07 August, 2012

ஆமாம் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்



நான்கைந்து தடவைகளுக்கு அதிகமாகவே
உதிர்ந்து ஒழுகிவிட்டது உங்கள் மனைவியின் கர்ப்பம்.
கலைந்துபோகின்றன உங்கள் உள்மன அடுக்குகள்.
அதற்குள், முற்காலத்துக்கும் முற்காலத்தில்
பறவைகூடுகளில் ஊடுவித் திளைத்த சாரையாக
நீங்களிருந்த குற்றவுணர்வு வாலாட்டுகிறது.
அதைக் கொல்ல நினைத்துதான் இப்போது
சாராயத்தால் மிடறுமிடறாக எரிந்துகொள்கிறேன் என்கிறீர்கள்.
சொல்லும்போதே, ஒரு தண்ணீர்க் காலத்தில்
நவாமரக் குரங்குக்கு நட்டாற்றில் துரோகமிழைத்த
முதலை நானென்று
கல்லீரலை அறைந்தறைந்து கலங்குகிறீர்கள்.
விபத்தில் நசுங்கிய உங்கள் பருவமகளின் துடிதுடிப்பு
செந்நாய் பிறவியில் உங்களால் கிழிக்கப்பட்ட
கலைமான் குட்டியினுடையது என்று
சம்பந்தாசம்பந்தமில்லாமல் வேறு அரற்றுகிறீர்கள்.
ஒரு தேசத்துக்கு ராஜகுமாரனாக இருந்ததும்
தற்போது வாடகை குடித்தனத்தில் அவிவதும்
இப்படித்தானென நீங்கள் ஆங்காரம் கொள்கிறபோது
உங்கள் போதை உச்சிக்கு வந்திருந்தது.
என்ன வாழ்க்கையடா இதென்று
உயிரைக் கழற்றி எறிவதற்காக
தொப்பித்தூக்கிப் பாறையின் குணநலன்கொண்ட
காலத்தின் இரக்கமற்ற பள்ளத்தாக்கு முனைக்கு
ஒருமுறை சென்றுவிட்டதாகவும்... பிறகு,
அந்த எண்ணத்தை மட்டும் கழற்றி எறிந்ததாகவும்
அது திரும்பி வந்து துரத்திக் கொண்டிருப்பதாகவும்
அதனால் ஓடிக்கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டு
ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆமாம்
ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.


6 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பொறாமை கொள்ள வைக்கிறது கதிர் உங்கள் கவிதையும், கற்பனையும்.

தொடர்ந்து உங்களை வாசிக்க வாசிக்க உங்களின் மொழியை இரவல் வாங்கி நானும் கவிதை எழுதிவிடத் தூண்டும் போதை பரவியிருக்கிறது வார்த்தைகளில்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை ஐயா ! நன்றி...

அப்பாதுரை said...

முதல் வரியின் வலி கடைசி வரை.
நவாமரம் என்றால் என்ன?

vasan said...

அவ‌னை ஓட‌வைப்ப‌து, முன்பு அவ‌ன் விர‌ட்டித் திறிந்த‌ விவ‌கார‌மா? விகார‌மா?

அப்பாஜி. அது "நாவ‌ல்" ம‌ர‌ம். (பிர‌ப‌ல‌ எழுத்தார்களுக்கு "நாவ‌ல், புதின‌ம், பா" என்றால் ம‌ட்டுமே பார்வையில் படும். ச‌ரிதானா?)

அப்பாதுரை said...

நன்றி vasan. அடுத்த கேள்வி.. அது என்ன குரங்கு கதை? :-)

நிலாமகள் said...

காலத்தின் இரக்கமற்ற பள்ளத்தாக்கு முனைக்கு
ஒருமுறை //

எங்கெங்கோ கூட்டிச் செல்கிற‌து க‌விதை! போதை த‌லைக்கேறி 'ஆஹா க‌திர்!' என்னும்ப‌டி.