03 August, 2015

எம்.எஸ்.வி பற்றி பாடகி வாணிஜெயராம்... நன்றி : ஆனந்த விகடன்‘தலை முதல் கால் வரைக்கும் சரஸ்வதிதேவியின் பூரணமான அனுக்கிரம் பெற்ற குழந்தை’ & மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களைப் பற்றி இப்போது இப்படித்தான் எனக்குச் சொல்லத் தோணுது. அருவியாகக் கொட்டும் மெட்டுக்களும், சரஞ்சரமாக வந்துவிழும் சங்கதிகளும் என்னைப் போல எத்தனையோ பாடகர்களைத் திக்குமுக்காட வெச்சுருக்கு. இந்த மனிதருக்கு எங்கிருந்து இவ்வளவு இசை வெள்ளமென ஊற்றெடுக்குதுன்னு ஆச்சர்யப்பட்டிருகோம்.

1973&ம் வருஷம் ஜனவரி 31, பிப்ரவரி 1... இந்த ரெண்டு நாட்களும், என்னோட இந்திப் பாடல்கள் லைவ் ஆர்கெஸ்ட்ரா சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நானும் சென்னை வந்திருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு ஒருநாள் சீஃப் கெஸ்ட் எம்.எஸ்.வி சார். நிகழ்ச்சி முடிஞ்சதும் என்னை ரொம்பப் பாராட்டினார். ‘உங்களுக்கு அபாரமான ஸ்வர ஞானம்’னு சொன்னார். அதே வருஷம் ஏப்ரல் மாதம் எம்.எஸ்.வி. சார் இசையில் ‘தீர்க்க சுமங்கலி’ படத்துல ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ’ பாடல் பாடினேன். அதுக்குப் பிறகு ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’, ‘அபூர்வ ராகங்கள்’... படங்களுக்கு அவரோட இசையில் பாடின பாடல்கள், ரசிகர்கள் மத்தியில ரொம்ப பிரபலமாச்சு. நானும் தமிழில் ரொம்ப பிஸியானேன்.
இசையில் எம்.எஸ்.வி&யின் கற்பனை எங்களை ரொம்பவே பிரம்மிக்கவைக்கும். ‘நீங்க போட்ட சங்கதிகள்ல எதை எடுத்துக்கிறது, எதை விடறுதுன்னு தெரியலை சார்’னு பயந்துக்கிட்டே சொல்வேன். அதுக்கு அவர் சிரிச்சுக்கிட்டே, ‘உங்களுக்கு எது ஈஸியா இருக்கோ அதை எடுத்துக்கங்கம்மானு சொல்வார். நல்லா பாடிட்டா ‘நான் மெட்டு போட்டதைவிட நல்லா பாடிருக்கீங்க’ம்மானு சொல்லிப் பாராட்டுவார். ஆனால் அவர் போட்ட சங்கதிகள்ல 60, 70 சதவிகிதம்தான் பாடிருப்போம்.
1977&ம் ஆண்டில் எம்.எஸ்.வி& தலைமையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு இசைச் சுற்றுப்பயணம் போனோம். 17 நாட்களில் 18 நிகழ்ச்சிகள் பன்ணினோம். அப்போ அவரோட இசையில் நான் பாடின ‘நாதம் என்னும் கோயிலிலே...’ ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்’... இந்தப் பாடல்கள் ரொம்பப் பிரபலம். அந்தப் பாடல்கள் இல்லாத இசைமேடை நிகழ்ச்சியே இருக்காது. அந்தக் காலத்துல வாரத்துக்கு ஒரு இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்கும். எம்.எஸ்.வி சார் எனக்கு போன் பண்ணி இந்த வாரம், இந்த இடத்துல இசை நிகழ்ச்சி இருக்கு வந்துடுங்கம்மானு சொல்வார். நான் தவறாம கலந்துக்கிட்டிருந்திருக்கேன். அவரோட இசையில தமிழில் மட்டும் அல்ல, கன்னடம் தெலுங்கு மொழிகள்லகூட பாடிருக்கேன்.
‘ஏக் துஜே கேலியே’ இந்திப் படத்தோட ஒரிஜினல் வெர்ஷன் தெலுங்கு ‘மரோசந்திரா’. அந்தப் படத்துல எம்.எஸ்.வி இசையில் நான் பாடின அத்தனை பாடல்களுக்கும் சூப்பர் டூப்பர் ஹிட்.

