12 May, 2016

வாசல் தெளிப்பின் மணம்… -ந.பெரியசாமி

அதிகாலையில் அம்மா தெளிக்கும் சாணத்தின் மணம் நிலத்தின் மணத்தோடு சேர்ந்து வெளியேற விழிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலான குடும்பங்களில் வாசல் தெளிப்புக்குப் பின்னரே வீட்டிலிருக்கும் ஆண்களை வெளியேற்ற அனுமதிப்பார்கள். வீட்டையும் நிலத்தையும் என்றும் நினைவில் வைத்திரு என்பதாகப்படுகிற பழக்கம் இது. கதிர்பாரதியின் ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் தொகுப்பை வாசித்த பின் அம்மாவின் வாசல் தெளிப்பு மணம் நினைவிற்கு வந்தது.
கை விரல்களால் வீடு கட்டும் வித்தை கற்ற குழந்தைகளின் துள்ளல்களையும், கண்டிஷன்களின் சொற்கள் மிதக்கும் வாடகைவீட்டில் வெளியைச் சுருக்கி இறகு பந்தாடும் குழந்தைகளின் துயரையும் நமக்கானதாக்கிவிடுகின்றன கவிதைகள்.
வீடு
இரு கைவிரல் நுனிகளை
கோபுரமெனக் குவித்து
விடுன்னா இப்படித்தான் இருக்கும் என்று
புன்னகைக்கிற திலீபன்
மழை பெஞ்சா நனைஞ்சுடும்
அப்போ வீட்டை மூடிடணும் என்று
இரு உள்ளங்கைகள் வரை
ஒட்டவைத்துக்கொள்கிறான்

நனைந்தும்
நினைந்தும்
வாழ்வதற்கு
போதுமானதாக இருக்கிறது
இந்த வீடு.
தொகுப்பிலிருக்கும் திலீபன் குறித்த கவிதைகள் நம்மோடிருக்கும் குழந்தைகளின் உலகத்தையும் நினைவூட்டியபடி இருந்தன.
வெள்ளந்தியான மனம் நிறைந்திருப்போரும், உள் ஊறும் வன்மத்தை புன்னகையுள் ஒளித்து வைத்திருப்போரும் தம்தம் நிலைக்கேற்ப இப்புவியை விளையாட்டுக் களமாக்கி புள்ளிகளை சேகரிக்கும் சூட்சுமத்தையும். ஊர்ப்புறத்திற்கும் நகரமயமாக்கலுக்குமான மாற்றத்தில் சிக்குண்டவர்களின் மனப்பிறழ்வுகளை காட்சிபடுத்தியும் செல்கின்றன கவிதைகள்.
தேவனின் படைப்பில் உன்னதமானது பெண்ணெனக் கொண்டாடி, அவள் வராத கோடையில் பொசுங்கி, அருகில் வந்தவளின்பால் ஏற்பட்ட இன்பத்தைவிடவும் வந்து விடுவதாக நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டிருப்பதால் ஏற்படும் இன்பத்தை சுகித்தும், மழையை மார்பகமாக்கி தாகம் தணிப்பவனின் பெரும் காதலை முத்தத்தின் வழியாக வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன பெரும்பாலான கவிதைகள்.
உழவு மாடுகள், இறாபுட்டி, குலசாமிகளின் கதைகள், நீர்முள்ளிப் பூக்கள் நிறைந்த கனவு, பயிர்களின் பருவங்களுக்கேற்ற பாடல் என எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்த தாத்தாவின் உப்பு படிந்த உடலில் கிடந்து வளர்ந்தவன் தன்னிடம் ஏதும் இல்லாது போவதும், தாத்தா உயிராக நினைத்த நிலமும் மெட்டோபாலிடல் அரசியலுக்கு பலியாக்கப்படுவதும், விடுதலை உணர்வையும் நிம்மதியையும் தரும் நிலம் பெரும் கனவானதாகிவிட, சொந்தமாக ஒதுங்க ஒரு செண்ட் நிலமும் அதில் சிறு வீடும் கட்டவதற்காகவே வேலை ஓய்வுபெறும் வரை உழைக்க வேண்டியிருக்கிற அவலத்தையும் கிளறிவிடுகின்றன கவிதைகள்.
………………………..
என் தாத்தாவிடம்
கண்ணீரும் தாகமும்கூட இருந்தன
மயக்கமுற்று நிலத்தின் மடியில் வீழ்ந்தவருக்கு
டமக்கரான் போத்தலில் தண்ணீர் வந்தது.
அதை முகத்தில் தெளித்து அவரைப் புதைத்தபோது
அழுது அரற்ற அவர் பாடல் இல்லை எம்மிடம்.
பெறவேண்டிய உரிமையை பெரும் கனவாக்கி அதைநோக்கி நமை ஓடவைக்கிறது எஜமானர்களின் உலகம். கொஞ்சமான எஜமானர்கள் குரங்காட்டிகளாக இருந்து நமை குட்டிக்கரணம் போட வைத்து வேடிக்கைக் காட்டி அவர்களின் தட்டை நிரப்பி உல்லாச வாழ்வு வாழும் பல மல்லையாக்களை நினைவூட்டுகின்றன கவிதைகள்.
என்னவாகப்போகிறதோ எனும் பதட்டத்தில் வாசித்துக்கொண்டிருக்கையில் சிறுவன் சேனலை மாற்றிவிட ஆசுவாசம் அடைந்து ரசித்திடச்செய்தது ‘மெய் நிகர் தீபம்’.
மொட்டைமாடியின் முத்தத்தை கடன் வாங்கி ஒளிர்ந்த கற்கள் நட்சத்திரமாகினவெனும் வரிகள் என்றும் நினைவிலிருக்கும்.
தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் ஆனந்தி மிளிர்கிறாள். ஆனந்தியின் பொருட்டு காதல் மிகுவதும், காதல் மிகுந்து சரணாகதி அடைவதும், சரணாகதி மிகுந்திட காமம் பிறப்பதும், காமம் பிறக்கையில் பெண் நிலமாக மாறுவதும், நிலம் என்பது சொத்து எனும் வஸ்துவாகிவிடுவதால் சொந்தமாக்கி உரிமை கொண்டாடுவதும், உரிமை அதிகாரமாக மாற்றம் கொள்வதும் கவிதைகளின் போக்கில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
நெடும் காலத்தின் நீட்சிதான் ஆண் எனும் அதிகாரம். அது நீண்ட ஆணி வேராக புதைந்து கிடக்கிறது. நம் வாசிப்பும் சக ஜீவிகளின் மீதான கரிசனமும் சிறிது சிறிதாக அதை பட்டுப்போக செய்துகொண்டிருக்கிறது. அது முற்றாக பட்டுப்போக வைக்கவும் முடியும். ‘ஒரு குளத்துக் குரவையாக’ கவிதையில் வரும் ‘அதிகாரம் என் சொற்களில் மட்கி எருவாகும்’ எனும் வரி அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

வெளியீடு- உயிர்மை பதிப்பகம்.

No comments: