25 August, 2011

முறுவல்

நிறைசூலியான பசும்நாற்றுகளில் திகைந்துவிட்ட
புகையான் குறித்து அங்கலாய்க்கும்
விவசாயி போலிருந்தது
வண்டல் வண்டலாய்ப் பெருக்கெடுத்த
உன் சோக முறுவல்

நீர்ப்பெருக்கத்தில் சலசலக்கும் வாமடையென
மனம் சஞ்சலத்தில் சப்தித்துத் திணறுகிறது

தூர்களிடை நெளிந்தூரும் நாகத்தின்மீது
தவறிவிழுந்து அரற்றுகிற தவளையாய்
காற்றில் சிதறியலையும் உன் பார்வையில்
அச்சமுறுகிறேன்

விஷந்தேக்கித் திரியும் நட்டுவாகளிக்கு
வழிவிட்டு வரப்பிலிருந்து இறங்குவதென
இறங்கிவிட முடியுமாவென அறிந்தேனில்லை
உன்னிலிருந்து

பெருங்காற்றுக்கு வீழ்ந்துபட்ட கருவேலத்திலிருந்து
தனித்துக் கிளம்பிவிட்ட தூக்கணாங்குருவியின்
இருப்பை நினைவுறுத்தி ஊசலாடும் கூட்டை
ஆறுதலாக்கிக் கொள்கிறது பொழுது

முதிர்ந்தும்முதிராத முலைகளின்
இளஞ்சூட்டுக்கு இணக்கமாய்
சூடும் சுவையுமுடைய உன் முறுவலைப்
பத்திரப்படுத்துகிறேன்
நடுக்கமுறும் எனது கூதிர்காலத்தை
பொதிந்து வைக்கலாமென்று

9 comments:

நேசமித்ரன் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு கவிதை :)

ச.முத்துவேல் said...

புகையான், வாமடை என்று என் தேடலை அதிகப்படுத்திவிட்டீர்கள்.

(இரா.பச்சியப்பன் கவிதைகள் நினைவுக்கு வந்தது.)
எல்லோருக்கும் கிடைப்பதில்லை, இப்படியானவொரு தகவல் பின்புலங்களை இயல்பாக அறிந்து வளரும் வாழ்வு.
கவிதை நன்றாக உள்ளது.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமையா இருக்கு...
வாழ்த்துக்கள்.

கதிரவன் said...

எப்பவும் போல... உங்கள் புரியாத கவிதையைப் படிச்சு நான் புரிஞ்சிக்கிறதுக்கு சில மணி நேரம் ஒதுக்கனும். எனக்கு நேரமில்லாத காரணத்தால்.... நான் படிச்சேன், புரியலை.. புரிஞ்சுக்க விரும்பலை...

manichudar blogspot.com said...

விவசாயியின் அங்கலாய்ப்பின் ஊடாக ,சப்தித்து திணறி,தவளையின் அரற்றலாய்,வரப்போடும் பயணித்தும் ஆறுதலாய் ஒரு சோக முறுவலை பத்திரப்படுத்துவது வியப்பை தருகிறது.

அகநாழிகை said...

அருமை கதிர்.

கிருஷ்ணப்ரியா said...

வயலும், வாழ்வும்.....பின்னி பிணைந்திருக்கும் இந்த கவிதை மனதை கொள்ளை கொள்கிறது கதிர்......

"இளஞ்சூட்டுக்கு இணக்கமாய்
சூடும் சுவையுமுடைய உன் முறுவலைப்
பத்திரப்படுத்துகிறேன்"

ரொம்ப அழகாய் இருக்கு.....

Unknown said...

ஒப்புமை காட்சிகள் நன்றாக உள்ளன. கவிதை தாங்கி வரும் செய்தி நடவு விட்ட வயல் நடுவே நடப்பட்ட வேளாண்துறை விளம்பர பலகை மாதிரி .

Thenammai Lakshmanan said...

விஷந்தேக்கித் திரியும் நட்டுவாக்கிளி நல்லா இருக்கு..:)