28 December, 2024

பேனாவில் சுரக்கும் தாய்ப்பால் | பித்தன் வெங்கட்ராஜ் | கதிர்பாரதியின் அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது கவிதைத் தொகுப்புக்கு எழுதிய விமர்சனம்

ரு சொல்லாக அணுகையில் அம்மா என்பது ஒரு விளிச்சொல். அம்மன் என்பதன் விளி. அது தன் மீது கவனத்தைத் தரச்சொல்லிக் கேட்கும் ஓர் அழைப்பு. சொல்லாக மட்டுமே பார்க்கவியலாத சொற்களுள் முதன்மை பெறுவது 'அம்மா'. இப்பூமியில் மக்கள் இல்லாத உயிர்கூட இருக்கலாம். ஆனால், 'அம்மா' இல்லாமல் ஓர் உயிர் உருவாகமுடியாது. அம் என்றால் அழகிய என்று பொருள். அம்மா என்றால் அழகினில் மாப்பெரிது என்றும் சொல்லலாம்.

அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது என்று கூறும் கதிர்பாரதி அவர்கள், சிலநேரங்களில் நம் கண்ணில் மறைந்திருக்கும் ஓர் அம்மாவையும், சிலநேரங்களில் நாம் கண்ட அம்மாவின் கண்டிராத வேறொரு
பரிமாணத்தையும் காட்டுகிறார்.
வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருக்கலாம். கடற்கரையில் ஆயிரம் சிப்பிகள் இருக்கலாம். ஆயிரம் பறவைகள் பாடித் திரியலாம். ஆயிரம் பனித்துளிகள் விடியலை வரவேற்கலாம். ஆனால், உலகம் முழுமைக்கும் தேடினாலும் ஒரே அம்மாதான் என்றார் அமெரிக்கக் கவிஞர் கூப்பர். அப்படித்தான் எல்லா அம்மாக் கவிதைகளும் எல்லாருக்கும் பொருந்துவனவாகவே இருக்கின்றன.
'மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்' என்று தொடங்கி, தாம் தாய் வயிற்றில் கடந்து வந்த ஒவ்வொரு மாத இடர் நிலையையும் பட்டியலிடுகிறார் மாணிக்கவாசகர். கதிர்பாரதி அவர்களின் 'இரத்தமும் சதையுமான' கவிதையை அந்தத் திருவாசகத்துக்கு ஈடான ஒருவாசகமாகக் கருதுகிறேன்..
கடவுளின் கையில் காற்றற்ற துவண்ட பலூனாயிருந்தது தொடங்கி, தன்னை ஈன்றெடுக்கத் தாய் தன்னைத் தானே கிழித்துக்கொண்ட வரை என அவர் கூறும் துன்பம், 'தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்' என்ற திருவாசக வரிகளுக்கு ஒரு குறைவுமில்லாத வரிகளே என்கிறேன்.
ஒரு கவிதையில் டாஃபொடில்ஸ் மலர்களைக் காட்டுகிறார் கவிஞர். பொதுவாக டாஃபொடில்ஸ் மலர்கள் வளமை மற்றும் மீண்டெழுதலின் குறியீடு என்கிறார்கள் அறிஞர்கள். மஞ்சள் புடைவை கட்டி விரதமிருக்கும் அம்மாவுக்கு அம்மலரை ஒப்புமை கூறியிருப்பதைப் பார்க்கும்போது, அம்மலருக்கு அம்மாவினும் சிறந்த ஒப்புமை இருக்கவேமுடியாது என்று தோன்றுகிறது.
இன்னொரு கவிதையில் 'அம்மா அமைதியாகிவிட்டால்
யார்தான் அமைதியாக இருக்கமுடியும்' என்ற வரிகள் மிகவும் கனமானவை.
'தாயிற்சிறந்த கோவிலுமில்லை' என்றாள் ஔவை. 'ஈன்றாளின் எண்ணக் கடவுளும் இல்' என்றார் விளம்பிநாகனார். தாயைத் தெய்வமென மதி என்ற அறவுரைகள் ஒருபக்கமிருக்க, தாய் தன் பிள்ளையைத் தெய்வமாகக் கருதிப் போற்றுகிறாள் என்பதை ஒரு கவிதையில், 'எந்நேரத்திலும் பிள்ளையைக் கடவுளாக்க முடிகிறது அம்மாவால்' என்று எழுதுகிறார் கவிஞர்.
குழந்தை வெளிவரும் காலம் நெருங்கியதும்தான் தாய்க்குப் பால் சுரக்கத் தொடங்குகிறது. எத்தகு வறுமையிலிருந்தாலும் பிறந்த குழந்தையின் பசி தீர்க்க இயற்கை வழங்கும் கொடை அது. 'வயிறாரத் தாய்முலையுண்ணாக் குழவி நல்குரவில் அதாவது வறுமையில் வாடுகிறது' என்கிறது திரிகடுகம்.
ஒரு கவிதையில், 'குழந்தை தூங்கிவிட்டாலும் தாய்க்குப் பால் ஊறிக்கொண்டுதானே இருக்கும்' என்னும் வரிகளில் தாயையும் தாய்ப்பாலையும் மீறியதொரு தரிசனம் தருகிறார் கவிஞர்.
'பேதையா அவ இருப்பா
மேதையா ஒன்ன வளர்ப்பா' என்ற ஐயன் வாலியின் வரிகளை‌ எண்ணி,..
'அவள் உடலை அறுவடை செய்து
பசியாறுவோம்.
அவள்
ஒரு விளைந்த கதிர் அசைவது போல்
தலைகுனிந்து வருவாள்
அந்தியில் இருந்து'
என்ற இந்தக் கவிதை வரிகளை அடிமறிமாற்றுப் பொருள்கொண்டும் நினைத்துப் பார்க்கிறேன். 'அந்தியில் இருந்து வருகிறாள்' என்பதை இன்னும் ஆழமாக உணர்கிறேன்.
தலைகுனிந்த கதிராய் இருந்த தாய்
தலைநிமிர்ந்த கதிர்பாரதியைத் தந்திருக்கிறார். அதைத்தான் இன்னொரு கவிதையில் 'அவள் குருதியிலிருந்து பெருகியதுதான் எல்லா வார்த்தைகளும்' என்று எழுதுகிறார் கதிர்பாரதி அவர்கள். உண்மைதானே.. அவள் குருதியிலிருந்து பெருகியதுதான் ஒவ்வொரு உயிரும் ஆகிய புதிய புதிய உலகங்கள்...
வாழ்த்துகள் Kathir Bharathi அண்ணா.

No comments: