21 July, 2011

பிச்சி

பிச்சியாகிச் சுற்றிவருகிறாள் கடல்தேவதை
தஞ்சையின் கிழக்குக் கடற்கரைசாலையில்

சடைத்த தலைமுடிகளில்
ஊழிக்கூத்தின் வெக்கையும் பிசுபிசுப்புமாய்ப்
போய்க்கொண்டிருந்தவள்
சாலையின் வெயிலில் காயும் மச்சங்களுக்காய்
மார்பறைந்து சிந்தினாள்
கண்களிலிருந்து துளித்துளி கடல்களை

முலைகள் அதிர அதிர அலைகளின் முற்றத்தில்
அவள் சமீபிக்கையில்
பயந்து உள்வாங்கியது அந்த நீலப்பள்ளம்

வாய்க் குதப்பி உமிழ்ந்தாள் வசவுகளை
இருண்டு மருண்டிருந்த கடல்மீது
அந்தக் கொடி பொருந்திய கப்பல்
அவளை அதிஉக்கிரமாக்கியது

கடற்காகங்களைத் தடுத்தாட்கொண்டு
சில வார்த்தைகள் உபதேசித்து
அதனைக் கொண்டுசேர்க்கும்படிக்குப்
பிரயோகித்தாள் தமது அதிகாரத்தை

தொடுவானுக்கும் அவளுக்குமிடையில்
தத்தளித்துத் தவித்த கடலை
யாரேனும் ஒருவர் காத்தருளினால்
தேவலாம் போலிருந்தது

சுமக்குமளவுக்கு முந்தானையில்
மணலை முடிந்தவள்
தன் முலைகளுக்கு மத்தியமத்தில் பொதிந்து
கண்ணயர்ந்தாள்

அவள் கால்களைத் தழுவி நழுவியோடியது
ஒரு சிற்றலை

8 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை மிகவும் அருமை.

கிருஷ்ணப்ரியா said...

அழகான கவிதை....வார்த்தைகளில் நெளியும் நளினம் காட்சியை கண் முன் நிறுத்துகிறது...... பாராட்டுக்கள் கதிர்....

பவித்ரா நந்தகுமார் said...

pichiyai kanmunnae partha mathiri irunthathu.sutru payanathin bothu partheengala?

ச.முத்துவேல் said...

(பல கவிதைகளிலும்)இயற்கையியலில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டைக் காட்டுகின்றன வரிகள்.கடற்காகம், பிச்சி...
இவற்றையெல்லாம் அறிந்துகொள்வது எளிதானதல்ல என்பது எனக்கும் தெரியும். தேடலுள்ள ஒருவரைப் பார்க்கும்போது, எனக்கு ஆறுதலாயிருக்கிறது. கவிஞர்கள் என்பவர்கள் இப்படித்தானே இருக்கமுடியும்.

சத்ரியன் said...

//கண்களிலிருந்து துளித்துளி கடல்களை...

முலைகள் அதிர அதிர
அலைகளின் முற்றத்தில்
அவள் சமீபிக்கையில்
பயந்து உள்வாங்கியது
அந்த நீலப்பள்ளம்...//

அதிர வைக்கும் சொற்பிரயோகம். அசத்தலான நடை.

Amirtham surya said...

அழகிய புனைவு..வாழ்த்துக்கள் நண்பா

Thenammai Lakshmanan said...

அலைக்குள்ளே பொதிந்த மாதிரி ஆகிவிட்டது..:)

Thenammai Lakshmanan said...

அலைக்குள்ளே பொதிந்த மாதிரி ஆகிவிட்டது..:)