21 March, 2012

அன்புள்ள கதிர்பாரதி... உங்கள் கவிதைகள் விஸ்தாரங்கொண்டு படிம அழகுடன், கற்பனை வீரியத்துடன், நல்ல கவிதைக்கான அமைதியுடன் இயங்குகின்றன.

அன்புள்ள கதிர்பாரதி

தொடர்மழை நாட்களில் உங்கள் கவிதைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடித்து, எப்படி எழுதலாமென யோசித்தபடி வெளியை வெறிக்கையில் அடுத்த மழை ஆரம்பித்திருந்தது. விட்டுவிட்டுப் பெய்கிற இந்த மழையைப் போலவேதான் உங்கள் கவிதைகளையும் என்னால் வெவ்வேறு இடைவெளிகளில் அணுகி ரசிக்க முடிந்தது.

நான் மிதவேகத்தில் வாசித்துச் செல்கிறவன். மிகுந்த நேசத்துடன் தேர்வு செய்த புத்தகத்தை ஒரு இரவில், ஒரு அமர்வில் என்னால் வாசிக்க முடிந்திருக்கிறது. அப்படி வாசித்தவை எல்லாம் புதினங்களாகவோ, கதைகளாகவோ இருந்திருக்கின்றன.

ஒருபோதும் ஒரேமூச்சில் கவிதைகளை வாசித்த நினைவில்லை எனக்கு. அவ்வாறு எளிதில் அனுபவித்துக் கடந்து சென்றுவிட முடியாத கலை வடிவம் கவிதை.

ஒரு நல்ல கவிதையை வாசித்துத் துய்ப்பதைக் காட்டிலும் பேரின்பத்தை எனக்கு மதுவோ, வேறு வகையான லாஹிரிகளோ, இளம் பெண்ணொருத்தியின் அருகாமையோகூட உணர்த்தியதில்லை.

கவிதைகளிலிருந்து கிளம்பி வந்தவன் நான். என் பள்ளிப் பிராயம் நெடுக கவிதைகளே வழிந்து கொண்டிருந்தன. அந்த ஈரப் பிசுபிசுப்பு காயாமல் என் எழுத்துக்களின் மேல் அந்த வீச்சம இன்றைக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது.

ரொம்ப நாளாச்சு

கவிதையைத் திரும்பிப் பார்த்து

வெள்ளையே நீளமான

தாளைப் பார்க்கும்போதெல்லாம்

நினைவுகளில் நனைந்த கவியம்மா

குப்புறப் படுக்கிறாள்

நெளிகிறாள்

மதமதவென மாரை நிமிர்த்தி

பெருமூச்செறிகிறாள்

ஒருதுளி கண்ணீர் வேணுமாம்

மையாய் கண்பிறைச் சிமிழிலிருந்து

பார்வைச் சீர் ஒன்று வேணுமாம்

உணர்ந்து சொட்டும் ஒரு துளி வியர்வை

வறுமை பிணி கோபதாபம்

துணிச்சல் வேணுமாமே

என்ன இருக்கு என்னிடம்

பேனாவைத் தவிர...

என்று தஞ்சை ப்ரகாஷ் கேட்கிற மாதிரித்தான் எனக்கு உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது. என்னவோ கவிதைக்கும் எனக்கும் ஒரு இடைவெளி விழுந்தமதிரியும், அப்படியெல்லாம் இல்லை இல்லை என்று ஒரு குரல் மறுக்கிற மாதிரியும்தான் இதோ உங்கள் கவிதைகள் அச்சு அசலாய் வாழ்க்கையின் கனவுகளைக் கண்ணீரை காமத்தை ஒருவித யவ்வனமான மொழியில் பகிர்ந்தபடி எனக்கு முன்னால்...

இத்தனை அனுபவங்களை இத்தனை இதழ்களில் எழுதிப் பார்த்திருக்கிற நீங்கள், “பத்தாண்டுகளாக எழுதியவற்றைக் கிழித்துப் போட்டுவிட்டேன். இவை புத்தம் புதியவைஎன்று சொன்னபோது என் மனசு பதறியது. ஏன் அவற்றையெல்லாம் நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது புரியவில்லை. புதியவை என்று நீங்கள் சொல்வதைக் காட்டிலும், புதியவை ஒன்றிரண்டேனும் அதில் இருந்திருக்கக் கூடுமென்றே எனக்குத் தோன்றுகிறது. இவற்றை வாசித்து முடித்த கையோடு உங்கள் பழைய கவிதைகளையும் வாசிக்க வேண்டுமென்ற ஆவல் தோன்றுகிறது. நீங்கள் எப்படித் தரப்போகிறீகள்? நானோ, கவிதையில் அகரம் எழுதிப் பார்த்தவற்றையெல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். நடந்து பழகிவிட்டோம் என்று நடைவண்டியை முறித்துப் போடுவது உகந்ததாக எனக்குப் படவில்லை.

