்டார். நான் ‘பாரதியார் நேரில் வந்து மெட்டமைத்திருந்தால்கூட இப்படி அமைத்திருக்க மாட்டார்’ எனச் சொல்ல, எம்.எஸ்.வி&யின் கண்களில் தாரைத்தாரையாகக் கண்ணீர்... அவர் மிகவும் உணர்ச்சிவசப் பட்ட தருணம் அது.

எம்.எஸ்.வி., மிகச் சிறந்த இசையமைப்பாளர், பாடகர், நடிகர்... என்பதையெல்லாம் தாண்டி மிகச் சிறந்த பண்பாளர். தமிழ்த் திரையுலகில் இப்படிப்பட்ட பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார்களா என வியக்கவைக்கும் அளவுக்கு நயமான பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார் எம்.எஸ்.வி. உதாரணமாக மூன்று சம்பவங்களைச் சொல்கிறேன்...
 அப்போது தேவர் பிலிம்ஸ் கம்பெனியின் பிரதான இசையமைப்பாளர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்தான். ஒரு புதுப் படத்துக்கு இசையமைப்பதற்காக, தேவர் தன் மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு எம்.எஸ்.வி வீட்டுக்கு வந்து, ‘தம்பி... நம்ம கம்பெனியோட புதுப்படத்துக்கு நீங்கதான் இசையமைக்கிறீங்க...’ எனச் சொல்லிப் பணத்தைக் கொடுத்திருக்கிறார். பதறிப்போன எம்.எஸ்.வி., ‘மாமா (கே.வி.மகாதேவன்)  இசையமைக்கும் கம்பெனிக்கு நான் இசையமைக்கிறது  இல்லைனு முடிவு பண்ணிருக்கேன். என்னால் இசையமைக்க முடியாது’ என மறுத்துவிட்டார். தேவர் எம்.எஸ்.வி&யின் அம்மா நாராயணி அம்மாளிடம் சிபாரிசுக்குப் போக, அவரும் ‘என் மகன் சொல்றதுதாங்கய்யா சரி... அவனை வற்புறுத்தாதீங்க’ எனச் சொல்லிவிட்டார். அடுத்து...
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த ‘வியட்நாம் வீடு’ படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை. அப்போது அவர்கள் தயாரிக்கவிருந்த ‘கௌரவம்’ படத்துக்கான கதை விவாதம் முடிந்து இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை இசையமைக்கும்படி சொல்லி, கதை சொன்னார்கள். கதையைக் கேட்டு முடித்த கே.வி.எம்., எழுத்துபோயிருக்கிறார். ‘ஏன் கதை பிடிக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு, ‘இல்லை... இந்தக் கதை கொஞ்சம் முற்போக்கானது. இதற்கு என்னைவிட எம்.எஸ்.வி பொருத்தமாக இருப்பார். அவரை இசையமைக்கச் சொல்லுங்கள்’ எனச் சொல்லிவிட்டார் கே.வி.எம்.
எம்.எஸ்.வி&யிடம் சொன்னால், ‘மாமா இசையமைப்பதாக இருந்த படத்த்துக்கு நான் இசையமைக்க மாட்டேன்’ எனச் சொல்லிவிட, கே.வி.எம்&மே போன் போட்டு, ‘நீயே இசையமைத்துக் கொடு எனக்கு அந்தப் படம் சரிவராது’ எனச் சொன்னபிறகுதான், கௌரவம் படத்துக்கு எம்.எஸ்.வி. இசையமைத்தார். இதேபோலத்தான்... உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க இரண்டு பாடல்களும் பதிவாகிவிட்டன. எம்.ஜி.ஆரை அந்தப் பாடல்கள் ஈர்க்கவில்லை. குன்னக்குடி வைத்தியநாதனை அழைத்து, ‘நான் எடுக்கவிருக்கும் ஒரு சரித்திரப் படத்தில் உங்களுக்கு நான் வாய்ப்புத் தர்றேன். இந்தப் படத்துக்கு எம்.எஸ்.வி., இசையமைச்சா பொருத்தமா இருக்கும்’ எனச் சொல்லி ஒப்புதல் வாங்கிவிட்டார். குன்னக்குடி வைத்தியநாதனும் சம்மதித்துவிட்டார். ஆனால், வழக்கம்போல எம்.எஸ்.வி., ‘குன்னக்குடி அவர்கள் இசையமைத்த படத்துக்கு நான் எப்படி இசையமைப்பது முறை இல்லை...’ எனச் சொல்லி மறுக்க, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே நேரில் வந்து சொன்னப் பிறகுதான் எம்.எஸ்.வி. ஒப்புக்கொண்டு இசையமைத்துத் தந்தார். இதுதான் தமிழ்த் திரையிசை வரலாறு. வாய்ப்பு கிடைக்கிறதே என வந்ததையெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் அதிலும் பண்பாடு காத்து பாடல் போட்டவர் எம்.எஸ்.வி. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையில் மயங்கிப்போய் எம்.ஜி.ஆர்., 50000 ரூபாய் சம்பளம் தந்தார். அதுவரை எம்.எஸ்.வி. இசையமைக்க வாங்கியத் தொகை 25ஆயிரம்தான்.

ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘இதயக்கனி’ படத்துக்காக எம்.எஸ்.வி. இசையில் ஒரு மெட்டுக்கு பாடலும் எழுதிவிட்டேன். இடைவேளையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தட்டைக் கீழே வைத்துவிட்டு, ஒரு மெட்டை பாடிக்காட்டி, ‘வாத்தியார் அய்யா இந்த மெட்டுக்கு ஒரு பாட்டு கொடுங்க... அந்தப் பாட்டு வேண்டாம்...’ என்றார். நானும் அப்போதே எழுதிக்கொடுத்தேன். அந்தப் பாடல்தான் இன்பமே உந்தன் பேர் பெண்மை... அப்போது பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமான காதல் பாடல் இது. ஆனால் பிறந்தது என்னவோ ஒரு சாப்பாட்டு இடைவேளையில். அதே படத்துக்காக ‘நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...’ பாடலுக்கு முன்புவரும் தொகையறாவில், ‘காவிரியையும் எம்.ஜி.ஆரையும் இணைத்துப் பாடல் எழுத முடியுமா?’ என ஆர்.எம்.வி கேட்டார். ‘ஏன் முடியாது?’ எனச் சவாலாக எடுத்துக்கொண்டு எழுதிய
தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி
&தொகையறாவை உடனே மெட்டமைத்துப் பாடிக்காட்டி அசத்தியவர் எம்.எஸ்.வி.

பாடல்களில் நல்ல வரிகள் எழுதிவிட்டால் காலைப் பிடித்துப் பாராட்டுவார் எம்.எஸ்.வி. ‘வரம்’ படத்தில் ஒரு பாடலில் ‘அட்சயப்பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா’ என ஒரு வரி எழுதிவிட்டேன். அதை இசையமைக்கும்போது படித்துவிட்டு நெகிழ்ந்துபோய் என் காலைத் தொட்டுப் பாராட்டினார். ‘இப்படி நீங்கள் செஞ்சா நான் இனி பாட்டு எழுத மாட்டேன்’ எனக் கடிந்துகொண்டேன். அதற்கு அவர், ‘வாத்தியார் அய்யா.. இவ்வளவு நல்ல வரிக்கு இந்த மரியாதைகூட பண்ணலைன்னா அப்புறம் நான் இசையமைச்சு என்ன பிரயோஜம்’ என்றார். ஒரு பாடலுக்கு நன்கு இசையமைத்துவிட்டால், அதுக்கான கிரெடிட்டை ‘வாத்தியார் அய்யா உங்களுக்கு 75 சதவிகிதம்; எனக்கு 25 சதவிகிதம்’ எனப் பிரிப்பார். அவ்வளவு குழந்தை மனதுக்காரர். ஆனால், அவர் பாட்டு போட்ட அளவுக்கு துட்டு வாங்கியது கிடையாது. பத்தாயிரம் கொடுத்தாலும் அதே உழைப்பு, 25 ஆயிரம் கொடுத்தாலும் அதே உழைப்பு, அதே இசைதான்.
டி.எம்.எஸ்& போல பிரமாதமான பாடகர் கிடையாது. ஆனால், அவருக்கு அவ்வளவு சுலபத்தில் பாடல் ட்யூன் பிக்கப் ஆகாது. அப்போதெல்லாம் அவர் ட்யூனைக் கற்றுக்கொள்ளும் வரை விடமாட்டார் எம்.எஸ்.வி. திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுப்பார். எம்.எஸ்.வி போட்ட மெட்டில் 70 சதவிகிதம் மட்டுமே பாடகர்கள் பாடுவார்கள். அவர் மெட்டில் வைத்திருக்கும் முழு சங்கதிகளோடு எவரும் பாடியது கிடையாது. ஆனாலும் அவர்கள் பாடி முடித்ததும் உச்சி முகர்ந்து பாராட்டுவார்.

