யானையோடு
நேசம்கொள்ள எண்ணி இருக்கும் நாம்
முதலில்
தந்தத்தை நீவிவிட்டு நேசத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
துதிக்கைக்கு
முத்தங்கள் ஈந்தாலும் தப்பில்லை
அதுவும்
நேசத்தின் கணக்கில் சேரும்.
தேக்குமரத்
தூணையொத்த கால்களைப் பிணித்திருக்கும்
இரும்பு
சங்கிலியை அகற்றுவதும் நல்லதுதான்.
மத்தகத்தைப்
பாதிக்கும் அங்குசத்தை தூரதூரத்துக்கு
எறிந்துவிட்டால்
போதும்
யானை நம்மை
ஒரு குழந்தைப் போல தூக்கிக்கொண்டு
ஓடிக் களிக்க
ஆரம்பிக்கும்.
இப்போது
அதன் துதிக்கையில் ஒட்டியிருக்கும்
சப்பாத்திக்
கள்ளி முள்ளை எடுத்துவிட்டு
ஏற்பட்டிருக்கும்
சிறுகாயத்தின் மீது
நம் கவலையைப்
பூசிவிடுகையில் உணர்ந்துவிடும்
நேசத்தின்
ஆழத்தை. பிறகு,
அதன் பிரமாண்ட கனவுக்குள் எப்போதும் நமது ஆதிக்கம்தான்.
கவனம் நண்பர்களே,
ஆசீர்வாதம்
வாங்குவது யானைக்குப் பிடிக்கவே பிடிக்காது.
1 comment:
அது சரி யானைகிட்ட அழைச்சிக்கிட்டுப் போறது யாரு? ஆசிர்வாதம் செய்வது பிடிக்காதுதான், பாராட்டு. குதுகலிக்கிற யானை படம் சிறப்பு.
Post a Comment