16 May, 2012

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்


மகிமைசால் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்பதும்
மச்சங்களுக்கு ஒன்றென காதலிகள் மூன்று என்பதும்
சமீபமாகத் தெரிய வந்திருக்கும் செய்தி.
கடனட்டைகளை அதிகமாக விநியோகிக்கும் வங்கியொன்றில்
முதல் காதலிக்கு கஸ்டமர் கேர் அதிகாரி பணி.
ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில்
போலியோ சொட்டுகளை வழங்கும் இரண்டாமவளிடம்
மெசியா குறித்த புகார்கள் நிரம்ப உள்ளனவாம்.
பெண்களின் உள்ளாடை நிறுவனத்தில் பொதுமேலாளராகப்
பணி உயர்வு பெற்றிருக்கும் மூன்றாமவள் மீது
உள்ளபடியே மெசியாவுக்கு அதிமோகம் இப்போது.
மூன்று காதலிகள் கிடைத்ததற்குக் காரணமே
தம் மூன்று மச்சங்கள்தான் என்பது அவர் கொள்ளும் கித்தாப்பு.
சிகையலங்காரத்துக்கு நிகராய் மச்சலங்காரத்தில்
மிகுந்த கிளர்ச்சி அடையும் மெசியாவுக்கு
நான்காவதாய் ஒரு மச்சம் அரும்பத் தொடங்கியிருக்கிறது.
சந்தோஷப்படுங்கள் அல்லது ஜாக்கிரதையாய் இருங்கள்
நான்காவது காதலி நீங்களாகவும் இருக்கலாம்.

1 comment:

Kuppu Veeramani said...

அப்பனே நோய்க்குறி இயலின்படி புதிய மச்சம் அது நான்காவதாய் இருந்தாலும் ஆபத்து மச்சக்காரனுக்கு . கவிதை செறிவாக இருக்கிறது.