09 October, 2024

~ கவிதை : கதிர்பாரதி ~ மேரிகோல்டு உண்ணும் ஸ்ரீயானை

40 வயதுக்குப் பிறகு
இனிக்கமுடிந்தோர் வாழ்வுபெற்றோர்
ஏனெனில்
அவர்களின் கடவுள் இன்சுலினாய் இருக்கிறார்.
இனிக்க முடியாதோர்
சிறுகுறிஞ்சான் கீரையை வேகவைத்து
ஒரு மண்டலம் வெறும்வாயில் உண்டுவர
ரத்தச் சர்க்கரையளவு குறையுமென்ற
கைவைத்தியம் தெரியுமா?
உண்டோருக்குத்தானே தெரியும்
சிறுகுறிஞ்சான் சுவை என்பது
`வாழ்வுகொள்ளாக் கசப்பு` என்று.
அய்யய்ய
கசந்து கசந்து வாழ்வதன் பெயர்தான்
சர்க்கரையா.
ஆமாம்
அதிகாலைக் குடல்குடையும் பசிக்கு
மேரிகோல்டு சாப்பிடுகிறது
ஸ்ரீசாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர்
திருக்கோயில் யானை.
_கதிர்பாரதி



08 October, 2024

~கவிதை : கதிர்பாரதி ~ சாந்தசொரூபிகளின் தெய்வம்

னக்குள்ளிருக்கும் நாயை அவிழ்த்து
கையில் பிடித்தபடி காலைநடை போனேன்.
நானொரு நல்ல ஜீவகாருண்யன்
நாயோ சாந்தசொரூபிகளின் தெய்வம்.
அதன் விடிகாலைக் காதுகளில்
`மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன்`
பாடலைச் செருகிவிட்டிருந்தேன்.

அப்போததன் வால்கூடச் சாந்தமாவே குழைந்தது.
வீட்டுத் திருப்பம் மறைந்ததும்
`
மாதா`வைக் கழற்றிப் போட்டுவிட்டு

தெருவோரங்களை மோந்து மோந்து பார்த்தது.
திரைப்படச் சுவரொட்டியைக் கண்டதும்
கால் தூக்கி சிறுநீர் கழித்தது.
`
நாக்கை அப்படித் தொங்கப்போடாதே
அதிலிருப்பவர்கள் அதிரூபங்கள்.
அவர்கள்முன் கால்தூக்குவது நாகரிகமல்ல` என்றேன்.
`எனக்கு எல்லாம் தெரியும்… மூடு` என்று
முகத்தை வைத்துக்கொண்டது.
இன்னொரு திடீர் வளைவில்
என்போல எல்லோரும்
அவரவர் மிருகத்தைக் கையில் பிடித்தபடி
காலைநடை வந்திருந்தனர்.

நாயின் கால் நாயறிந்து, எனைக் கழற்றிவிட்டு
நடையும் துறைந்துவிட்டு
இன்னொரு நாயை இழுத்துக்கொண்டு
முட்டைபோண்டா சுவைக்கப் போய்விட்டது.
பூங்காவில் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு
பெண்நாய்களின் பின்புறங்களைக் கவனித்தது.
`
அடச் சீ நீயொரு நாயா?` எனக் கடிந்து
வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டேன்.
நாயும் முகத்தில் சாந்தத்தை அழைத்துவந்துவிட்டது.

வீட்டு எஜமானி தேநீர் கொடுத்தாள்
`
அருகன் சாறு அருந்தினேன் அம்மா` என்று
வாலைக் குழைத்துவிட்டு
காதுகளில் மறுபடியும் `மாதா`வை மாட்டிக்கொண்டது.
நாயைக் காலைநடை கூட்டிப்போனால்
நமக்குத்தான் ரத்தத்தில் சர்க்கரை 
தாறுமாறாய்க் கூடிவிடுகிறது.

_கதிர்பாரதி



01 October, 2024

விமர்சனக் குறிப்பு : கதிர்பாரதி ~ ஜார் ஒழிக சிறுகதைத் தொகுப்பு ~ சாம்ராஜ் (15 பிப் 2023 அன்று எழுதியது)

விஞர் - இயக்குநர் சாம்ராஜின் இரண்டாம் சிறுகதைத் தொகுப்பு 'ஜார் ஒழிக!'. எழுதித் தீராத மதுரையை நிகழ்விடங்களாகக் கொண்ட கதைகள் பெரும்பாலும்; ஒன்றிரண்டு கேரளா மற்றும் திருச்சியில்.

'வாழ்வை இடையறாது முடுக்கும் இயக்கி பெண்கள்தான். அது நேர்மறை அல்லது எதிர்மறை என்ற எந்த விளைவாக இருக்கட்டும். அவர்களின் தலையீடு குறைவான எதிலும் சூடும் சுரணையும் கொஞ்சம் மட்டம்தான்...' என்ற முடிவுக்கு இலகுவாக நகர்ந்துவிடக்கூடிய வாய்ப்பைத் தரும் கதைகள்.

ஆனால், அதே அவர்கள்... வாழ்வின் தீரா இன்னலுக்கு உள்ளாவது ஏன்? நெஞ்சுக்கு நெஞ்சாகத் துயர் வந்து அவர்களைத் தாக்குவது எப்படி? இடிவாங்கி பிளவுண்ட மரம்போல கொதிமனம் கொண்டு அலைவது எதனால்? கண்ணீருக்குத் தெரியாமல் தேம்புவது யாரால்?