2000 வாக்கில் நாம் தஞ்சையில் ஒரு இலக்கிய நிகழ்வில் சந்தித்ததாய்க் கூறினீர்கள். நிச்சயம் சந்தித்திருப்போம். உங்கள் பழைய கவிதைகளை நீங்கள் அழித்துவிட்டதைப் போலவே ஒரு பத்து வருடங்களுக்கு முந்தைய உங்கள் முகம் என் ஞாபகத்திலிருந்து நீங்கி, இன்றைய உங்கள் முகம் என்னுள் தெளிவாகப் பதிந்திருக்கிறது.ஏற்கனவேயும் இப்போதுமான நீங்கள்தானே உங்கள் கவிதைகள். எனவே முகம் இடம் நிகழ்வு தருகின்ற நியாபகங்களைக் காட்டிலும் இந்தக் கவிதைகள் உங்களை காட்டித் தருகின்றன. நீங்கள் யார்? உங்கள் நதிமூலம் எது எல்லாமும் எனக்கு இப்போது தெளிவு. இந்தக் கவிதைகள்தான் நீங்கள். இவைதாம் கடைசிவரைக்குமான உங்களின் அடையாளம்.

கடவுளின் அந்தப்புரம் கவிதைகளில் பெரும்பாலானவை எனக்குப் பிடித்திருக்கிறது. இவற்றுள் கம்யூனிஸப் பின்னணி கொண்ட தஞ்சை வட்டார விவசாயக் குடும்பத்தின் இளம் உறுப்பினர் ஒருவரின் கலாபூர்வமான வாழ்க்கைப் பார்வை விரிகிறது. ஒவ்வொன்றும் உயிர்த்துடிப்புடன் அன்றைக்கு ஜெனித்த சிசுவாய், ஈர நிலம் கீறி முளைவிட்ட தளிராய் பரவசமான அனுபவங்களைத் தந்து நிற்கின்றன.

வெயிலுக்குப் பொருக்குத் தட்டிவிட்ட அறுவடைக்குப் பிறகான விளைநிலத்தில் வெற்றுப் பாதங்களுடன் நடக்கும் விவசாயியாக, பிரிவின் பசலைக் கொடிக்கு உயிரைப் பந்தலாக்கும் காதலனாக, கார் பொம்மையை உருட்டிக்கொண்டு நடுசாமத்தோடு விளையாடும் குழதைக்குத் தகப்பனாக, நம் பெண்களின் கற்பைப் போல பெலன் தந்த நிலத்தை மீட்கத் துடிக்கும் பாரம்பரியப் போராளியாக, அதிரப் புணர்கையில் எழும்பும் இசையை மாரிக்கால குளத்துத் தவளை தத்திச் செல்வதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் காமுகனாக (மலையாளத்தில் காமுகன் என்றால் காதலன், கணவன் என்றெல்லாம் நல்ல பொருள் உண்டு) பல ரூபங்களில் உங்கள் கவிதைகள் விஸ்தாரங்கொண்டு படிம அழகுடன், கற்பனை வீரியத்துடன், நல்ல கவிதைக்கான அமைதியுடன் இயங்குகின்றன.

உங்கள் பிச்சி என்னை மிகவும் பாதித்திருக்கிறாள்.

முலைகள் அதிர அதிர அலைகளின் முற்றத்தில்

அவள் சமீபிக்கையில்

பய்ந்து உள்வாங்கியது அந்த நீலப்பள்ளம்

........

சுமக்குமளவுக்கு முந்தானையில்

மணலை முடிந்தவள்

தன் முலைகளுக்கு நடுவில் பொதிந்து

கண்ணயர்ந்தாள்

என்றெல்லாம் நீங்கள் எழுத எழுத ஒரு மகத்தான கதாபாத்திரத்தை என்னால் காட்சி ரூபமாக தரிசிக்க முடிந்தது.

ஈரமற்று கானல் ஓடும் நதியில்

மூர்ச்சையற்று மிதந்த பிம்பத்தை

சுமந்து வந்து கண்ணம்மாபேட்டையில்

எரிக்கையில் துளிர்ந்த வியர்வையில்

சற்றே உப்பு கரிக்கிறது பிழைப்பு

என்று வாசிக்கையில் பெருநகரப் புகை நெரிசலில் மூச்சுத்திணரும் ஒவ்வொருவருக்குமான அனுபவமாக உறைக்கிறது.

நீங்கள் தொடர்ந்து நிறைய எழுதலாம் கதிர்பாரதி. சிறுகதைகளிலும் கவனம் செலுத்தலாம் என்று தோன்றுகிறது. கதைகளும் கவிதைகளுமாய் நீங்கள் இடைவெளியில்லாது பயணிக்கையில் தமிழின் புதிய தலைமுறைப் படைப்பாளிகளில் கவனத்துக்குரியவராய் வெகு சீக்கீரமே மாறிவிடுவீர்கள்.

மறுபடியும் சந்திப்போம்.

கீரனூர் ஜாகிர்ராஜா

15.12.2011

3 comments:

Unknown said...

Good review and view.

நிலாமகள் said...

கீர‌னூர் ஜாகீர்ராஜாவின் ம‌திப்பீட்டில் உங்க‌ள் ம‌திப்பு மேலும் உய‌ர்ந்து ஜொலிக்கிற‌து.

KavingarArunbarathi said...

இளம் கவிஞர். கதிர்பாரதியைப் பற்றிய, மற்றும் அவரது படைப்புலகம் பற்றிய தெளிவான பார்வையை முன் வைத்துள்ளார் கீரனூர்.ஜாகிர் ராஜா