என்னைப் பத்தி ஒரு முறை ஒய்.ஜி.மகேந்திராகிட்ட ‘வாணியம்மா ஃப்ளோட்டிங் பேப்பர் மாதிரி சொல்லிக்குடுக்கிறதை அப்படியே பிடிச்சுக்குவாங்க’னு சொன்னாராம். இந்த வார்த்தைகள் எல்லாம் எனக்குக் கிடைச்ச பொக்கிஷமான ஆசிர்வாதங்கள். நிறையப் பேட்டிகள்ல வாணியம்மாவுக்கு ‘அபாரமான ஸ்வர ஞானம் உண்டு’னு சொல்லியிருக்கார். அந்த வார்த்தைகளைக் காப்பாத்தணுமேனு பயந்து பயந்து அவ்வளவு டெடிக்கேஷ்னோடு பாடுவேன்.
அபூர்வ ராகங்கள் படத்துக்காக அவர் இசையில் நான் பாடின ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ பாட்டு ரிக்கார்டிங் முடிஞ்சதும் என்கிட்ட, ‘வாணியம்மா... இந்தப் பாட்டுக்காக உங்களுக்குத் தேசிய விருது கிடைக்கும்’னு சொன்னார். அவரது வார்த்தைகள் எவ்வளவு சத்தியமானது... எனக்கு முதல் தேசிய விருது அந்தப் பாடலுக்குக் கொடுத்தாங்க. அன்னைக்கு காலையில டெல்லியில விருது வாங்கிட்டு, மாலை சென்னையில் அவர் கச்சேரியில் பாட்டு பாடினேன். அப்போ பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்றை நான் அவர் கையில் கொடுத்து, நானும் என் கணவரும் எம்.எஸ்.வி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம். என்னால மறக்க முடியாத கச்சேரி அது.

‘பத்தினிப்பெண்’ படத்துல எம்.எஸ்.வி சார் இசையில் ‘உலகெங்கும் நம் வீடு’னு ஒரு பாட்டு. பாடி முடிச்சுட்டு சிங்கர் பூத்தை விட்டு வெளியில வந்ததும், ‘வாணியம்மா இங்க வாங்க’னு கூப்பிட்டார். ‘என்ன சார்... நான் சரியா பாடலையா.. இன்னொரு டேக் வேணும்னா போலாமா?’னு கேட்டேன்.
‘அது இல்லைம்மா... நான் 15 நாள் கஷ்டப்பட்டு போட்ட ஒரு பாட்டை 5 நிமிஷத்துல ஒரு டம்ளர் தண்ணி குடிக்கிறது போல பாடிட்டீங்களே...’ சொல்லி வியந்துபோனார். அந்த வார்த்தைகளை என்னால் எப்பவும் மறக்க முடியாது.

அவர் இசையில் பாடினதெல்லாம் பொன்னான நாட்கள். காலையில் 9 மணிக்கு ரிக்கார்டிங்னா நான் சரியா போய்டுவேன்... பார்த்தா எனக்கு முன்னாடி அவர் கார் போயிட்டிருக்கும். தயாரிப்பாளர் எல்லோரையும் வயசு வித்தியாசம்லாம் பார்க்கமா முதலாளி முதலாளின்னுதான் கூப்பிடுவார். அவருக்கு இசையைத் தவிர வேறு ஒண்ணும் தெரியாது. செல்போனை எப்படி ஆபரேட் பண்ரதுன்னுகூட தெரியாது. அவங்க பொண்ணுங்க என்கிட்ட சொல்வாங்க... ‘எங்க அப்பா ஒரு குழந்தை மாதிரி. நாங்கதான் அவருக்கு வேண்டியதெல்லாம் பாத்துக்குவோம்.’ பாடகர்கள் சரியான ஸ்வரத்துல பாடுலனா விடவே மாட்டார் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொடுப்பார்.

ஆஸ்பத்திரில அவர் ஐசியுல இருந்தப்போ பார்க்க போனேன். ஒரு குழந்தை போல படுத்திருந்தார். ‘நாதம் என்னும் கோயிலில்...’ பாட்டை முழுசா பாடினேன். அதைக் கேட்டபோது அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘வாணியம்மா பாடின பாட்டுல உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது எது?’னு அங்க இருந்தவங்க கேட்டாங்க. ‘அவர் பாடின எல்லாம் பாட்டும் எனக்கும் பிடிக்கும்’னு சொன்னார். இது எனக்கு பெரிய கொடுப்பினைதான். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இழப்பு தென்னிந்த திரைக்கு மட்டுமல்ல, இந்திய இசைக்கு மட்டுமல்ல... உலக அளவில் ஒரு பெஸ்ட் கம்போசரை இழந்தவிட்ட இசையின் இழப்பு என்றுதான் சொல்லணும். எம்.எஸ்.வி அவர்கள் என்னளவில் ‘நாதம் என்னும் கோயில்’தான். அதில் அவர் ஏற்றிவைத்த ராகதீபங்கள் என்றும் அவரின் புகழை வெளிச்சமாக இசைக்கும்!


1 comment:

பரிவை சே.குமார் said...

எம்.எஸ்.வி. அவர்களின் நினைவுகளை அழகாக மீட்டிப் பார்த்திருக்கிறார்கள் வாணியம்மா....
பகிர்வு நன்றி...