கௌரவம் படத்தில் ‘பாலூற்றி வளர்த்த கிளி’ பாடலை முதலில் பாடியது எம்.எஸ்.வி&தான். படத்தில் பின்னணியில் ஒலிக்கும் பாடலாக வரும் என்றுதான் முதலில் எடுத்தார்கள். அப்படியே எம்.எஸ்.வி&யும் பாடிமுடித்துவிட்டார். பாடலை கேட்ட சிவாஜி ‘இதற்கு நான் வாயசத்து நடித்துவிடுகிறேன்’ எனச் சொல்லி நடித்தும்விட்டார். ரீ ரிக்கார்டிங்கில்தான் எம்.எஸ்.வி&க்கு இந்த விஷ்யம் தெரியவந்தது. ‘சிவாஜிக்கு என் குரலா? இல்லை இல்லை டி.எம்.எஸ்ஸைக் கூப்பிடுங்கள்’ என்றார். நான் ‘உங்கள் குரல் சிவாஜிக்கும் சூழலுக்கும் பொருத்தமாதானே இருக்கு...’ என வற்புறுத்தினேன். உடனே எம்.எஸ்.வி. அவர்கள் ‘இல்ல வாத்தியார் அய்யா... சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாடினால்தான் பொருத்தமா இருக்கும்’  என தனக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றவருக்கு விட்டுத்தந்த மாமேதை எம்.எஸ்.வி.

பாட்டுக்கு மெட்டு போட்டு விட்டு நேரம் கிடைத்தால் ‘வாத்தியார் அய்யா வாங்க சீட்டு போடுவோம்’ என்பார். எம்.எஸ்.வி., இயக்குநர் ஆர்.சி.சக்தி, நான்... மூவரும் இணைந்தால் அங்கே சீட்டாட்டம் நிச்சயம் இருக்கும். எம்.எஸ்.வி&க்கு சீட்டாடுவதிலே அவ்வளவு பிரியம். ஆனால், அவரைப் போல தோற்பவர்களைப் பார்க்க முடியாது. ஏனென்றால் அவருக்கு சீட்டு விளையாடவே தெரியாது. சமயத்தில் ஜோக்கரையே கீழே இறக்கிவிடுவார். ‘அய்யோ... இது ஜோக்கர் எடுத்து உள்ள வைங்க’ என்று சொன்னால் அப்பாவிப் போல முகத்தை வைத்துக்கொண்டு, நாக்கைத் துருத்திச் சிரிப்பார். அவ்வளவு அப்பாவி.

‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ‘கொள்ளையடித்தவன் நீதான் & என் உள்ளத்தை, கொட்டி வைத்தவன் நீதான் & இன்பத்தை’ என்ற ஒரு பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி., 80 மெட்டுக்கள் போட்டார்; நான் 120 பல்லவிகள் எழுதினேன். அந்தப் படத்தின் உதவி இயக்குநராக இருந்த இடிச்சபுலி செல்வராஜ், இந்த விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் சொல்ல... ‘எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்ட எம்.ஜி.ஆர் உங்களை நான் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்’ என்றார். இல்லை தலைவரே இது ஒருவகையான பயிற்சி. இனி எந்தச் சூழலுக்கும் நான் பாட்டு எழுதிவிடுவேன்’ என்று சொல்லிச் சமாளித்தேன்.

அது அண்ணா அவர்கள் இறந்த சமயம். ‘மணிப்பயல்’ படத்தில் அண்ணாவுக்காக நான் எழுதிய ‘காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்.... கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்’ பாடலை அழுதுகொண்டே மெட்டமைத்துப் பாடியது எம்.எஸ்.வி&யின் ஈர மனதுக்கு எடுத்துக்காட்டு.

திரைப்படங்களுக்கு மட்டும் அல்ல. நாங்கள் இருவரும் இணைந்து... எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உருவாக்கிய அதிமுக பிரசாரப் பாடல்களும் தொண்டர்கள் மத்தியில் மிகவும் பிரமபலம். அதிமுக முதன்முறையாக தேர்தலில் நின்ற 1977&ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எம்.எஸ்.வி. இசையமைக்க நான் எழுதிய ‘வாசலெங்கும் ரெட்டையிலை கோலமிடுங்கள்... காஞ்சி மன்னவனின் காலடியில் மாலையிடுங்கள்...’ பாடல் ஒலிக்காத ஊரே கிடையாது. 1984&ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டு மணி நேரத்தில் 9 பாடல்களை இரண்டே நாட்களில் மெட்டமைத்து பதிவு செய்து அனுப்பிவைத்தவர் எம்.எஸ்.வி.
 தான் கண்ட கனவு ஒன்றை 30 வருடங்களுக்கு முன்பு சொன்னார் எம்.எஸ்.வி.... ‘வாத்தியார் அய்யா நேத்து ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவுல நான் செத்துப் போயிட்டேன். இறுதி ஊர்லவத்துல என்கூட பழகினவங்கள்ல யாரெல்லாம் வர்றாங்கனு மேல போத்திருந்த துணியை விளக்கிப் பார்த்தேன்... அப்புறம் முழிச்சுக்கிட்டேன். என்னங்க வாத்தியார் அய்யா இப்படி ஒரு கனவு’ என்றார். நான் ‘உங்களுக்கு ஆயுசு நூறு இப்போ உங்களுக்கு சாவு கிடையாது’ என்றேன். எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்திருக்கலாம். ஆனால், அவரது நாதம் காற்றை இன்றும் என்றும் உயிர்பித்துக்கொண்டிருக்கிறது. தமிழர் என்ற ஒரு இனம் இருக்கும்வரை அவர்களது சுக&துக்கங்கள் இருக்கிறவரைக்கு எம்.எஸ்.வி&யின் பாடல் ஒலிக்கும். அவை ஒலிக்கிற வரைக்கும் எம்.எஸ்.வி இருப்பார்! ஏனெனில் அவர் விஸ்வரூம் எடுத்த நாதம்!

