08 October, 2014

இரண்டு பாயின்ட் தீவிரத்தோடு எழுதப்பட்ட கவிதைகள்!


(கவிஞர் நரனின் ’ஏழாம் நூற்றாண்டு குதிரை’ கவிதைப் புத்தகத்துக்கு யாவரும்.காம் ஏற்பாடு செய்த விமர்சனக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது.. இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்.)

குழந்தையின் கண்கள் வாய்க்கப் பெற்றோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கண்களில் தென்பட்டுவிட வேண்டும் என்று கவிதை துடியாய்த் துடிக்கிறது. தென்பட்டுவிட்டால் குதூகலிக்கிறது. குழந்தையின் மனது வாய்க்கப் பெற்றோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்களைக் கவிதை தத்தெடுத்துக்கொள்கிறது. குழந்தையின் உலகத்துள் கலக்கத் தெரிந்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் மெசியாவைக் கண்டடைகிறார்கள். கூடவே இஸ்ரேலைப் போல குழந்தைகளின் மூளைகளின் மீது தங்கள் ஏவுகணைகளை வினைபுரிய அனுப்பி வைத்துவிட்டு, அந்தப் பாவம் தங்களை சேராது இருக்க வேண்டுமே என்ற பதற்றத்தில் பரிமளத் தைலத்தால் தங்கள் கைகளைக் கழுவிக்கொள்வோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்களுக்கு எதிராகத்தான் கவிதை, துப்பாக்கி ரவையாகவும் மாறுகிறது. அப்படியான கவிதையோடு ஆரம்பிக்கிற நரனின்ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளை நான் வாரி அணைத்துக்கொள்கிறேன்; உவந்து உச்சி முகர்கிறேன்.

குழந்தைகள் உருவாக்கி ஊதி ஊதி உடைக்கிற காற்றுக் குமிழ்களுக்கு ஒப்பானவை நரனின் கவிதைகள். அவை ஓவ்வோர் வரியிலும் ஏதோ ஒரு ரசவாதம் நிகழ்த்திவிடுகிறது. மொழியிலும் செய்நேர்த்தியிலும் தன் முதல் தொகுப்பில் இருந்து பாரதூரமான தூரத்துக்கு நகர்ந்து வந்திருக்கிறார். அதனால்தான் நரனால்...

மிகப்பெரிய மலைப் பாம்பொன்றை வரைந்தேனா
அயர்ச்சியில் அதன், மேலேயே படுத்துறங்கி விட்டேன்...

என்று சொல்லிவிட்டு கால்நீட்டிப் படுத்துக்கொள்ள முடிகிறது. படிக்கிற நமக்குத்தான் பதற்றம்; பயம்; பரவசம் எல்லாம்...
சூன்யத்தைப் பற்றி சூன்யத்துக்குள் உருவாகி கடைசியில் சூன்யத்துக்குள் கலந்து ஒன்றுமில்லாமல் ஆகிற சூன்யத்தைப் போலவே நரனின் பல கவிதைகள் சூன்யத்துக்குள் சுழன்று விளையாடுகின்றன.

திறமையான சவரக் கலைஞன் ஒருவன்
கண்ணாடியில் இருக்கும்
என் முகத்துக்கு சவரம் செய்துவிடுகிறான்

என்ற வரிகள் அதற்கு உதாரணம்.
தவிரவும் விடை குறித்து கவலைகொள்ளாத ஒருவன் தாறுமாறாக சுடோகு போடுவதுபோல கவிதையைத் தாறுமாறாக களைத்துப் போடுவதும், அதனை ஒன்று சேர்த்து மௌனமாகப் படித்துப் பார்க்கும் வாசகனைப் பார்த்து புன்னகைப்பதும் கவிதைகள் முழுக்க காணக்கிடைக்கின்றன!

