14 March, 2013

கணையாழி மார்ச் 2013 இதழில் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்கிற என் கவிதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதிய விமர்சனம் இது. நன்றி: கணையாழி இதழ், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்



வளர்பிறை அனுபவங்கள் 
====================
சுப்ரபாரதிமணியன்

கதிர்பாரதியின் திறந்த கவிதைகள் புதிய மொழி, புதிய உணர்வு, புதிய நடையுடன் இருப்பதை அவரின் கவிதைகள அவ்வப்போது படிக்கிறபோது அறிந்திருக்கிறேன். பெரும்பாலும் புதியமொழியும், புதிய உணர்வும், புதிய நடையும் கொண்டவை மூடுண்டு கலவரப்படுத்துவதுண்டு. தொடர்ந்த வாசிப்பில் உள்ள வாசகன் மனம் விரும்பும் பங்களிப்பை கதிர்பாரதி கவிதைகள் எப்போதும் கொண்டிருக்கின்றன.
இத்தொகுப்பின் கவிதைகளில், கவிஞன் பற்றி நிறையவே எழுதியுள்ளார் கதிர்பாரதி. கனவுகளின் விற்பனைப் பிரதிநிதி என்கிறார். எப்படியாகினும் கடத்தி விட வேண்டும் என்கிற ஆசையைச் சொல்கிறார். துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பென்று. அது துப்பாக்கிக்குள் ரவை நிரப்பியதைப் போலாகிறது. அழவைத்து விட்ட நிறைவும் வந்து விடுகிறது. நவகவிஞனின் தினப்படி வாழ்க்கையின் அவலத்தை ’’மகாகவி கவிதை எழுதுகிறான்” என்று குறிப்பிட்டு அவனின் எதிர்வினையையும் சொல்கிறார். கதிர்பாரதியின் கனவுகளை கொள்முதல் செய்து கொண்டுபோன வாசகனின் கண்களில் ஒளி பெருகத் தொடங்கச் செய்கிறார். இவரின் பாழடைந்த வீட்டைக் கடந்து செல்பவனின் அனுபத்தை வாசகன் கவிஞனைக் கடந்து செல்வதாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். இதற்கு மேல் அவன் என்ன செய்துவிட முடியும் என்பதில் ’’ஆவல்” கவிதையில் கூடக் குறிப்பிடுகிறார். வாழ்க்கையே கொலைக்களமாகி வருவதைச் சொல்லும் அனுபவங்கள் உண்டு. வாழ்க்கையில் கவிதைக்கு இடமில்லாமல் போய் விடுகிற துயரத்தையும் மேலிட்டு எடுத்துக்காட்டுகிறார். யாருடைய அனுபவங்களோ, வார்த்தைகளோகூட தனக்குள் வரித்துக்கொண்டதாகி பின் கவிதை வரிகளா கின்றன்.
நீள் கவிதைகளில் மகாகவி கவிதை ஒருவகை நிகழ் முரண் என்றால் குளத்தில் அலைகின்ற கவிதைகள் அகத்தூண்டுதலாக விரிகிறது. உள்ளுணர் வுடன் தொடரும் கவிதை மனம் சுற்றுச்சூழலையும் நிகழ் காலத்தையும் சரியாகவே கணித்து நகர்கிறது. உருக்கமான காதல் புலம்பலோ பெண்ணிடம் கெஞ்சுவதோகூட சாவை ஒத்த துயரத்தின் உச்சபட்சானுபவமாக எழுதுகிறார்
( மோகினியிடம் இருக்கு மூன்று அரளிப்பூக்கள் )
குழந்தைகள், ஆண்கள், பெண்கள், மிருகங்கள், சாத்தானும் கடவுளும் கவிதை களில் அலைக்கழிந்து அதிகாரத்துக்கு எதிரான குரலாகவும், அன்பினால் வார்த்தைகள் குழைந்ததாகவும் மாறுகிறது. மரண வேட்டை தொடர்ந்து கொண்டி ருக்கிறது. கதிர்பாரதியின் யானை கும்கிகள்தான். ஆனால் ஆசீர்வாதம் வாங்கும், ஆசீர்வாதம் தருபவை. பொம்மையை உருவாக்கிவிட்டு புன்னகையை அணைத்தபடி உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகள், மகன்களும் மகன்களின் நிமித்தமும் தரும் அனுபவங்கள், போன்றவற்றில் உட்சபட்சமான விளையாட் டைத் தொட்டு விடுகிறார்.” மகனால் நனைகிறது அப்பாவின் பால்யம் “ குழந்தை களின் குறும்புகளும், நடவடிக்கைகளும் கதிர்பாரதியின் மனதுக்குள் உட்கார்ந்து கொண்டு வாசிப்பாளனை குழந்தை மனம் கொண்டவனாக்கி விடுகிறது. வாசக் அனுபவங்களையும் நேர்மையானதாக்குகிறது. நேர்மையான அனுபவத்துக்கு கவிதை மொழி அதன் சாத்தியங்களை எல்லையற்றதாக்கிக் கொண்டே போவதற்கு இயல்பான வார்த்தைப் பிரயோகங்களும் நிகண்டிலிருந்து வார்த்தைகளை தேடி எடுக்காததும் சவுகரியப்படுத்துகிறது. உண்மையின் பக்கம் எப்போதும் நின்று கொண்டேயிருக்கிறார் கதிர்பாரதி .கட்டற்ற காதலை உடம்பின் ஏதோ ஒரு பாகமாக்கி நிலை நிறுத்தி விடுகிறார். மச்சங்கள் வழியே மீளும் காதலோ வாழ்வோ ஜீவத்துடிப்புடன் விரிந்து கொண்டே இருக்கிறது. புகைப்பட கலைஞனை கொன்று விட்டு கடவுளாகிக் கொள்கிற சமூகம், ஹிட்லர் சமாதனத் தூதுவராகிறார். இவற்றை அங்கீகரிக்கிற சமூகம் பிரிவைத் துரத்துகிறது. நிலம் பற்றிய சிந்தனைகளும், அக்கறையும் கனவுகளாக அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.” அதனால் உப்புச் செடிகள் இரண்டை வளர்கிறார்” கண்களில். நிலத்துக்கு ஆனந்தி என்று பெயர் சூட்டி ஆனந்திக்கிறார். பசப்புகளும், பாசாங்கு களும் மயங்கி இருக்கும் நிலத்தை மீட்டாக வேண்டும் என்ற அக்கறை இன்னொரு பரிமாணமாக விசுவரூபிக்கிறது. ” வழி தவறிய மனுஷ்ய குமாரனின் மறியை / பிதாவின் பெயரால் பலி கொடுத்து விட்டு / வீச்சமடிப்பது அதன் மாமிசம்தான் என்கிறோம்” கிராமிய அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் எத்தனங்கள் நிறையவே உண்டு. கடவுள் பற்றிய குறிப்புகளில் விலகுதல் பகுத்தறிவுப் பார்வைக்கும் கொண்டு செல்கிறது. நவீன நுகர்வு வாழ்க்கை தந்திருக்கும் பலி பற்றி இது போல் நிறையவே அக்கறையும், பயணப்படவும் முடிகிற இவரால். தனிமையை அடையாளப்படுத்திக் கொள்ளும் போது கூட ஊர் சுற்றுபவனைப்போல் எல்லாவற்றையும் தனக்குள் கொண்டு வந்து விடுகிறார். சமூகத்தின் எந்த அங்கத்திலிருந்தும் பிய்த்துக்கொண்டு போய் விடுகிறவராக இல்லை.
உலகமே காமுறுகிற வகையில் கவிதை எழுதும் எத்தனம் ஆச்சர்யமானது . துரோகம், வஞ்சகம், அதிகாரத்துக் எதிரான குரல் என்று சப்தமிடும்( மெல்லிய குரலில்தான்) கதிர்பாரதியின் எதிர்வினை சிறுநீராக முகத்திலும், வாயிலும் தெறிக்கிறது. அன்றாட நிகழ்வுகளின் உள் ரகசியங்கள் விரித்து வைக்கப்படு கின்றன. கவிதை கேளிக்கையாகி எண்ணற்ற படிமங்களை நிரப்புகிறது. கதிர்பாரதியின் கவிதைகள் என்றைக்கும் புதிதாகவே இருக்கின்றன. கவிதைக்குள் அவர் புதுமைமேதையாகவே இருக்க சாத்தியங்களை இத்தொகுப்பு உருவாக்குகிறது. இவரின் கவிதை மீதான் பலவீனங்கள் சுலபமாகச் சரிபவை.
“ஒரு பிரியம் திரும்பப் பெறப்பட்டதும்
சிறகிலிருந்து உதிர்ந்து வீழ்கின்ற இறகொன்றை
சுட்டு விரலுக்கும் கட்டை விரலுக்கு
இடையே சுழற்றியபடி
மொட்டைமாடி நிசியொன்றில்
மல்லாந்து துயில் முயல்கிறான் அவன்.
அப்போது
அவள் பாதரட்சையின் எழிலெடுக்கும்
பிரயாசையில்
தோற்றுத் தோற்றுச் சரிகிறது
மூன்றாம் பிறை”
கதிர்பாரதியின் கவிதை அனுபவம் நினைக்க நினைக்க வளர்பிறையாகவே மிளிர்பவை. (இது சம்பிரதாயமான வரிகளே என்றாலும்.) ஒரு பத்திரிகையா ளனாக இருக்கும் மனோநிலை மீறி அதன் பிரபல்யம் பூசாமல், நீர்த்துப்போகும் தன்மையுடன் அவசரம் காட்டாமல் அவர் கவிதைகள் உயிப்புடன் தொடர்ந்து இருப்பதற்கு திடமான அசாத்தியமான படைப்பு மனம் வேண்டும்.

(மெசியாவுக்கு மூன்று மச்சங்கள், கதிர்பாரதி,ரூ 60, புது எழுத்து, காவேரிப் பட்டிணம்)

11 March, 2013

வீடு


இரு கைவிரல்நுணிகளை
கோபுரமெனக் குவித்து
”வீடுன்னா இப்படித்தான் இருக்கும்”
என்று சிரிக்கிற திலீபன்
”மழை பெஞ்சா நனைஞ்சுடும்
அப்போ வீட்டை மூடிடணும்’’ என்று
இரு உள்ளங்கைகள் வரை
ஒட்டவைத்துக்கொள்கிறான்.
நனைந்தும்
நினைந்தும்
வாழ்வதற்கு
இந்த வீடு போதுமானதாக இருக்கிறது!

http://saptharegai.blogspot.in/2013/03/blog-post_549.html

07 March, 2013

வானவில்லான மோகப்பரிபூரணி ந.பெரியசாமி



மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்

தாயின் மடியில் கிடத்தி தந்தை கால்களை அமுக்கிப்பிடித்து தங்கள் குழந்தையை தாங்களே வெட்டிச் சந்தோசமாக சமைத்துத் தந்தால்தான் உண்ண வருவேன் உன் இல்லமென்ற அடியாரின் கோரிக்கையை கூற தாயானவள் என்ன இது ஈசனின் சோதனையென கதறி அழும் பாடல். என் தாத்தா வெகு ராகமாக பாடிக்கொண்டிருக்க கட்டில் அடியில் படுத்தவாறு கேட்டு அழுதுகொண்டிருப்பேன். எப்படித்தான் ஒரு மனிதனை அழவைக்கும் அளவிற்கு தாத்தாவால் பாடல் எழுத முடிந்தது என வியந்து நாமும் என்றாவது இப்படி எழுதவேண்டுமென நினைத்துக்கொள்வதுண்டு.  காலப்போக்கில்தான் தெரிந்தது அது சிறுதொண்டர் புராணத்தில் வரும் நாடகக் காட்சிப்பாடலென்று. ஏனோ அன்று எழுந்த ஆசையின் விளைவால் யார் எதை எழுதியிருந்தாலும் ஆவலோடு படிப்பதும் அவர்களை கொண்டாடுவதும் இயல்பாகிப்போனது.   அதன் நீட்சிதான் பள்ளிக்கூடத்தில் புதிதாக சேர்ந்தவன் கவிதை எழுதுவான் எனத் தெரிந்ததும் வலியப்போய் அவனோடு நட்பாகி அவனின் நெருங்கிய நண்பனாய் எனைக் காட்டிக்கொள்வதில் அலாதி பிரியம். அன்றைய விதைதான் இன்றளவும் எழுத்தை கொண்டாட்டமாக பார்க்கச் செய்திடுகிறது.  சமீபத்தில் கதிர்பாரதியின் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பை வாசித்தேன். என்னோடு நெருங்கிக் கிடந்த சில கவிதைகளில் நிகழ்ந்த என் பயணத்தை உங்களோடு பங்கிட்டுக் கொள்கிறேன்.
 மீன் குழம்பின் ருசிக்கு தன் முதல் புத்தகத்தை சமர்ப்பணம் செய்யும் கதிர்பாரதியின் எளிமையான மனம் எளிமையான கவிமொழியையே பிறப்பித்திருக்கிறது.
 அரிதாக நடைபெறும் சில நிகழ்வுகள் தனக்கேயான பொக்கிசங்களைக் கொண்டிருப்பது இயல்பு. அப்படியான பொக்கிசத்தை தரிசிக்கலாம் ‘குடும்பப் புகைப்படம்’ கவிதையில். பெரும்பாலான வீடுகளில் சட்டமிட்டு வரிசையாக புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். எல்லா நாளும் அதை நின்று வேடிக்கை பார்ப்பதில்லை எவரும். என்றாவது பார்க்க புகைப்படத்திலிருக்கும் மாந்தர்கள் அப்புகைப்படம் எடுப்பதற்கான சூழல் அக்கணத்தின் பெருங்கதையென ஏதோவொன்றை சொல்லத் தவிப்பதுபோல் இருக்கும். புகைப்படம் எடுப்பவர், சட்டம் போடுபவர், கண்ணாடி தயாரிப்பவர்கள், வீட்டில் மாட்டிவைப்பதற்கான ஏற்பாடு செய்பவர்கள் என தொழில் சார்ந்த பிழைப்பும் அதில் இருக்கும்.  அதையெல்லாம் நாம்  கொன்றுவிட்டு இப்போ கடவுளாகிவிட்டோம். கனிணியிலும் அலைபேசியிலும் தடவித் தடவி புகைப்படங்களை நகர்த்திக்கொண்டே இருக்கிறோம்.

துடைத்து துடைத்து பெரும் சுத்தக்காரர்களாக இருப்பவர்களுக்கு ஒட்டடைகளைப் பார்க்க பெரும் ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. ஆனால் கதிர்பாரதி ‘காலாதிகாலத்தின் தூசி’க் கவிதையில் ஒட்டடையை ஒரு மந்திரக்கோலாக்கி நூற்றாண்டகளின் நிழலை காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு முக்கிய கவிதை ‘உயிர் பந்தல்’ மீச்சிறு காலமே வாழ எனக்கு நேர்ந்திருந்தாலும் வயலும் வயல் சார்ந்த வாழ்வுக்குமான நாட்களை மழைத்துளிகளாக சேகரிக்கச் செய்தது. பொறுக்குத் தட்டிய விளைநிலம், வெள்ளாமை தின்னும் கால்நடை, விதைப்புக்கால வரப்பு, சுமைதாங்கி மீது வளரும் துயரமென ஒரே கவிதையில் அனுபவ நீர் பாய்ச்ச நிறைய்ய வாய்க்கால்களை வைத்துள்ளார். எவ்வளவுதான் சேந்தினாலும் ஒரு வாய்க்காலில் கூட நீரை ஓட விட முடியாத பெரும் துயர் கணக்க நகர்ந்தேன்.
 எனை பாதிக்கும் ஈர்க்கும் பெண்கள் உடன் பிறப்பெடுப்பார்கள் மதுவாகினியாக. அவர்களின் நிழலாய் மனம் தொடர்ந்தபடி இருக்கும். கதிர்பாரதியும் பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கிறார் ஆனந்தியோடு…
 ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் கவிதையின் காட்சியாக்கம் எனை திரும்பத் திரும்ப வாசிக்கச்செய்து தட்டானாக உருமாற்றிக்கொண்டே இருந்தது.
 காலத்தை பந்தென அங்கிட்டும் இங்கிட்டுமாக உருட்டி விட்டு தவ்வித் தவ்வி அவைகளை உயிர்ப்பித்து ரசிக்கும் விளையாட்டை நமக்கு காட்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகள் உலகு. அவர்களோடு நாம் இருக்கையில் நம் வயதை தொலையச் செய்யும் அதிசயமும் உண்டு. துயர்களை ஆறுதல்படுத்த தண்ணீர் ஏந்தி நின்று, உறக்கத்தில் பால்யம் நனைத்து, பக்கம் பக்கமாய் புகார் நிரப்பி, ஒன்றை ஒன்று அடித்துக்கொள்ளும் வனவிலங்குகளின் குணாதிசயங்களை போக்கி ஒன்றெயொன்று தழுவி விளையாடச் செய்யும்  மந்திரக் குகைக்குள் நுழைத்து பேரதிசயங்களைக் தரிசிக்கச் செய்திடுகிறார் ‘குழந்தைகளும் குழந்தைகள் நிமித்தமும்’ கவிதையில்.
 ஒரு குளம் ஏழு குளமாக விரிந்து ஏழுவிதமான வண்ணங்களை காட்டி, ஏழுவிதமான ருசியை உணரச்செய்து மனதில் சில்லிப்பை ஏற்படுத்தின ‘குளத்தில் அலைகின்றன கவிதைகள்’.
 வாசிப்பவனின் மனதில் இருக்கும் கடவுளையும் ஏக்கத்தில் விழச்செய்திடுகிறது ‘ஏக்கத்தில் விழுதல்’ கவிதை.
 வறுமையும் நிராகரிப்பும் தன்னைச் சுட்டெரிக்க குளிர்ச்சிக்கொள்ள வீழ்ந்து மாண்ட நல்லதங்காள் கிணற்றை நினைவூட்டியது ‘வீட்டை எட்டிப் பார்த்தல்’ கவிதை.
 மலைக்குன்றையும் நடுங்கச் செய்யும் வல்லமைகொண்ட கவண்கல்லைத் தூக்கி ‘மலை நடுக்கம்’ கவிதையை பேசும் கதிர்பாரதி மூன்று மச்சலங்காரத்தில் மிகு கிளர்ச்சி அடைந்து நான்காவது மச்சத்திற்காக நாற்றங்கால் விதைத்து மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என பொய்யுரைக்கிறார்.
 முதல் காமத்தின் இரவு விடிந்ததும் போர்த்திய ஆடையில் தீட்டிய சந்தோசக் கரை பார்த்து சுருட்டிய இரவை கக்கத்தில் வைத்துக்கொண்டு கண்களில் காமவிளையாட்டுகளை சமிக்ஞை செய்து கடந்த வண்ணாத்தியின் மகிழ்வோடு மோகப்பரிபூரனி நீயென ரதியின் மடிசாய்ந்து அமைதிகொள்ளச் செய்தது தொகுப்பின் வானவில்லென வீற்றிருக்கும் ‘மோகப்பரிபூரனி நீ’

‘அப்படித்தான் விழுகிறது’ கவிதையில் விழுகின்றன… விழுகிறது… எனும் வார்த்தைகளை தடதடத்து விழச்செய்து பயணம் முடிய அருகிலிருப்பவனின் முகம் மறந்து போகும் நிலை அக்கவிதைக்குமான நிலையாகிப்போனது…
 விட்டேத்தியான மனநிலையில் இருப்பவனிடம் காட்டப்படும் பிரியம் அவனால் அம்மனநிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் தேநீர் தயாரித்துத் தரும் பிரியத்தால் அரசாங்கத்தை கலைத்துவிடலாம்தான் என நக்கலடித்து கடக்க நினைக்கையில் பிரியம் அம்மனநிலையின் உயிரை பிளேடால் அரிந்து போக்கச்செய்து ஊர்சுற்றி, எதிர்பாரா கணத்தில் முத்தம் பெற்று, உப்பு மூட்டைத் தூக்கி விளையாடி, ஊடலால் கூடல் அரங்கேறி, அழுது, பதற்றப்பட்டு, பரிசளித்து, கொஞ்சுவதிலிருந்து மீள ஈசல் வார்த்தைகள் என வெறுக்கத் துவங்கினாலும் நிழலாய் உள்ளார்ந்த அன்பை ‘என்ன செய்யலாம்’ கவிதை வெளிப்படுத்தத்தான்  செய்திருக்கிறது.
 செயல்கள்… அச் செயல்கள் சார்ந்த ஒப்புமை, அந்த ஒப்புமை உண்டாக்கும் அற்புதமென கவிதையை ரசித்து ரசித்து வாசிக்க முடிவில் திரண்டு புடைத்திருந்த ரசனையை சிரிப்பாக்கி துப்பாக்கியுள் நிரப்பும் லாவகம் மகா உன்னதம்.. ‘துப்பாக்கிக்குள் நிரப்புகிறது சிரிப்பு’ கவிதையில்.
 காமத்தை சிறுநீரில் கழித்து குப்புறப் படுத்துக்கொள்ளும் மகாகவி குறித்த கவிதையாக்கம் தெருக்கூத்திற்காக ராஜா வேஷத்திற்கு அரிதாரம் பூசி ஆடை அணிகலன்களால அலங்கரித்த பின் தன் அழகை தானே ரசித்து ராஜாவாகி கணம் மிளிரும் ஒளி பொருந்திய சூழல் ‘மகாகவி கவிதை’ தலைப்பிலிருக்கும் ஏழு கவிதைகளிலும் பொருந்தியிருப்பது ரசிக்கத்தக்கதாக இருந்தது. தொகுப்பில் 1,2,3…யென எண்ணிட்டு எழுதியிருக்கும் எல்லா கவிதைகளுமே ஈர்ப்புக்குரியதாக இருக்கிறது.
 மது, மதுக்கூடம் குறித்து எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளுமே மதுவோடு கலவிகொண்ட மயக்க நிலையிலிருந்து வெளிப்பட்டவையாக இருப்பதால் சிறப்பானவையாகவே இருந்திருக்கின்றன. கதிர்பாரதியின் ‘மதுக்கூடங்களோடு புழங்குதல்’ கவிதையும் அச் சிறப்பை மெருகேற்றியிருக்கிறது தனித்திருப்பவனின் விசும்பலில்… மது, மதுக்கூடங்களைப் பார்க்க, வாசிக்க நேர்கையில் மதுக்கூடத்தில் வேலை பார்க்கும் சிறுவனின் பையிலிருந்து சிதறிய கோலிக்குண்டுகளை மது அருந்த வந்தவர்களும் அவனோடு சேர்ந்து பொறுக்கினார்கள் அவரவர்களின் பால்யத்தையும் என முடித்திருக்கும் யூமா.வாசுகியின்  கவிதை இன்னமும் தொடர்ந்து நினைவில் வந்துகொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை.
 ‘கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன்’ கவிதையைப் போன்று ரசித்து ரசித்து வாசிக்க தொகுப்பில் நிறைய்ய கவிதைகள் இருப்பதால் படித்து முடித்தோமென தூக்கிப்போட்டு விடாது என்றாவது மீண்டும் வாசிக்க வேண்டும் எனும் மனநிலையை கொடுக்கும் தொகுப்பாக இருக்கிறது கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்…’ கதிர்பாரதிக்கும் தொகுப்பாக்கிய புதுஎழுத்து மனோன்மணிக்கும் என்றென்றும் எனதன்புகள்…

01 February, 2013

விமர்சனம் ~ இரதி மணாளன் கவிதை உலகம் ~ மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்~ எழுத்தாளர் இளஞ்சேரல்


       உலகத்தின் வளங்களையெல்லாம் கன்னம் வைத்து அபகரித்துக் கொள்ள முனைகிற வல்லாதிக்க மேலாண்மையைத் தகர்க்கிற மொழியின் வீரியத்துடன் நவீன கவிதை இயங்கி வருகிறது. புத்தாயிரத்தின் உலக கவிகள் சந்திக்கும் மைக்ரோ க்ரைம் சைபர் கிரைம் அச்சுறுத்தல்களும் அதிகம். எல்லா மறைமுக நெருக்கடிகளையும் தன் கவிதைகளால் கடந்தும் எழுந்தும் பரவி வருகிறார்கள்.
       நவீன கவிதையின் புதிய நூற்றாண்டின் தேவைக்கான வடிவத்தை செழுமித்துத் தந்தவர்களில் ஒருவராக யுமா.வாசுகியும். ஜே.பிரான்சிஸ் கிருபாவும் இளைய தலைமுறையை பாதித்தவர்கள். தண்ணீருக் காகப் பிச்சை கேட்டுக் காத்துக்கொண்டிருக்கிற தமிழ் நிலத்தின் வறண்ட இதயங்களுக்காகக் கண்ணீர் சிந்தியவர்கள். தேய்ந்த சொற்களை மீண்டும் உருக்கி உருக்கி அணிகலன்களாக மாற்றி நமக்கு அணிவித்தவர்களில் முக்கியமானவர்கள்.
        அவர்கள் தான் தேவாதி தேவனாம் கருணா மூர்த்தியாம் இரட்சகப் பெருமாள் கிருத்துவை வரவழைத்து விடமுடியுமா அல்லது இங்கிருக்கும் ஒரு நவீன கவிஞனை கிருத்துவாக மாற்றி இந்த நிலமெங்கிலும் நடந்து சிலுவை சுமக்க வைத்து பாறைகளை வெடிக்க வைத்து நீருற்றை பீய்ச்ச வைக்க முடியுமா? தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க முடியுமா என்று யாசிக்கிறார்கள். நவீன கவிஞனின் கிருத்தும் மற்ற சமயத்தின் உருவாரச் சிலைகள் யாவும் அவனுடைய செல்லப்பிள்ளைகள். ஒரு வகையில் அவர்கள் தான் கொஞ்சம் தீர்க்க முடிகிற ஷரத்து விதிகளை கைவசம் வைத்திருக்கிறார்கள். கதிர்பாரதியும் தன் தொகுப்பில் முன் வைக்கும் கவிதையின் வழியாக  கிருத்துவிடம் பிரார்த்திக்கிறார்..

என் தேவனே...என் தேவனே..

திசைகளைப் பதற்றத்துள்ளாக்கி
மாநகர சாலையில் விரையும்
ஞாயிற்றுக் கிழமை கசாப்புக் கடைக் காரனின்
இருசக்கர வாகனத்தில்
\குறுக்கு வட்டாகக் கிடந்துக் கதறுகிற
மறியைப்பாத்ததும்
நீங்கள் என்ன செய்வீர்கள்
என் பிதாவே என் பிதாவே
ஏன் என்னைக் கைவிட்டீரென
கல்வாரி மலையில் அரற்றிய
என் தேவனே..என் தேவனே..என்று
கைத்தொழுவேன்
நான்
பக்-68
        யேசுவைப் போலொருவரைக் காண்பதோ அன்றியும் பிறர் போலிருக்கும்  அவரைப் பின் தொடர்ந்தோ செல்கிறோம். செல்லுதலும் கூட யார்க்கும் எளிய வழி அவ்வழியல்லவா.
          அவர்களின் சிகரெட் புகையின் வழியாகவாவது இந்திரனின் தேவதைகளை நசுக்கிவீசும் துண்டு சிகரெட்டினிலிருந்து உயிர்ப்பித்து ஜீன்ஸ் டிசர்ட் அணிவித்து, இரட்டை ஜடை போட்டு சீருடை அணிவித்து, அல்லது வடநாட்டு அழகியாக மாற்றி கொசுவம் வைத்து சுங்கிடிச் சேலை கட்டுவித்து குளிர்க் கண்ணாடி அணிவித்து வெண்கலத் தூக்குப் போசியில் கொஞ்சம் கருவாடு தந்து கோவில் நிலத்தின் வயலில் இறக்கி விடுகிறார்கள்.
    ஐநூறு கோடி சொத்துள்ள கதாநாயகன் வயலில் இறங்கி (டுப் போடாமல்) நாற்றுப் பெண்கள் மடி பார்த்துக் கொண்டிருக்கிறவனுக்கு உதவிட வைக்கிறார்கள்.
         வறண்டு கொண்டிருக்கும் அணைகள் தன்னுடைய  எல்லைகள் களவு போகும் தேசத்தின் குழந்தைகளுக்காக முகுந்த நாகராஜனும் வேலு சரவணனும் முருக புபதியும் புது எழுத்து மனோன் மணியும் இன்ன பிற சங்கல்ப விமோசினிகளும் இயங்குகிறார்கள். மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறகு நமக்குள்..





