உங்களுக்குக் கவிதைகள் பிடிக்காதென்றாலும் பரவாயில்லை,
கதிர்பாரதி எழுதிய
'அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது' என்னும் கவிதைப்புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் நீங்கள் இதுவரை காணாத உங்கள் அம்மாவை இதில் காண்பீர்கள்
#
வயலில் கால்கள் புதைய
நாற்று நடும் அம்மாவைப் பார்த்திருக்கிறேன்
தன்னைப் பியத்துப் பிய்த்து
சேற்றில் ஊன்றுவாள்.
பின்னொரு பருவத்தில்
ஒரு விளைந்த கதிர் அசைவதுபோல
தலைகுனிந்து வருவாள்
அந்தியில் இருந்து.
#
நாற்பது நாட்கள்
தவக்காலம் முடியும் முன்பு
பெரிய வெள்ளி அன்று
யேசுவை கசையடியாக அடித்து
தலையை முள் மொழியால் கிழித்து
பாதங்களையும் கரங்களையும்
கூர் ஆணிகளால் துளைத்து
சிலுவையிலேற்றி
விலாவை ஈட்டியால் குத்தியபோது
ரத்தமும் நிணமும் பீறிடுகின்றன
பாஸ்கா நாடகத்தில்
அப்போது
சிலுவைக்காரனைப் பார்த்து
குலுங்கி குலுங்கி அழுகிற அம்மாவே
அழாதே நீ அழாதே
சிலுவையில் தொங்குபவன்
உன் மகனும் அல்ல
சிலுவைச் சாவும் அவனுக்குமல்ல
இதோ உன் பின்பக்கம் அமர்ந்து
நானும் நாடகம் காண்கிறேனே
தெரியாதா உனக்கு
சட்டென்று எனை அருகணைத்து
பதற்றம் ஆறினாள்
சிலுவைக்காரனை முத்தமிட்டு
முப்பது வெள்ளிக்காசுக்காக
காட்டிக் கொடுத்த
இந்த யூதாஸ் இஸ்காரியோத்தின் அம்மா
#
கக்கடைசியில்
ஏர்வாடி தற்காவில்
அம்மாவைச் சேர்த்தோம்
சங்கிலி பிணைத்து அழைத்துப் போகையில்
என் தலை தடவினாள்.
அப்போது கலைந்த முடியை
எத்துனை முறை சீவியும்
ஒழுங்குபடுத்த முடியவில்லை
தன்னுடலுக்குத் தானே
தீ வைத்துக் கொள்ளும் அந்திக்கு
இந்த வேதனை புரியும்
#
இப்படியாக அறுபது கவிதைகளில்
அம்மாவைப் பிரசவித்திருக்கிறார் கதிர்பாரதி
பின்னுரையில் கவிஞர் கரிகாலன் கூறுகிறார், "கதிர்பாரதி காட்டும் அம்மா அவருடைய அம்மா மட்டும் அல்ல அவர் தமிழ் பிள்ளைகளின் தாய் அடையாளம்.."
#
அண்மையில் எந்தக் கவிதைப் புத்தகமும் இந்தளவுக்கு என்னை உலுக்கியதில்லை..
என்னை நம்புபவர்களுக்கு இந்தப் புத்தகத்தை வன்மையாகப் பரிந்துரைக்கிறேன்
#
அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது
வெளியீடு: நாதன் பதிப்பகம்
விலை ரூ.100
98840 60274
அரங்கு எண்: 664
No comments:
Post a Comment