என்றெல்லாம் கேட்டுக்கொண்டால் சமூகம் அவர்களுக்கு அப்படித்தான் முகம் காட்டுகிறது எனவும் பதில் சொல்கின்றன இந்தக் கதைகள். காவியம் தொட்டு நவீனக் காலம் வரை இதுதான் பெண் கதி; வாழ்வு.
சாம்ராஜ் 


நளாயினிக்கு நிகர் துயர்கொண்ட பாத்திரம் செவ்வாக்கியம். அவளுக்கு எதிர்நிற்க முடியாமல் நடுங்குகிறது முத்திருளாண்டி ஆண் தனம். பாலியல் சுரண்டலுக்கு எதிரான பரமேஸ்வரியின் தாட்டியம், சீண்டலுக்கு இன்முகம் காட்டும் லட்சுமி அக்காளின் அலட்சியம், மல்லிகாவின் சினிமா மோகம், மரியபுஷ்பத்தின் தீராத்தேடல், கோமதியின் மந்தகாசம்... யாவும் சொட்டச் சொட்டத் துயரங்கள். எனினும் சகித்துக் கடக்கிறார்கள்.

காயமுற்றவர் பக்கம் கருணையாக இருங்கள். ஏனெனில் அதுதான் அவர்கள் வரலாறு. உடைந்தவர் ஒன்றும் ஒடிந்துபோவதில்லை; துளிர்க்கிறார்கள். வெறுங்காலோடு நடந்து கடக்கிறவர்கள் எழுப்பும் புழுதிக்கு வலிமை அதிகம்... என்பனவெல்லாம் இந்தக் கதைகளின் உள்ளோடும் உண்மைகள்.

இவை எல்லாம் தாண்டி அவர்களைத் தூண்டி துலங்கச் செய்வது எது? 'அவர்கள் நகர்த்தியாக வேண்டிய கட்டாய வாழ்க்கை' என்கிறார் சாம்ராஜ். வானம் இல்லாத ஊருக்கு யாராலும் போய்ச் சேர முடியாது எனப் புரிந்துகொள்கிறேன் நான்.

வேறு ஒன்றும் இல்லையா என்றால்... இடதுசாரிப் புரட்சி இந்திய மண்ணில் எப்படித் தொழில் படுகிறது? அதைச் சொந்த வீட்டுக்கு ஒட்டடை அடிக்கும் அவஸ்தையோடு சொல்லப்படும் கதைகளும் இருக்கின்றன.

பிரியத்துக்குரிய ஆசிரியை நம் காதுமடல் திருகித் தண்டிக்கும்போது வலியில் ஒரு சூடு பரவும் அல்லவா... அப்படி கதை சொல்கிறார் சாம்ராஜ். அதில் எள்ளல் துள்ளல் பகடி எல்லாம் அவர் இழுத்தவாக்கில் வந்துபோகின்றன.

'பட்டாளத்து வீடு' சாம்ராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

விமர்சனக் குறிப்பு : கதிர்பாரதி ~ வெஞ்சினம்~ சிறுகதைத் தொகுப்பு ~ கார்த்திக் புகழேந்தி (13பிப்2023 அன்று எழுதியது)

கார்த்திக் புகழேந்தி யின் 'வெஞ்சினம் & பிற கதைகள்' தொகுப்பை வாசிக்க வாசிக்க எப்படி இந்த ஆளின் எழுத்தை இத்தனை நாள் வாசிக்காமல் இருந்தோம் என்று ஆயாசமாக இருந்தது.

சிலந்தி வாயிலிருந்து எச்சில் நூல்நூலாகக் கிளம்பிவந்து பின்னலாவதுபோல கார்த்திக் புகழேந்தியிடம் இருந்து கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக பின்னம்பின்னமாகக் கிளம்பிவருகின்றன என்றே தோன்றுகிறது.
நாட்டார் பண்புலகப் பின்னணியோடு எழுதப்பட்ட வெஞ்சினம், கொடிக்கால், காளிக்கூத்து, தலப்புராணம் போன்ற கதைகள் நம் பால்ய நனவிலியில் பாட்டையாக்களாலும் பாட்டிகளாலும் ஊன்றப்பட்ட விதைகள்தாம்.
கதைகளைப் படித்துக்கொண்டு வரும்போதே, யாரோ கதை கேட்டு 'உம்' கொட்டிக்கொண்டு பின்வருவதைப் போன்ற பிரமை உண்டாகிறது.
பூவாத்தாள், பலவேசத்தம்மாள், மங்கா, செல்லி, கோமு ஆச்சி, சந்திரா - மாரி... என கதைகளின் அத்துணைப் பெண்களும் அசாத்தியமானவர்களாகவும், அதிசயமானவர்களாக இருப்பது தாய்வழி ஆளுமைச் சக்தியின் மிச்சச்சொச்சங்கள் என்றெல்லாம் எண்ணவைக்கின்றன.
கார்த்திக் புகழேந்தி
கதைகளுக்காக உலகம் உருவானதா இல்லை கதைகள் உருவாக்கியதுதான் இந்த உலகமா என்ற சிந்தனாமயக்கத்தை உண்டுபண்ணுகிற இந்தத் தொகுப்புக் கதைகள் மிகுந்த வாசிப்பு இன்பத்தையும் மயக்கத்தையும் தரவல்லவை.
கார்த்திக் புகழந்திக்குக் காட்டாற்று வெள்ளம் போல மொழி. மேடு பள்ளங்களை நிறைத்து ஓடிவருதாக மனித மேன்மை - கீழ்மைகளை அடித்துக்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு கதையிலும் ஓர் அகவயமான வெளிச்சம் பீறிடுகிறது. அது மனித ஆழ்மனத்தின் மீது நிகழ்த்தும் ஆத்ம விசாரணைகளாக இருப்பதே இந்தக் கதைகளின் நற்பண்பு என நான் நினைக்கிறேன்.
வாழ்த்துகள் கார்த்திக் புகழேந்தி