17 March, 2012

முல்லைப் பெரியாறு எங்க குலசாமிங்க





முல்லைப் பெரியாறு பற்றிப் பேச ஆரம்பித்தாலே ஒருவிதமான கொதிநிலைக்கு வந்துவிடுகின்றனர் தென்மாவட்டவாசிகள். அதிலும் தேனி மாவட்டவாசிகள் இன்னும் ஒரு படி மேல். ’’எங்க நாடி நரம்புல ஓடுறது ரத்தமில்லைங்க. முல்லைப் பெரியாறு தண்ணி. இந்த ஆறு மட்டும் இல்லைன்னா இன்னும் எங்க சமூகம் திருடிக்கிட்டுதான் இருந்திருக்கும். எங்களை பசியில்லாம வாழவைக்கிற குலசாமி முல்லைப் பெரியாறு” என்று உணர்ச்சிவசப் படுகிறார் பாலாறுப்பட்டி ஆண்டி. இவர் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் என்ஜினியர் பென்னி குவிக் பெயரில் ஒரு எழுச்சிப் பேரவையை ஆரம்பித்து அதன் மாநிலத் தலைவராக இருக்கிறார்.
ஆண்டி சொல்வதில் துளியும் மிகையில்லை. தென்மாவட்டத்தின் பொருளாதாரத்தை முல்லைப் பெரியாறு அணைக்கு முன் முல்லைப் பெரியாறு அணைக்குப் பின் என்று பிரித்துவிடலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கியே ஓடி வீணாக அரபிக் கடலில் விழுந்த நதியை வடக்கு நோக்கித் திருப்பிவிட்டு தென் மாட்டங்களின் வறட்சியைப் போக்க உருவான உன்னதமான திட்டம் முல்லைப் பெரியாறு அணை. முல்லைப் பெரியாற்றைத் வடக்குப் பக்கம் திருப்பி வைகையோடு இணைத்தப் பிறகுதான் வைகையில் இன்னொரு அணை கட்டி நீர்த்தேக்கி விவசாயத்தின் பக்கம் மக்களைத் திருப்பி விட முடிந்தது. வருஷநாட்டு மலையில் உற்பத்தி ஆகும் வைகை நதிக்கு மயிலாடும்பாறை கடமலைகுண்டு வழியாக குண்ணூர் வருகிறவரைக்கும் வள்ளல் நதி என்று பெயர். அது வைகை அணையில் சேர்ந்த பிறகுதான் வைகை நதியாகி மதுரை மாவட்டத்துக்கு வளம் சேர்த்து ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் கண்மாயில் சங்கமமாகிறது. வைகை அணை கட்டிண பிறகு மட்டும் மதுரை மாவட்டத்தின் விவசாயப் பகுதி 1,86,000 ஏக்கர் அதிகமானதற்கு காரணம், முல்லைப் பெரியாற்றுத் தண்ணீர்தான். வைகை நதியின் மொத்த நீரில் தொண்ணூறு சதவிம் முல்லைப் பெரியாறு தன்ணீர். பத்து சதவிகிதம்தான் வள்ளல்நதி.




”தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்... மாவட்டங்களின் நீர் ஆதாரமே முல்லைப் பெரியாறுதான். இந்த ஐந்து மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 12 லட்சம் ஏக்கர் பாசனத்துக்காக முல்லைப் பெரியாற்றைத்தான் நம்பி இருக்கின்றன. இவற்றில் நன்செய் நிலம் மட்டும் 5 லட்சம் ஏக்கர்; புன்சென் மற்றும் தோட்டக்கால் பகுதி 7 லட்சம் ஏக்கர். இந்த பண்ணிரண்டு லட்சம் ஏக்கர் நிலத்தையும் பாலைவனமாக மாற்றப் பார்க்கின்றனர் கேரள அரசியல்வாதிகள்” என்று ஆதங்கப்படுகிறார் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்தில் அடாவடித்தனத்தை உச்சநீதிமன்றம் வரைக்கும் கொண்டு சென்றதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.
“கேரளாவின் விவசாய நிலங்களில் ஒரு குண்டுமணி அளவு நிலம்கூட முல்லைப் பெரியாற்று தண்ணீரை நம்பி இல்லை. கேரள விவசாயத்துக்குப் பயன்படும் நாற்பதுக்கும் அதிகமான நதிகளின் தண்ணீரீல் பயன்பாட்டுக்குப் போக மீதம் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமான தண்ணீர் அரபிக் கடலில்தான் வீணாகக் கலக்கின்றன. ஆனால், கேரளத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களில் 68 சதவிகிதம் தமிழ்நாட்டிலிருந்துதான் போகின்றன. அதற்கு முக்கிய காரணம் முல்லைப் பெரியாறு. உணவுப் பொருட்கள் மட்டுமல்ல கால்நடைகள், ஆற்று மணல், கோழி இறைச்சி உட்பட சகலமும் இங்கிருந்துதான். ஆனால், முல்லைப் பெரியாற்றை உடைக்க வேண்டும் என்று கேரளா கங்கணம் கட்டிக்கொண்டு திரிவது சந்தர்ப்பவாத அரசியல்” என்கிற அப்பாஸ், “கேரளாவின் மின்சாரத் உற்பத்தித் தேவைக்கான தண்ணீரைத் தவிர வேறு எதற்கும் முல்லைப் பெரியாற்றைச் சார்ந்திருக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு அப்படி அல்ல. 152 அடி கொள்ளளவு வரைக்கும் நீர்த்தேக்கினால் 120 மெகாவாட் வரைக்கும் மின்சாரம் தயாரிக்கலாம். ஆனால் 136 அடிதான் தண்ணீர்த் தேக்கலாம் என்றான பிறகு 40 லிருந்து 60 சதவிகதம் வரைக்கும்தான் மின்சாரம் எடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. இதனால்தான் தென்மாவட்டங்கள் நாளொன்றுக்கு எட்டு மணிநேரத்துக்கும் அதிகமான மின்வெட்டில் தவிக்கின்றன. தொழில்கள் முடங்குகின்றன.” என்கிறார் அப்பாஸ்.
’’152 அடியிலிருந்து 136 அடியாக முல்லைப் பெரியாற்றின் நீர்த்தேக்கத்தைக் குறைத்தப் பிறகு தமிழகம் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல. கடந்த 32 வருடங்களாக 14 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்உற்பத்தியே இல்லாமல் போய்விட்டது. எனில், தேனி மாவட்டம் நெல் உற்பத்தி மட்டும் செய்யவில்லை. நவதானியங்கள் உற்பத்தியில் முக்கிய இடமுண்டு. அதன் உற்பத்தி அளவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 12 ஆயிரம் மெட்ரிக் டன் கால்நடைக்கான தீவன உற்பத்தியை இழந்திருக்கிறோம். தினசரி பால் உற்பத்தியில் ஒரு லட்சம் லிட்டர் உற்பத்தி இல்லை. 86,000 ஏக்கரில் விவசாயமே இல்லாமல் பொய்த்துப் போயிற்று. 152 அடி தண்ணீர்த் தேக்கி இருந்தால் 15.56 ட்.எம்.சி. தண்ணீர்த் தேங்கி இருக்கும். அதில் கிடப்பு நீர் 5 டி.எம்.சி. தண்ணீர் போனாலும். மீதமுள்ள 10 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்திருக்கும். அந்த்த் தண்ணீரைக் கொண்டு ராமநாதபுரம் தொண்டி வரைக்கும் செழிப்பாக இருந்திருக்கும். ஆனால், இப்போது 136 அடி மட்டும் தண்ணீர் தேங்கறதால 10 டி.எம்.சி. தண்ணீர்தான் தேங்குது இதில் கிடப்பு 4 டி.எம்.சி. மீதமுள்ள ஆறு டி.எம்.சி. தண்ணீரை நம்பிதான் 62 ஆயிரம் சிறுகுறு விவசாயிகள் இருக்கிறோம். 2.62 லட்சம் விவசாயக்கூலிகள் இருக்கிறோம். இப்போ 136 அடியை 120அடியாக குறைக்கச் சொல்லுது கேரளா. அப்படி ஆச்சுன்னா ஒரு டி.எம்.சி. தண்ணிக்கூட்த் தமிழகத்துக்கு வராது. தென் தமிழகமே பாலைவனமாக மாறிப் போகும். அப்புறம் கேரளா உணவுப் பொருளுக்கு திண்டாட வேண்டியதுதான்.” என்கிற கே.எம்.அப்பாஸ், ”அணையின் நீர்மட்ட்த்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். அணைக்கட்டு உள்ள 8104 ஏக்கர் பகுதி 999 வருடங்களுக்கு தமிழகத்துக்கு லீசுக்கு விடப்பட்டிருக்க அதில் 4000 ஏக்கரை கேரளா ஆக்கிரமித்துவிட்ட்து அதையும் மீட்கணும். 104 அடிக்கு சுரங்கம் அமைத்துத் தமிழகத்துக்குத் தண்ணீர்க் கொண்டு வருவது போல 50அடிக்கு இன்னொரு சுரங்கம் தோண்டி தமிழகத்துக்குத் தண்ணீர் எடுத்தால், 130அடிக்கு மேல் தண்ணீர் ஏற்ற வேண்டாம். இதனால் அணை உடையும் என்கிற கேரளாவின் அபத்தமான வாதமும் உடையும். கேரளாவும் இடுக்கிக்கும் முல்லைப் பெரியாறுக்கும் இடையில் நாற்பதுக்கு மேற்பட்ட செக் டேம் கட்டிக்கலாம்

உறுதியானதுதான் முல்லைப் பெரியாறு:

”கேரளா சொல்வது போல் பலவீனமானது இல்லை முல்லைப் பெரியாறு அணை. இந்தியாவில் இருக்கிற 16க்கும் மேற்பட்ட அணைகளில் மிகவும் பலமானது இதுதான். கிட்ட்த்தட்ட 1000 வருடங்களுக்கு இன்னும் உறுதியாக இருக்கும். இது நான் சொல்லவில்லை அணையின் பலத்தை ஆராய்ந்த டெல்லி மண்ணியல் ஆய்வாளர்கள் சொன்னது” என்கிறார் எஸ்.அப்பர் ராஜா. இவர் தமிழ்க வேளாண்மைத் துறையின் உதவி வேளாண்மை அலுவலராக ஓய்வு பெற்றவர். இப்போது தமிழக நீர் ஆதாரங்கள், அணைகள் குறித்த விழிப்புணர்வுகளை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருப்பவர். “சுர்க்கி என்கிற கட்டுமானப் பொருட்களின் கலவை கொண்டு கட்டப்பட்ட்து முல்லைப்பெரியாறு. இந்தக் கலவை நாளாகநாளாக இறுகி பாறையாகவே மாறிவிடும் இயல்புகொண்டது. அணைக்கட்டின் சுரங்கக் கசிவு (அணையின் வியர்வை) ஒரு நிமிடத்துக்கு 250 லிட்டர் வரலாம். ஆனால், கட்டிமுடிச்சு நூறு வடங்களுக்குப் பிறகும் வெறு 45 லிட்டர்களுக்கும் கம்மியாதான் முல்லைப் பெரியாற்றில் கசிவு இருக்கு. இன்னும் சொல்லப் போன முல்லைப் பெரியாறுதான் கேரளாவைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாற்றின் 10 டி.எம்.சி.தண்ணீர்த் தேங்கக்கூடிய 8000 ஏக்கர் பகுதிகளில் இருக்கிற 23 குண்றுகள் தண்ணீரின் அழுத்தத்தை சம்மாகப் பிரித்துக்கொண்டு தாங்குகின்றன. இதனால் அணையின் மீது தண்ணீரீன் அழுத்தம் மிகக் குறைவு. அதனால மட்டுமில்லை கர்னல் பென்னிக் கு தம் சொந்தக் காசைப் போட்டுக் கட்டியிருக்கார் அதனால் அணை கண்டிப்பாக உறிதியாக இருக்கும். ஆனால், 70 டி.எம்.சி. தண்ணீர் தேங்கக்கூடிய இடுக்கி அணையில், மொத்த தண்ணீர் அழுத்தத்தையும் அணை மட்டுமே தாங்குவதால்தான் கேரளாவில் இப்போது நிலநடுக்கம் அதிகமாகி இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டால் அந்தத் தண்ணீரும் இடுக்கி அணையில் சேரும் இன்னும் அழுத்தம் அதிகமாகும். அதனால் தினமும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் கேரளா இடுக்கி அணையின் நீர்த் தேக்கத்தைக் குறைப்பதே நல்லது” என்கிறார் அப்பர்ராஜா.

