11 June, 2012

கனவிலிருந்து எழுந்துபோய் சிறுநீர் கழித்தேன்



நெபுகாத்நேசர், தொங்குதோட்ட மாளிகையின் இரண்டாம் அடுக்கில்
காதற்பெண்டிரோடு அளாவிக்கொண்டிருந்த போதுதான்
முதன்முறையாக விழிப்பு வந்தது எனக்கு.
முதிர்ந்த வயதுடைய செந்நிற ஒயினை மேனியெங்கிலும் வழியவிட்டப்படி
கணவனாக வரித்துக்கொண்ட தம்பியோடு கிளியோபாட்ரா சல்லாபிக்க
வியர்த்து வழிந்ததில் தூக்கமே போய்விட்டது.
தம் தளபதியின் மனைவியைக் கர்ப்பவதியாக்கிய தாவீதை நோக்கி
அவனது கவண் கல்லே நார்த்தான் தீர்க்கத்தரிசியின் எச்சரிக்கையாக
விர்ர்ர்ர்ர்ர்ரென்று வேகமெடுத்துத் திரும்பிக்கொண்டிருக்க,
கட்டிலிலிருந்து புரண்டு தரையில் விழுந்தேன்.
பாதி உறக்கத்தில் குப்புறப் படுத்து உழன்றுகொண்டிருக்கையில்
கோபியர்களின் மார்பாடைகளைக் களவாடிக்கொண்டு
கொங்கைகளின் தரிசனத் திருவிளையாடல் நடத்திய கண்ணனால்
எழுந்தமர்ந்து இரண்டு தம்ளர் குளிர்நீரை விழுங்கினேன்.
அசோகவன சீதையின் பொருட்டு பத்துத்தலை காமத்தால்
ராவணனின் உடல்வெப்பம் தகிக்கத் தொடங்குகையில்
அறையில் எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தேன்.
அகலிகை சபலத்தில் இந்திரன் கௌதமமுனியாக உருமாற
சாபம் வாங்கி கல்லாய் உறைந்து கணத்தது இரவு.
தந்தையின் மரண கணத்திலும்
மனைவியோடு ஆலிங்கனத்தில் இருக்கிற மோகன்தாஸ் காந்தியாகி,
இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்க கோவணத்தை வரிந்து கட்டியபோது
எழுந்துபோய் சிறுநீர்க் கழித்துவிட்டு வந்தேன்.
எவ்வளவு சுகமாக இருந்தது தெரியுமா?

3 comments:

செய்தாலி said...

ம்(:
அருமை கவிஞரே

ஹ ர ணி said...

அன்புள்ள கதிர்பாரதி..

எனக்கு இந்தக் கவிதை விளங்க கொஞ்சம் சிரமமாக உள்ளது, இன்னும் இருமுறை வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

கதிர்பாரதி said...

எழுதுங்க ஸார்.... :)