உன் பாசாங்குக்கும் பசப்புகளுக்கும்
மங்கியிருக்கும் நிலம்

எமக்கு வாய்த்தது நன்னிலம்தான்
நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து
அதனியல்பால் எல்லாம் கிட்டும்
எழுதுகோல் முளைக்கும்
கணனியும் கண்டடைவோம்
மரித்திருக்கும் குலசாமிக்கு உயிர்ப்பு துளிர்விடும்
சாங்கியமும் கொண்டாட்டமும் மீண்டும் நிறம் கொள்ளும்
நிலத்தின் வண்டல்களால் செப்புறும் மூளை
இருதயம் திடச்சித்தம் கொள்ளும்
கனவுகள் கள்வெறியுட்டும்
இறுகிக்கிடந்த இச்சைகளுக்கு  றெக்கை அரும்பும்
மூதாதையர்கள் தேடிக் களைப்படைந்த புதையல்கள்
அகழாமல் மேல்வரும்
நீளும் ஆயுள் ரேகைகளில் எம் சந்நதி வளப்பமுறும்
எல்லாம் கிட்டும் எமக்கு
யாவற்றுக்கும் முன்
உன் பசப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலத்தை மீட்டாக வேண்டும். –
பக்-31-
        இந்தக் கவிதையின் விசாலம் உண்மையின் தடித்த தழும்பை மேன் மேலும் கீறிவிடுகிறது. தன் நிலம் இழந்தவனுக்கு ஆதரவாக கவிதை தன் மொழியின் அதீத ஆற்றல் கொண்டு முழங்கியும் ஆர்ப்பரித்தும் பேசுகிறது.
ஒரு சங்கல்பம். ஒரு தீட்சண்யம். எழுச்சி.
     
         மகன்களும் மகன்களின் நிமித்தமும்-பக்-21 நெடுங்கவிதைகள் ஒன்பது காட்சி சித்திரங்களாகப் பதிவாகியிருக்கும் கவிதைகளில் கதிர்பாரதியின் மொழி ஆவணமாக மாறியிருக்கிறது. தொகுப்பில் திரும்பத்திரும் பவும் அந்த மொழியின் அடர்த்தியும் எளிமையான. இயற்கையான கிராமத்தின் அழுக்கு வண்ணங்களில் மிளிரும் சித்திரங்கள். விவசாய மக்களின் தினக்காட்சிகள் நெடுங்கவிதையினூடே வந்து போகும் நகைமுரண் அணியின் சொல்லாட்சியும் அபாரம்.
        நம் காலத்தின் அரசியலும் வாழ்வின் நிமித்தம் மைதானத்தில் மழையும் நீரும் பொய்த்து,தற்கொலைக்கு முன்பு சாணம் திண்ணும் மக்கள் கூட்டத்தினுள் அரங்கேறும் வினோதமான காட்சிகள் இவை. நவீன கவிதையின் ருத்ரதாண்டவ நடனம் நிகழும் காலமும் சூழலும் இவைதான்.
     
       ஆழந்த குகைகளுக்குள் இறங்கும் முன்பு சில படிகள் போல சில வெட்டுத் தடங்களை உருவாக் கியிருப்பார்கள் முன்சென்றவர்கள். எனினும் போகப் போக ஒன்றும் தென்படாது. அவர்கள் அந்தப் பாதைகளின் வழியாக சென்றார்களா அல்லது பாதியில் திரும்பினார்களா தெரியாது. எனினும் பின் செல்லும் யோகியோ துறவியோ பின் தொடர்ந்து கொஞ்சம் ஆழம் போகவே விரும்புவான். நவீன தமிழ் கவிதையின் இயக்கத்திற்கு குகைகளும் அருவிகளும் பிடியில்லாத மாயக்கயிறுகளும் கயிற்றரவம் போன்ற பிரமைகளும் சாதாரணமாகவே தோன்றும் படிமங்கள். கவிஞனுக் குள்ளாக சொல்லும் காட்சிப்பிறழ்வும் வடிவம் செய்து கொள்ளும் அணிச்சை அபுர்வமான செயல்கள்.
 
        இந்த வரிகளை வாசிக்கலாம். ஏற்கெனவே இந்திராவின் எமர்ஜென்சி காலத்தில் 74-77 வரையிலான இந்திய தமிழ்க் கவிதைகளில் உருவாக்கிய படிமங்களாக இருந்தாலும் மரபின் உருவகத்தில் அற்புதமாக முழு கவிதையும் எழுதப்பட்டிருக்கிறது.

திலீபன் வைத்த கொலுவில்
வெளிமானை முதுகில் சுமந்து கொண்டு
புல் மேயத் தயாராக இருக்கிறது புலி்
பசுமாட்டு நிழலி்ல் சிங்கம் இளைப்பாற
கரடியும் குரங்கும் முகத்தோடு முகமுரசி
விளையாடும் பாவனையில் இருக்கின்றன
காந்திஜி கையில் துப்பாக்கி கொடுத்துவிட்டு
புல்லாங்குழல் வாசிக்கிறான் வேட்டைக்காரன்.

       கவிதைகளுக்குள் கவிதையின் பிரச்சனையை உள்ளடக்க பிம்பங்ளையும் படிமங்களையும் கலைத்துக் கலைத்துப் பின் வேறொன்றின் வழியாக புதிய பொருளை உணர்த்தும் கவிதைகளும் வரிகளும் சிறப்பு. ஒரே மாதிரியான வடிவொத்த கவிதையின் பொருள் உணரப் பட்டாலும் ஒவ்வொரு கவிஞனின் வாழ்வு வேறுவேறானது. சமகாலத்தில் நவீன கவிஞனும் தீவிர இலக்கியவாதியும் எதிர்கொள்ள நேர்கிற விமர்சனம் ஒரேமாதிரியாக ஒன்று போலவே எழுதுகிறீர்கள் என்பதுதான். முதலில் புரியவில்லை என்று சொன்னவர்கள் தான் இப்போது ஒரே மாதிரி என்கிறார்கள். கொஞ்சம் அவர்கள் முன்னேறி வந்ததற்காக மகிழ்ச்சி கொள்ளத்தான் வேண்டும்..
        நவீன கவிஞன் ஒருவர் விவசாயத்தில் ஈடுபடுவார். ஒருவர். நகரமாயமான வாழ்வின் நெருக்கத்தில் இருப்பார். ஒரு பாரம்பரியம் மிக்க தொழில் செய்து கொண்டிருப்பார். ஒருவர் நிதிபரிவர்த்தனை செய்து கொண்டிருப்பார். ஒருவர் தினசரி வியாபாரியாக இருப்பார்கள் இப்படியாக சில நவீன கவிஞர்களின் வாழ்வு கழிந்து கொண்டிருக்கும். எனினும் அவர்களின் மொழியும் காட்சியும் உணர்த்தும் பொருளும் சித்திரத்தையும் நீ்ங்கள் எப்படி ஒரே மாதிரி எழுதுகிறார் என்று சொல்வீர்கள்.
   
       ஒரு காலத்தில் கடல் வணிகத்தில் தமிழ் சமூகம் கொடிகட்டிப்பறந்தது. இன்று கடல் நிலம் தரைநிலம் முழுவதும் அந்நிய நாட்டினரின் ஆளுகையின் பிடியாக மாறப்போவதை காட்சிப்படுத்தியிருப்பதை வரவேற்கவும்..

