14 April, 2012

குடும்பப் புகைப்படம்


ஒரு குடும்பப் புகைப்படத்தை நீங்கள் பார்க்கையில்
சுடர்விடும் அன்பைத் தரிசிக்கிறீர்கள் ஒரு முகத்தில்
வேறொன்றில் வெறுப்பு மின்னலென ஓடி மறைகிறது
மற்றொன்றில் சாந்தம் கொண்டலென வீசுகிறது
பிறிதொன்றில் அசூயையும் ஆற்றாமையும் வழிகிறது
தளிர்முகமொன்றில் தன் சல்லிவேருக்கு
பாசநீரைக் கேட்கும் யாசகம் தெரிகிறது
வயோதிகச் சுருக்கங்களில் காலம் சலசலத்துப் பிரவகிக்கிறது
எல்லாவற்றுக்கும் மேலாக சதியொன்றின் வடுவில்
தடுக்கி விழ நேர்கிறது
திடுக்கிட்டு மூடிவிட்ட புகைப்படத்தை
மீண்டுமொருமுறை எடுத்துப் பார்க்கிறீர்கள்
காற்றுக்கு அஞ்சி நடுங்குகிறது தீயின் நாவொன்று
பனியாலான குறுவாளொன்று குறிபார்க்கிறது
கரையறுக்கும் வெள்ளத்தில் கருவேலமொன்று சாய்கிறது
அறுவடைக்கு நிற்கும் நெல்வயலொன்றில் தீ பரவுகிறது
இறுதி நொடியிலிருக்கும் உயிரின் கரமொன்று
காற்றின் விழுதொன்றில் ஊசலாடுகிறது
யாவற்றையும் அவதானித்துவிட்டு
புகைப்படக் கலைஞனைப் பாராட்டக் கிளம்பும்
நீங்கள் மாபெரும் ரசிகன்
அவனைக் கொன்று திரும்பினால்
கடவுள்

2 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை.

உமா மோகன் said...

உங்கள் கவிதைகளின் பொதுப் பண்பாகக் கிடைக்கும் பொருள்
செறிந்த தொடர்களைப் புகைப்படத்திலும் பார்க்கிறோம்.
குடும்பம் அன்பின் உறைவிடம் என்றபழைய படத்திற்கு வேற்று
விளக்கங்களும் உண்டு.உணர்த்திய விதம் சிறப்பு.