22 June, 2013

மொழியை நிரடிக் கவிதை செய்பவன்! - ஆத்மார்த்தி (புன்னகை (ஜூன் 2013)கவிதை இதழில் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் கவிதைத் தொகுப்புக்கு ஆத்மார்த்தி எழுதிய விமர்சனம்)

யவ்வனம் என்ற சொல் எத்துணை அழகானது? அழகு என்னும் பதத்தினுள் உடலின் வனப்பைக் கலந்து பெறுகிற அதே உணர்தலைக் காட்சி இன்பமாகக் கிளர்த்துகிற சொல் அது. யவ்வனம் என்னும் சொல் தொடங்கி கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பான மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் காத்திரமான கவிதைகளை முன் வைக்கிறது. கதிர்பாரதியின் கவிதை உலகம் நம்பகமானது. விசாரணைக்கு உட்படுத்துகிறவர்களை இதழோரப் புன்னகையுடன் உள்ளே அனுமதித்துவிடுகிற கவிதைகள் அவை. ஒருபோதும் கதவடைப்புகள் செய்வதேயில்லை.
தனி மனிதனின் அகம் தானாகவும் தானற்றும் மற்றமைகளின் உள்ளேயும் வெளியேயுமாகத் தன்னைச் சிதைத்துப் பார்ப்பதென்பது மொழியின் சாலவித்தையாகப் பலராலும் கையிலெடுக்கப் படுவதுதான். வெகுசிலருக்கு மட்டும் அது தன்னியல்பாக நேர்ந்துவிடுகிறது. கதிர்பாரதியின் கவிதாவுலகம் அத்தகையது. நுட்பம் என்ற சொல்லாடல் மேலோட்டமானது. மனதின் அலைதல்களும் மௌனித்தலும் கலந்து சிதைகிற தனித்த குரலிலான முன்வைப்புக்கள் கதிர்பாரதியின் கவிதைகள்.
           நிலம் அடிக்கடிச் சிதைவுறுகிறது. ஒற்றுமைகளும் வேறுபாடுகளும்
கலந்து தனிக்கையில் நிலம் நிகழ்த்துகளனாக மாறுகிறது.பெரிய அதிர்வை ஏற்படுத்துகிற எல்லா நிகழ்வுகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிலத்தினைப் பிளக்கின்றன. மொழி அனாதி நகர்தலில் காலகாலத்தை மையமாகக் கொள்கிறது. வாகனங்கள் விரையும் நால்வழிச்சாலையில் மெல்லத் தன்னைத்தானே மெச்சிக்கொண்டு சோம்பி நகரும் எருமை போல மொழி காலத்தின் மீது மெல்லத் தன் நகர்தலை நிகழ்த்துகிறது.
       உலகமயமாக்கலுக்கு முன்னும் பின்னுமாக இரண்டாகப் பிளந்து
கலைந்து கிடக்கிற நிலம் மற்றும் அதே நிகழ்தலுக்கு முன்னும் பின்னும் வெவ்வேறாக வாய்க்கிற மத்யமவாசி ஒருவனின் அகமனம் ஆகியன தொண்ணூறுகளின் மத்தியிலேயே தமிழ்க்கவிதைச் சூழலினுள் தன் தடத்தைப்பதிக்கத் தொடங்கிவிட்டது. எனினும் இரண்டாயிரமாவது ஆண்டின் முதல் சில வருடங்கள் கழிந்த பின் அதே தடம் நின்று நிலைபெற்றுக் கவிதைக்குள் தன்னை அழுத்தமாக பதிந்துவைக்கத் தொடங்குகிறது. இரண்டாயிரங்களுக்குப் பின்னால் எழுத வந்த கவிஞர்களில் கதிர்பாரதி கவனிக்கத் தகுந்தவராகிறார். அவரது கவிதைகள் பேசவேண்டிய பொருளைப் பேசவிழைகின்றன. அதில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கின்றன."கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன்" என்னும் கவிதை சமகாலத்தில் எழுதப்பெற்ற முக்கியக் கவிதைகளில் ஒன்றாகத் தன்னை முன்வைக்கிறது. சரித்திரப் பாத்திரங்களின் காமச் செயல்பாடுகளால் வரிசைகட்டிக் கோர்க்கப்பட்ட இக்கவிதையின் ஈற்றுவரி நமக்குள் பெயர்க்கிற அனுபவம் சிறப்பானது. கதிர்பாரதி தனக்கென்று ஒரே பாணியையோ அல்லது ஒரு வசதிக்கான முயல்வையோ ஏற்படுத்திக்கொள்ளாமல் அந்தந்தக் கவிதையை அவ்வவற்றின் போக்கில் அணுகியிருப்பது இத் தொகுப்பை மிகவும் உயிர்ப்புள்ளதாக்குகிறது.