21 March, 2022

கவிதை ~ இன்று உலகக் கவிதைத் தினம் ~ ``உயர்திணைப் பறவை`` கவிதைப் புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை ~ கதிர்பாரதி


பீர்பால் மூன்று ஆமைகள் வளர்த்தார்
...........................,.......................

1
அக்பருக்கு சந்தேகம்...
ஏழைகளை
எப்படி நடத்தவேண்டும்?
வணிகர்களோடு
எப்படிப் பேச வேண்டும்
பீர்பால்?

முதலில்

பூவாளியை எடுத்து
செடிகளுக்குத் தண்ணீர் ஊட்டினார்
பீர்பால்.

இரண்டாவதாக

மௌனமாக
இருந்தார்.

2
நெஞ்சுக்கு நெருக்கமாக
நிதமும் ஒரு மலரை
அணிய விரும்புகிறேன்
நவரத்தின மந்திரிகளே
உங்களின் சிபாரிசு என்ன?
கேட்டது அக்பர் பாதுஷா.

தாமரை - திருவின் உறைவிடம்
சூர்யகாந்தி - சூர்யத் தோழி
ரோஜா - மலர்களின் ராஜா
சாமந்தி - ஏழை ரோஜா
அல்லி - ஏரியின் செல்லம்
மல்லிகை - மன்மதம்
முல்லை - தேர்கொண்ட பூ
............
............
ஆளுக்கொரு மலரோடு
அவை வந்தனர்.

நத்தை கொண்டுவந்தார்
பீர்பால்.
அதன் 'அமைதி'யைச் சூடிக்கொண்டார்
அக்பர்.

3
பீர்பால்
வீட்டில் மூன்று ஆமைகள் வளர்த்தார்.
அவை அவரை
அறிவூட்டி வளர்த்தன.
அந்த அறிவு சொல்ல
மூன்று ஆமைகளையும்
யமுனையில் நீந்த விட்டுவிட்டார்.
அக்பர்
மூன்று புறாக்களை
வானில் பறக்கவிட்டார்.

4
'பீர்பால்
இது என் ஆசைக்குதிரை
நன்கு வளர்த்துவாருங்கள்' எனக்
கொடுத்தார் அக்பர்.

'மன்னிக்க வேண்டும் பாதுஷா
உங்கள் ஆசையை
நான் எப்படி வளர்க்க முடியும்' என்றார்
பீர்பால்.

'ஆம்
என் தாகத்துக்கு இன்னொருவர்
தண்ணீர் குடிப்பது
எங்ஙனம்?
மேலும்
என் உதையின் பொருள்
பீர்பாலுக்கு
எப்படி விளங்கும்?'என்றது
அக்பரின் ஆசை.

அக்பருக்குப் பேராசைதான்.

5
பீர்பால் செய்யாத குற்றத்துக்காக
ஒரு மூட்டை உப்பைக் கழுவி
சுத்தமாக்கும் தண்டனை அளித்தார்
அக்பர்.

மறுநாள்
வெறும் சாக்கோடு
அவைக்கு வந்தார் பீர்பால்

எங்கே உப்பு?

உப்பு அதன் தவறுகளோடு
இருக்கச் சம்மதித்துவிட்டது
அரசே.

அக்பர் புன்னகைத்தார்.

பீர்பால் செய்யாத
தவறும் புன்னகைத்தது.

6
அக்பர் பாதுஷா கேட்டார்...
'யமுனை அழுகிறது' என்று
என் மனைவி சொல்கிறாள்.
நாட்டில்
எனக்குத் தெரியாமல்
என்ன நடக்கிறது பீர்பால்?

இமையம் என்கிற பிறந்த வீட்டிலிருந்து
வங்கம் என்கிற புகுந்த வீட்டுக்கு
யமுனை செல்கிறது
அதனால் அழுகிறது அரசே.

உண்மை சொல்லுங்கள் பீர்பால்.

தெய்வக் குற்றம் ஏதாவது நடந்திருக்கும்
அதனால்
யமுனை அழுதிருக்கும்
நேர்ச்சை அளித்துவிடலாம் அரசே.

பீர்பால்...
நான் கேட்டது 'உண்மை'.

உங்கள் மனைவிதான்
கண்ணீருக்குத் தெரியாமல் அழுகிறார்.
அவர் மனதைத் தீர விசாரித்து
சமாதானம் செய்யுங்கள்
அரசே.

7
மொத்த பற்களும் உதிர்ந்து
ஒற்றைப் பல் மட்டும் மீந்திருக்கும்
விநோதக் கனவுகண்டார்
அக்பர் பாதுஷா.

'உங்கள் உறவினர்கள்
உங்களுக்கு முன்
இறப்பர்' எனக் கனவுப்பலன்
சொன்னான்
அரண்மனை நிமித்திகன்.

அக்பர் கோபத்தில்
அரண்மனை சிவந்தது.
நிமித்திகனுக்குக்
கசையடிப் பரிசு.

பீர்பாலும்
அதையேதான் சொன்னார்
அவருக்கோ பரிசு.
ஆனால், இப்படி...

'அரசே
உறவினர்களைக் காட்டிலும்
உங்களுக்கு ஆயுள் அதிகம்.'

8
ஒரு குழந்தைக்கு
இரு தாய்கள் உரிமைகோரும் கதை.
பீர்பால் தலையீடு இல்லாமல்
நீதி வழங்க நினைத்து
கதையில் இருந்து
அவரை வெளியேற்றினார்
அக்பர் பாதுஷா.
தர்பார் தொடங்கியது...
'இது என் குழந்தை கிடையாது' என்றாள்
உண்மைத் தாய்.
'என் குழந்தையும் அல்ல' என்றாள்
பொய்த் தாய்.
'இவர்கள் என் தாய் இல்லை' என்றது
குழந்தை.
இது
அக்பர் எதிர்பாராத குழப்பம்; திருப்பம்.
சுற்றும்முற்றும் கதைக்குள் பீர்பால் இல்லை.
வேறு வழியின்றி
அவரைக் கதைக்குள் அழைத்தார்கள்.
'கதையை இரு துண்டாக்குங்கள்' என்றார் பீர்பால்.
'அய்யா இது என் குழந்தை' என
பார்வையாளர் பக்கம் இருந்து வந்தாள்
கதை எழுதியவள்.
'ஆகா அற்புதம்' என பீர்பாலைப் பாராட்டி
பரிசில் வழங்கினார் அக்பர்.
பீர்பாலிடம் இருந்து
கதைக்கு சன்மானம் பெற்றுக்கொண்டாள்
குழந்தையின் தாய்.

தர்பார் முற்றிற்று.

#கதிர்பாரதி #உயர்திணைப்_பறவை #இன்சொல்_பதிப்பகம் 

விமர்சனம் ~ உயர்திணைப் பறவை கவிதைத் தொகுப்புக்கு ~ கவிஞர் பூவிதழ் உமேஷ்.

 வரிகளுக்கு இடையில் தன்னை அதிகப்படியாக நிரப்பிக்கொள்ளும் கவிதையின் தனித்த ஆற்றல், அகத்தை உணர்வதில் கண்மூடித்தனம் கொண்டவர்களுக்கு அதை மீட்டெடுப்பதற்கான பயன்படுத்தப்படாத ஆற்றலாக இருக்கிறது . அத்தகைய ஆற்றல் நிரம்பிய கவிதைகளோடு நல்லதொரு தொகுப்பாக வந்துள்ளது கதிர் பாரதி அவர்களின் உயர்திணைப் பறவை தொகுப்பு.