வைகல்தோறும் அசைவின்றி,உலகு செய்க்
குறைபடாது, நீரில் நின்று நிலத்தேற்றவும்,
நிலத்தில் நின்று நீர்ப்பரப்பவும்,அறந்தறியாப்
பலபண்டம்,வரம்பறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்,வலியுடைவல்
லணங்கினேன்,புலிபொறித்துப் புறம் போக்கி
மதி நிறைந்த மலிபண்டம்-
பட்டிப்பாலை-124-136
    மேற் கவிதையில் கப்பலில் வந்த பொருள் கரையில் இறக்கியும்,கப்பலில் ஏற்றியும் அம்மூட்டைகளின் மேல்
சோழன் முத்திரையை வைத்தும்,சுங்கம் வாங்கும் குறைவில்லாத பண்டங்கள் என்பதால் அயல் நாட்டு  வணிகம் அறிந்தோம்.ஒரு சந்தை ஒழுங்கு இருந்தது.
         நம் நவீன காலத்தின் கவிஞன் கதிர்பாரதியின் லாபங்களின் ஊடுருவல் பக்-17 கவிதையில் உள்நாட்டுச் சந்தைகளுக்குள் நுழைந்த அந்நியர்களின் சந்தைப் படுத்தலை விமர்சிக்கிறார்.        
  ஆயினும் கோடாணுகோடி முதலீ்டு செய்யப்பட்டு கட்டப்பட்டு வெறுமையாகக் காட்சியளிக்கும் காலியாக இருக்கும் டைடல்பார்க் அறைகள் எத்தனை. இது பற்றிய ஆரம்ப சித்திரங்கள் எப்படியிருந்தது. மூவாயிரம் பேர் வேலை செய்த ஆலையை இழுத்து மூடி அந்த நிலத்தை இடித்துத்தள்ளி அங்கு இப்போது 6000 பேர் குடியிருக்கும் விதமாக அடுக்குமாடிக்குடியிருப்பு கட்டப்பட்டு தற்போது அங்கு அருபது குடும்பங்கள் மட்டும் வசிக்கும் சித்திரத்தை நவீன கவிஞன் பேசாமல் எழுதாமல் இருக்க முடியுமா.  நவீன கவிஞர்கள் மன அவசங்களையும் தன் முனைப்பின் நீர்மையையும் காமத்தையும் உடலை மட்டுமே பேசுகிறார்கள் என்று மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து இலக்கியப் பணியாற்றும் பிரபல கவிஞர்கள் பேசுகிறார்கள். புத்தி மதி சொல்கிறார்கள்.
     
        ந.முத்துசாமி.ஞானக் கூத்தன், ஆத்மாநாம், அபி.
எஸ்.வைத்தீஸ்வரன்,கிருஷாங்கினி,அம்பை, இரா.மீனாட்சி நாரணோ ஜெயராமன் போன்ற மூத்த தலைமுறையின் ஆளுமைகள் ஃபார்வாட் கம்யுனிட்டியாக  இருந்தாலும் மாறிவரும் தமிழின் புதிய தலைமுறையின் எழுத்து, கவிமொழியின் எதிர்காலச் சித்திரங்களைக் குறித்துப்  பேசியிருக்கிறார்கள்.
        சங்கக் கவிதைகள் ஒரு கவிதை நான்கு மாற்று ஈட்டுப் பொருளைத் தரும். நவீன கவிதைகள் இருபது வகையான ஈட்டுப் பொருளைத் தருகிறது. சங்ககாலத்தின் இருப்பும் ஒலியும் அச்சமும் துரத்தல்களும் இப்போது ஓய்ந்திருக்கிறது. குதிரைகள் இல்லை. கழுதைகள் இல்லை. புலிகள் இல்லை, கிராமத்தில் குரங்குகள் இல்லை. மனிதக்குரங்குகள் இல்லவே இல்லை.
      ஒரு அறை உலக உருண்டையாக மாறியிருக்கிறது தற்பொழுது. அதற்குள் காற்று இல்லை. ஒரு சொல் உலகத்தை நீர்க்குமிழியாக்கியிருக்கிறது. ஒரு கிராம் மாத்திரை அவனை நான்கு நாட்கள் அசைவற்று கிடக்கப் பண்ணுகிறது. முதல், இடை, கடைச் சங்கத்தில் இவை இருந்திருக்கிறதா.
   
          கவிதை நூல்களுக்கு விமர்சனம் எழுதும் போது எனக்கு அவசியமாக வேண்டியது, கொஞ்சம் சன்னமான இரைச்சல்,காற்றாடியின் இரண்டாவது நிலை சுழல், ராக்கோழிகள் மூன்று கட்டைச் சுருதியில் கிர்ர் சத்தம் வேண்டும். ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாகக் கடக்க வேண்டும். அல்லது ரயில் இன்ஜின் தேவையில்லாமல் உறுமிக்கொண்டே இருக்கவேண்டும்.
           ரயில் பாதைகளில் சிந்திய தானியங்களை காகம்,குருவி,புறாக்கள் கொத்திக்கொண்டிருக்கவேண்டும்.

       தன் இதழ்களையே இரும்பாக்கிக் கைவிரல்-கைகளாக்கிக் கொண்ட பறவைகளைப் போலவேதான் நவீன கவிஞன்-கவிதையின் நிலையும். வயதான யானையின் தும்பிக்கையாக, சரியான நேரத்தில் ஓய்வுதியம் பெற முடியாத, அர்ச்சனைக்கு போக முடியாத மலராக, இறுதியில் மிச்சமாகி யாருக்கும் உபயோகமில்லாது தண்ணீரோடு கறைந்து போகும் உணவாகவும் கவிஞனின் வாழ்வு இருக்கிறது. எப்போதும் கற்புரம் அவித்து “நான் மனிதனின் சொல்” என்று சத்தியம் செய்யத் தயாராகவும்  இருக்க வேண்டும்.
     
         தொகுப்பில் உள்ள சில கவிதைகளில்  காலத்தின் ஆர்ப்பரிப்பு கூச்சல் பின் துரத்தல் இருக்கிறது.
காலத்தை அறுக்கும் ஆலகாலம், லாபங்களின் ஊடுருவல்,கடக்க இயலாத தெரு, காலத்தினாற் செய்த கொலை, ஆமாம் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள், கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன் ஆகிய கவிதைகள் எனக்குப் பல சிந்தனைகள் கீழ்கண்டவாறு தோன்றிட வைத்தது என்பதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
 
       குடை ரிப்பேர்க்காரரிடம் ஒரு குடையிருக்கும். அந்தக் குடையை அவர் மழைக்கு உபயோகப்படுத்த மாட்டார். வெயிலுக்கும் நிழலுக்கு மட்டுமேயானது அது. ஒரு கணம் விரும்பி  அந்தக் குடையைக் கேட்டேன். அழகிய வேலைப்பாடு கொண்ட பிரம்புக் கொண்டையணிந்த குடையது. இந்தப் புதுசை வெச்சுக்கங்க என்றேன். அவரோ “வற்புறுத்தாதீங்க“ என்றார். சாவி ரிப்பபேர், பூட்டு ரிப்பேர்க்காரர்கள் எல்லாம் ஒரு குடையின் கீழ் அமர்ந்திருப்பார்கள்.
        சமகாலத்தில் அக்குடை போலவே இன்றும் வண்ணக் குடைகளை மல்டி பிராண்ட் வீட்டு உபயோகப் பொருட்கள். கணணி விற்பவர்கள், கார் விற்பவர்கள் உபயோகப் படுத்துகிறார்கள். காவலர்கள் குடைக் காரர்களை விரட்டுகிறார்கள். வண்ணக் குடைக் காரர்களிடம் இளநீர் வாங்கி அருந்துகிறார்கள்.
       