நரனிடம் வார்த்தையைச் சுரக்கிற கிணறு ஒன்று இருக்கிறது. அந்தக் கிணற்றிலிருந்து அம்மா குழந்தையாகவும் அப்பா 13 வயதான சிறுவனாகவும் ஏறிவருகிறார்கள்.
தன் புண்ணியத்தில் சூரியன் பீட்சா துண்டாகவும், இந்தியாவின் ஆயிரம் ரூபார் தாளாகவும் தெரிகிறது. கர்ப்ப நிறத்து மண்ணின் அடியாழத்தில் இருந்து வார்த்தைகளையும் தாதுக்களையும் கொலைவாளையும் சுரந்துகொண்டே இருக்கிறது அந்தக் கிணறு.

இந்தத் தொகுப்பில் இருக்கும் மிக முக்கியமான கவிதைவாருங்கள் புளுக்களே...” பலம்கொண்டு ஓடிய குதிரையைப் புழுவைக்கொண்டு சாய்த்துவிடுகிற சாவும் சூழலும் வாய்க்கபெற்ற நாம் பேறுபெற்றவர்களா? இல்லை சாபமுற்றவர்களா? என்ற கேள்விக்குள் நம்மைத் தள்ளிவிட்டு குதிரைக் குளம்படியை விதைப்பையில் பதித்துவிட்டு ஓடுகிறது

நரன் கவிதைகளில் வருகிற நிலத்தில் பாலையின் வெக்கையும், கோதுமை மணிகளும், முந்திரிக்கொட்டைகளும், பொரிந்த கொத்தவரங்காயும் நம் கவனத்தையும் கரிசனத்தையும் கோருகின்றன. அந்த நிலத்தில் இருந்து வெட்டுக்கிளிகள் பறக்கின்றன. லாடங்கள் முளைக்கின்றன. இரண்டு தொலைவில் நாளைக்கான உணவை ஒரு அப்பா வேட்டை ஆடிக்கொண்டிருக்கிறார். அவ்வளவு மகிழ்வும் வேதனையும் இச்சையும் வேட்டையும் நிரம்பிய அந்த நிலம் ஈழத்தைப் போல அரேபியாவைப் போல அல்லது ஒரு கனவு போல கைநழுவி அல்லது கண்நழுவிப் போகிறது. அது குறித்து அங்கலாய்க்கும் நரன்கனவுதானே நண்பாகவிதை சமக்காலத்தில் உலகமயத்தின் கோர முகம் குறித்து மிக அமைதியாக அற்புதமான அரசியல் கவிதை எழுதியிருக்கிறார்.

கனகம்பீரத்துக்கும் சற்றேறக் குறைய யோக்கியன் வேடமிட்ட உலகமயம்... தாயின் கர்ப்பத்துக்குள்ளும் தன் சந்தையைப் பரப்பிவிட்டது. முதலில் மருந்தைக் கண்டறிந்துவிட்டு பிறகு நோயை உருவாக்கும் வித்தையை அது கற்று வைத்திருப்பதன் சமீபத்திய உதாரணம் எபோலா. நமது குப்பைமேனிச் செடியின் ஆணிவேர் மீதும் கீழாநெல்லிகளின் பச்சை நரம்புகளின் மீதும் உலகமயம் தன் ஆதிக்கத்தை செலுத்திவிட்டதால் அது நமது ரத்தநாளங்களுக்குள்ளும் பார்வை நரம்புக்குள்ளும் மிக லகுவாகப் புகுந்துவிட்டது. முதலில் சேவகன் வேடமிட்டு நுழைந்த உலகமயம் நம் நிலங்களின் பலன்களை ருசித்துக் கொழுத்துவிட்டு இப்போது நம்மையே அடியாக்கிவைத்துகிறது. அதே உலகமயம்தான்... கவலைப்படாதீர்கள் ஏனெனில் நீங்கள் எல்லாம் சாகப்பிறந்தவர்கள். நீங்களே உங்களைத் தூக்கிலிட்டுக்கொள்ள நான் வால்மார்ட் நிறுவனத்துக்கு தூக்குக்கயிறு கேட்டு ஈமெயில் விண்ணப்பித்து இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு.... என் சேவைக்கு நீங்கள் தரும் ஸ்கோர் என்ன? என்று கடமையுணர்ச்சி காட்டுகிறது... தூக்கில் நீங்கள் தொங்கும்போது உங்கள் கால்கள் தரையில் பாவாமல் இருக்க நான் கேரண்டி என்று கடைசியில் ஓர் உத்திரவாதமும் கொடுக்கிறது.

20 நூற்றாண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவம் கட்டப்பட்டிருப்பது இயேசுவை அறைந்த மூன்று ஆணிகள் மீதுதான்... ஆணிகள் துருவேற்றிவிட்டன பலம் இழந்துவிட்டன அவற்றை மாற்றுங்கள் அல்லது கழர்ருங்கள் என்று குரல்கொடுக்கிற தச்சனை, இதோ இவன்தான் குற்றவாளி என்று அதிகாரத்துக்குக் காட்டிக்கொடுக்கிற வேலை மதவாத பீடங்களே செய்கின்றன என்று கிறிஸ்தவத்தைத் தோலுரிக்கிறது மூன்று ஆணி என்று தலைப்பிட்ட கவிதை.

மரமேறத் தெரியாதெனச் சொன்னவன்தான்
மரநாற்காலி மீதேறி அமர்ந்திருகிறான்...
என்ற வரிகளுக்குள் இருக்கும் அதிகாரமும் நயவஞ்சகமும் வன்மமும் சமீபத்தில் காலனிகளை எரித்த மரவெட்டிகளுக்கானதும்கூட என்று சொன்னா நம்மால் மறுக்க முடியுமா?

உண்பது, உடுப்பது, ரசிப்பது, புணர்வது, வாழ்வது, பேசுவது... அனைத்துச் செயல்பாடுகளிலும் சுயமாக இருக்கத் தெரியாத ிரதி எடுத்து வாழ்கிற தலைமுறை குறித்த, பகடியின் ஆழத்துள் இயங்கும் இரண்டு பாயிண்ட் தீவிரம் கவிதையை முதல்முறை வாசிக்கும்போது மெல்லிய புன்முருவலும் இரண்டாம் முறை மூன்றாம் முறை வாசிக்கும்போது மெல்லிய வ்பலியும் படர்வதை உணர முடிகிறது.

இப்படி எதைச் சொல்வதற்கும் எண்களின் துணைத் தேடிப் போவதும், எதைச் சொன்னாலும் சாதாரணமாகச் சொல்லுவதைவிட இரண்டு பாய்ண்ட் தீவீரத்தோடு சொல்லிவிடுகிறார் நரன். அதுதான் இந்த தொகுப்பின் பலம், பலவீனம்... எல்லாமும். ஒரு வார்த்தையின் மூலம் அல்லது வரி அல்லது காட்சியின் மூலம் ஒரு மலைமுகட்டில் கொண்டுபோய் வாசகனை நிறுத்திவிட்டு, அடுத்த வரியின் மூலம் அடுத்த முகட்டுத் தாவிவிடுகிறார். ஆனால் இடையில் இருக்கும் பள்ளத்தாக்கைக் கடந்துவந்து அந்த முகட்டை அடைய வாசகன் திணறித்தான் போவான். ஏறிவிட்டால் நெஞ்சம் நிறைய ஆக்ஸிஜனைச் சுவாசிக்கலாம்.

புதுமுக வாசகனுக்கு வாசிப்பு சவாலைக் கோருகின்ற இந்தக் கவிதைகள் தமிழ் நவீனக் கவிதை பரப்பில் பரவமான அனுபவத்தைத் தருபவை என்று என்னால் உறிதியாகக் கூற முடியும்!






1 comment:

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு கட்டுரை...
வாழ்த்துக்கள் கதிர்.