இந்தியாவில் விடுமுறை முடிந்து கத்தாருக்குத் திரும்பும்போது, இலங்கை கொழும்பு விமான நிலையத்தில் கத்தார் விமானத்திற்காகக் காத்திருந்த நேரம். கையில் கதிர்பாரதியின் “அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது” கவிதைத்தொகுப்பு. அந்தக் காத்திருப்பின் ஒன்றிரண்டு மணி நேரங்களுக்காகவே இந்தத் தொகுப்பை வாசித்துவிட்டேன். பிறகு கத்தார் வந்தவுடன் இரண்டு மூன்று முறை வாசித்துவிட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.
ஒரு கவிதைக்கான மொழியையும் வடிவத்தையும் அதன் உள்ளடக்கமே தீர்மானிக்கிறது. அந்த வகையில், இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் அத்தனை எளிமையாகவும் நெகிழ்வாகவும் இருந்தன. கவிதைகளில் வாழ்வின் துக்கம், துரோகம், நம்பிக்கை, அவநம்பிக்கை மற்றும் ஏக்கத்தின் கறைபடிந்த கைரேகைகளைப் பார்க்க முடிகிறது. தலைமுடியை விரித்து ஒப்பாரி வைக்கும் ஓர் அம்மாவின் ஓலத்தைக் கேட்க முடிகிறது; விரலைக் கருக்கரிவாளால் சீவிக்கொண்ட ஒரு சிறுவனின் அழுகுரலைக் கேட்க முடிகிறது. இப்படியாக ஈரம் நிறைந்த கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வந்திருக்கிறது. என் அம்மாவின் நினைவுகள் தோன்றி மறைந்த சில கவிதைகளில் கண்ணீர்த்துளிகள் துளிர்த்து நின்றன. இதைத்தான் இந்தத் தொகுதியின் வெற்றியாகப் பார்க்கிறேன்.
கதிர்பாரதி தன் முன்னுரையில், அம்மாவைப் பற்றி எழுதுவது, அம்மாவை நினைத்துப் பார்ப்பது, அம்மாவுடன் தொடர்புடைய தன் நினைவுகளுக்குள் திரும்பிச் செல்வது போன்றவற்றை மிக நெருக்கமான ஓர் அனுபவமாகத் திறந்து வைக்கிறார். அம்மா என்பது ஒரு உறவுச் சொல் மட்டுமல்ல; நம் உடலுக்கும் நினைவுக்கும் காலத்துக்கும் மிக அருகில் இருக்கும் ஒரு இயற்கைச் சொல் என்ற உணர்வு அங்கே இருக்கிறது. அந்த உணர்வுதான் கவிதைகளிலும் தொடர்ந்து ஒலிக்கிறது.
![]() |
| தர்மராஜ் பெரியசாமி |
அம்மாவையும் அந்தியையும் எதிரெதிராக நிறுத்துகிறார் கதிர்பாரதி. அந்தியின் சாயலில் ஒரு அம்மாவைப் போல அல்லது அம்மாவின் சாயலில் அந்தி என்பதைப் போல. அந்தி என்பது பகலுக்கும் இரவுக்கும் இடையிலான நேரம். முடிவுக்கும் தொடக்கத்துக்கும் இடையிலான நேரம். வெளிச்சம் மெதுவாக விலகும் நேரம். அம்மாவும் அப்படித்தான் நம் நினைவுக்குள் இருக்கிறாள். நாம் பால்யத்தில் நம்முடைய உலகத்தின் முழு வெளிச்சமாக இருப்பவள். நாம் வளர்ந்து நகரங்களை நோக்கிச் செல்லும்போது, அந்த வெளிச்சம் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைகிறது. ஆனால் முழுமையாக மறைவதில்லை. மாறாக, அது ஒரு அந்திப் பொழுதைப் போல நம்முடைய உள்ளுக்குள் இன்னும் நீண்டுகொண்டே இருக்கிறது.
அதனால்தான் இத்தொகுப்பை வாசிக்கும்போது, எனக்கு ஒரு கவிதைத் தொகுப்பை வாசிக்கிறேன் என்ற உணர்வை விட, நான் கடந்து வந்த ஒரு வீட்டுக்குள் மீண்டும் சென்று கொண்டிருக்கிறேன் என்ற உணர்வே அதிகமாக இருந்தது.
கதிர்பாரதியின் அம்மா தனக்கான அம்மா மட்டுமல்ல; தமிழ்ப் பிள்ளைகள் பலருடைய அம்மா என்ற பார்வையை கரிகாலன் தன் பின்னுரையில் முன்வைக்கிறார். மொழி பல வருடங்களாக அம்மாவின் மேல் போர்த்தியிருந்த இலக்கிய அலங்காரங்களை அகற்றி, அதன் அடியில் இருக்கும் அந்த இயல்பான கிராமத்து அம்மாவை கதிர்பாரதி நமக்குக் காட்டுகிறார் என்ற கருத்து மிகவும் பொருத்தமாகத் தோன்றியது.