கனவை விவரிக்கிற உரையாடல் மொழியைக் கையிலெடுக்கிற கதிர்பாரதி ஒரே தொனியில் பேசிக்கொண்டே சட்டென்று அதிஅபூர்வங்களைப் போகிறபோக்கில் சொற்களால் கடந்து விடுகிறார். திட்டமிட்டு தன் கவிதைகளை ஏற்படுத்துகிற சமகால முயல்வுகளுக்கு மத்தியில் மிக அமைதியாகத் தானும் தன் கவிதைகளுமாக கவனம் ஈர்க்கும்முகாந்திரமின்றி வெளிப்படுகிறார். அது நம்மை இக்கவிதைகளுக்குள் லேசாய்
சென்று திரும்ப அனுமதிப்பதே இல்லை. மாற்றாக அவற்றுக்குள் வாசகமனம்
ஆழப் பொருந்துகிறது. ஒப்புக்கொடுக்கிறது. இவை எந்தக் கட்டளையும்
நிர்ப்பந்தமும் இன்றி நிகழ்வது சிறப்பு.
          "இறந்த காலத்தில் தாழ்ந்து எதிர்காலத்தில் உயர்ந்து
நிகழ்காலத்தில் மிதப்பதைப் பகடி செய்வதாக" இவ்வரிகள் "காலாதிபதி"
என்னும் கவிதையில் வருபவை.
"ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் முற்றாக நிராகரித்துவிட்ட
எனது தனிமை மீது படர்ந்திருக்கும் சாபத்தால் ஒரு பயனுமில்லை"என
அறிவிக்கிறார் "லாபங்களின் ஊடுருவல்" என்னும் கவிதையில்
."கன்ஃப்ரம்" என்னும் கவிதை நெஞ்சடைத்து இறந்தவனின் முகப்புத்தகப் பக்கத்தில் அவன் இறப்பை அறியாது இன்னமும் வந்துகொண்டிருக்கும் நட்புக் கோரிக்கைகளை நம்
முன் படர்த்துகிறது. ஒரு வருடத்துக்கு முன்னால் நிகழ்ந்த வாகனவிபத்தை ஒரு குழந்தையின் பிறப்போடு ஒப்பிட்டு மெலிதான வலியுடன் கூடிய புன்னகையை வரவழைக்கிற "வலிக்கிறது தோழர்களே" ஒரு சிறந்த கவிதை.
      இத் தொகுதியில் இன்னும் ஒரு ஆகச்சிறந்த கவிதை "யானையோடு நேசம் கொள்ளும் முறை". என்ற ஒன்று.   ஒரு யானையை எப்படியெலாம் அணுகி எதையெல்லாம் தவிர்த்து எந்தெந்த வழிகளிலெல்லாம் அதை சினேகிப்பது என்ற நேரடித் தன்மையில் விரிகிறாற் போலத் தோற்றம் அளித்தாலும் கூட இக்கவிதை மிகுந்த சைகைகளையும் குறிமொழியினையும் தன்னகத்தே கொண்டு விரிவாக்கமடைகிறது. அரசியல் கவிதைகளில் நேரடிக்கவிதைகளை விடவும் இத்தகைய முயல்வுகள் ஆணித்தரமாக வாசகமனதுள் வினைபுரிவது வழக்கம். இக்கவிதையிலும் சொல்லப்படுகிற யானை என்பது அதிகாரமையமாகிறது. ஆட்சியாளனாகிறது. மேலதிகாரியாகிறது. பலம்கொண்டவனாகிறது. மேட்டிமைக்காரனாகிறது. கொடுங்கோலனாகிறது. தலைவனாகிறது. குவிமையத்தின் வக்ரமனம் என்பது பெரும்பான்மையின் மீது மெலிந்தோர் மீது காலங்காலமாகக் கருணையின்றித் தத்தமது குரூரத்தைப் பாய்ச்சிவருகையில் இக்கவிதை மெல்ல முன்வைக்கிற சூத்திரம், மெல்லினம் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் மேலும் ஒரு மையத்தை ஒரு அதிகாரத்தை வேறுவழியின்றி எதிர்கொள்வதற்கான வழிமுறைச்சூத்திரமாகத் தன்னை முன்வைக்கிறது. இக்கவிதை வாசகமனத்தை நிறுத்தி வைக்கிற நீட்சி என்பது மிக முக்கியமான ஒன்று.
