தெரு ஒன்றைக்
கடப்பதென்பது
உண்மையில்
வாழ்வு ஒன்றைக் கடப்பதாகும் போலும்.
விம்மல்
கலந்து உதிரும் கண்ணீர்த் துளியொன்றை
விளக்கேற்றி
வைக்கும் புன்னகையொன்றை
மெதுமெதுவாய்
மடல்விரியும் மலரொன்றை
புறவாசலில்
பூத்து மறையும் மின்னலொன்றை
தெருவைக்
கடக்கும்போது உணராவிட்டால்
இன்னும்
நீங்கள் முழுமையாய் தெருவைக் கடக்கவில்லை.
வாழ்வையும்தான்.
இடமிருந்து
வலமாக
குறுக்கிருந்து
நெடுக்காக
வடகிழக்கிலிருந்து
தென்மேற்காக
மேலிருந்து
கீழாக
கடக்க வேண்டிய
தெருவும் வாழ்வும்
மிச்சமிருக்கின்றன
காலமெங்கும்.
கடக்கவியலாமல்
பாதியிலேயே
திரும்ப
வைத்த தெரு ஒன்றால்
விட்டத்தில்
தொங்குகிறது உயிர் ஒன்று.
6 comments:
உண்மை
தெருவில் நிகழ்வும்
ஆழ்ந்த உள்நோக்கும்
உணர்த்தும் கலக்கல் கவிதை கவிஞரே
அன்புள்ள கதிர்பாரதி
வணக்கம். நீண்ட நாள்களுக்குப் பின் உங்கள் வலைப்பதிவிற்கு வந்துள்ளேன். தெரு பற்றிய கவிதை மனதில் தைக்கிறது. ஏனென்றால் என்னுடைய பிறந்த தெரு குறித்து ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்தளவுக்கு தெருக்கள் பாதிக்கின்றன. கடந்த தெருக்களும் கடக்கமுடியாத தெருக்களும் கடக்க விரும்பாத தெருக்களும் கட்டாயத்தில் கடந்த தெருக்களும் கசிய வைக்கும் தெருக்களும் எனப் பலவற்றையும் நாம் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். அருமையான காட்சிப்பதிவை மனதில் உருவாக்கும் கவிதை. வலைப்பதிவில் உங்கள் கவிதைகளைப் பதிவு செய்வதற்கு முன்னதாக அதனை ஏதேனும் ஓர் இதழில் பிரிசுரியுங்கள். பின்னர் வலைப்பூவிற்கு வரட்டும். அன்பான வாழ்த்துக்கள்.
//என்றோ வசித்த
ஒரு தெருவைக் கடப்பது
அத்தனை எளிதல்ல.
ஒரு தெருவைக் கடப்பது
சமயங்களில்
ஒரு வாழ்வைக்
கடப்பது போல.//
என்றறியப்படும் என்னுடைய கவிதையிலிருந்து விரிந்த அருமையான கவிதை. உண்மையிலேயே என் கவிதை குறித்து நீங்கள் பதிவிட்டிருக்கக்கூடுமோ என்ற யோசனையுடனேதான் உள்ளே நுழைந்தேன்.
சமீபத்தில் வாசித்த உங்களின் சிறந்த கவிதை இது- தற்கொலையுற்றவனின் அறைக்குப் பிந்தைய கவிதைகளில்.
கடக்கவியலா தருணங்கள்தாம் கவிதைகளாகின்றன.தெருக்கள் நல்ல உவமை மகிழ்ச்சி.
மனதிலரையும் வரிகள்.... மடல் விரியும் துவக்கமும் கடக்கவியலாமல் தூக்கில் தொங்கும் முடிவும் நெகிழ்வும் அதிர்வும்.
கவிதையை இரசித்தேன் உள்ளிருந்து வெளியேற முடியவில்லை நீண்ட நேரம்
Post a Comment