சொற்றுணை வாழ்க்கை - கவிஞர் விக்ரமாதித்யன் (மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் புத்தகத்துக்காக...)

உன் பாசாங்குக்கும் பசப்புகளுக்கும் மயங்கியிருக்கும் நிலம்

எமக்கு வாய்த்தது நன்மைதான். 
நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து
அதனியல்பால் எல்லாம் கிட்டும். 
எழுதுகோல் முளைக்கும்.
கணினியும் கண்டடைவோம்.
மரித்திருக்கும் குலசாமிக்கு உயிர்ப்பு துளிர்விடும். 
சாங்கியமும் கொண்டாட்டமும் மீண்டும் நிறம்கொள்ளும். 
நிலத்தின் வண்டல்களால் செப்பமுறும் மூளை.
இருதயம் திடசித்தம் கொள்ளும். 
கனவுகள் கள்வெறியூட்டும். 
இறுகிக் கிடந்த இச்சைகளுக்கு றெக்கை அரும்பும். 
மூதாதையர் தேடிக் களைப்படைந்த புதையல்கள்
அகழாமல் மேல்வரும். 
நீளும் ஆயுள்ரேகைகளில் நம் சந்ததி வளப்பமுறும். 
எல்லாம் கிட்டும் எமக்கு
யாவற்றுக்கும் முன்
உன் பசப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலத்தை மீட்டாக வேண்டும்.

(‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’, பக்கம்: 31)

கவிஞனின் சமூகப் பொறுப்பே நல்லகவிதையை நல்கிவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இந்தக் கவிதையை; தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையொன்றே சொல்லலாம்; சமகால உணர்வுள்ள கவிஞனுக்கே இது சாத்தியமாகும்;

‘‘இடதுசாரிக் கொள்கைப்பற்றும் விவசாய வாழ்வும் பின்னணிகளாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்’’ இப்படி எழுதுவது இயல்பேயாகும்; கதிர்பாரதியிடத்தே உள்ள விசேஷ அம்சமே இதுதான். 

‘‘எமக்கு வாய்த்தது நன்னிலம்தான்’’ என சர்வ நிச்சயமாகத் தொடங்கும் கவிதை, ‘‘நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து / அதனியல்பால் எல்லாம் கிட்டும்’’ எனத் தொடர்கிறது; என்னென்ன கிடைக்கும் நிகழும் என்று வளர்கிறது; இறுதி மூன்று வரிகளில், இதற்காக யாது செய்யவேண்டுமென தீர்க்கமாக முடிவுசெய்கிறது; இதுதான் கவிதைச்செய்தி; கவிச்சீற்றம். நிலத்தை மீட்டபிறகுதான் எல்லாம். 

சுருக்கமாக, தெளிவாக அமைந்துள்ள கவிதை; உண்மையான முற்போக்குக் கவிதைக்கு உதாரணமாக விளங்குவது சரளமான கவிதை மொழிதான்; அரசியல் கவிதைதான் & பார்க்கப் போனார். 

துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பு
அவனிடம் நெடுநாட்களாக சிரிப்பு ஒன்று இருந்து வருகிறது. 
எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அதை உபயோகித்து என்னவெல்லாமோ செய்துவிடுகிறான். 
முதலில் ஒரு பொம்மைக்கு உயிர் கொடுத்தான்
அது கைவிடப்பட்ட வீடொன்றுக்கு விளக்கேற்றுவதாக அமைந்தது. 
பிறகு புறாவொன்றை கூண்டிலிருந்து திறந்துவிட்டு
அதன் உரிமையாளரோடு சமாதானம் செய்வித்தான்
அது சிறுமியின் சிராய்ப்புக்கு மருந்திடுவதற்கு ஒப்புமை கூறப்பட்டது. 
பூர்விகச் சொத்துக்காக ரத்தவெறிகொண்ட பங்காளிகளிடையே
மிதக்கும் இலவம்பஞ்சைப் போல நுழைந்த அவன் சிரிப்பு
வல்லூறுவிடமிருந்து கோழிக்குஞ்சை மீட்பதற்கு உவமையானது. 
வலி சுமந்து பாரமிழுக்கும் வண்டிமாட்டின் கழுத்தை 
ஆசுவாசப்படுத்தி அவன் சிரித்தது
கயவர்களால் வல்லாங்குக்குள்ளான காதலியைத் தோள் சாய்த்து
ஆறுதல் தரும் காதலனைப் போன்றிருந்தது. 
புகை வீட்டு மறிக்கும் தீவனக்கிளை உடைத்துப்போடுவதாக
மூர்ச்சையுற்ற கர்ப்பிணிக்கு விசிறிவிடுவதாக
அவ்வப்போது தோற்றம் கொள்ளும் அந்தச் சிரிப்பில்
திக்கற்ற அகதிக்கு தாய்நாட்டைத் தரும் கரிசனமும் 
வறிய யாசகனுக்கு விருந்துண்டு கிறங்கும் பாக்கியமும்
சுடர்ந்தபோது நான் அதற்கு ரசிகனாகி இருந்தேன். 
சமீபத்தில்,
இலவச வேட்டி சேலை நெரிசலில் இறந்தவனின்
மரணப் பந்தலில் இடிஇடியென அவன் சிரித்தது மட்டும்
துப்பாக்கிக்கு ரவை நிரப்பியதைப் போலானது. 
(பக்கம்: 52)

அவனிடம் நெடுநாள்களாக இருந்துவரும் சிரிப்பைப் பற்றிக் கூறி ஆரம்பமாகிறது கவிதை; அந்தச் சிரிப்பினால், அவன் ஆக்கபூர்வமாக எவ்வளவோ காரியங்களும் சாதிக்கிறான்தான்; அந்தச் சிரிப்புக்கு இவன் ரசிகனாகி இருந்ததும் கூறப்படுகிறது; சமீபத்தில் சிரித்ததுதான் கவிதையின் பாடுபொருளே. 

எதார்த்தத்தின்மீது கட்டப்பெற்ற புனைவு; புனைவின் வழிலேதான் இந்த விஷயத்தையே சொல்லமுடியும்; தீர்க்கமான சமூகப்பார்வைதான் விசேஷமே; இதுவும் அரசியல்கவிதைதான்; கதிர்பாரதி கட்டும் புனைவுகள் அனைத்துமே அழகானவையும் வசீகரமானவையும் ஆகும்; அவை பொருத்தமான இடங்களில் பொருந்தியிருக்கின்றன என்பதும் சுட்டப்பட வேண்டியதே; பெரும்பான்மைக் கவிதைகளும் புனைவின் வாயிலாகவே பேசப்பட்டுள்ளன என்பதும் கவனம்கொள்ள வேண்டியதே; இவருக்குப் புனைவுபடுத்துவது கைவந்த கலையாகவே கூடிவந்திருக்கிறது; ஒரு கவிஞனுக்கு இது பெரிய கொடுப்பினை; கூடவே ஒரு சந்தேகமும்; புனைவு, நிறையப் பயன்படுத்தப்பட்டு விட்டதனால், காலாவதியாகிவிடக் கூடுமே என்றும்; கதிர், சுதாரித்துக் கொள்வாராக. 

கோழிக்காலக் குறிப்புகள்
கோழியைக் கண்டால் எச்சரிக்கையோடு கூடிய
ஆசூயையும் தொற்றிக் கொண்டபோது
இறைக்காக அது மலம் கொத்திக் கொண்டிருந்தது
எனச் சொன்னால் நீங்கள் வாழ தகுதியவற்றவர். 
குப்பைகள் கிளறி, குட்டிச்சுவர்மீது அலைந்து, 
புழுதி குடைந்தாடி, எச்சங்களை உண்டு... என
உங்கள் குற்றச்சாட்டுகளை ஆமோதிக்கிறேன் எனில்
நானும் அப்படித்தான். 
சாமிக்கென நேர்ந்துவிட்ட கோழியிடமிருந்து
அபயஹஸ்தம் கிட்டிவிட்டால் அப்பப்பா மோட்சம்தான். 
பெட்டையோடு சுற்றிவந்து கொண்டை நிமிர்த்தி
அது கொக்கரிப்பதைத் தரிசித்துவிட்டால்
ஜென்மாந்திர ஜென்மமும் சாபல்யமடைந்திடும்.
வராதுவந்த ஓரிரண்டு வரன்களும்
இரண்டொரு பவுனில் இடறிப்போக
கன்னி கழியாமலே காலம் கழியும்
கோமதி அக்காவின் பார்வைக் குவிமையத்தில்
விரட்டிவிரட்டி சேவலும் விரண்டு மிரண்டு பெட்டையும்
சேர்ந்து தொலைக்கிறதா
அவற்றுக்குப் பொல்லாங்கு செய்யாது
தெண்டனிட்டு சேவியுங்கள். 
கோழிகள் நாளையே ஆட்சிப்பீடமேறி
கோமதி அக்காவுக்கு இலவசத் திருமணத்திட்டத்தில்...
(பக்கம்: 15)

கதிர்பாரதிக்குக் கிண்டலும் கேலியும் வசமாக வந்து வாய்த்திருக்கின்றன; அதுவும் ஆக்கமாகவே; அதற்கு ஓர் உதாரணம்தான் இந்தக் கவிதை; இன்றைய அரசியல் சமூக நிலைமைகளைக் கண்கொண்டு காணும் கருத்துக் கொண்டு வாழும் சீரிய கவிஞன் அவற்றையெல்லாம் ஏளனம் செய்யாது / ஏகடியம் பண்ணாது எப்படி இருக்கமுடியும்; நாளைக்கு வரலாறு எழுத முற்படும்போது, இந்தத் தமிழ்க் கவிஞர்கள் என்னதான் செய்து கொண்டிருந்தார்களாம் என்ற கேள்வி வந்து விழுந்துவிடலாகாது இல்லையா; எங்கேயோ எப்படியோ கால்கொள்ளும் கவிதை இலக்கை நோக்கி வந்துவிடும் விதம் செம்மையானதுதான்; இப்படியெல்லாம் சுவாரஸ்யமாகக் கவிதை சொல்ல முடியும் போல என்றே எண்ண வைத்துவிடுகிறார்கள் இளந்தலைமுறைக் கவிஞர்கள். 

இன்னொரு முக்கியமான செய்தியும் உண்டு. 

இங்கே பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிற இந்த மூன்று கவிதைகளுமே சமகாலத் தமிழ்ச் சமூக இருப்புநிலையை எடுத்துப் பேசுபவை என்பதே இவற்றின் பெறுமதி; தமிழ்நிலம் குரித்த ஓர்மையும் உணர்வும் கொண்ட கவிஞனாகவே கதிர்பாரதி திகழகிறார் என்பதுதான் அவருக்குப் பெருமை சேர்ப்பதுமாகும்; மண்ணையும் மக்களையும் மனசில் நிறுத்தியிருக்கும் கவிஞன், மகாகவியாக மாற நீண்டகாலம் பிடிக்காது; தன் திசைவழியைத் தெரிவு செய்துகொள்ள வேண்டியதுதான் நல்ல காரியமாக இருக்கும். 

மதுக்கூடங்களோடு புழுங்குதல்
சமூகநலக் கூடங்களுக்குள் நுழைதல் போல
அத்துணை லகுவானதல்ல மதுக்கூடத்துள் நுழைவது. 
கதவைத் திறந்துகொண்டு நுழையும்போது 
அங்கு நுரைபூத்துத் ததும்பிக் கொண்டிருக்கும் சொற்களின்மீது
இடித்துக் கொள்ளாமல் நுழைதல் வேண்டும். 
உங்கள் இருக்கையை அணுகும்போது கரிசனம் முக்கியம்.
உங்களுக்கு முன் பின் அமர்ந்ததும் அமரப்போவதும்
அதி உன்னத அனுபவமல்லவே. 
மதுசிப்பந்திகளிடம் புன்னகையைக் கொடுத்துவிட்டு 
மதுவைப் பெற்றுக்கொள்ளுதலே சிறந்த தொடக்கம். 
உயிர்த் திரவமெனப் பூரிக்கும் மதுவில்
ஐஸ்கட்டிகளோடு உங்களையும் முக்கிவிடுங்கள்.
ஒவ்வொர் இருக்கையிலும் வெவ்வேறுலகம் சுழலும்
எதனோடு ஒட்டாது உரசாது
நீங்களும் சுழலவிடுங்கள் உங்கள் உலகை. 
போதையின் பெருங்காதலோடு உலகங்களை அவதானிப்பது
அடடா... எவ்வாறு ஆனந்தம்; எவ்வளவு பேரானந்தம். 
மூன்றாவது, நான்காவது... சுற்றுகளுக்குப் பிறகு
வாழ்க்கை குமட்டலெடுக்கத் தொடங்கும். 
அப்போது மனதுக்குள் மதுக்கூடத்தைத் தெண்டனிட்டு விட்டு
வெளியேறிவிடுதலே புத்திசாலித்தனம்.
இல்லையேல்... இன்றும் ஒரேயொரு மிடறுக்குப் பிறகு
ஈசானமூலையில் முகம் இருள அமர்ந்திருப்பவனின்
தனிப்பெரும் விசும்பலில்
மதுக்கூடமே திரும்பத் தொடங்கிவிடும். 
(பக்கம்: 65)

நகுலன்முதல் அப்பாஸ், வித்யாஷங்கர், மலைச்சாமி, முத்துமகரந்தன், குவளைக்கண்ணன், ரமேஷ் (பிரேம்), யூமா வாசுகி, லக்ஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம், சி.மோகன், லிபி ஆரண்யா, வே.பாபுவரை நவீன கவிஞர்கள் பலரும் மதுசார்ந்த கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்; ஒரு தொகை நூலே கொண்டுவரலாம், தனியே; உள்ளபடியேயும், அவையெல்லாம் குடிபற்றிய கவிதைகள் அல்ல; ஒவ்வொருவர் கவிதையும் ஒவ்வொரு வகை; சொல்லியிருப்பதும் வேறுவேரு விதம்; எல்லாமே இந்த வாழ்வுகதி பற்றியவைதாம்; திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஒயின்ஷாப்களும் கிடாமார்க் கடைகளும் திறந்துவிடப்பட்டு, தமிழினத்தையே ‘குடிமக்களாக்கிய பிற்பாடு மதுவைப் பற்றிக் கவிஞன் எழுதாமல் இருக்கமுடியாதுதான்; தமிழ்வாழ்வின் ஓர் அம்சமாகவே ஆகிவிட்ட ஒன்றை எப்படித் தள்ளி வைக்க முடியும். 

இங்கே, கதிர்பாரதி, சொல்லும் விஷயம் தனியானது; சொல்முறை, சிலாகிப்புக்குரியது; எதார்த்தமும் புனைவும் விரவப் பேசப்படுவது; இறுதி நான்கடிகளில் வெளிப்படும் செய்தி, மனிதார்த்த அடிப்படையாக விளங்குவது; துயருக்குப் பிரிவு காட்டுவது; இதுதான் இன்றியமையாதது. 

ஆமாம் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்

நான்கைந்து தடவைகளுக்கு அதிகமாகவே
உதிர்ந்து ஒழுகிவிட்ட உங்கள் மனைவியின் கர்ப்பத்தால்
கலைந்துபோகின்றன உங்கள் உள்மன அடுக்குகள். 
அதற்குள், முற்காலத்துக்கும் முற்காலத்தில்
பறவைக்கூடுகளில் ஊடுருவித் திளைத்த சாரையாக
நீங்களிருந்த குற்றவுணர்வு வாலாட்டுகிறது. 
அதைக் கொல்ல நினைத்துதன் இப்போது
சாராயத்தால் மிடறுமிடறாக எரிந்துகொள்கிறேன் என்கிறீர்கள். 
சொல்லும்போதே, ஒரு தண்ணீர்க்காலத்தில்
நவாமரக் குரங்குக்கு நட்டாற்றில் துரோகமிழைத்த
முதலை நானென்று
கல்லீரல் அறைந்தறைந்து கலங்குகிறீர்கள். 
விபத்தில் நசுங்கிய உங்கள் பருவமகளின் துடிதுடிப்பு
செந்நாய்ப்பிறவியில் உங்களால் கிழிக்கப்பட்ட
கலைமான் குட்டியினுடையது என்று
சம்பந்தாசம்பந்தமில்லாமல் வேறு அரற்றுகிறீர்கள். 
ஒரு தேசத்துக்கு ராஜகுமாரனாக இருந்ததும்
தற்போது வாடகைக் குடித்தனத்தில் அவிவதும்
இப்படித்தானென ஆங்காரம் கொள்கிறபோது
உங்கள் போதை உச்சிக்கு வந்திருக்கிறது. 
என்ன வாழ்க்கையடா இதென்று
உயிரைக் கழற்றி எறிவதற்காக
தொப்பித்தூக்கிப் பாறையின் குணநலன்கொண்ட
காலத்தின் இரக்கமற்ற பள்ளத்தாக்கு முனைக்கு
ஒருமுறை சென்றுவிட்டதாகவும்... பிறகு, 
அந்த எண்ணத்தை மட்டும் கழற்றி எறிந்ததாகவும்
அது திரும்பி வந்து துரத்திக் கொண்டிருப்பதாகவும்
அதனால் ஓடிக்கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டு
ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். 
ஆமாம்
ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். 
(பக்கம்: 66)

முதல் ஆறடிகளில் உள்ளது ஒரு செய்தி; நடந்தவை ஏற்படுத்திய குற்றவுணர்வு; அடுத்தடுத்து, நிகழ்கால ஸ்திதி; கவிதை சொல்வதென்ன; கடந்தகாலத்தில் செய்தனவற்றிற்காக இப்பொழுது மறுகிமறுகி வாடுவதையா; போதையில், உளம் கொளும் கோலங்களையா; இரண்டும்தான்; வினையிலிருந்து வந்த வினையும்தான்; தன் நெஞ்சே தன்னைச் சுடுகிறதோ; ‘‘குற்றம் புரிந்தவன், வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது’’ என்பதா; ‘‘நடந்ததை நினைத்து வருத்தப்பட்டால் அவன் மூடன்’’ என்பதா; கவிதை, ஒரு சித்திரமாய் விரிகிறது, நவீன ஓவியம்; அதில் வாசகன் காண்பதே பொருள்; உரைகாரன் சொல்வதல்ல. 