    மேலும் தொகுப்பின் தலைப்புக் கவிதையான "மெசியாவுக்கு மூன்று
மச்சங்கள்" என்னும் கவிதையில் பாத்திரமாக்கப்படும் விண்ணகத் தந்தையின்
ஒவ்வொரு மச்சத்தையும் கோருவதற்கு அதன் பின்னே ஒரு காதலி இருப்பதாகச் சுட்டுவது நல்ல நையாண்டி. என்றபோதும் அதே மெசியாவின் நான்காவது மச்சம்
மெல்ல உருவாகையில் அவரது நாலாவது காதலி நீங்களாகவும் இருக்கக் கூடும்

என்று முடிகையில் பகடியைத் தாண்டி சின்னதொரு அதிர்வு நேர்கிறது
          சமகாலத்தில் இத்தனை உவமைகளுடன் விரிகிற இன்னொரு
தொகுப்பைக் கூறுவது கடினம் கதிர்பாரதி உவமைப் படுத்துவதில் தன் வேலையைத் தொடங்குகிறார். அது அவரது வெற்றிகரமாகிறது,சொல் பேச்சுக்கேட்டு நடக்கும்
குழந்தைகளைப் போல் சவுக்கியமானதாகிறது. வாசிக்கிறவனை மெலிதான
கிறக்கத்தினூடேயே தான் விரும்புகிற நீட்சியின் எல்லை வரைக்கும் நடத்திக் கொண்டு செல்கிற இக்கவிதைகள் ஒருபோதும் ஆயாசத்தை காட்டிவிடவில்லை என்பது ஆறுதலல்ல. ஆச்சர்யம்.
              ஊருக்கு வெளியே கனத்து நிற்கிற சுமைதாங்கி மீது வளரும் துயரமாக செழித்துப் படர்கிற பிரிவின் பசலைக்கொடிக்கு உயிரைப்பந்தலாக்குவது சாலப்பொருந்தும். இது ஓர் உதாரணம். ”சமாதானத் தூதுவர் = ஹிட்லர்’’, ”இரயிலைக் கொன்றவன்”,’’ஆனந்தியின் பொருட்டுத் தாழப்பறக்கும் தட்டான்கள்”, ”மலை நடுக்கம்”... ஆகிய கவிதைகளும் தனித்த அனுபவங்களை நிகழ்த்திப் பார்ப்பவை.
               கதிர்பாரதியின் கவிதை உலகம் உரையாடலுக்கு அடுத்த நிலை
மொழியைத் தன்னிணக்கமாகக் கொள்கிறது. அவர் ப்ரியமான வார்த்தைகளை கலைத்துப் போட்டு அதன் வெவ்வேறு முனைகளை ஆய்ந்துபார்க்கிறார். விவிலிய பலத்துடன் தொன்மக் குறிப்புகளைத் தன் கவிதைகளினூடே அவிழ்த்துக் கொண்டே செல்வது அவரது பாணியாகிறது. மேலெழுந்த வாரிக் கவிதைகளல்ல.
கதிர்பாரதி தன் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பில் தந்திருப்பதும்
தொட்டிருப்பதும் அகமனம் தனக்கு வாய்த்திருக்கிற மொழியை நிரடிக் கவிதைகளை விரித்துக் கொட்டுகிற தனித்த முயல்வுகள்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

புரியவில்லை... தற்பெருமையாக கூட இருக்கலாம்... நன்றி...