12 October, 2010

காலம்காலமாய் காலம்

இரண்டாய் வகுந்து கிடந்த ஒற்றையடிப் பாதையில்
வளைந்தும் நெளிந்தும் புணர்ச்சிக்குப் பிறகான
மயக்கத்திலிருக்கும் வனப்பாம்பாய்
நீண்டு கிடந்த காலம்
வெம்மையைக் குடித்து வெறி பிடித்திருந்தது

ஊடறுத்த என் கால்களின் வயிற்றில்
உப்புப் படலங்களைப் பிரசவிக்கச் செய்த
அதன் முகத்தில் சாதித்த செருக்கு

குளத்தின் அலைகளைக் கட்டிக்கொண்டு
யாத்திரை துவக்கிய காலம்
எதிர்ப்பட்ட கிழவியிடம்
குளுமையைத் திணித்ததில்
தாய்மையின் வாசம்

ஆட்டிடையனின் வளைந்த கொம்பில்
கண்கிறங்கி மணிச் சத்தத்தில்
தரித்த கனவை
நரிகள் கிழித்துப் புசிக்க அலறியது

கணவனோடு சிணுங்கிக்கொண்டு
தனித்திருந்தவளிடம்
நாணம் பூசி அது பருவத்துக்கு வந்த
அந்தக் கணம் முதல்தான்
தென்றலின் சிருங்காரத் தொந்தரவு

புள்ளினங்கள் அலைந்துருகும் அத்துவானத்தில்
பையப் பைய ஓர் ஆக்கிரமிப்பாளனைப் போல்
ஊடுருவும் காலம் குறித்து
எவ்விதப் பிரக்ஞையுமற்று ஊரும்
நத்தையின் முதுகில்
மனசை ஏற்றி அனுப்பிவிட்டு
நரைக்கத் துவங்கிக்கொண்டிருந்தான்
அவன்.

1 comment:

உயிரோடை said...

காலம் சில சமயம் நத்தை போல தான் ஆகிறது. ஆனால் நத்தையும் வெகமாய் கடந்து போகிறது தினமும். கவிதை நல்லா இருக்கு