மழைமேகங்கள் சூழ்ந்து ஒளியும் இருளுமான மந்தகாசத்தை வானில் நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது உயிருள்ள விமானங்கள்போல கையெட்டும் தொலைவில் விர்ரென்று பறந்து திரியும் தட்டான்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றின் ஒளி ஊடுருவும் மீச்சிறு இறகுகளைக் கவனித்திருக்கிறீர்களா? கண்களுக்குப் புலப்படாத அவற்றின் கடுகளவு கேமரா விழிகளை ஆராய்ந்திருக்கிறீர்களா? பண்படாத நிலங்களின் மீது பறக்கும் தட்டான்களுக்கு மோட்சம் இல்லை. நிலமென்பது மனமென கொள்க. தட்டான்களே உங்கள் ஆசைகள். கதிர்பாரதி தன் கவிநிலத்தில் "ஆனந்தியின் பொருட்டு சிலபல தட்டான்களை தாழப்பறக்கச்" செய்திருக்கிறார். தாழப்பறத்தலில் துயரம் இல்லை அல்லவா?
என்பொருட்டு இப்புத்தகம் கதிரின் கையெழுத்தோடு என் நிலத்தில் வந்து சேர்ந்தது. சொற்கையாடல் என்பது கதிருக்கு கைவந்த கலை என்பது அவரை அறிந்த அனைவரும் அறிந்ததே. முதலிரண்டு தொகுப்பையும் கையாண்ட லாவகத்தோடு கூடுதல் கொஞ்சம் உப்பு காரத்தையும் தூக்கலாகச் சேர்த்து தந்திருக்கிறார் ஆனந்திக்கு. லிபி ஆரண்யா அவர்களின் மதிப்புரையில் குறிப்பிடுவதுபோல நிலங்களைப் பாடுதல் என்பது சமகாலத்தில் அழிந்துவரும் செஞ்சிட்டுப்போல் ஆகிவிட்டது. கதிர் அதற்கு கொஞ்சம் ஊட்டம் அளித்து பாதுகாத்துவைக்கிறார். அவர் பாடுவது பாலை. பாலை என்பது பாலைவனத்தை மட்டும்தான் என்பதல்ல. ஏனெனில் நாம் வாழும் இந்நிலமே பாலைக்கு ஒப்பானது அறிவீர்தானே?
சில கவிதைகள் ஒருமுறை படித்தாலே புரிந்துபோகும். சில கவிதைகளை இரண்டு மூன்று முறை வாசித்து அவற்றின் முழுமையான சுவாசக் கருவை இதயத்திற்கு விழிவழி ஏற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. படித்ததும் என்னைக் கப்பென்று பற்றிக்கொண்ட ஒரு கவிதையின் கருப்பொருளாக முப்பெரும் இலக்குகளைக் கொள்கிறார். அவை உயர்ரக மதுப்புட்டி, வாலிப்பான பெண்,பின்னொரு வெள்ளாமை நிலம். இவற்றை ஒன்றோடொன்று பின்னிப் பின்னித் தாழம்பூ வாசத்தையொத்த கடைவரியை எப்படிச் செய்திருக்கிறார் பாருங்கள் ,
|
சாய் வைஷ்ணவி |
‘நிலமே
மதுவே
உனை ஒருவருக்கும் கொடேன்.
ஓரேர் உழவனாய்க் கைகொள்வேன்.
அயலான் அருந்த உனை எப்படிக் கைநெகிழ்வேன்
எனக்கான முதிரிளம் பருவத்து முலையே’ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு லயத்தை ஒளித்துவைத்ததோடு அதன் வாலிப்பான உபதலைப்புகளில் வாசகனுக்குப் பித்தம் ஏறச்செய்து அவரே கவிதையின் இறுதியில் தெளியவைத்தும் விடுகிறார். புனித பைபிளிலிருந்து தேர்ந்தெடுத்த சில வேறுபட்ட சுவைதரும் கனி(வி) விதைகளை இத்தொகுப்பில் ஆங்காங்கே தூவி இனிமை கூட்டியிருக்கிறார்.
ஒவ்வொரு கவிதையின் வினையாக சிறுகுறு புன்னகையை சிற்சில பக்கங்களில் கொட்டிவிட்டுப் போனேன். அதில் பிரதானமானது,
// குரங்குக்கென சில வரைமுறைகள் இருக்கின்றன// எனத் தொடங்கும் கவிதையில், குட்டிக்கரணம் போடும் குரங்கொன்றின் நிலையைப் பகடியாகக் கூறி இறுதி வரியில்
//எங்கே ஒரு குட்டிக்கரணம் போட்டு
கூண்டுக்குள் அடைந்துகொள்ளுங்கள் பார்ப்போம்.
ம்ம்ம்.. சமர்த்து// என முடித்திருப்பார்.
குரங்காகவும், குதிரையாகவும், கடவுளின் கைபொம்மையாகவும், நிலமாகவும் இன்னும் பலவாகவும் தன்னையும் சிலசமயங்களில் முன்னிருக்கும் வாசகனையும் உவமைக்காட்டி சொல்லவந்ததை உள்ளங்கை எடுத்த நன்னீர் போல தெளிவாக விளக்குகிறார்.
பெண்ணை பாடாமல் கவிதை இன்புறுமா? பெண்ணைப் பற்றி பாட எதையெல்லாம் ஒரு கவிஞன் முன்னிருத்துவானோ அதை கடந்து தன் காதலியோடான ஊடல்களை எளிமையல்லாத உவமைகளாக வெகுசிறப்பாகப் புனைந்து வந்திருக்கிறது சில கவிதைகள். முப்பிரி பின்னலிட்ட நாக சர்ப்பம் என்ற உபதலைப்பின் கீழ்க் காணும் கவிதை,
//உன் யவ்வனத்தின் உன்னதங்கள்
திறந்துக்கொள்கின்றன.
எனது பிரவேசத்துக்குப் பிற்பாடு// எனத்தொடங்கி இடையில்,
//முகடுகளின் மென்மையிலும்
வளைவுகளின் தீவிரத்திலும்
நீர்வழிப் படூஉம் புணைப் போலாகிறேன்// என அலாதியான இன்பத்தை சொல்லால் நிறைத்திருப்பார்.
கவிதையின் பாடுபொருளாய் எதைக்கொள்வதென்பது கவிஞனின் விருப்பம். அரசியல் தொடங்கி நிலவுடைமை, அதிகாரம் , சினிமாப் பாடல்கள் தழுவிய சொற்கள் என பல கருப்பொருள்கள் கவிதைகளாக அமைந்திருக்கின்றன.
//உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும் என
நம் சரோஜா தேவிகள்
நம்மைப் பார்த்து கண்களை சிமிட்டுகிறார்கள்//
நீங்கள் என்ன பதில் சொல்வீர்களோ அதையே இக்கவிதை சொல்கிறது. முதலில் உண்மை பின்பு சத்தியம்.
//நானொரு நீதிமானின் வார்த்தை
குழந்தையின் புன்னகை// எனத்தொடங்கி
நானொரு துன்மார்க்கன்
நானொரு அவிசுவாசி// என்று வெறுப்பின் இறுதியில் உண்மையைக் கக்கும் உன்னதவானாய் ஆகிப்போகிறீர்கள் இக்கவிதையின் ஊடாக.
//ஊதாரி மைந்தன் செலவழிக்கும்
தாலந்து என் இன்றைய நாள்
எப்படியும் மாலை
கைவிட்டு போய்விடும்// என்ற கவிதை "பத்து நிந்தனைகள்" என்ற உபதலைப்பில் அமைந்துள்ளது. ஊதாரி மைந்தர்களே நம் தாலந்துகளை பத்திரப்படுத்தி கொள்வோம். ஏற்கனவே சொன்னது போல தலைப்புகள் மட்டுமே ஒரு கவிதைகளாக தனித்து நிற்கின்றன.
"ஆல் தீ பெஸ்டின் புறவாசல்"
"கருவாட்டு ரத்தமூறிய இட்லி"
"ச்சியர்ஸ்"
"ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்"
"ஆஸ்பெஸ்டாஸ் அம்பாள்"
"வெட்டுக்கிளியை சூப்பர்மேக்ஸ் பிளேடுக்கு பழக்குதல்"
இதெல்லாம் சொர்ப்பம்தான். தமிழெனும் பெருங்கடலிலிருந்து சொல் உப்பெடுத்து உலர்த்திவைத்து கவிதை உணவுக்கு சுவை சேர்த்திருப்பது புதுமை.
``பின் தங்கியவர்களின் உயரம்`` எனும் கவிதையில் பனிச்சறுக்கு வீரர்கள் உச்சியில் இருந்து சறுக்கி வருகிறார்கள். வீழ்ந்தும்,பறந்து பாய்ந்தும், விரைந்து சரிந்தும் ஒருவரை ஒருவர் முந்தி வரும் வீரர்கள் ஓநாய்கள் போல இலக்கு எனும் இரையைத் தொடத் துரத்துகிறார்கள். ஒரே தாவலில் இலக்கை அடைகிறான் ஒருவன்.
// இரைக்கு பின்தங்கியவர்கள் பெருமூச்சைச் சொரிந்தபடி
மீண்டும் உயரத்தைப் பார்க்கிறார்கள்.
ஆம்
இரையை பள்ளத்தில் தள்ளிய உயரத்தைப் பார்க்கிறார்கள்// இரைக்கு பின்தங்கியவர்கள் உச்சியை அன்னாந்து பார்த்துவிடும் பெருமூச்சில் பற்றும் தீயில் இக்கவிதை நம்மைப் பற்றிக்கொள்கிறது.
ஆஸ்பெஸ்டாஸ் அம்பாள் டிஜிட்டல் நாகரீகத்தின் விளைவாக நகரத்தின் ஓரத்தில் அமர்ந்து பல சம்பந்தன்களுக்கு முலையூட்டிக்கொண்டிருக்கிறாள். மெட்ரோபாலிட்டன் நகரில் பரபரக்கும் சாலையில் விரையும் இருசக்கர வாகனத்தின் பின்னிருக்கையிலிருந்து இளம் மொட்டான மலரொன்று ஆபத்தான யூ டர்னில் சரிந்து விழு யத்தனிக்கும்போது என் ரத்தம் கொதித்துயர ஆரம்பித்தது. நல்ல வேளையாக இக்கவிதைச் சிறுவன் சேனலை மாற்றிவிட்டு கண்டாங்கி பாடலுக்கு தாவச்செய்தான்.
//தூக்கிட்டுக்கொண்டவளின் அறையிலிருந்து அகாலத்துக்குள் சிக்கிக்கொண்டு திணறுகிற மவ்னம் அறையை திறந்ததும் அலறியடித்துக் கொண்டு ஓடுவதைப் போல" என்ற கவியின் மௌனத்தில் கதறியழுது துடித்திறந்தது என் மனத்தின் பேரோசைகள்.
இறுதியாக, "எங்களிடம் நீர்முள்ளிப்பூக்கள் இருந்தன" என்ற கவிதையில் தாத்தாவிடம் இருந்ததும் இல்லாமல் ஆனதும் அல்லது பிடுங்கப்பட்டதும் அவருடையது மட்டுமல்லாது ஒட்டுமொத்த விவசாய தாத்தாக்களும் அவரது பரம்பரைகளும் இழந்ததே ஆகும் எனக்கண்டுணர்ந்தேன். மரண வீட்டிற்கு மீண்டும் போகும்போது அங்கு இறைந்து கிடக்கிறது நிம்மதி என்பதை விம்மலோடு விளக்குகிறது ஒரு கவிதை.
சமகால மீப்பெரும் கவிஞனின் கவிதை தொகுப்பை விமர்சிப்பதென்பது ஒரு விமர்சகருக்கு மிகப்பெரிய சாகசம். படிக்கும் போது மனதில் உதித்ததத்தனையையும் ஒரு சில வரிகளில் அடக்குவதென்பது இயலாது காரியமென்ற போதிலும் இயன்றவரை முயன்றிருக்கிறேன். அதேபோல, ஒரு வாசகனின் மனதிற்குள் தமிழ் சாட்சியாக கவிதையை கரம்பற்றிக் கொள்ளச்செய்கிறது இத்தொகுப்பு. இறுதிவரை மறக்கவே கூடாது எனும் நோக்கத்தோடு வாசகனுக்கு தேர்ந்த கவிதைகளை அள்ளி அள்ளி தருவது ஒரு சிறந்த கவிஞனின் கடமையாகும் போது கதிர் அதை பரிபூரணமாக செய்திருக்கிறார்.