அது இந்தத் தொகுப்பின் முக்கியமான பலம் என்று நினைக்கிறேன்.
அம்மாவைக் கவிதையாக்குவதற்காக அம்மாவை உயர்த்தி ஒரு பீடத்தில் வைக்காமல், அவள் இருந்த இடத்திலேயே நின்று, ஒரு பாசாங்கில்லாத, அசலான கிராமத்து அம்மாவின் சித்திரத்தை உருவாக்கியிருக்கிறார் கதிர்பாரதி.
இந்தத் தொகுப்பில் எனக்குப் பிடித்த சில கவிதைகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
1
நெடுநாள் கழித்து
வீடு திரும்பும் மூத்தமகன்
குறுக்குவிட்டம் பார்த்து
‘அம்மா’ என மறுகுகிறான்.
கண்கள் கண்ணீரில் பளபளக்கின்றன.
சுருக்கில் இருந்து
கழுத்தைத் தளர்த்திக்கொண்டு
கீழிறங்கிவந்த அவள்,
மூக்கை உறிஞ்சியபடி
‘வாப்பா இப்பதான் வந்தியா
இரு சோறு போடுறேன்’ என்கிறாள்.
2
பிள்ளையும் அம்மாவும் போல்
ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட விதிகள்
பாதமும் பாதையும்.
உண்மையில்
பாதைதான் போய்க்கொண்டிருக்கிறது.
நீயதில் நடந்துகொண்டிருக்கிறாய்.
நீ நின்றுவிட்ட பிறகும்
பாதை போய்க்கொண்டே இருப்பது
அதனால்தான்.
பிள்ளை தூங்கிவிட்டாலும்
தாய்க்குப்
பால் ஊறிக்கொண்டுதானே இருக்கும்.
3
“மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய்
மண்ணுக்குத் திரும்புவாய்
மறவாதே என்றும் மறவாதே…” என
புனித வியாகுல மாதா தேவாலயத்தில்
தியானப் பாடல் பாடி
சாம்பலால்
நெற்றியில் சிலுவை தீற்றி
விபூதிபுதன் திருப்பலியில் இருந்து
வீடு திரும்பும் அம்மாவைப் பார்க்க
அழுகை அழுகையாய் வரும்.
அதை
கண்களுக்குத் தெரியாமல்
பார்த்துக்கொள்வேன்
பிறகு
கண்களுக்கும் தெரியாமல்
அழுதுகொள்வேன்.
4
சிறுவயதில் மண்டை உடைந்து
கதறியபடி
வீட்டுக்கு ஓடிவரும்போது
‘அய்யோ எம்புள்ளைக்கி
சேதநாதர் சாமிக்கு ஊத்தன்ன
ரத்தம் ஊத்துதே’ எனப் பதறி
மாராப்பால் காயம் பொத்தினாள்
அம்மா.
எந்நேரத்திலும் பிள்ளைகளைக்
கடவுளாக்க முடிகிறது அம்மாவால்.
கடவுளுக்குத்தான்
இங்கிதமில்லாமல் மண்டை உடைந்துவிடுகிறது.
நம்முடைய வாழ்க்கையில் அம்மாவை நினைத்துப் பார்க்கப் பெரிய காரணங்கள் தேவையில்லை. ஒரு மாலை போதும். ஒரு தொலைபேசி அழைப்பு போதும். வீட்டின் வாசனை போதும். பல வருடங்களுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பும் ஒரு பயணம் போதும்.
சில சமயம் ஒரு கவிதை போதும்.
நகர மூச்சுமுட்டுதல்களுக்கு இடையே, ஒரு சிறு ஆசுவாசமாகத் தான் அலைந்து திரிந்த புழுதிகளின் வழி, வயக்காட்டின் வரப்புகளின் மேல் நின்று, அம்மாவின் நினைவுகளுக்குச் சொற்களை ஒப்புக்கொடுத்து, தன் அம்மாவுக்கே, அம்மாவுக்கென இப்படியான ஒரு கவிதைத்தொகுதி என்பது நிச்சயம் ஒரு பேறுதான்.
அந்தப் பேறு கதிர்பாரதிக்கு வாய்த்திருக்கிறது.
வாழ்த்துகள், அன்புச் சகோதரர் கதிர்பாரதி!
அன்புடன்,
தர்மராஜ் பெரியசாமி
.jpeg)

No comments:
Post a Comment