05 September, 2010

நாட்டாமை

மௌனங்கள் நொதித்துக்கிடக்கும் அவ்வூரின்
திசைகள் கூடிக்கொள்ளும் நாற்சந்தியில்
விற்பனைக்கு வந்ததுபோல வந்தன வார்த்தைகள்

அர்த்தங்களின் ஆழ உயரங்களுக்கு ஏற்ப
வீழ்ந்தும் எழுந்தும் கொண்டிருந்தன
வார்த்தைகளின் மதிப்பு

அவரவர் தேவைக்கேற்ப விநியோகமானதில்
மெலிந்த வலிந்த வார்த்தைகள் கலந்தே இருந்தன
வசீகரத்துக்காகவும் மயக்கத்துக்காகவும்

'கடவுள்' வார்த்தையைக் கொள்முதல் செய்தவன்
போதிக்கத் துவங்கினான்
கடவுள் வார்த்தையாய் இருக்கிறார்
வார்த்தைகளனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றன
கடவுளன்றி வார்த்தையில்லை
வார்த்தையின்றி கடவுளில்லை

பின்னிப்பின்னி சாம்ராஜ்யத்தையும்
செங்கோலையும் நிர்மாணித்துக்கொண்ட
'கடவுள்' வார்த்தையின் சிம்மாசனம்
'சாத்தான்' வார்த்தையை வாங்கிப் போனவன்
கேட்டக் கேள்வியில் கலகலக்க ஆரம்பித்தது

'சாத்தான்' வார்த்தையின் அந்தரங்கத்தில்
'கடவுள்' வார்த்தை தன் பங்குக்கு ஒளிபீய்ச்சியதும்
அழுக்குகளால் வெட்கமுற்றது அதன் இருட்டு

அந்தரங்கங்கள் வெளிச்சப்பட்டுப் போனதில்
சஞ்சலம் கொண்ட கடவுளும் சாத்தானும்
சந்தித்துக்கொண்டன
இப்போது மௌனங்களால்
ஊர் நொதிக்கத் துவங்கியது


நன்றி: கல்கி தீபாவளி மலர் 2010

No comments: