20 September, 2024

கவிதை ~ சிரிப்பை அரிக்கும் கறையான் ~ கதிர்பாரதி

ஓர் இனிய ஆச்சர்யம் தெரியுமா?
கறையான்கள் ஒன்றும் பூச்சியினமல்ல.
அதுவொரு மிக சாதுவான சமூக விலங்கு.
ஆயினும்
விஷ நாகங்கள் வசிக்கும்படி
வலிய புற்றைக் கட்டியெழுப்புகின்றன.

கறையான்கள் சமூக விலங்கு என்பதால்
கூடிவாழுகின்றன. எனவே
குழிபறிப்பதும் இவற்றின் முக்கியப் பணியாகிறது.

தீனியாகும் எதன்மீதும் வாய்வைக்க
கறையான் தயங்குவதில்லை.
நாளுக்குநாள் உடல் நரங்கிய அம்மாவுக்குள்
புற்றுவொன்று வளர்ந்தபோதுதான்
அப்பாவின் சிரிப்பைக் கறையான் அரித்தது.
அவரும் செதில்செதிலாக உதிர்ந்தார்.

ராணிக் கறையானைப் பணியும் ஆண் கறையானுக்கே
கலவிகொள்ளும் வாய்ப்புண்டு.
கண்மண் தெரியாத கலவியில் கண்ணொளி இழக்கும்
ஆணுண்டு கறையானிலும்.

கறையான் ஒரு வேட்டையாடி.
புற்றை ஆக்கிரமித்த பாம்பின் ஞாபத்தை
வேட்டையாடிய கறையானை எனக்குத் தெரியும்.
அன்று முதல் பாதையை மறந்துவிட்டு
பிடாரன் கூடைக்குள் வசிக்கிறது
பாம்பு.

`
வெள்ளை எறும்பு` என்பது
கறையானின் மற்றொரு பண்புப் பெயர்.
கறையான் ஊர காலம் தேய்வதும் அதனாலே.

உண்மை என்னவென்றால்,
கறையான் ஒரு குளிர் ரத்தப் பிராணி.
றெக்கை முளைத்ததும்
தன்னை ஒரு வல்லூறென நினைத்துக்கொள்கிறது.
பறந்து பறந்து சாகிறது.

விமர்சனம் / கணப்பிறை / கட்டுரைகள் / ந.பெரியசாமி - கதிர்பாரதி

வந்து சேர்ந்த மறுநாள் வாசித்துவிட்டேன் பெருசு Periyasamy Periyasamynatarajan. சக படைப்பாளிகளை எவ்வளவு பொறுப்போடு கவனப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள் என வியப்போடும் படித்துக்கொண்டே வந்தேன். பெரும்பாலும் கவிதைத் தொகுப்புக்கான எதிர்வினைகள். "நானொன்றும் படிக்காமல் இல்லை. இவையெல்லாம் என்னைச் சீண்டின அல்லது என்னால் சீண்டிப்பார்க்கப் பார்க்கப்பட்டவை" என அறிவிக்கும்படியான கட்டுரைகள். ஒரு கவிஞன் சக கவிஞன் குறித்து என்னவாக இருக்கிறான் என்பதற்கான திறப்புக் குறிப்புகள் இந்தக் கட்டுரைகள் என என் முதற்பார்வையாகச் சொல்லலாம். புத்தகம் வாசித்துவிட்டு அவை குறித்த நீண்ட இறுகிய மவ்னம் கெட்டித்திருக்கும் சூழலில், சுவர் குடைந்து ஜன்னல் திறந்தாற்போல் உள்ளது உங்கள் வாசிப்பு பெருசு.

இதைத்தான் மிசேல் பூக்கோ சொல்கிறான்... "காலத்தின் நீண்டநாள் சுவரில் ஒரு ஜன்னலைத் திறப்பதே என் வேலை". உங்கள் ஜன்னல் வழியாக ஓர் அதிகாலைப் பிறையைப் பார்த்துவிட்டேன் நண்பா.



