தொகுப்பின் ஒரு கவிதையிலிருந்துத் துவங்குவோம் :
தலைச்சுமை விறகுக் கட்டோடும்
கக்கத்தில் உணவுச் சுமையோடும்
பின்னால் அம்மா நடந்துவர
மகன்கள் விளையாடி முன்போகும்
ஓர் அந்தி ஓவியம் பார்த்தேன்.
ச்சே... என்ன இது
ஓவியத்தில்கூட
அம்மா வேலைபார்க்க வேண்டியிருக்கிறது.
பொருளாதாரத்தில் GDP ஐ துல்லியமாகக் கணக்கிடுவதில் தடையாக இருக்கும் வரம்புகளென்று சொல்லப்படும் சிலவற்றுள் மிக முக்கியமானதாக குழந்தைகளுக்கான பெற்றோரின் அர்ப்பணிப்பு விற்கபடுவதில்லை அதனால் அது GDP இல் மதிப்பில் சேராது என்கிற கூற்று இருக்கிறது. The GDP includes only the goods and services sold in the market. The services provided by parents to their children is very important but it is not included in the GDP because it is not sold in the market.
பொருள்முதல்வாத அடிப்படையிலான இந்தக் கூற்றில் பாசத்திற்கு விலையா?! என்பது போல ஓர் உலோகத் தன்மை கொண்டதாக அக் கூற்று தென்படுவது எதார்த்தம். ஆனால் இன்னொரு கோணத்தில் அதன் நிழல்போல, 'மதிப்பீடே இல்லை என்கிற மேன்மைப் படுத்துதலும், எதைக் கொண்டுதான் நன்றிக்கடன் தீர்ப்பது?!' என்கிற கேள்வியும் இருப்பதைப் புரியலாம். அந்த மேன்மையை, கேள்வியை ஒரு தொகுப்பு முழுதும் பாடியிருக்கிறார் நண்பன் கவிஞர் கதிர்பாரதி.
இப்போது தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் தொகுப்பின் கவிதையை வாசிக்கலாம். /ஓவியத்திலும் கூட அம்மா வேலைபார்க்க வேண்டியிருக்கிறது/ என்னும் வரியில் இருப்பதை பாசமாக, பச்சாதாபமாகப் புரிந்து நமக்கொரு நாயகத்தன்மையைக் கோராமல் குற்றவுணர்வை உணர்ந்தோமேயானால் நாம் தான் அந்த மனைப் பாம்பு.
மனையில் இருந்தபடி எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு ஒரு போதும், நம்முள்ளே, ஒரு பெரும் தாகம், கனவு, வழியில் இறக்கிவிட்டு வந்துவிட்ட தன் சொந்த வாழ்வைப் பற்றின ஓர் ஏக்கம் செரிமானமாகிக் கொண்டிருப்பதைப் பற்றியெல்லாம் எந்த சிந்தனையுமின்றி அடுத்து ?! என நாக்கைத் துழாவும் பாம்புகள் பூமியின் எல்லா மனைகளிலும் நெளிகின்றன. அம்மாக்கள் அவற்றிற்கு பக்தியோடு தன்னைப் பிய்த்துப் போட்டபடியே இருக்கிறாள்கள்...
கவிஞர் இயற்கை |
சன்னதமாடும் ஓர் உணர்வைச் சுற்றி ரீங்கரிக்கும் ஓம்-கள் எளிதில் சுற்றியிருப்போரைப் பற்றிக் கொள்வதைப் போல வாசிக்கும் ஒவ்வொருவரையும் அந்த உச்சாடன மந்திரங்கள் அல்லது அந்தக் கவிதைகள் பற்றிக் கொள்கின்றன. அப்போது அம்மாக்களின் எளிய! வானுயர !! ரூபங்கள் கலைந்துக் கூடியபடியிருக்கின்றன.
ஆனால் அம்மாக்கள் இவையெதையும் பெரிதுபடுத்திக்கொள்ளாத சதா பக்தர்களின் விம்மலை, அழுகைகளை, போதைப் பிதற்றல்களை, வாடி போடியென்ற விளித்தல்களை, ஏசல்களை, திடீர்ப் பாசம் பொங்கும் படையல்களை, ஒரு முழம் பூவை என எதையும் எந்தச் சலனமுமின்றிக் கடக்கத் தெரிந்த சிறுதெய்வங்களாகவே எப்போதும் இருக்கிறார்கள்.