ஒரே சொல்லால்/ ஒரு சில சொற்களால் / ஒரே வரியால் மாயம் செய்வது கவிதையின் வழமையான குணம் அதை தொகுப்பு முழுவதும் கதிர் பாரதி நேர்த்தியாகக் கையாள்கிறார். அவருடைய முந்தைய இரண்டு தொகுப்பில் இருந்து வேறொரு தளத்திற்கு இக்கவிதைகள் நகர்ந்துள்ளன.
இக்கவிதைகளில் உள்ளே சிதறி இருக்கும் இடையீட்டு வெளி அவற்றின் விரிவு ஆகியவை ஏகத்துக்கும் யோசிக்க வைப்பதுதான் இதிலுள்ள கவிதைகளின் மிகப்பெரிய வெற்றி. காட்டிலிருந்து வீடு திரும்பாத நாளில் கரடிகளை வசியம் செய்து மெத்தைகளாக்கி தூங்கிவிடும் வேடன் போல நம்மை மாற்றிவிடும் வசியம் இக்கவிதைகளில் உள்ளது.
//பிறந்த நாளுக்கு மறுநாள் வரும் சூரியனுக்கு வயது ஒரு நாள்// (ப – 90) என்று பிரமாண்டத்தை சுருக்கிவிடும் பண்பு, //அது பாம்பு அல்ல வீடு பழகிய தாபம்// (ப-160) என்று கண்முன்னே தெரிவதை மனதின் அரூபத்திற்கு இடம் பெயர்ப்பது ஆகட்டும், //மனம் உறங்கி விட்டதா என தலை உயர்த்தி பார்க்கிறது உடல்// (ப-183) என நனவு நிலையின் நீட்சியாகட்டும் எங்கு நோக்கினாலும் கவித்துவம் குறையாது வாசிப்பு இன்பம் தரும் கவிதைகளாக இருக்கின்றன.
கவிதை தனக்குள் வைத்திருக்கும் சித்திரம் தான் அதன் ஆயுளை நீட்டிக்கும் அந்த வகையில் அம்மாவை மனைப் பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது (ப-20) இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. 30 கவிதைகளில் 28வது தவிர அத்தனை கவிதைகளையும் என் அம்மாவின் படங்களோடு ஒரு அரங்கம் முழுக்க நிரந்தரமாகக் காட்சிப்படுத்தினால் கூட என் ஆசை தீர்ந்து விடாது .
// நீ போ இந்த அனாதை மேகத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வர்றேன்// இப்படி அற்புதமான குரலாக இருந்தாலும்
"யாரோ ஒரு அம்மா" என்றாலும் "என் அம்மா பக்கத்தில் குந்தி கொண்டதுபோல " இப்படி அற்புதமான உணர்வாக இருந்தாலும் எல்லாவற்றிலும் செழுமை குறையாமல் எழுதியுள்ளார். இது போன்ற எண் வரிசையிட்ட கவிதைகள் தன்னளவில் தனித்துவம் மிக்கதாக உள்ளன. இவை பெரும்பாலும் தனித்தனி கவிதைகளாக விளங்கும் தன்மையோடும் இருக்கின்றன.
மகிழ்ச்சி மாறுவேடத்தில் சுற்றும் (ப-64) தன்மையை நகர்த்திவிடும் அவர், இது வாழ்க்கையின் வட்டம் (ப-69) என்று நம்மை ஒப்புக்கொள்ள வைத்து, எல்லா கவிதையிலும் எளிமையை தன் கவிதைகளின் வெளிச்சமாக்கி கைக்கொள்கிறார்.
//இரவில் மினுங்கும் தனிமம்
உன் காமம்// (ப-174) என்று சொல்வது அழகின் உச்சம்.
ஆவர்த்தன அட்டவணை வெளிவந்து நூற்றி ஐம்பது ஆண்டுகள் (2019) முடிந்துவிட்டன. இதுவரை 118 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கதிர்பாரதி அவர்கள் 119-ஆவது தனிமமாக காமத்தைக் குறிப்பிடுவது புதுமையாக உள்ளது. அதுவும் இரவில் மினுங்கும் அதன் தன்மை கவிதையை ஒளிரச் செய்கிறது.
//ஒரு முறை
தன் மீது தானே ஏறி
மாடிக்கு மெதுவாக நடந்து போனது படிக்கட்டு// (ப-73) இதில் படிக்கட்டுக்கு பதிலாக எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பதிலீடு செய்து கொள்ளலாம். கடைசியில் நல்லவேளை என்று எவற்றுக்கும் பொருத்தி விட்டு போகலாம்.
கல்லின் மீது
உன் அமைதியை எறிந்து
அதற்குள் இருக்கும்
சிலையை எழுப்பினால்
அது
தன்னை கடவுள் என்று நினைத்துக்கொண்டு
அமைதியை
அதட்டி உருட்டி மிரட்டுகிறது
பார்
(ப- 186) என்று அமைதியை உளியாக மாற்றும் அற்புதம் வெயிலோடு மழையோடு மரம் பேசுவது போல ஒரு பேச்சு கடவுளோடு கூட பேசி விட முடியாது (ப-88) என்ற இயற்கை ரகசியம் உட்பட , மனதுக்கும் ஒரு டூ- லெட் பலகை மாட்டுவது (ப - 102) என நல்லதொரு வாசிப்பு அனுபவத்திற்கு கட்டியம் கூறுகிறது இத் தொகுப்பு.
ஆமை + நத்தை= ஜென் (ப- 108 ) என்ற கவிதை மிக புத்திசாலித்தனமான கவிதை. இதிலுள்ள உரையாடல் கவிதைகள் அனைத்தும் மிக அறிவுப்பூர்வமான வகையில் உருவான கவித்துவம் நிரம்பியதாக உள்ளன. (ப 74,92,107-163, 189 )
சொல்ல வேண்டும் என்று தோன்றியது கேட்க வேண்டும் என்று அவசியமில்லை (ப-101)- என்ற நீண்ட தலைப்பில் உள்ள கவிதை ஒரு கலைடாஸ்கோப் பார்வையைத் தருகிறது. இது போன்ற கவிதைகள் ஆழமான தீவிரமான கவிதை மனம் வாய்க்கப்பெறும்போது உருவாகும் பிரதிகள் என்று சொல்லலாம்.
//ஆறு விரைவாக வற்றிவிட்டது மீன் எலும்புகளாக // மீனைத் தின்று முள்ளை எறிவதுபோல ஆற்றைத் தின்று எறிந்தது யார்? என்ற மிகப்பெரிய கேள்வியை சுமந்த கவிதை உள்ளது.
முண்டி முளைத்து மூன்று இலை விட்டது// ப_113 / ஓரிலை / ஈரிலை தாவரம் தானே உண்டு அதெப்படி மூன்று இலை தாவரம் ஒன்று இருக்கும் என்ற கேள்வி நமக்குள் எழுவது இயல்பு காலம் – அகாலம் இதற்கு இடையில் துளிர்க்கும் மனம் என்று மூன்றாவது இலையைப் பொருள் கொள்ளலாம்.
துறவி போவது ஒரு குழந்தை போன பாதை (ப-125) மலர்நீட்டம் (ப – 146 ) ஆம் (169) சிட்டு (ப-141) இவை போன்ற கச்சிதமான கவிதைகள் தொகுப்பு முழுவதும் பல இருக்கின்றன.
மொத்த பற்களும் உதிர்ந்து ஒற்றை பல் மட்டும் மீந்திருக்கும் வினோத கனவு கண்ட (ப-78) அக்பர் பாதுஷா போல திசைகளை அழைத்துக்கொண்டு மோதிரம் போன்ற காற்று வளையம் புக தன்னந்தனியே ஒரு பறவை (ப-110 ) என இந்தத் தொகுப்பு முழுவதும் ஒரு உயர்திணை பறவை பறக்கிறது.
இந்த தொகுப்பில் மற்றொரு சிறப்பம்சம் எனக்கு தெரிகிறது நீளமான தலைப்புகள் எல்லாமே தனக்குள் ஒரு கவிதையை ஒளித்து வைத்துள்ளன. உன் காற்றுக்குமிழை அழைத்துக் கொண்டு போ(ப-142) ப-100 ஆனால் பல கவிதைகளுக்கு தலைப்பிடுவதற்கு அவர் மெனக்கெடவில்லையோ என்று நினைக்கவும் தோன்றுகிறது.
புளியம்பூவை நித்திய மலர் (ப-80) என பல மலர்களைக் (ப-84) கொண்டாடும் இத்ததாகுப்பிற்கு தமிழ் இலக்கிய பரப்பில் எப்படியும் விழுந்துவிடும் தாயம் இந்த கவிதை தொகுப்புக்காக ஏனென்றால் டீ குடிப்பதற்கும் தேநீர் அருந்துவதற்கும் நிரம்ப உண்டு வித்யாசங்கள் (ப-44 ) என்று கதிர் பாரதி சொல்வது போல இத் தொகுப்பு தரும் அனுபவங்களைப் உணர்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் வித்யாசங்கள் நிரம்ப உண்டு.
//மாட்டு வண்டி செல்கிறது இல்லை வண்டிப்பாதை அழைத்துப் போகிறது// (ப-226 ) என்ற கடைசி கவிதை தரும் தத்துவ விசாரணை தொகுப்பை மிக அழகாக கவிஞரின் அடுத்த தொகுப்பை நாம் வாசிப்பதற்காக தொடரும்..... என்று சொல்லாமல் சொல்கிறது.
இந்தக் கவிதைகள் உருவாக்கும் மன இடையீட்டையும் உணர்வோட்டங்களையும் அட்டைப்படம் நேர்த்தியாக உணர்த்தி , /தயவு செய்து உன்னிடம் இருந்து என்னைக் காப்பாற்று (ப-124) /என்று அவரே சொல்வதுபோல மன சிதிலங்களையும் விதிர்ப்பையும் ஒரு சேர வெளிப்படுத்தி உணர்த்துவது பாராட்டத்தக்கது
கவிதைகளை உள்வாங்குவதற்கு ஏற்ற White space உடன் நூலை உருவாக்கியுள்ள K.C செந்தில்குமாரின் பணி இதை பொலிவுற வெளியிட்டுள்ள இன்சொல் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
6382240354