விமர்சனம் ~ கவிஞர் சாய் மீரா ~ கவிஞர் கதிர்பாரதி அவர்களின் மெசியாவுக்கு_மூன்று_மச்சங்கள் கவிதைத்_தொகுப்பு ~

 இந்த வாரத்திற்கான கவிதை #நாளின்_பொம்மை

காற்று அடித்துக்கொணர்ந்த கிழிந்த நாட்காட்டித் தாள் போல
கறுத்துத் திரண்ட பாறைமீது மோதிச் சரிகிற அலை போல
எனக்குச் சம்பவித்திருக்கிற இந்நாளுக்கு
நேற்றைய இயலாமையின் கழிவிரக்கமும்
எதிர்க்கால அச்சமும் முகமாயிருந்தன.
வலது பாரிசத்தில் கிடத்தி ஆசுவாசப்படுத்தினேன் அந்நாளை.
நோயுற்ற குழந்தையின் கடைவாயில் மருந்து புகட்டும் சங்கின் வடிவில்
சொற்களை வடித்துக்கொண்டு பருக்கினேன் துளி தைரியத்தை.
வாலைக் குமரிகளின் யவ்வனம் கொப்பளிக்கும்
கூடுமிடங்களுக்குக் கூட்டிப்போய் கிளர்ச்சியூட்ட யத்தனித்தேன்.
புராதனமிகு கோயிலுக்குள் நடத்திச்சென்றபோது
அங்கிருந்து விடுபட மறுத்து எதெதையோ இட்டுக்கொண்டு
உதம்பியபடியிருந்த நாளின் மனம்,
மார்கழியின் கூதல்காற்று தீண்டிய சதைத் துண்டங்களாய்
நடுக்கமுறுவதை அவதானிக்க முடிந்தது.
துக்கத்தின்பால் தோய்ந்துகிடக்கும் துஷ்டிவீட்டைப் போல
இருளத் தொடங்கிய அந்நாளை,
கபிலன் யூ.கே.ஜி.யிடம் ஒப்படைத்துவிட்டு உறங்கிப்போனேன்.
அதிகாலை உறக்கம் விழிக்கையில்
நாளிலிருந்து என் சாயலில் ஒரு பொம்மையை உருவாக்கிவிட்டு
புன்னகையை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான்.
மிக அழகாக ஒருநாளைப் பற்றிய தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர்.‌ ஒருநாளின் துவக்கத்தை இப்படியொரு கோணத்திலும் யோசிக்க முடியமா என என்னை ஒரு நொடி நினைக்க வைத்து விட்டார் தனது முதல் வரிகளிலேயே.
"காற்று அடித்துக்கொணர்ந்த கிழிந்த நாட்காட்டித் தாள் போல
கறுத்துத் திரண்ட பாறைமீது மோதிச் சரிகிற அலை போல
எனக்குச் சம்பவித்திருக்கிற இந்நாளுக்கு
நேற்றைய இயலாமையின் கழிவிரக்கமும்
எதிர்க்கால அச்சமும் முகமாயிருந்தன."
முடிந்து விட்ட ஒருநாளிற்குப் பின் நாட்காட்டியின் தேதி நிரம்பிய தாள் வெற்றுத்தாளாக மாற்றமடைந்து விடுகிறது. அதுபோலத்தான் கடந்து போன ஒருநாளினை கருதுகிறார் கவிஞர். மேலும் அன்றைய நாளின் பிணக்குகளை கறுத்துத் திரண்ட பாறையாகவும் தன்னை ஓயாது முயன்று எழுந்து வீறுகொண்டு போராடி விழும் கடல் அலையாகவும் உருவங் கொடுத்தபின் வெளிப்படையாய் கூறுகிறார்... நேற்றைய இயலாமை எதிர்கால அச்சம் நிறைந்த தனது அன்றைய நாளை.
"வலது பாரிசத்தில் கிடத்தி ஆசுவாசப்படுத்தினேன் அந்நாளை.
நோயுற்ற குழந்தையின் கடைவாயில் மருந்து புகட்டும் சங்கின் வடிவில்
சொற்களை வடித்துக்கொண்டு பருக்கினேன் துளி தைரியத்தை."
இவ்விடத்தில் கவிஞர் ஒரு தாயாக மாறி ஒருநாளினை ஆசுவாசப்படுத்த தனது வலப்பக்க மடியில் கிடத்தி விட்டுப் பின் தானே அந்நாளையில் அழுது தவித்த நோயுற்ற குழந்தையாகவும் மாறி மருந்தாக துளி தைரியத்தை தனக்குத் தானே தாயாகிப் புகட்டுவதாக எழுதியிருப்பது நிதர்சனமான ஒரு மனிதனின் செயற்பாட்டை கவிமொழியில் அவர் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பதன் முழுச் சான்று.
தலைக் கோதி நிலையறிந்து நிம்மதிக்கு தன் மடி தந்து நோயுற்ற போது வாஞ்சையாய் மொழி தருவதெல்லாம் எல்லோர்க்கும் வாய்க்காத வாழ்வே. அதை ஏக்கமாக நினைக்காது தன்னம்பிக்கையோடு தன் கைகளே தனக்குதவி என தைரிய மருந்தை வாசகர்களுக்கும் புகட்டுகிறார்.
"வாலைக் குமரிகளின் யவ்வனம் கொப்பளிக்கும்
கூடுமிடங்களுக்குக் கூட்டிப்போய் கிளர்ச்சியூட்ட யத்தனித்தேன்.
புராதனமிகு கோயிலுக்குள் நடத்திச்சென்றபோது
அங்கிருந்து விடுபட மறுத்து எதெதையோ இட்டுக்கொண்டு
உதம்பியபடியிருந்த நாளின் மனம்"
குழந்தைமைக்கு தைரிய மருந்து கொடுத்து வளர்த்தபின் வாலிப வயதான ஒருவராக தன் மரத்தையே பாவித்துக் கொண்டு அந்த மனத்தை ஆற்றுப்படுத்த குமரிகளின் குழைவுப் பருவத்தைக் காட்ட முற்பட, மனம் அதை ஒதுக்கி கோவில்களை அதுவும் புராதானமிகு கோயில்களுக்குள் போகிறது. ஆனாலும் எதையெதையோ நினைவுக் கூர்ந்தபடி தனித்து அலைகிறதாம் அந்நாளின் மனம். அதனை "உதப்பியபடி" என்ற பதத்தின் மூலம் மிக அற்புதமாகவும் தெளிவாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படியான மனமானது நிகழ்வுகளின் நினைவுகளில் சிக்கி நடுக்கமுறுவதை கவிஞர் இப்படியாக எழுதியுள்ளார்.
"மார்கழியின் கூதல்காற்று தீண்டிய சதைத் துண்டங்களாய்
நடுக்கமுறுவதை அவதானிக்க முடிந்தது."
மிகக் கூர்மையான வார்த்தைகள் இவை.
"துக்கத்தின்பால் தோய்ந்துகிடக்கும் துஷ்டிவீட்டைப் போல
இருளத் தொடங்கிய அந்நாளை,
கபிலன் யூ.கே.ஜி.யிடம் ஒப்படைத்துவிட்டு உறங்கிப்போனேன்."
ஒரு கசப்பான நாளோடு போராடிய மனமானது அதே கலக்கத்தோடு உறங்கிப் போதலைவிட உயிர் குடிக்கிற மெது விஷம் (Slow Poison) வேறேதுமில்லை. அதன் பொருட்டு கவிஞர் தன் துக்கம் தோய்ந்து கிடக்கிற துஷ்டியின் வீட்டிற்கு ஒப்பான தன் மனத்தை இலகுவாக்க ஒரு சிறுவனிடம் ஒப்புவித்து விட்டு உறங்கச் செல்கிறார்.
ஆக இருளடைந்த ஒரு மனம் வாலைக்குமரிகளிடம் வாஞ்சையுறவில்லை, தெய்வத்திடம் ஒன்றிடவில்லை. மேலும் மேலும் உதப்பிய துக்கத்தின் ஆவேசங் குறைக்க ஐந்து வயது சிறுவனிடத்தில் சரணடைகிறது‌. இதன் நிதர்சனம் எத்தனை புனிதமானது. என்னளவில் இச்சூழலை அப்படியே என்னால் உள்வாங்கி உணரமுடிகிறது. சில நொடி நானும் கபிலன் யூகேஜியின் முகத்தினை மனத்துள் காண்கிறேன்.
"அதிகாலை உறக்கம் விழிக்கையில்
நாளிலிருந்து என் சாயலில் ஒரு பொம்மையை உருவாக்கிவிட்டு
புன்னகையை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான்."
கபிலனிடம் சரணடைந்த மனம் நிம்மதியாக உறங்கியது என்பது அதிகாலையிலேயே விழித்ததில் தெளிவாகிறது. கலங்கிய மனம் நுணுங்கிச் சிதறுகிற நள்ளிரவின்பின் அதிகாலை உறக்கங் கலைவுற வழியேது?.
நிம்மதியாக உறங்கி அதிகாலை விழித்த கவிஞர், கபிலனின் கைகளின் தன் நாளின் சாயலில் ஒரு பொம்மையை காண்கிறார். இவ்விடத்தில் நான் இருவிதமாக அந்த பொம்மையை பார்க்கிறேன்.
ஒன்று குழந்தைகளுக்கு பிரியப்பட்ட பொம்மைகள்தான் முதலில் சிதைவுறுகின்றன. ஆக என்னை முன்னிறுத்தி பொம்மையை பார்க்கும் பொழுது சிதைவுற்ற என் கழிந்த நாளின் சாயலில் சிறுவனால் விளையாடி சிதைவுற்ற பொம்மையை அணைத்தபடி அவன் உறங்கிப் போயிருக்கிறான் என்பதாகவும், அதே மற்றொரு பார்வையில் இன்றைய நாளின் துவக்கத்திற்கான தெளிவான அழகான ஒரு பொம்மையை அணைத்தபடி அவன் உறங்குகிறான் என்பதாகவும் பார்க்கிறேன்.
அற்புதமான சொற்களால் நுணுக்கமாக ஒரு அணிகலனை செதுக்குவது போல் உணர்வுகளை பொருத்தமான சொற்களால் செதுக்கி எனது மனதிலும் நீங்காமல் கபிலனை இருத்தி விட்டார் கவிஞர்.
பேரன்பும் பிரியங்களும் வாழ்த்துக்களும் கவிஞர் கதிர்பாரதி அவர்களுக்கு... அற்புதமானதொரு படைப்பினை வழங்கியமைக்காக.