என்றாலும் இந்த கவிதைகள் போலான சின்னத் திருவிழாக்கள் அந்தத் தெய்வங்களுக்கானதாகவல்லாது நம் குற்றவுணர்வு மீட்சிகளாகவேனும் இருக்கின்றன.
நூலின் 36 வது கவிதையை வாசித்துவிட்டு நண்பனிடம் குழைந்த மனதுடன் பேசினேன். அந்தக் கவிதை என்னை நனைத்து குழைத்து பிசைந்துக் குழவியாக்கி 1979 க்குக் கூட்டிச் சென்று அம்மாவின் மடியில் தந்துவிட்டு மீண்டும் இங்கேயே வந்துவிட்டதை, இனி எந்த மன்னிப்புக் கேட்கும் சூழலுக்கும் ஆளாகமல் அம்மாவோடு முதலில் இருந்து வாழ்ந்து வருவேன் என்பதைப் பகிர்ந்துக் கொண்டேன். இப்போது என்னிடம் அம்மா இல்லை, கையிலிருக்கும் அம்மாவுக்கான என்னுடைய எல்லா மன்னிப்புகளையும் நீங்கள் ஊருக்குச் செல்கையில் அம்மாவின் கால்களில் உதறிக் கொட்டிவிட்டு வருவீர்களா என்று கேட்டுக்கொண்டபோது என்மீது ஏதோ குளிர்மை பரவியது.
கரு கூடாத முட்டையை, அதில்லாதபோது வெண் கற்களை அடைகாக்க முற்படும் கோழியைத் தலைகீழாய்த் தொங்கவிட்டு மசக்கை நோயை அகற்றும் அம்மாவிடம், 'தாயே உன் கூமுட்டைக் குஞ்சு நான்' என்று கவிதை சரணடையும்போது, கோழியின் மசக்கை பயனற்றது என்று புரிந்த அம்மாவுக்குத் தன் மகனைத் தெரியாதா ?! ஆனாலும் அடைகாத்தலுக்குத் தகுதியில்லாத மகனுக்கு மடி தருபவளிடம் ஒப்புக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற மகனின் கேவல் அதில் கேட்கிறது.
52ம் கவிதையில் யேசுவை சிலுவையிலேற்றும் நாடகத்தின்போது என்றோ யேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசின் அம்மா, பழி சொல்லுக்கு ஆளான தன் மகனுக்காக நூற்றாண்டுகள் கடந்த கண்ணீரை இன்று சிந்துவதைப் பார்த்து தாய்மையின் முன் இரண்டாம் பட்சமான தெய்வம் அதற்காகவேனும் சிலுவையை விட்டு உயிர்தெழ வேண்டும் என்று நினைத்திருக்கும்.
கையொப்பம் கற்றுக்கொண்ட அம்மா
தன் பெயர் எழுதும்போதெல்லாம்
நிலத்தில்
ஒரு புதுச் செடியை ஊன்றுவதாய்
அது இருக்கும்
//மகளுக்காகக்
காத்திருக்கும் வேளை
பள்ளி மைதானத்தில்
ஊஞ்சலாடுகிறாள்
அம்மா.
முன்னேறும்போது
சிறுமி
பின்னேறும்போது
அம்மா//
//அப்பாவை ஒரு வீட்டிலிருந்து
தனது வீட்டிற்குக் கூட்டி வந்தாள்
யாரும் அறியாமல்
அன்று பெய்த மழையில்
அடர் சாம்பல் மேகங்கள்
இடிகளாய் முழக்கி முழக்கி
அவள் மனதை எங்களுக்குச் சொல்லின//.
//சங்கிலிப் பிணைத்து
அழைத்துப்போகையில்
என் தலை தடவினாள்
அப்போது கலைந்த முடியை
எத்தனை முறை சீவியும்
ஒழுங்குபடுத்த முடியவில்லை//
இப்படி ஓரோர்க் கவிதையிலும் நிறைய்ய அம்மாக்களின் ஓர் அம்மா அல்லது ஓர் அம்மாவுக்குள்ளான நிறைய அம்மாக்கள் தங்களுக்குள் வாழாதது விட்ட வாழ்வைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வாசிக்கும் பிள்ளைகளின் மீது அவர்களின் புடவை வாசனைகளைப் பரப்பியபடி அந்த உரையாடல்கள் சமகாலத்துக்கும் தொல்பழங்காலத்துக்குமான மலரூஞ்சலாக ஆடிக்கொண்டிருக்கிறது. அதனை பிள்ளைகளாக இரசித்திருப்பதும், மனைப் பாம்புகளாகி எப்பவும் போல விழுங்கக் காத்திருப்பதும் உங்கள் கைகளிலிருக்கிறது.
விமர்சனமாகச் சொல்வதனால். முதலில் ஒரு புத்தகம் அதற்கான கௌரவமாக பொருண்மைக்கு அடுத்தபடியாக, அட்டைப் படம், எழுத்துரு, காகிதம் ஆகியனவற்றையும் பெற்றுக்கொள்வது அதன் உரிமை. அதில் நிறைய படைப்பாளர்கள் தலையிடுவதைப் போலவே கதிர்பாரதியும் செய்திருக்கிறார். பாக்கெட் நாவல் சைஸ், வெள்ளைக் காகிதம், பிரித்து வைத்தால் ஓடி மூடிக் கொள்கிற காகிதம் என புத்தகம் வந்திருப்பது அம்மாவின் எளிமையை, இயல்பை சுரண்டுவதைப் போலாகிறது. அட்டைப்படம் தலைகீழ் கோழியின் மசக்கை வழிவதன் குறியீடாக இருந்தாலும் வாசகனின் நுழைவு வாயில் அது என்பதால் அதையும் அடுத்தப் பதிப்பில் சரிசெய்வார் என நம்புகிறேன்.
கவிதைத் தொழிநுட்பமாக ஒரு பேச்சுக்குச் சொல்வதனால் சில வரிகள் கவிதைக்கானதாக இல்லாமல் கவிஞனுக்கானதாக அமைந்திருக்கின்றன. அவை கவிஞனுக்கானவை மற்றும் அர்த்தப் பிறழ்வை ஏற்படுத்தாத போது அதைத் திருத்துவது வாசகன் வேலை இல்லை என்பதால் எடுத்துரைப்பதோடு நிற்பது நன்று.
உதாரணமாக 51 வது கவிதையின் கடைசிப் பத்தி. 49 வது கவிதையின் கடைசி இரு வரிகள். 36 வது கவிதையில் கடைசியில் 'தான்' என்ற சொல். 30 வது அக்விதையின் கடைசி மூன்று வரிகள். இவை போல சில. அவை என்ன வரிகள் சரிதானா என்பதை புத்தகம் வாங்கி வாசித்துச் சொல்லுங்கள். ஒரு வேளை உங்கள் அனுபவத்தில் அவை சிறந்தவையாக இருக்கலாம்.
கடைசியாக முகத்தில் கூசச் செய்யும் குறுகுறுப்பையும் ஈர மீன் வாசத்தையும் உணரச் செய்யும் மிக நேர்த்தியான அற்புதக் கவிதையோடு முடிக்கலாம் :
கவிதை எண்: 20
//அயிரை மீன் என்றால்
அம்மாவுக்குக் கொள்ளை பிரியம்.
குமுளி நீரில் அவள் கால் நுழைக்க
கொலுசுபோல சூழும் அயிரைகள்.
பிறகு
என் தாவாக்கட்டை பிடித்து
செல்லம் கொஞ்சுவாள்.
முகத்தில் மொய்க்கும்
ஆசையின் அயிரைகள்//.
அயிரை மீன் ஓர் எளிய படிமம் குமுளி நீர் என்பது அதைத் தாங்கும் குறியீடு. சரி கவிதை சொல்லும் காட்சியைக் கற்பனித்தால்... என்னவொரு அழகியல். கால்களைச் சூழும் அயிரைகள் கொலுசாகின்றன. பிறகு அயிரைகள் விரல்களாகி தாவாக்கட்டையில் மொய்க்கின்றன. அம்மாக்களின் அயிரைகள்தான் யாவை ?! அவை மனைப் பாம்புகளுக்குத் தப்புமா.
நூல் : அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது.
வகை : கவிதை
ஆசிரியர் : கதிர்பாரதி
வெளியீடு : நாதன் பதிப்பகம்
தொடர்புக்கு : 98840 60274
No comments:
Post a Comment