15 November, 2011

விதைநெல் பிரிக்கும் இக்கோடையில் நிகழாதிருந்திருக்கலாம்

துளிர்ப்பு திகைந்தாயிற்று
வேம்பின் பொன்தளிர்களை
ஆராதிக்கத் துவங்கிவிட்டது கோடை
புளிப்பு சுவைகூட்டிய மாங்காயைக்
கடித்துவிட்டு மிழற்றுகிற கிளிக்காக
இதமிதமாய் பெய்யும் இனி புன்செய் வெயில்
ஊருக்குள் புகுந்து மாயமோகினியென
எழுந்து சுழலும் சூறைக்காற்றைத்
துரத்தியோடி களிப்பார்கள் சிறார்கள்
வாதநாராயணன் தன் சக்கரவடிவ பூக்களை
காற்றின் போக்கில் உதிர்த்து விளையாடும்
மகசூலை களஞ்சியத்தில் சேர்த்துவிட்டு
சோம்பித் திரிகிற குடியானவன் மீது
கொட்டிக் குளிர்விக்கும் பெருமழை
சோபிதம் கொண்டொளிரும் அந்தியிலிருந்து
அசைபோட்டபடி மந்தைக்குத் திரும்பும்
பசுவின் முதுகில் கொண்டலாத்தி குகுகுகுக்கும்
நல்லேர் பூட்டி தானியங்களைத் தூவிவிட்டு வந்து
அடுத்த வெள்ளாமைக்கு விதைநெல் பிரிக்கும்
நல்சகுனங்கள் நிரம்பிய இக்கோடையில்
நிகழாதிருந்திருக்கலாம் உன் பிரிவு

நன்றி: புன்னகை கவிதை இதழ்

4 comments:

ச.முத்துவேல் said...

ஒரு சங்ககாலக் கவிதையைப் படித்ததுபோன்று, நிறைவாக உள்ளது.

ராமலக்ஷ்மி said...

காட்சிகளைக் கண்முன் கொண்டு வரும் அழகான வரிகள்.

ஹ ர ணி said...

நெருக்கிப் பின்னப்பட்ட நெசவாடையின் வண்ணங்களைப்போல நேர்த்தியான சொற்களில் வடிவாய் அமைந்த கவிதை. அழகூட்டுகிறது.

மிழற்றுதல் / மிளற்றுதல் அல்ல
சூறைக்காற்று/ சூரைக்காற்று அல்ல

நிலாமகள் said...

கோடையின் ந‌ல்ச‌குன‌ங்க‌ளை அழ‌க‌ழ‌காய் தேன் த‌மிழில் மிழ‌ற்றிவிட்டு இறுதியாய் ப‌ட‌க்கென‌ சோக‌ம் க‌வ்வ‌ச் செய்த‌ க‌விதை.