வேடிக்கைக் கவிதைகள், காதல் மற்றும் காமம்சார் கவிதைகள், பிள்ளைகள் பற்றிய கவிதைகள் என்றெல்லாம் கலந்து கட்டிய தொகுப்பு & மதுரைக் கதம்பம் மாதிரி; கட்டுரையில் எடுத்தாண்டிருப்பன், மானாமதுரை மரிக்கொழுந்துபோல; வாசிப்பு ஆனந்தம் தரும் கவிதைகள் தாம் அனைத்துமே; கவிதை வாசகர்கள் படித்துப் பார்க்க வேண்டும். 

விமர்சனமாகச் சில வார்த்தைகள். 

அநேகம் கவிதைகளும் முன்னிலையை விளித்துப் பேசுவன; 
இந்தக் கூறலை அதிகம் பயன்படுத்தக் கூடாது; சிரிப்புத் தரும்;
பலவிதமான சொல்முறையும் பயின்றுவரவேண்டும்; 
இப்படித்தான் சொல்வான் இவன் என்று யாரும்
யூகிக்க இடம்தராமல் இருப்பதே உத்தமம்; 
அர்ஜூனனின் கணைகள், பெரும் இலக்குக் கொண்டவை என்பதைநவீன கவிஞர்கள் நினைவிலிருத்திக் கொண்டால் உலகத்தரத்துக்குத் தமிழ்க்கவிதை உயர்ந்துவிடும். 

‘கோழிக்காலக்குறீப்புகள்’ கவிதையில் இரு பிழைகள்; ஐந்தாவது வரி, ‘‘குப்பைகள் கிளறி, குட்டிச்சுவர்மீது அலைந்து’’ என்பதில் ‘குப்பைகள்’ எனப் பன்மை வேண்டியதில்லை & ‘குப்பை’ போதும்; ‘‘குப்பையைக் கிளறிவிடும் கோழியே / கொண்டிருக்கும் அன்பிலே இரண்டுமுண்டு என்பதை / கண்டதுமில்லையோ வாழ்விலே’’ என்றுதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருப்பார்; பதினான்காவது வரி, ‘‘வராது வந்த ஓரிரண்டு வரன்களும்’’ என்பதில், ‘வரன்’ என்பது பார்ப்பன வழக்கு இல்லையோ; எங்கள் பக்கத்தில், பார்ப்பரை நல்லாதோர், ‘வரன்’ என்று பேசிக் கேட்டதில்லை; ‘பொண்ணுவீடு’ ‘மாப்பிள்ளை வீடு’ என்பார்கள்; தஞ்சை ஜில்லா வழக்கு என்ன. 

மிகமிக முக்கியமான பொறுப்பு, ஒவ்வொரு நவீனகவிஞனுக்கும்; தங்கள் கவிதைத் தொகுப்புக்குத் தாங்களே மெய்ப்புப் பார்ப்பது; அச்சுப்பிழைகளும் ஒற்றுப்பிழைகளும்மரிந்த கவிதைத் தொகுப்புகள், வாசிப்புக்குப் பெரிய இடைஞ்சலை விளைவிக்கின்றன; உ.வே.சா.காலத்திலேயே செம்மையான பதிப்புக் கண்ட தமிழன், நகரத்தார் பதிப்பித்த ‘சிலம்பு’ காலத்திலேயே பிழைகளின் நூல் வெளியிட்ட இந்த இனம் இன்று ஏன் இப்படிக் கொடுமை செய்கிறது; கவிஞன்தான் சிரத்தை கொண்டிருக்க வேண்டும்; பதிப்பாளர் பொறுப்பில் விட்டுவிட்டு இருந்துவிட முடியாது. 

கட்டுரை நீண்டுவிட்டது; பத்திரிகை ஆசிரியரைப் படுத்தக்கூடாது; வாசகனை கஷ்டப்படுத்தக் கூடாது; நிறுத்திவிட வேண்டியதுதான். 
- விக்ரமாதித்யன் நம்பி

நூல்: மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்
ஆசிரியர்: கதிர்பாரதி
முதற்பதிப்பு: டிசம்பர் 2012, இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2013
வெளியீடு: புது எழுத்து
எண்: 2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டணம்- 635 112, 
கிருஷ்ணகிரி மாவட்டம்
விலை: ரூபாய் எழுபது