         மேலும் நூலில் மற்ற கவிதைகளில் சில ஒரு வார்ப்பு அச்சின் உருவக் குமிழ்களில் சுண்ணக்களிமண் மாவும் களிம்பும் வார்க்கப்பினூடாகத் திணிக்கப்பட்டு அப்படியே தலைகவிழ்த்துக் கொட்டினால் ஒரு கடவுள் உருவம் கிடைக்கும்.அல்லது பொம்மைகள் கிடைக்கும். அப்படியாக கவிதைகள் உள்ளது. அதனின் கவிமொழி வாசிக்க ஏதுவாக சிறு உள்ளக்கிளர்ச்சி தருவதானாலும் அடுத்த நிலைக்கு கவிஞனை அனுப்ப மறுக்கும் கவிதைகள். அக்கவிதைகளை கதிர்பாரதியால்  மேலும் செழுமைப்படுத்த வேண்டியவை.
     
       கதிர்பாரதியின் முதல் தொகுப்பு என்பதை நம்ப முடியாமையின் காரணம் அதன் விலாசமான காலப்பரப்பு, கலை அனுபவத்தின் நேர்த்தி, கால ஒழுங்கின் வளம். ஒரு நிலைக்குள்ளாக தன்னை ஒழுங்கு படுத்திக் கொள்ள முனையும் ஆவல். தன் எழுத்திற்கும் தமக்குமான உடமையை வலியுறுத்தும் முயற்சி. ஆகியவையால்  தெளிவாக உணரமுடிகிற வலிமை.
   
சமகாலத்தின் அச்சு வரைகலையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நூலாகவும் வெளியிட்டுள்ள புது எழுத்து பதிப்பகத்திற்கும் மனோன்மணிக்கும் வாழ்த்து சொல்லவேண்டியிருக்கிறது. வாய்ப்பிற்கு நன்றி...


வெளியீடு
புது எழுத்து
பக்-68
விலை –ரூ.60-
ஆசிரியர்-கவிஞர்-கதிர்பாரதி
Kathirbharathi@gmail.com
Cell-98417 58984


Puthuezuthu
2-205 anna nagar
Kaveripattinam-635112
Krishnagiri Dist
90421 58667
pudhuezuthu@gmail.com

31 January, 2013

இன்றைய இளம் கவிஞர்களில் கதிர்பாரதி தனக்கான இடத்தை உருவாக்கிவிட்டார்=== ரியாஸ் குராணா


கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்”

நம்மைச் சுற்றி நடக்கின்ற விசயங்களை கவிதைகளில் கொண்டுவரும்போது, அனேகமானவை போதனைகளாகவும், எதிர்வினைகளாகவும், கொண்டாட்டங்களாகவுமே இருந்துவிடுகிறது. இப்படியாக நிகழ்ந்துவிடுகிற கவிதைச் செயலை சந்தித்த நமக்கு, இவை எதுவுமற்ற புலத்தில் நின்று கவிதையின் அதீத மாயத்தனத்தோடு ஒரு விளையாட்டாக நமது சுற்றத்தைக் கவனிக்கலாமா எனக் கேட்பவர்களுக்கு கதிர்பாரதியின் கவிதைகளையே வாசிக்கச் சொல்லிச் செல்வேன்.

மிகவும் புதிய திசைகளிலிருந்து நுணுக்கமாக கவனிப்பதைப்போன்ற ஒரு கவிதை சொல்லல் இவருடையது. ஒரு நுாறடி துாரத்திலிருக்கும் மரத்தில் ஒரு எறும்பு செய்யும் வேலைகளை ஒருவர் விபரித்தால், கிட்டச் சென்று உறுதிப்படுத்தும்வரை பொய்போன்றும், ஒரு சந்தேகத்துடனுமே இருப்போம்.
அப்படியான ஒன்றை உருவாக்குவதுடன், கவிதைகளை வரிகளினுாடாக நெருங்கும்போது, சா.. என நம்மையறிமலே அது உண்மையாக மாறுவதும் ஒரு கவிதை வித்தைதான்.

அந்த வித்தையை மிக சாதாரணமாக செய்துகாட்டுபவைதான் கதிர்பாரதியின் கவிதைகள்.
இன்று எந்தக் கவிஞனுக்குத் தனித்த முக்கியத்துவம் கொடுக்கும்படியான, மகிழ்ச்சியான சந்தோசங்களை வெளியிடும் விமர்சனங்களை நிராகரிக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம். ஒவ்வொரு கவிஞனின் கவிதைச் செயலை தனித்தனியாக அடையாளங்கண்டு அதை வெளிப்படையாக பேசுகின்ற நிலை வேண்டும்.

அதைப் பேசுமளவிற்கும், பாராட்டும் அளவிற்கும் மனநிலைப் பக்குவம் மிக மிக அவசியம்.

இன்றைய இளம் கவிஞர்களில் கதிர்பாரதி தனக்கான இடத்தை உருவாக்கிவிட்டார் என்று சொல்லுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் கதிர்.

30 January, 2013

கவிதைகள் செழித்த வயல் (மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பு குறித்து) == சுந்தரபுத்தன்


ஒரு பத்திரிகையாளராக நண்பர் கதிர்பாரதியை பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். ஆனால் கவிதை எழுதுவார் என்பது ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை. சில நேரங்களில் இணையத்தில் சாட் வழியாக வரும்போது அந்தப் பக்கத்தில் எழுதிய கவிதைகளைப் படிக்க இணைப்புகளை அனுப்புவார். அப்போது படிப்பேன். அந்தக் கவிதைகளில் காமம் கொப்பளித்தாலும், அதை மீறிய கவித்துவம் நம்மைக் கவரும். சமீபத்தில் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்ற அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. ஓவியர் மணிவண்ணனின் வண்ணமயமான அரூப அட்டைப்படமும் நேர்த்தியான நூல் கட்டமைப்பும் அழகுடன் இருந்தன. வாசகனை தம் பக்கம் இழுக்க இவை தேவையானவைதான். இந்நூல் புது எழுத்து வெளியீடாக வந்திருக்கிறது.
மிக அடர்த்தியான வரிகளைக் கொண்ட நீண்ட மற்றும் குறு கவிதைகள். எல்லா கவிதைகளிலும் வயல் சார்ந்த நிலம் தொடர்பான பயிர், மரம், பறவை, பருவகாலம் தொடர்பான வார்த்தைகளைப் பார்க்கமுடிகிறது. அதுவே அந்தக் கவிதையை மேலும் உயிர்ப்புள்ளதாக்குகிறது. முதல் கவிதையான குடும்பப் புகைப்படம் கவிதையில், தளிர் முகமொன்றில் தன் சல்லிவேருக்குப் / பாசநீரைக் கேட்கும் யாசகம் தெரிகிறது என்றும் அதே கவிதையின் கடைசியில் காற்றுக்கு அஞ்சி நடுங்குகிறது தீயின் நாவொன்று/ பனியாலான குறுவாளொன்று குறிபார்க்கிறது / கரையறுக்கும் வெள்ளத்தில் கருவேலமொன்று சாய்கிறது / அறுவடைக்கு நிற்கும் நெல் வயலொன்றில் தீ பரவுகிறது... இக்கவிஞர் வயலும் வயல்சார்ந்த மருதநில வாழ்க்கையைக் கொண்ட தஞ்சாவூர் மண்ணில் பிறந்தவர் என்பதற்கு மேற்கண்ட வரிகள் சான்றாக இருக்கின்றன. எல்லோருமே மாற்று நிலம் பற்றிய நினைவுகளை எழுதிவிடக்கூடும். சில கூர்ந்த கவனிப்புகளை அவர்கள் மறந்துவிட நேரிடும். ஆனால் கதிர்பாரதி, வாழ்வின் நெருக்கடிகளை மாநகர வாழ்வு தரும் அனுபவங்களைப் பாடும்போதுகூட நிலத்தை மறக்காதவராக இருக்கிறார். பலவிதமான படிமங்களும் கனவுமயமான காட்சிகளும் அவருடைய கவிதைகளில் மிதக்கின்றன.
ஒரு கவிதையைத் தொடங்கும்போதே அதன் காட்சிகளும் தொடங்கிவிடுகின்றன. இவருடைய கவிதைகளைப் படிக்கும்போது வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு... என்ற யூமா வாசுகியின் கவிதைத் தொகுப்பு ஞாபகம் வருகிறது. சுண்டக் காய்ச்சிய வார்த்தைகளைக் கொண்ட கவித்துவம் பொங்க அவர் எழுதியிருப்பார். அந்தப் பாதையின் தொடக்கத்தில் கதிர்பாரதியைப் பார்க்கமுடிகிறது. வாசிக்கிறவரின் கற்பனைகளை கிளர்த்தும் சம்பவங்களையும் சிந்தனைகளையும் கவிதைகளில் விதைக்கிறார். ஆக... / ஹிட்லரின் அந்தப்புரத்தை சமாதானத் தூதுவர் ஆக்கிரமித்துக்கொண்டார்... என்ற ஒரு கவிதை தொடங்கி.... நான் சமாதானத் தூதுவர் அல்ல/ ஹிட்லர் என்று முடிகிறது. மீண்டும் மருதம் எட்டிப்பார்க்கிறது ஒரு கவிதையில் வெயிலுக்குப் பொறுக்குத் தட்டிய விளைநிலத்தில் / வெற்றுப்பாதங்களுடன் நடக்கும் வேதனை தருகிற / உன் பார்வையை என்று தொடங்குகிறார் ஒரு கவிதையை. நிலத்திற்கு ஆனந்தி என்ற பெயரிட்டு அழைக்கும் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் என்ற கவிதை, வாசிப்பவனின் புரிதலை மெல்ல சோதித்துப்பார்க்கிறது. வாழ்வின் எதார்த்தத்தில் எள்ளலை இழையவிடுகிறார் கவிஞர். அதற்கு சரியான எடுத்துக்காட்டாக ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறன் என்ற கவிதை எனக்குப்படுகிறது. வெறும் கவித்துவம், உருவகம், உள்ளடக்கம் என்றில்லை மொழியை நவீனமாகப் பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் எளிமையும் வசீகரிக்கும் கவிதை மொழியையும் கைவரப்பெற்றிருக்கிறார். கிறித்தவமும் அது தமிழுக்கு வழங்கிய அழகு வார்த்தைகளும்கூட கதிர்பாரதியின் கவிதைகளில் புழக்கத்தில் இருக்கின்றன.
நாம் படிக்கும்போது நிதானிக்கமுடியாத வரிகளையும் எழுதுவதில் கதிர்பாரதி வாசகனைக் கவர்கிறார். உங்களுக்கு இல்லவேயில்லை என்றாகிவிட்ட / ஒருத்தியின் சிரிப்போடு... என்று தொடங்குகிறது ஒரு கவிதை. இன்று தெருவெங்கும் மிகுந்துவிட்ட மதுக்கூடங்களின் அனுபவத்தைக்கூட ஒரு கவிதையில் சுவாரசியமாகத் சொல்லத் தொடங்குகிறார். அதாவது.... சமூக நலக்கூடங்களுக்குள் நுழைதல் போல/ அத்தனை இலகுவானதல்ல மதுக்கூடத்துள் நுழைவது/ கதவைத் திறந்துகொண்டு நுழையும்போது / அங்கு நுரைபூத்துத் ததும்பிக்கொண்டிருக்கும் சொற்களின் மீது/ இடித்துக்கொள்ளாமல் நுழைதல் வேண்டும்... என்று போகிறது அந்தக் கவிதை. பலரால் பாராட்டப்பட்ட இக்கவிஞரின் யானையோடு நேசம்கொள்ளும் முறை என்ற கவிதையும் வாசகனுக்கு கவித்துவத்தின் புதிய சாளரங்களை திறந்துவைக்கும்.
ஓர் இலக்கிய விமர்சகனைப்போல கவிதையின் பலம் பலவீனங்களைப் பற்றி அலசவில்லை. இக்கவிதைகளை நான் புரிந்துகொண்ட எல்லையிலிருந்தே இக்கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். முதல் தொகுப்பில் ஒரு நம்பிக்கையான கவிஞராக தமிழ் கவியுலகின் வெளிச்சத்துக்கு வந்துள்ள நண்பர் கதிர்பாரதிக்கு வாழ்த்துக்கள்.

21 January, 2013

கடந்த பத்தாண்டுகளில் படித்த கவிஞர்களில் முக்கியமானவராக பட்டார் கதிர்பாரதி.

கதிர்பாரதி என்பவரின் முதல் கவிதைத் தொகுப்பைப் படித்தேன். கடந்த பத்தாண்டுகளில் படித்த கவிஞர்களில் முக்கியமானவராக பட்டார். அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. அவரைப் பற்றி குறிப்பிட்டதும் மனுஷ்யபுத்திரன் உயிர்மையில் ஏழுதுங்கள், யாரேனும் நம்பிக்கை ஏற்படுத்துவதாய் தோன்றினால் நிச்சயம் அவர்களைப் பற்றி பதிவு செய்ய வேண்டும் என்றார். சீனியர்கள் நம்மை புறக்கணித்தாலும் பரவாயில்லை. இப்படி ஒரு புதுப்படைப்பாளிக்கு எங்கோ ஒளி சுடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நானும் நீங்களும் அந்த நம்பிக்கையில் தான் எழுதுகிறோம்.

நன்றி: அபிலாஷ் 

31 December, 2012

கவிஞர் நரன், ஆசிரியராக இருந்து கொண்டு வரும் இலக்கிய காலாண்டிதழ் இதழ் சால்ட்.., சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறது.




27 December, 2012

கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் வெளியீடு....

22.12.2012 அன்று எனது முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள், நண்பர் நிலாரசிகனின் மீன்கள் துள்ளும் நிசி நண்பர் இயற்கை சிவம் ஆசிரியராக இருந்து, கொண்டு வரும் வெயில் நதி சிற்றிதழ் அறிமுகங்கள் நிகழ்ந்தன. நிறைவான விழாவாக இருந்தது. முகப்பு புத்தகம் செல்போன் வழியாக பார்த்துக்கொண்ட நிறைய நண்பர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. விழாவில் கவிதைப் புத்தகங்கள் பேசிய அத்துனை பேரும் தயாரிப்போடு வந்திருந்திருந்தது ரசிக்க தக்கவையாக இருந்தன. விழாவை ஒருங்கிணைத்து நடத்திய யாவரும் டாட் காம் குழுவுக்கும் விழாவில் கலந்துகொண்ட அத்துனை தோழமைகளுக்கும்இடம் தந்து உதவிய டிஸ்கவரி புக் நிலையத்தாருக்கும் எனது நன்றி. விழாகுறித்த புகைப்படத்துளிகளை நான் பதிகிறேன். விழாகுறித்து நண்பர்கள் எழுதுங்கள்... அறியத் தாருங்கள். படிக்க ஆவல்... என் புத்தகம் குறுத்தும் உங்கள் கருத்துகளைத் தாருங்கள்