கவிதை ~ அம்மாவின் விளையாட்டு ~ கதிர்பாரதி

அம்மா வாழ்க்கையே ஓர் ஒளியாங்கண்டு விளையாட்டுத்தான்.

கண்களைப் பொத்தி
துவரங்காட்டிலும் கடலைக் கொல்லையிலும்
அவளது பால்யத்தை தாத்தா ஒளித்துவைத்தார்.
பிறகு மாறி மாறி குடும்பமே அவள் கண்களைப் பொத்தி விளையாடியது. அப்படியொரு கண்கட்டி விளையாட்டில்தான் அம்மாவுக்குத் தவறுதலாய்க் கிடைத்தார் அப்பா.
அதன் பிறகு அவள் கண்பொத்தும் ஏகபோக உரிமை முழுக்க அப்பாவுக்குக் கைமாறியது.
அவர் பொத்திப் பொத்தி ஒளித்ததில் அக்காவை தம்பியை என்னை கண்டுபிடித்து பூமிக்குக் கொண்டுவருவதற்குள் முழிகள் பிதுங்கிவிட்டன அம்மாவுக்கு.
அப்புறம்
தன் கண்களுக்குத் தானே ஒளிந்துவிளையாடி எனக்கு அரசாங்க உத்தியோகத்தையும் தம்பிக்கு வெளிநாட்டு வேலையையும் அக்காவுக்குச் சீர்செனத்தி கல்யாணத்தையும் கண்டுபிடித்துக் கொடுத்தாள்.
அவளது 54வது வயது, சுவாசக் குழல்களைப் பொத்தி நுரையீரலுக்குள் இரு விசில்களை ஒளித்துவைத்தது. பனியீர இரவுகளில் எல்லாம் அவை இசைத்துக்கொண்டே இருக்கும் அம்மா பொத்திப் பொத்தி வாழ்ந்த வாழ்வை.
மருத்துவர் அதை ஆஸ்துமா என்கிறார். அம்மாவோ காற்றில் வட்ட வட்டமாய் வாய் பிளந்து தன் மூச்சைத் தேடித் தேடி ஒளியாங்கண்டு விளையாடுகிறேன் என்கிறாள்.
-கதிர்பாரதி

கவிதை ~ தலைக்கீழ் மசைக் கோழி ~ கதிர்பாரதி

ஆனால் இட்ட முட்டைகள் அத்தனையும் கூமுட்டைகளாகிவிட்டன. கருவிலேயே அழுகிவிட்ட முடை நாற்றம் வேறு. எடுத்து முச்சந்தியில் வீசியெறிந்து காறி உமிழ்ந்துவிட்டு வந்தாள் அம்மா ச்சீ தூத்தேறி மூதேவி.

கூமுட்டைக் கோழிக்கு அவையெல்லாம் தெரியாது.
வெண்கற்களை முட்டைகளாக்கி
அடிவயிற்றுச்சூட்டில் சிறகணைத்துக் கிடக்கிறது
மசைக் கோழி.
தலைக்கேறிய மசை வடியவேண்டி
வேலிக்கருவை முள்கிளையில்
கோழியைத் தலைக்கீழாய்க் கட்டித் தொங்கவிட்டாள்
பிள்ளைபெற்ற மகராசி.
கோழியின் பிளவுண்ட அன்னத்திலிருந்து
அன்னம் முடியும் தொண்டையிலிருந்து
தொண்டையாய்த் தவிதவிக்கும் அடிவயிற்றிலிருந்து
அடைகாக்கும் தாபம் வழிகிறது
சொட்டுச்சொட்டு மசையாய்.
தலைக்கீழின் அடியில் உட்கார்ந்து பார்க்கிறேன்
மசையும் என்னைப் பார்க்கிறது.
``தாயே
உன் கூமுட்டைக் குஞ்சு நான்தான்.``

அறிமுகக் குறிப்பு ~ உயர்திணைப் பறவை கவிதைத் தொகுப்பு ~ கவிஞர் தண்டபாணி தென்றல்

 கவிதைக்கு நிறைய வரையறைகள் உள்ளன. அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறும் கவிதை குறித்து ஒவ்வொருவரின் பார்வைக்கு ஏற்றவாறும் வெவ்வேறு தன்மையில் கவிதைகளை அணுகலாம் என்று கூறிக் கொண்டாலும் இறுதியில் ஒட்டுமொத்த கவிதையும் அதன் வெளிப்பாட்டுத் திறனில்தான் வந்து நிற்கிறது. நன்கு தெரிந்த கண்ணில் எத்தனையோ முறை தென்பட்ட ஒரு விஷயத்தைக்கூட முற்றிலும் மாறுபட்ட பார்வைக் கோணத்தில் எழுதும்போது அது அப்படியே மனதில் பதிந்து நிற்கிறது.

சாம்பிளுக்கு ஒன்று:

பூஜ்ஜியத்தில் இருந்து
ஏறுவதாக நினைக்கும் எண்கள் உண்மையில் பூஜ்ஜியத்தை இழக்கின்றன.
வேறு எங்கேயும் சந்திப்பதில்லை.
இறங்கிவந்தால் அடைவதும்
முன்பு ஏறிப்போன பூஜ்ஜியம் அல்ல. தனது பூஜ்ஜியத்துக்குள் சுற்றிக்கொண்டே
சூரியனை நகர்த்துகிறது கடிகாரம்.

~கதிர்பாரதி

/இன்னும் சில பக்கங்கள் உள்ளன.
விரைவில் விரிவான பதிவு.