18 March, 2022

விமர்சனம் ~ எழுத்தாளர் பாவண்ணன் ~ ``உயர்திணைப் பறவை``க்கு எழுதிய விமர்சனம் ~ உயிர் எழுத்து இதழில் பிரசுரமானது.

இயக்குநர் வசந்த பாலன் உயர்திணைப் பறவை கவ்தைத் தொகுப்பை வெளியிட எழுத்தாளர் பாக்கியம் சங்கர்  பெற்றுக்கொண்டார்...


தீரா வேட்கை

பாவண்ணன்
 

இன்றைய கவிதைப் படிமங்கள் இருவகையான சித்திரங்களை வாசகர்களுக்கு அளிக்கின்றன. ஒன்று துயரத்தின் சித்திரம். இன்னொன்று புன்னகையின் சித்திரம். இரண்டுமே மானுட வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாத அம்சங்கள். இவையிரண்டும் மாறிமாறி நிகழ்ந்து வாழ்க்கையை ஒரு மாறாத புதிராகவே இந்த மண்ணில் நிலைநிறுத்துகின்றன. ஒவ்வொரு கவிஞனின் நெடும்பயணமும் அந்தப் புதிருக்கான விடையைத் தேடும் முயற்சிகளே. கதிர்பாரதியின் கவிதைகளை அத்தகு நெடும்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு நவீன கவிஞனின் கையேட்டுக்குறிப்புகள் என்று சொல்லலாம்.

கதிர்பாரதியின் புதிய கவிதைத்தொகுதி உயர்திணைப்பறவை என்னும் தலைப்பில் இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுடன் ஒரு தொகைநூலின் தோற்றத்துடன் வெளிவந்துள்ளது. காட்சிகளாக உறைந்திருக்கும் எண்ணற்ற கணங்கள் இத்தொகுதியில் நிறைந்திருக்கின்றன. அவற்றை வாசிப்பது அரிதான ஓவியங்களைக் கொண்ட ஒரு கண்காட்சிக்கூடத்தைச் சுற்றி வருவதுபோல உள்ளது.

கோட்டோவியங்களாக தீட்டப்பட்டிருக்கும் அம்மாவைப்பற்றிய சித்திரங்களில் படிந்திருக்கும் துயரத்தின் சாயல் அமைதியிழக்க வைக்கிறது. ஒரு சித்திரத்தில் பேச்சு வராத பிள்ளைக்காக நாக்கில் அலகு குத்தி காவடி தூக்கி நடக்கிறாள் அம்மா. இன்னொரு சித்திரத்தில் ஒற்றை ஆளாக துணிச்சலாக ஆற்றைக் கடந்து செல்கிறாள் அம்மா. மற்றொரு சித்திரத்தில் காலமெல்லாம் தன் சொந்தத் தோற்றத்தைப்பற்றிய அக்கறையே இல்லாமல் கொண்டதே கோலமெனத் திரிந்தாலும் தன் தாய்வீட்டுக்குச் செல்லும் முன்பு அவள் முன்னால் திருத்தமாக தன்னைக் காட்டிக்கொள்வதற்காக வேகவேகமாக முகம் திருத்தி கண்களுக்கு மை தீட்டிக் கொள்கிறாள் அம்மா. வேறொரு சித்திரத்தில் பேயை விரட்டியடிப்பதற்காக மிளாரால் ஓங்கியடிக்கும் பூசாரியைப் பார்த்து சிரிக்கிறாள் அம்மா. பிறிதொரு சித்திரத்தில் ஏர்வாடி தர்காவில் விட்டுவிட்டு வருவதற்காக சங்கிலி பிணைத்து அழைத்துச் செல்லப்படும்போது, அருகிலிருக்கும் மகனுடைய தலையைத் தடவிக்கொடுக்கும் அம்மா. வேறொரு சித்திரத்தில் சாரையும் நாகமும் பிணையல் போடும் வைக்கோல்போர்த் தோட்ட சீமைக்கருவேல மரத்தடியில் ஓரிரவு முழுதும் அழுதபடி அமர்ந்திருக்கும் அம்மா. இப்படி ஏராளமான சித்திரங்கள். ஒவ்வொரு சித்திரமும் அம்மாவின் வாழ்வு ஏன் இப்படி மாறியது என்னும் கேள்வியை எழுப்பியபடி இருக்கிறது. அதற்குப் பொருத்தமான விடையை அறியமுடியாத தவிப்பால், இதுவோ அதுவோ என மேலும் மேலும் கேள்விகளையே பெருக்கிக்கொள்கிறது.

ஒரு கவிதையின் இறுதியில் இடம்பெற்றிருக்கும் ’நீயும் பார்த்திருந்தாய்தானே நிலவே’ என்னும் வரி மகனுக்கும் அம்மாவுக்கும் நடுவில் நிலவை ஒரு சாட்சியாக கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. மகன் மண்ணில் நின்று பார்த்த சாட்சி. நிலவு விண்ணில் நின்று பார்த்த சாட்சி. எனக்குத் தெரியாத விடை உனக்குத் தெரிகிறதா என அவன் கேட்கவில்லை. அந்த வரியைப் படிக்கும் நமக்குத்தான் அப்படி கேட்கத் தோன்றுகிறது.

மகனுடைய துயரச்சுமையைக் காலம் மெல்ல மெல்ல கரைத்துவிடுகிறது. பிறகு அம்மாவைப்பற்றிய இனிய நினைவுகள் மிதந்து வருகின்றன. அம்மாவின் புன்னகையும் அம்மாவின் அன்பும் இனிய நினைவுகளாக மாறுகின்றன. அம்மாவை நினைவூட்டும் அனைத்தும் அவனுக்கு அமுதமாக மாறிவிடுகின்றன.

 

அம்மாவின் வெளிர்நீலச் சேலையை

ஒருமுறை சொப்பனத்தில் கண்டேன்

நதிபோல அது நெளிந்து கொண்டிருந்தது

மீன்குஞ்சுபோல அதில் நீந்தினேன்

 

என்னும் சித்திரம் அவன் எண்ணத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் படரத் தொடங்கியிருக்கும் இனிமையையும் உணர்த்துகின்றன. துயரத்துக்கும் புன்னகைக்கும் இடையிலான கவிதைப்பயணம் ஒரு பேரனுபவமாக உள்ளது.

புன்னகைக்க வைக்கும் கவிதைகளில் ஒன்று வீடுபோல் ஒரு வீடு. கதிர்பாரதி இக்கவிதையில் ஒரு வீட்டின் சமையலறையை நடமாடும் பாத்திரமாக மாற்றியிருக்கிறார். சமையலறை ஒருநாள் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறது. வீதியில் நடந்து சென்று எதிர்ப்பட்ட எல்லாவற்றையும் உண்ணத் தொடங்குகிறது. முன்பு எப்போதும் இப்படி நடந்துகொண்டதில்லை.  அதன் நடத்தை திடீரென இப்படி மாறிவிடுகிறது. வழியில் நின்ற வேப்பமரத்தைச் சாப்பிடுகிறது. மரத்தடி வேரோடு ஊர்ந்துவந்த ஓணானைப் பிடித்துச் சாப்பிடுகிறது. மரத்தைச் சுற்றிப் பறந்த தட்டான்பூச்சியைக்கூட அது விட்டுவைக்கவில்லை. ஒரு சுற்று சுற்றி வந்த பிறகு ஒரு திருப்பத்தில் தன்னுடைய வீட்டின் முன்னாலேயே வந்து நிற்கிறது. தன்னுடைய வீடு என்ற அடையாளம் புரிந்ததும் மெதுவாக ஒரு பூனை மாதிரி உள்ளே நுழைந்து தனக்குரிய இடத்தில் படுத்துக்கொள்கிறது. தனக்கு வழங்கப்பட்ட ஒரு தம்ளர் பாலை சப்புக்கொட்டி அருந்துகிறது. உயிர்ப்பு மிக்க ஒரு சின்ன சித்திரம். இதில் வீடு என்பது என்ன, சமையலறை என்பது என்ன, அது ஆணைக் குறிக்கும் படிமமா, பெண்ணைக் குறிக்கும் படிமமா என்ற ஆராய்ச்சியையெல்லாம் விட்டுவிடலாம். ஒரு வீட்டின் ஒரு பகுதி திடீரென காணாமற்போய் பேயாட்டம் போட்டுவிட்டு நல்ல பிள்ளை மாதிரி மீண்டும் வீட்டுக்குத் திரும்பி ஒடுங்கி தனக்குரிய இடத்தில் பொருந்திக்கொள்கிறது என்பது எவ்வளவு சுவையான கற்பனை. கணநேர விடுதலையின் கட்டற்ற கொண்டாட்டத்தின் சித்திரத்தை அக்கற்பனை நமக்கு வழங்குகிறது. முதலில் திகைக்கவைத்தாலும், பிறகு நினைத்து நினைத்து புன்னகைக்கும் அனுபவமாக மாறிவிடுகிறது.

புன்னகையையும் துயரத்தையும் ஒருங்கே கொண்ட கவிதை கொக்கிப்பூ.

சிதம்பரம் டைலர் லேடீஸ் ஸ்பெஷலிஸ்ட்

வேலையில் படுநேர்த்தி

ஜாக்கெட் வடிவமைப்பில் கைநிபுணர்

அவர் கிழித்துத் தைத்த கோடுகள் தாண்டி

ஊரின் பெண்களுக்கு

அளவுகள் துளியும் வழியாது

கொக்கிகள் மடங்கி

முழங்காலில் உட்காரும் துல்லியம்

பிரில்கள் உருவாக்கி பஃப் கைகள் தைப்பார்

பிறகு அவை

கைகள் அல்ல கைமலர்கள்

தையல்கள் அந்தரங்கம் பேசும்

கட்டைவிரல் நகப்பூவால்

பிசிறுகள் நீக்கி

ஜாக்கெட் முதுகு நீவியபடி சொன்னார்….

‘முனைகள் பொருந்தாமல் காஜா பிசிறிய

ஜாக்கெட் ஒன்றுண்டு என்னிடம்’

அது அவர்

‘உச்சி வகுந்து பிச்சிப்பூ வைத்த கிளி’யான கதை

உலகத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் கண்ணாலேயே அளவு பார்த்து பொருத்தமாக தைத்துக் கொடுக்கும் கலைஞன், சொந்த மனைவிக்கு பொருத்தத்தைக் கணிப்பதில் பிழை செய்துவிட்டதற்கு யாரால் விளக்கம் தரமுடியும். காலப்பிழையால் கணக்கு பிழையானதா? அல்லது கணக்குப் பிழையால் காலப்பிழை நேர்ந்துவிட்டதா? விடை எதுவாக இருந்தாலும், ஏற்கனவே இழந்துவிட்டவன் வாழ்வில் அதற்கு எந்தப் பொருளுமில்லை.

புன்னகைக்கவைக்கும் இன்னொரு கவிதை.

 

’அப்படித்தான்

ஓடி வா…. ஓடிவா’ என

முன்னால் ஓடுகிறது

முயல்

’வந்துவிட்டேன்… வந்துவிட்டேன்’ என

பின்னால் ஓடித் திணறுகிறது

எறும்பு

இதுவோ

யானை வலசைப்பாதை

 

யானை நடந்த பாதையில் ஓடிப் பழகிய முயல் எறும்பையும் அழைத்துவந்து அந்தப் பாதையில் ஓடவைப்பது நல்ல கற்பனை. ஒவ்வொன்றின் மீதும் ஒவ்வொரு பொருளையேற்றி முடிவே இல்லாமல் ஆய்வு செய்துகொண்டு செல்லலாம். அந்த ஆய்வைவிட, யானையும் முயலும் எறும்பும் ஒரே பாதையில் ஓடும் கற்பனை அருமையாக உள்ளது. உருவங்கள் வேறுபட்டாலும், உள்ளிருந்து இயக்கும் உயிரின் விசை எல்லா உயிரினங்களிலும் ஒன்றாகவே உள்ளது.

 

’பிரித்து எழுதுக’ எழுதுகிறாள்

நான்காம் வகுப்பு மகள்

வேகவேகமாக…..

கொடைத்திறம் = கொடை + திறம்

சிலம்பாட்டம் = சிலம்பு +ஆட்டம்

மற்போர்= மல்+போர்

தற்காப்பு = தன் +காப்பு

மக்கட்பண்பு = மக்கள்

……………………………………………………………………………………..

……………………………………………………………….

அவள் வேகம் முன்பு

பூமி வந்தால்கூடப் பிரித்துவிடுவாள்

பூ+ மி

 

ஒழுங்கு மாறாமல் செய்யும் செயலில் நிகழும் ஒரு சிறு பிசகைக் கண்டு உருவாகும் புன்னகை மிக அழகானது.

 

குழந்தையின் பென்சில்

அதில் இருந்து

ஒரு கிளி பறக்கிறது

இதுவரை

எந்த மரத்திலும் உட்காராத

அதிசயக்கிளி

அதே பென்சிலில் இருந்து

ஒரு கிளை முளைக்கிறது

இதுவரை

எந்த மரத்திலும் முளைக்காத

அதிசயக்கிளை

அதிசயக்கிளியே, வா

வந்து

அதிசயக்கிளையில் உட்கார்

 

ஒவ்வொரு வரியிலும் குழந்தைமை நிறைந்த இக்கவிதையில் நிறைந்திருக்கும் புன்னகைக்கு அளவே இல்லை.

 

சுடுகாட்டுப்பூக்கள்

நடுவே

ஒரு தேனியைப் பார்த்தேன்

’தேன் எடுக்க வந்தேன்’ என்றது

அதன் காலில்

தேன் மகரந்தங்கள்

 

சுடுகாட்டில் பூத்த பூ என்பதால், அந்தப் பூவில் தேன் இல்லை என்று எப்படி சொல்லமுடியும்? மனிதனுக்குத்தான் சுடுகாடு, தோட்டம், நல்ல இடம், கெட்ட இடம் என எண்ணற்ற வேறுபாடுகள் கண்ணில் பட்டு பாடாய்ப் படுத்துகின்றன. மரம்செடிகொடிகள் எந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லை. தேனீக்களும் பறவைகளும் கூட வேறுபாட்டைப் பார்ப்பதில்லை. அவை வாழும் உலகம் வேறுபாடுகளைக் கடந்ததொரு உலகம்.

 

இடி விழுந்து

தலை கருகிய புளியமரம்

பார்த்தபோது,

தலையில்

மண்ணெண்ணெய் ஊற்றி

நெருப்பு வைத்துக்கொண்ட

கதை சொன்னாள்

எலிசபெத் பெரியம்மா

சிரித்தபடி

 

மழைக்காலத்தில் இடி இடிப்பதும் அதனால் மரம் பொசுங்குவதும் இயற்கை. ஆயிரம் மரங்களில் ஒரு மரம் அந்த இடியால் கரிந்துபோகிறது. ஆனால் மனிதர்கள் அப்படி பொசுங்குவதில்லை. அது இயற்கையுமில்லை. அது முற்றிலும் இயற்கைக்கு மாறானது. மனிதர்களின் சதியும் சூழ்ச்சிகளும் விமர்சனங்களுமே அத்தகு மரணங்களுக்குக் காரணங்கள். அந்தத் துயரத்தையும் புன்னகைத்தபடி நினைவுகூரும் வகையில் மனிதர்கள் வெகுவேகமாக துயரத்தைக் கடந்துவந்து விடுகிறார்கள்.

கிருஷ்ண நிழல் இன்னொரு முக்கியமான கவிதை. மகாபாரதத்தின் தொடக்கத்தில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் வில்வித்தை பயிற்சி தரும் துரோணர் இலக்கைச் சுட்டிக்காட்டி அங்கே தெரிவது என்ன என எல்லோரிடமும் கேட்கும் ஒரு கேள்வி மிகமுக்கியமானது. அனைவருக்கும் இலக்கு அங்குள்ள எல்லாவற்றோடும் இணைந்த ஒன்றாகத் தெரியும்போது, அர்ஜுனனுக்கு இலக்கு மட்டுமே தெரிகிறது. இது ஒரு தருணம். குருக்ஷேத்திரத்தில் போர் தொடங்கவிருக்கும் தருணத்தில் அர்ஜுனன்    மனம் சோர்ந்து போர் செய்ய மறுக்கிறான். அப்போது அவனுக்கு கிருஷ்ணன் செய்யும் உபதேசம் துணிவைக் கொடுக்கிறது. இது மற்றொரு தருணம். இந்த இரு தருணங்களையும் கலைத்தும் இணைத்தும் ஒரு மாய நாடகத்தை தன் கவிதையில் நிகழ்த்துகிறார் கதிர்பாரதி.

 

கிருஷ்ணர்

அர்ஜுனனக்குச் சொல்லவே முடியாத

கீதோபதேசம் கீழ்வருவன

 

’அதோ

மரம் தெரிகிறதா?’

‘தெரிகிறது

அதன் பசும் வனப்பும்’

‘மரத்தில் இருக்கும் பூ தெரிகிறதா?’

‘தெரிகிறது,

அதன் மஞ்சள் நிறமும்’

‘பூவுக்குள் இருக்கும்

காய் மற்றும் கனி தெரிகின்றனவா?’

‘தெரிகின்றன

அவற்றின் துவரப்பும்

மற்றும் இனிப்பும்’

‘கனிக்குள் இருக்கும் விதை தெரிகிறதா?’

‘தெரிகிறது.

அதன் மழைத்துளி வடிவமும்’

‘விதைக்குள் இருக்கும் மரம் தெரிகிறதா?’

‘தெரிகிறது, அதன் மடி நிழலும்’

‘அம்பறாத்தூணியை கழற்றி

ஓரமாக வைத்துவிட்டு வா…

அந்த மரத்தின் கீழ்

சிறிது நேரம்

உட்கார்ந்துவிட்டு வருவோம்.

 

அனைவரையும் கொல்லும் மன உறுதியை ஊட்டிய கிருஷ்ணனாக அல்லாமல் கதிர்பாரதி உருவாக்கிய கிருஷ்ணன் யுத்தத்திலிருந்து விலகி வாழும் வழியைச் சொல்கிறான். அமைதியை நாடிச் செல்லும் வழியைச் சுட்டிக்காட்டுகிறான். சண்டை செய்வதைவிட அமைதியே அவனுக்கு முக்கியமாக இருக்கிறது. பகை வேண்டாம், நட்பு வேண்டும் என்பதே அவன் எண்ணமாக இருக்கிறது.

கிருஷ்ணன் சுட்டிக் காட்டியதாலேயே அந்த நிழலுக்கு கிருஷ்ண நிழல் என்று பெயர் சூட்டுகிறார் கதிர்பாரதி. இன்றைய காலகட்டத்தில் கொல் என்று யாரும் சொல்லாமலேயே ஒருவரைக் கொல்கிறார்கள். அந்த அளவு கொலைவெறி ஏறிக் கிடக்கிறது. கொல்லாதே என்றும் பகை வேண்டாம் என்றும் அமைதி வேண்டும் என்றும் சொல்லத்தான் ஆளே இல்லை. அந்த உபதேசம்தான் இன்றைய தேவை. அக்குறையை  கதிர்பாரதி இக்கவிதையில் தீர்த்துவைக்கிறார். கொல் என்று சொல்லும் கிருஷ்ணனைவிட கொல்லாதே, அமைதியாக இருக்கலாம், வா என்று உபதேசிக்கும் கிருஷ்ணனே இன்றைய தேவை.

 

மலைப்பாம்பு

தன் இரையைத் தேடுகிறது

தீரா வேட்கையோடு

எறும்பும் அப்படித்தான்

தேடுகிறது

 

கதிர்பாரதியின் இவ்வரிகள் ஒரு பெரிய ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறது. மலைப்பாம்புக்கு உள்ள பசியையும் எறும்புக்கு உள்ள பசியையும் அது வேறுவேறாகப் பார்க்கவில்லை. பாம்பு பெரிய உயிர் என்பதால் அதன் பசி தீவிரமானது என்றோ, எறும்பு சின்னஞ்சிறிய உயிரென்பதால் அதன் பசி பொருட்படுத்தத் தேவையற்றது என்றோ பொருள் இல்லை. பசித்துன்பம் இரண்டுக்கும் ஒரே விதமானதுதான். பசிதணிக்கும் உணவுக்கான தேடலின் தீவிரமும் இரண்டுக்கும் ஒரே விதமானதுதான். தீவிரம் கொண்டவர்களின் தேடலே உணவை விரைவில் கண்டடைய வைக்கிறது.

வயிற்றுப்பசிக்கான தேடலில் மட்டுமன்றி, மனப்பசிக்கான தேடலிலும் தீவிரமும் தீரா வேட்கையும் கொண்டவர்களே கண்டடைகிறார்கள். தீரா வேட்கை கொண்ட படைப்பாளிகளும் வாசகர்களும் இலக்கிய உலகில் என்றென்றும் நிறைந்திருக்கிறார்கள். கதிர்பாரதியிடம் நிறைந்திருக்கும் தீரா வேட்கையின் விளைவே 226 பக்கங்கள் கொண்ட இந்தக் கவிதைத்தொகுதி.

 

(உயர்திணைப்பறவை – கவிதைகள். கதிர்பாரதி, இன்சொல் வெளியீடு, 25- மோதிலால் தெரு, தியாகராய நகர், சென்னை – 17 . விலை. ரூ.260)

02 May, 2017

பேட்டி ~ இலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது ~ விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி ~ கதிர்பாரதி

எழுத்தாளர் பிரபஞ்சனின் எழுத்து வாழ்க்கைக்கு இது 55-வது ஆண்டு. இதைக் கொண்டாடும் விதமாக எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பவாசெல்லதுரை, பதிப்பாளர் வேடியப்பன் ஒருங்கிணைப்பில், ஏப்ரல் 29-ம் தேதி சென்னை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் மிகப்பெரிய இலக்கிய விழா நடக்க இருக்கிறது. விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சனின் படைப்புகள் வெளியீடு, ரூபாய் 10 லட்சம் நிதியளிப்பு, ஆவணப்படம் திரையிடல், நாடக அரங்கேற்றம், எழுத்தாளர்கள் உரை... என ஓர் இலக்கியத் திருவிழாவே நடைபெற இருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் இயங்குகிற முன்னோடி எழுத்தாளரான பிரபஞ்சனின் பிறந்த நாளான இன்று அவரோடு பேசினேன்...

``பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்...’’

``நன்றி... இந்த நாளில் அப்படி ஒன்றும் விசேஷம் இல்லை. பிறந்துவிட்டோம். அதனால் இந்த நாள் வரும்; போகும். அவ்வளவுதான். ஆனால், நண்பர்களோடு இணக்கமாக இருக்க இன்னும் ஒரு நாள் கிடைத்திருக்கிறது. அதுதான் இதில் இருக்கும் மகிழ்ச்சியே.’’

``ஆரம்ப கால எழுத்து வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வாக எதைச் சொல்வீர்கள்?’’

``1961-ம் ஆண்டு நான் எழுத ஆரம்பித்தேன். 1982-ம் ஆண்டுதான் என் கதைகளைப் புத்தகமாக பார்க்க முடிந்தது. 8-ம் வகுப்பு படிக்கும் காலத்தில்தான் புதுமைப்பித்தன் எழுத்துக்கள் என்னிடம் வந்தன. அல்லது அவற்றை நான் அடைந்தேன். புதுச்சேரியின் `கலைக்கோயில்’ பத்திரிகை ஆசிரியர்தான் புதுமைப்பித்தனை எனக்குக் கொடுத்தார். அதுவரை புதுமைப்பித்தனை யார் என்றே எனக்குத் தெரியாது. அதற்கு முன்பு வரை
என் எழுத்தாளர்கள் அகிலனும் நா.பார்த்தசாரதியும்தான். ஆனால், புதுமைப்பித்தன் எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கிய பிறகு, எனக்கு அவர் வித்தியாசமாக இருந்தார். கையில், அகங்கை புறங்கை என இரண்டு உண்டு. அதுவரை அகங்கையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். புதுமைப்பித்தன்தான் புறங்கையை எழுதிக் காட்டினார். இதைத்தான் முக்கியமான நிகழ்வாகச் சொல்லவேண்டும்.’’

``காவிரிக்கரை எழுத்தாளர்களோடு நெருங்கிப் பழகியிருக்கிறீகள அல்லவா அந்த அனுபவம் சொல்லுங்கள்?’’
``என் தஞ்சை வாழ்க்கை 1965-ம் ஆண்டு ஆரம்பித்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக எழுத்தாளர்கள் தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான்குஞ்சு ஆகியோரைச் சந்திக்கவும் அவர்களோடு நட்பாடவும் வாய்ப்பு கிடைத்தது. தி.ஜானகிராமன் மகாகலைஞன். ஆனால், அதைப் பற்றிய எந்தப் புரிதலும் அகங்காரமும் அவருக்கு இல்லை. டிபன், காபி, மனித வாழ்க்கை, மிராசுகளின் பெண்கள் சார்ந்த ஈர்ப்புகள், காவிரியில் தண்ணீர் ஓடுகிற வைபவம்... இவை போன்ற எளிய விஷயங்களைத்தான் அவர் சிலாகித்துப் பேசுவார். அவர் கதைகள் குறித்த விமர்சனம் போன்ற ஏதோ ஒன்றை நானும் தஞ்சை ப்ரகாஷும் ஆரம்பிப்போம். `அதை விடுங்கள் சார்... அவை எல்லாம் நேற்றின் விஷயங்கள். நாளை எழுதப்போகும் கதைகளை மனதுக்குள் வார்த்தை வார்த்தையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு சாயங்காலம் எந்த ஹோட்டலில் இட்லி சாப்பிடப்போகலாம் என்று சொல்லுங்கள்’ என்பார். ஆனால், உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களை அவர் அறிவார். தன் படைப்புகளை அவர்களோடு ஒப்பிட்டு மனசுக்குள் மார்க்  போட்டுக்கொள்வார். ஆனால், எதையும் பேசமாட்டார். என்னுடைய `பிரும்மம்’ கதை, தி.ஜானகிராமன் கணையாழி ஆசியராக இருந்தபோது அதில் பிரசுரமானது. அது அவருக்கு மிகவும் பிடித்த கதை. அந்தக் கதை பிரசுரத்தைக் கொண்டாட, அன்று மாலை 4 மணிக்கெல்லாம் என்னை வரச் சொல்லி, திருவல்லிக்கேணி ரத்னா கஃபேயில் ஸ்வீட், காரம், காபி வாங்கிக்கொடுத்துக் கொண்டாடினார். நான் புகழப்படும்போதெல்லாம், எனக்கு புளகாங்கிதமோ ஆணவமோ வருவதில்லை. காரணம், தி.ஜானகிராமனை நான் பார்த்துப் பழகியிருந்ததுதான். எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமன் கடல்போன்ற ஆழமுடையவர். அவருடைய சொத்து, பொருளாதாரம் எல்லாம் வீழ்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தில்தான் நானும் தஞ்சை ப்ரகாஷும் அவரைச் சந்தித்தோம். அந்த இழப்பின் சுவட்டை நாங்கள் அறியாவண்ணம் சிரித்துச் சிரித்துப் பேசினார். பிறகுதான் அவரின் மாபெரும் இழப்புகள் குறித்து நாங்கள் அறிந்தோம். பிற எழுத்தாளர்கள் மீது காழ்ப்போ வெறுப்போ இல்லாமல் அவர், தன் மனதைப் பக்குவம்செய்து வைத்திருந்த விதம் எனக்கு இப்போதும் ஆச்சர்யம் தருகிறது. எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு மகத்தான சம்ஸ்கிருத அறிஞர். அவருடைய மேதமைத்தனத்தை வெளியிட வாழ்க்கை அவரை அனுமதிக்கவே இல்லை. அது குறித்து அவருக்கு நிறைய சோகங்கள் உண்டு. அவரிடம் இருந்து, வேதத்தில் சில உபநிஷத்துக்களை நான் அறிந்துகொண்டேன். சாதனையாளர்களை நான் சந்தித்தவரை, அவர்கள் பல நல்ல விழுமியங்களோடு தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். நான் பெருமையாகச் சொல்லவில்லை... இவர்கள் போன்றவர்களின் அடியையொற்றி மேன்மையான மனிதனாக வாழ வேண்டும் என்பதே இந்த அரைநூற்றாண்டு எழுத்து வாழ்வு எனக்கு கற்றுத்தந்திருக்கிறது.’’

``புதுச்சேரிபோலவே உங்களுக்குச் சென்னையும் பிடித்தமான ஊர்... சென்னை இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத எழுத்தாளர் யார்?’’

``ஜெயகாந்தன். நான் அவரிடம் கூர்ந்து கவனித்த ஒன்று... எந்த நிலையிலும் அவர் பெண்கள் குறித்து இழிவாகவும் மரியாதைக் குறைவாகவும் பேசவே மாட்டார். பரப்பைக் கிளப்பிய அவருடைய `அக்கினிபிரவேசம்’ கதைக்கு எதிராக ஒரு பெண் எழுத்தாளர் கதை எழுதினார். ஜெயகாந்தன் மடத்தில் அந்தப் பெண் எழுத்தாளர் குறித்து மிக மோசமாக விமர்சனம் செய்தார் ஒரு தோழர். உடனே பொங்கியெழுந்த ஜெயகாந்தன், `வெளியே போங்கள்’ என்று அவரைக் கத்தித் தீர்த்துவிட்டார். அதன் பிறகு அவரை நான் ஜெயகாந்தன் மடத்தில் பார்த்ததே இல்லை. அப்புறம் அசோகமித்திரனைச் சொல்ல வேண்டும். நான் 61-ல் எழுத ஆரம்பித்து, 82-ல் அதைப் புத்தகமாகக் கொண்டுவந்தபோது, அறிமுகமே இல்லாத எனக்கு அழகான முன்னுரை ஒன்றை எழுதிக்கொடுத்தவர் அசோகமித்திரன். இவர்களிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டது... புதிதாக தமிழுக்கு எழுத வருகிற தகுதிவாய்ந்த எந்த எழுத்தாளரையும் வரவேற்று, அவருக்கு ஆதரவான அபிப்ராயத்தை எழுத வேண்டியது மூத்த எழுத்தாளராக என் கடமை என்பதைதான்.’’

  ``இப்போதைய இலக்கிய போக்குகள் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

``எனக்கு சில வருத்தங்கள் இருக்கின்றன. நானறிந்த மட்டில் மிக முக்கியமான கவிஞர்கள், கதையாளர்கள் என இருபது பேரையாவது சொல்லிவிட முடியும். ஆனால், அதைப் பற்றி எல்லாம் எந்த விதமான எழுத்தும் பேச்சும் தமிழில் இல்லை. சக எழுத்தாளர்களைத் தூஷிப்பதும் புறக்கணிப்பதும் அதிகமாகிவிட்டது. அவர்கள் குறித்து மௌனம் காப்பதன் மூலம் ஆழமாகப் புறக்கணிக்கும் போக்கு காணப்படுகிறது. பெண்கள் எழுத வந்தால் ஆண்கள் கோபப்பட எந்தவித நியாயமும் இல்லை. எல்லாவற்றையும்விட மிகப்பெரிய இழிவு, தன்னைத்தானே மிகப்பெரிய எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்வதுதான். இவை எல்லாம் இலக்கியம் சார்ந்த எந்த விதமான நல்ல பண்புகளையும் வளர்க்காது.’’

``உங்கள் இலக்கிய வாழ்வில் மிக முக்கியமான பழக்கமாக எவற்றைக் கடைப்பிடிக்க விரும்புகிறீர்கள்?’’

``மூன்று விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று... எந்தச் சூழ்நிலையிலும் என்னைப் பற்றிய பெருமித உணர்வை அடையக் கூடாது. இரண்டு... எந்தக் காரணத்தைக் கொண்டும் சக எழுத்தாளனைக் காழ்ப்புஉணர்ச்சியோடு அணுகவோ, வெறுப்பு கொண்டு தூஷிக்கவோ புறக்கணிக்கவோ கூடாது. மூன்றாவது... இன்று வெளிவரும் ஒரு புதிய எழுத்தாளனின் படைப்பை நாளையே படித்துவிட வேண்டும்.’’

``வேறு எந்த இந்திய மொழிகளைக் காட்டிலும் மிகக் காத்திரமான படைப்பாளிகள் தமிழ் மொழியில் உண்டு. ஆனால், அகிலன், ஜெயகாந்தன் தவிர வேறு எவருக்கும் ஞானபீடம் விருது வழங்கவில்லை. இந்தப் பாரபட்சம் ஏன்?’’

``ஞான பீட விருது கமிட்டியில் மிக முக்கியஸ்தராக இருந்த கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தியிடம், இது குறித்த என் ஆதங்கத்தைச் சொன்னேன். அப்போது அவர் சொன்னார்... `மலையாளம், கன்னடம், வங்காளம்... மொழி எழுத்தாளர்கள், அவர்கள் ஊரில் பகையாக இருந்தாலும், விருது விஷயம் என்று வரும்போது எங்கள் மொழி எழுத்தாளர்களுக்கே கொடுக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் மட்டும் எதுவும் சொல்லாமல் மௌனமாகத் திரும்பிவிடுகிறார்கள்’ என்றார். அவர் இப்படிச் சொன்னதில் எனக்கு எந்த ஆச்சர்யம் இல்லை. ஏனெனில் நமது எழுத்தாளர்கள் குறித்துதான் நமக்குத் தெரியுமே. தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டான இந்த ஆண்டில் தமிழின் சிறந்த
25 சிறுகதைகளைத் தொகுத்து புத்தமாகக் கொண்டுவரலாம் என்று நானும் எஸ்.ராமகிருஷ்ணனும் முடிவுசெய்திருக்கிறோம். இதை முதலில் தமிழர்கள் வாசிக்க வேண்டும். பிறகு இது ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற உலக மொழிகளிலும் வர இருக்கிறது. அதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதமே கொண்டுவர வேண்டும் என்பது எங்கள் திட்டம்.’’


``நீங்கள் எழுத்தாளர் மட்டுமல்ல பத்திரிகையாளராகவும் பணியாற்றியிருக்கிறீர்கள்... அந்த அனுபவம் சொல்லுங்கள்?’’

``தமிழில் வெளிவருகிற எல்லா பிரபல எல்லா முன்னணிப் பத்திரிகைகளிலும் வேலைபார்த்திருக்கிறேன். ஆனால், எந்தப் பத்திரிகையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்ததில்லை. 1990-ம் ஆண்டோடு என் பத்திரிகை உலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. எனக்கு பத்திரிகை வேலை தெரியாமல் இல்லை. பத்திரிகை தலைமையோடு நான் நட்போடு இருப்பதையும், அந்தத் தலைமையால் நான் மதிக்கப்படுவதையும் சக ஊழியர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஏதாவது சூழ்ச்சி செய்துவிடுவார்கள். அதில் மாட்டிக்கொண்டு கொதிப்பேறி வெளியேறிவிடுவேன். மேலும் இயல்பிலேயே என்னால் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்ய இயலாது. மற்றபடி கொடுத்த வேலையைச் சிறப்பாகவே செய்திருக்கிறேன் என்ற திருப்தி இப்போதும் எனக்குண்டு. ஒரு பத்திரிகையை விட்டு வெளியேறி, வேலைக்காக அடுத்த பத்திரிகையின் கதவைத் தட்டும்போதும், கசப்பான கடந்த காலம்தான் இங்கும் நிகழப்போகிறது என்றும் தெரியும். ஆனாலும், லௌகீகப் பிடுங்கலுக்காக அதைப் பொறுத்துக்கொண்டேன். தவிர உள்ளடகத்தில் ஏதும் செய்துவிடாமல் பெண்களின் முகத்தைத் தவிர வேறு எதையும் அட்டைப்படமாகப் போடாத பத்திரிகையில், பிரபஞ்சனுக்கு என்ன வேலை இருக்கிறது. இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.’’

``கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் அரசியலையும் கடுமையாக விமர்சித்தவர் நீங்கள். இப்போது ஜெயலலிதா உயிரோடு இல்லை. கருணாநிதி அரசியலில் ஆக்டிவ்வாக இல்லை. இவர்கள் இல்லாத தமிழக அரசியல் குறித்து உங்கள் எண்ணம் என்ன?’’
``தமிழருக்கு வாய்த்த உண்மையான அரசியல் இருண்ட காலம் இதுதான். எந்த ஓர் அரசியலும் ஒரு தத்துவத்தின் மேல்தான் இயக்கப்படுகிறது. தமிகத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட்களுக்கும், திராவிட அரசியலுக்கு இந்தத் தத்துவப் பின்புலம் உண்டு. இதில் கருணாநிதி அரசியல் மீது எனக்கு கடும் விமர்சனம் உண்டுதான். ஆனாலும், சில திராவிடத் தத்துவப் பினபுலத்தோடு அரசியல் நடத்தினார் கருணாநிதி. இதற்குப் பிறகு வந்தவர்கள் சொந்த பகையின் மீதும், தனிமனித வெறுப்பின்மீது மட்டுமே அரசியலைக் கட்டினார்கள். இங்கேதான் தமிழனின் அரசியல் வீழ்ச்சி அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால், இது இப்படியே போகாது. கட்சிகளை நம்பாமல் மக்கள் அரசியலைக் கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு உதாரணங்கள்தான் மாணவர்களின் மெரினா போராட்டமும் விவசாயிகளின் டெல்லிப் போராட்டமும். மக்களே சிறந்த அரசியல்வாதிகளின் போர்க்குணங்களோடு அரசியலை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதைப் பார்த்து அரசியல் கட்சிகள் நடுங்கத் தொடங்கிவிட்டன என்பது உண்மை.’’

``எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு தாண்டவமாடுகிறது. ஆனால், தமிழக அரசு `குடி’க்கு முக்கியத்துவம் கொடுத்து டாஸ்மாக்குகளைத் திறக்கத்தான் முனைப்பு காட்டுகிறது. இது எங்கே போய் முடியும்?’’
``குடி தண்ணீர் தட்டுப்பாடு, தமிழக நதிகள் வறண்டுபோனது எல்லாம் இயற்கையால நிகழ்ந்த பிழை இல்லை. அரசியல் செயற்கையாக நிகழ்த்திய பிழை. 1965 – 1975 காலகட்டத்தில் தஞ்சையின் ஐந்து நதிகளும் கரைபுரண்டு ஓடின. ஆனால், இப்போது வறண்டு கானல் நீர்தான் ஓடுகிறது. இந்த வறட்சியைப் பயன்படுத்தி மணல் மாஃபியாக்கள் உருவானது தமிழகத்தின் இன்னொரு சாபக்கேடு. இவ்வாறாக தமிழகம் வறண்டுபோகும் என்பதை 30 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துதான் தமிழக நதிகளை இணைக்கச் சொல்லி குரல்கள் எழுந்தன. அதைச் சுலபமாகவும் நிகழ்த்தியிருக்கலாம். ஆனால், அப்போது ஆண்ட கட்சிகள் இதில் ஆர்வம் காட்டாததுதான் இந்த வறட்சிக்கு முக்கியக் காரணம். இதை கேரளமும் கர்நாடகமும் பயன்படுத்திக்கொண்டு, தாங்கள்தான் தண்ணீருக்கு எஜமானர்கள்போல நடந்துகொள்கிறார்கள். அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு கண்மூடி நடிக்கிறது. குடிதண்ணீருக்கு அலைகிறபோக்கும், குடிக்க சாராயக் கடைகளைத் திறப்பதும் எதிர்முனைகள். இரண்டுமே பணத்தையும் பலத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. டாஸ்மாக் கடையைத் திறக்காதீர்கள் என்று போராடிய பெண்களை காவல் துறை அதிகாரி ஓங்கி அறைகிறார். அது அவரது கை அல்ல... அரசாங்கத்தின் கை; அதிகாரத்தின் கை... மக்களின் போராட்டாத்துக்கு எதிராக அந்தக் கை தானாகவே ஒடிய வேண்டும். அப்போதுதான் காலம் விடியும்.’’

‘`அத்துணை நாசக்காரத் திட்டங்களை எல்லாம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்த மத்திய அரசு நினைப்பதற்கு வரலாற்று ரீதியான காரணம் இருக்கிறதா?’’

``இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் காலம் தொட்டே தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. இந்திய சுதந்திரப் போராட்டம் முதலில் வேர்கொண்டது தென்னிந்தியாவில்தான். குறிப்பாக தென் தமிழகத்தின் பூலித்தேவன் ஆரம்பித்துவைத்தான் என்பது வரலாறு. ஆனால், அதை இந்த வரலாற்றை எழுதுபவர்கள் அவ்வளவாகக் கவனத்தில் கொள்ளமாட்டார்கள். காந்தி தண்டி யாத்திரை போகும்போது கூடப்போனவர்கள் பற்றிக்கூட குறிப்புகள் இருக்கும். ஆனால், வ.உ.சி-யின் தியாகத்தைப் போனாபோகுது என்றுதான் ஒப்புக்கொள்வார்கள். அதனால்தான் அன்றைக்கு `வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்றார்கள். ஆனால், வடக்கோடு சரமரசம் செய்துகொண்ட பிறகு தெற்கு செழிக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், குறிப்பிட்ட சிலரே செழித்தார். மாநில நலன்கள் காவுகொடுக்கப்பட்டன. எப்போதுமே இந்திய பிரதமர்களுக்கு தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது என்ற என்பதை ஏதாவது ஒரு போராட்டம் மூலம் நினைவுப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது. தவிர தேசிய அரசியலில் முக்கிய ஆளுமையாக காமராஜர், கருணாநிதி போன்றோருக்குப் பிறகு வேறு எந்தத் தமிழரும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதும் ஒரு காரணம். தமிழக விவசாயிகளின் டெல்லிப் போராட்டத்தை அனைத்துத் தமிழகக் கட்சிகளும் கூர்மைப்படுத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும் அல்லவா? ஏன் அது நடக்கவில்லை. தமிழக பாஜக, விவசாயிகளைச் சந்திக்கச் சொல்லி பிரதமருக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டுமே... ஏன் செய்யவில்லை. இப்படி நடக்காத வரை தமிழகத்தை நோக்கி இன்னும் அணு உலைகள் வரும். நெடுவாசல் மற்றும் நியூட்ரினோ போன்ற திட்டங்கள் தமிழகத்தை நஞ்சாகத் தீண்டிக்கொண்டேதான் இருக்கப்போகின்றன.’’

``இந்தப் போராட்டங்களில் இலக்கியவாதிகளின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?’’
‘`எனக்கு இலக்கிய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்... நாம் மக்களின் போராட்டங்களில் இணைந்து பங்கெடுத்து நம்மால் இயன்றதை முடிந்த வரை மக்களுக்கு செய்ய வேண்டும். அப்படிப் பங்கெடுக்காவிட்டாலும் பராவயில்லை. மக்களின் உரிமைக்கு எதிராகச் செயல்படுகிற அரசாங்கத்தை ஆதரித்துவிடக் கூடாது. ஏனெனில், படித்தவன் பாவம் செய்தால் போவான், போவான் அய்யோ என்று போவான்.’’

``தமிழகத்தை பெரியார் மண் என்கிறோம். ஆனால், ஆவணக்கொலை என்ற அவலம் இப்போது இங்கு அதிகரித்துக்கொண்டு வருகிறதே?’’

``இந்திய சமூகத்தில் சாதிய மேல் - கீழ் மனோபாவம் கடந்த எல்லா நூற்றாண்டுகளிலும் இருக்கவே செய்தது. அது தாழ்த்தப்பட்டவர்களைக் கொலையும் செய்தது. ஏதோ சமூகத்தின் ஒரு பக்கம் மட்டும் கெட்டுவிட்டது என்று நினைக்காதீர்கள். ஒட்டுமொத்த பக்கமும் கெட்டுவிட்டதன் அடையாளம் இது. முன்பெல்லாம் முன்மாதிரித் தலைவர்கள் என்று ஒரு பத்து இருபது பேரைச் சொல்ல முடியும். அவர்கள் சமூகத்தின் சமநிலை கெடாமல் முடிந்தவரை பார்த்துக்கொண்டார்கள். இப்போது அப்படிப்பட்ட்வர்கள் இல்லை. எந்தத் துறையிலும் தியாகிகளோ, அர்ப்பண உணர்வுகொண்டவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். இது ஆபத்தானது. ஒரு பழத்தின் ஒரு பக்கம் அழுக ஆரம்பித்ததும், அது பழம் முழுக்கப் பரவும் அல்லவா. அதுதான் இப்போது நடந்துண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு லட்சம் என்பது பெரியத் தொகை. ஆனால், இப்போது ஆயிரம் கோடிகளில் ஊழல் நடக்கிறது. கடந்த பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமான ஒரு மணல், ஒரு மாஃபியா கும்பலை உருவாக்கும் என்று யாராவது நினைத்திருப்போமோ. சமூகத்தின் துரதிர்ஷ்டம் அதிகமாகிவிட்ட காலகட்டத்தில் நாம் வாழவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதுபோல.’’

``சமீபத்தில் இந்திய அரசியல் மற்றும் சமூகத்தில் மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துவருவதும், முற்போக்கு சக்திகள் பலவீனப்படுவதும் நடந்துவருகிறதே இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``இந்த விஷயம் உண்மையாக எனக்குப் பயத்தை உருவாக்குகிறது. இந்திய தேசத்தை இந்து தேசமாக்கப் பார்க்கிறார்கள். இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் முன்னிலைக்குக் கொண்டுவர நினைக்கிறார்கள். பசுமாட்டுக்குக் கொடுக்கும் மரியாதையை மனிதர்களுக்கு கொடுப்பதில்லை. பாபர் மசூதி இடித்து எத்தனை வருடங்கள் ஆகின்றன? உலகமே பரபரப்போடு உற்றுநோக்கிய நிகழ்வு அது. அது நிகழ்ந்து கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு ஆகிறது. ஆனால், அதில் சம்பந்தபட்டவர்களை நமது நீதி அமைப்பால் தண்டிக்க முடியவில்லை என்றால் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? மதக் கலவரத்தைத் தூண்டி அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கான அத்துணை வேலைகளும் நடைபெற்றுவருகின்றன.  இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய காலம் இது. மானுட நேசத்தையும் சத்தியத்தையும் மட்டும் ஏந்திக்கொண்டு மதவாத சக்திகளுக்கு எதிராக சகல வடிவங்களிலும் அவர்கள் போராட வேண்டும். இந்தியா என்பது மானுட மேன்மைக்கானவர்கள் வாழும் பூமி என்பதை நிரூபிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே மதவாதச் சக்திகள் கட்டி எழுப்பும் ஆதிக்கக் கோட்டையில் இருந்து ஒவ்வொரு செங்கல்லையும் உருவ முடியும்.’’