28 April, 2012






அன்பு நகர்


அன்பு ஆட்சி செலுத்தும் மிகுபுராதனமான நகரம் இதென்று
சுற்றிக்காட்டினான் அந்தச் சுற்றுலா வழிக்காட்டி.
காருண்யமும் வாஞ்சையும் அதன் தலைமை பீடமென்று
சொல்லும்போதே அவன் முகத்தில் பெருமை சம்மணமிட்டிருந்தது.
முதியோர் இல்லங்கள் இழுத்துச் சாத்தப்பட்டு
பிறகு அவை ஆராதனை மையங்களாக மலர்ந்தனவாம்.
விபச்சார விடுதிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களான அன்றுதான்
மழை கொட்டோகொட்டென்று கொட்டி நகரம் செழித்திருக்கிறது.
வாசங்களின் சிம்மாசனமாகத் தரிசனம் தருகிற இந்தப் பூங்கா
கோட்டான்கள் அலறித்திரிந்த கல்லறை மேடாகவும்
செப்பனிடப்பட்ட தானிய சேமிப்புக் கிடங்குகள்
கொள்ளையர்களின் மந்திராலோசனை கூடமாகவும் இருந்தவைதானாம்.
அல்லவை அனைத்தும் நல்லவையானதற்கு
அன்பு ஆட்சிக்கு வந்ததுதான் காரணம் என்றான்.
அன்பின் கொடுங்குளிரில் பதற்றமும் உதறலும் எடுக்க ஆரம்பித்தது.
எண்கள் அச்சிடப்பட்ட சில் தாள்களை
அவன் கையில் திணித்துவிட்டு ஓடிவந்துவிட்டேன் 
அதிகாரம் ஆட்சி செலுத்தும் நகரத்தின் வெப்பத்துக்கு...

3 comments:

செய்தாலி said...

நல்ல கவிதை சார்

Unknown said...

மழைக்கு பூக்காரி வீட்டில் ஒதுங்கின மீன்காரி தூக்கம் வராமல் மீன்கூடை கவுச்சி தேடி தூங்கினாளம்.சாத்தியமா நமக்கு...அன்பாம் ஆட்சியாம் சரிப்பட்டு வருமா? நல்லாருக்கு. அந்த ஆடும் குட்டியும் மண்டியிட்டு பார்க்கிற குழந்தையுமாய் அற்புதமாக் படமாக்கின கைகளுக்கு ....கண்களுக்கு....பாராட்டோ பாராட்டுக்கள்
--

கல்யாணி சுரேஷ் said...

Romba nalla irukkunga Kathirbharathi