கேரளா கட்டிய இடுக்கி அணை

1976 ஆம் ஆண்டு கேரள முதல்வராக அச்சுதமேனன் பொறுப்பில் இருந்தபோதுதான் இடுக்கி அணை கட்டப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் உபரித்தண்ணீர் வழியும் மேற்குப் பகுதியிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது இடுக்கி அணை.இது முல்லைப் பெரியாறு அணையைக் காட்டிலும் ஏழுமடங்கு பெரிது. இதன் நோக்கம் கேரளாவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மின் உற்பத்தி செய்வதுதான். ஆனால், எதிர்பார்த்த நீர் வரத்து இல்லாததால் எதிர்பார்த்த அளவு மின்சார உற்பத்தியும் இல்லை. அப்போது தமிழ்நாட்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் கேரள முதல்வர் அச்சுதமேனுக்கும் 25.11.1979 அன்று ஓர் ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது. அதில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்த் தேக்கத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக்கொள்வது என்றும், இடுக்கி அணைக்கான நீர் ஆதாரத்தை கேரள அரசு உருவாக்கிக் கொண்ட பிறகு முல்லைப் பெரியாற்று அணையின் கொள்ளளவை மீண்டும் தமிழகம் 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் ஆகிறது. ஆனால், இடுக்கி அணைக்கான நீர் ஆதாரம் பெருகிய பிறகும் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரைத் தேக்க கூடாது என்று கடந்த முப்பத்துரெண்டு வருடங்களாக முட்டுக்கட்டைப் போட்டு வருகின்றன. இப்போது இருக்கிற 136 அடியைக்கூட 120 குறைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன. இதில் அணையை உடைப்போம் என்ற கோஷம் வேறு. இதனால் அதிகம் பாதிக்கப்படபோவது கேரளாதான் என்பதை கேரள நடுநிலையாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.




முல்லைப் பெரியாறு அணை உறுவான கதை:

முல்லைப் பெரியாறு அணை உருவாக முதல் மூளையாக இருந்தவர் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் மந்திரி முத்து அருளப்ப பிள்ளை. ராமநாதபுர சமஸ்தானத்தின் வறட்சியைப் போக்க முல்லைப் பெரியாற்றுப் படுகையை இவர் தலைமையில்தான் ஒரு குழு 1798ல் ஆராய்ந்திருக்கிறது. இப்போது அணை இருக்கும் பகுதி தேர்வு செய்யப்பட்டாலும் பட்ஜெட் இடிக்கவே திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் 1807 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை கலெக்டர் அணைக் கட்டத் திட்டமிட்டப்போது இது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என்று அப்போதைய மதுரை மாவட்டப் பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல் நிராகரிக்கிறார். பிறகு 1837 ஆம் ஆண்டு கர்னல் பேபரும் 1867 இல் மேஜர் ரைவ்ஸும் அணைக் கட்டுவதில் ஆர்வம் காட்டினாலும் அப்போதைய பொறியாளர்களின் எதிர்ப்பால் கைகூடாமல் போனது. போதாதற்கு 1876இல் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சமும் தன் பங்குக்கு அணை கட்டும் திட்டத்தைப் பதம் பார்க்கிறது. இதுவரை முல்லைப் பெரியாற்றை மேற்கிலிருந்து கிழக்காகத் திருப்பும் திட்டம்தான் இருந்தது. ஆங்கில கர்ணல் பென்னி குக்தான் பெரியாற்றை மேற்கிலிருந்து வடக்காக மாற்றுவதன் மூலம் வறண்டப் பகுதி செழிக்கும் என்று 1882 இல் திட்ட வரவை முன் வைத்தார். இதற்கு 1885 ஆம் ஆண்டுதான் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வெனிலாக் அனுமதிக்க, பென்னி குக் தலைமையில் அணை கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கின்றன. அப்போது அணையின் திட்ட மதிப்பு வெறும் 62 லட்சம்தான். பாதி கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இயற்கை சீற்றத்தால் அணை தகர்ந்து போக மீண்டும் ஆங்கிலேய அரசு, திட்டத்துக்கு நிதி ஒதுக்க மறுத்த்தால், தன் மனைவியின் நகைகளையும் சொந்த சொத்தையும் விற்று 165 அடி உயரம் கீழே 144.5 அடி அகலம் அணையின் மேல் 12 அடி அகலம் கொண்ட பலமான முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடிக்கிறார் பென்னிக் குக். அந்த அணையைத்தான் இப்போது பலமில்லை என்கிறது.

இடம் தமிழகத்துக்குச் சொந்தமானது

தற்போது அணை இருக்கும் பகுதி 12 நூற்றாண்டு வரை மதுரையை ஆண்டு வந்த பாண்டியர்களுக்குச் சொந்தமானப் கூனியாறு சஸ்தானம். கூனியாற்றுத் தம்பிரான் மன்னர் தமிழகத்தைச் சார்ந்தவர். இந்த விவரம் தெரியாமல் அப்போதைய ஆங்கில அரசாங்கம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு 1886 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து பிரச்னைக்குப் பிள்ளையார் சுழிப் போட்டது. அணை இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் இன்றைக்கும் எண்பது சதவிகிதத்தும் அதிகமானோர் தமிழர்கள் என்கிறது தமிழக பொறியாளர் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் குறுந்தகடு!

நன்றி: கல்கி (04.03.2012) தேனி மாவட்டச் சிறப்பிதழ்

No comments: